'வரைபடத்தைச் சரிசெய்வோம்': புதிய உலக வரைபடத்திற்கு ஐநாவில் அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு ஏன்?

- எழுதியவர், தாமஸ் முக்வானா
- பதவி, ஆப்பிரிக்கா செய்தியாளர்
- எழுதியவர், வைக்கிளிஃப் முயா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்துக்குப் பதிலாக ஆப்பிரிக்காவின் அளவை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்களித்துள்ளது.
டோகோ முன்மொழிந்து, ஆப்பிரிக்க ஒன்றிய (AU) உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட "வரைபடத்தைச் சரிசெய்வோம்" (Correct the Map) தீர்மானத்துக்கு ஆதரவாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தது. 6 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.
ஐ.நா.வின் இந்த வாக்கெடுப்பு கட்டுப்படுத்தக்கூடியது அல்ல. ஆனால், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்தும் வரைபடங்களில் மாற்றங்கள் ஏற்பட இது வழிவகுக்கும்.
16ஆம் நூற்றாண்டு முதல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மெர்கேட்டர் வரைபடம், ஆப்பிரிக்காவையும் கிரீன்லாந்தையும் ஏறக்குறைய ஒரே அளவில் காட்டுவதால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. உண்மையில், ஆப்பிரிக்கா கிரீன்லாந்தைவிட 14 மடங்கு பெரியது.
இதனால், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளின் தேவைகளும், சாத்தியக்கூறுகளும் குறைத்து மதிப்பிடப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மெர்கேட்டர் வரைபடத்தை ஐரோப்பிய ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கு வழிகாட்டியாகப் பயன்படுத்துவதற்காக, பிளெமிஷ் வரைபடவியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் 1569ஆம் ஆண்டு வடிவமைத்தார்.
ஒரு பூமிக்கோளத்தின் மேற்பரப்பை இரு பரிமாண வரைபடத்தில் துல்லியமாகக் காட்டுவது சாத்தியமற்றது என்பதே அவரது வரைபடத்தில் ஏற்படும் சிதைவுக்குக் காரணம்.
உலக வரைபடம் வரையப்படும் போதெல்லாம், சில சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
மெர்கேட்டர் வரைபடம், பூமியின் வளைவைக் காட்டுவதற்காக, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளை அவற்றின் உண்மையான அளவைவிடச் சிறிதாகவும், துருவங்களுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பெரிதாகவும் காட்டுகிறது.
இதைச் சரிசெய்யும் முயற்சியாக, 2018ஆம் ஆண்டு வரைபடவியலாளர்கள் குழு ஒன்று, சம பரப்பளவு கொண்ட வரைபடத்தை உருவாக்கியது. அதற்கு 'ஈக்வல் எர்த் ப்ரொஜெக்ஷன்' ('Equal Earth projection') என்று பெயரிட்டனர்.
பிப்ரவரி மாதத்தில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 54 உறுப்பு நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டன. இது "அனைத்து கண்டங்களின் அளவையும், குறிப்பாக ஆப்பிரிக்காவின் அளவையும் மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது" என்று அவை தெரிவித்தன.
மெர்கேட்டர் வரைபடத்தை கைவிடுவதற்கான ஆன்லைன் பிரசாரக் குழுவான #CorrectTheMap கூறுகையில், "அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவுக்குள் அடக்கிவிட முடியும். அதன்பிறகும் நிலப்பரப்பு மீதமிருக்கும்" என்று தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, டோகோவின் வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "நியாயமான உலகம் என்பது நியாயமான வரைபடத்திலிருந்து தொடங்குகிறது" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக ஐ.நா. விளக்கக் கூட்டத்தில் அவர், "ஒரு வரைபடம் ஒருபோதும் நடுநிலையானது அல்ல. அது கருத்துகளை உருவாக்குகிறது. உலகில் மக்களுக்கும் கண்டங்களுக்கும் உள்ள இடம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பதில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்திருந்தார்.
அவருக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட்டின் ஆதரவும் கிடைத்தது. மெர்கேட்டர் வரைபடத்தைப் பயன்படுத்துவதை தனது அமைச்சகம் நிறுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.
"வரைபடத்தை மாற்றுவது வெளிப்படையாக உலகத்தை மாற்றாது. ஆனால், உலகைச் சிதைத்துக் காட்டும் ஒரு சித்தரிப்பைச் சரிசெய்வது உண்மையை நிலைநாட்டும் ஒரு செயலாகும்" என்று அவர் கூறினார்.
ஆனால், ஐ.நா.வுக்கான அமெரிக்கப் பிரதிநிதி யரினா ஃபெரென்செவிச், இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையின் பணியையும் நோக்கத்தையும் கேலிக்குரியதாக ஆக்குவதாகக் கூறினார்.
"சர்வதேச அமைதி, வளம் அல்லது நல்லுறவுகள் தொடர்பான உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்த அமைப்பு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரைபடத் திட்டங்கள் குறித்தும், இழப்பீடுகள் மற்றும் 'அறிவுசார் நீதி'யை ஊக்குவிப்பதில் அவற்றின் பங்கு குறித்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.
மார்ச் மாதத்திலும், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நடைபெற்ற அடிமை வர்த்தகத்தை "மனிதகுலத்துக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றம்" என்று அறிவிக்கும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அமெரிக்கா அதற்கு விமர்சனம் தெரிவித்திருந்தது.
மெர்கேட்டர் வரைபடத்தை கைவிடுவதற்கான பிரசாரத்தின் பின்னணியில் உள்ள குழுக்களில் ஒன்றான 'ஆப்பிரிக்கா நோ ஃபில்டர்' (Africa No Filter) அமைப்பைச் சேர்ந்த லெராட்டோ மோகோட்லே, "உலக வரைபடங்களில் ஆப்பிரிக்கா தவறாகப் பிரதிபலிக்கப்படுவது வெறும் வரைபடவியல் பிழை மட்டுமல்ல. அது ஒரு கதை சொல்லல் தொடர்பான பிரச்னையும் கூட" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆப்பிரிக்கா குறித்து "உலகின் மிக நீண்டகால தவறான மற்றும் பொய்யான தகவல் பரப்பப்படுவதை" முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது இருப்பதாக அவர் கூறினார்.
கென்யாவைச் சேர்ந்த புவியியலாளர் கியோகோ முயெண்டோவின் கருத்துப்படி, மெர்கேட்டர் வரைபடம் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய வளங்கள், மக்கள் தொகை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மறைமுகமாகக் குறைத்து மதிப்பிடச் செய்துள்ளது.
"வரைபடங்கள் பயணிகளுக்கான வழிகாட்டிகள் மட்டுமல்ல. ஒரு பிராந்தியம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதையும் அவை வடிவமைக்கின்றன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































