நேபாளத்தில் மீண்டும் வெள்ள ஆபத்து: பனிப்பாறை ஏரி உடைய வாய்ப்புள்ளதால் மீட்புப் பணியாளர்களுக்கு சிக்கல்

சீனாவின் நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது ‘லாக் டோ’ தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Guoxiong Zheng Via FFD Nepal

    • எழுதியவர், கனி அன்சாரி
    • பதவி, பிபிசி நியூஸ் நேபாளி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சீன நீர்வள அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ராசுவாவில் உள்ள பனிப்பாறை ஏரி அல்லது 'லாக் டோ' தொடர்ந்து நீரால் நிரம்பி வருவதாக நேபாள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

வெள்ள முன்னறிவிப்புத் துறையின் தலைவரும் மூத்த நீரியல் நிபுணருமான வினோத் பராஜுலி கூறுகையில், சீனாவிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்தப் பனிப்பாறை ஏரியில் சுமார் 6,50,000 கன மீட்டர் நீர் சேர்ந்துள்ளது என்றார்.

"இந்தப் பனிப்பாறை ஏரி முழுமையாக நிரம்பியுள்ளதால், அது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது" என்று அவர் பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.

ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், குறிப்பாக நீர்மின் திட்டத்தின் சுரங்கங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளவர்கள், விழிப்புடன் இருக்குமாறு பராஜுலி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தப் பனிப்பாறை ஏரி எப்போது முழுமையாக நிரம்பும், எப்போது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதைத் துல்லியமாகக் கணிப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏரி எங்கே அமைந்துள்ளது?

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 30ஆம் தேதி உடைந்த பனிப்பாறை நேபாளம்-சீனா எல்லையில் அமைந்திருந்தது. ஆனால், இந்த ஏரி நேபாளப் பகுதியில் அமைந்துள்ளது.

பிரித்வி நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள கிருஷ்ணபீர் பகுதியில் ஏற்பட்ட அரிப்பு, ஆகஸ்ட் 30ஆம் தேதி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மூத்த நீரியல் நிபுணர் வினோத் பராஜுலியின் கூற்றுப்படி, புதிய பனிப்பாறை ஏரி லாங்டாங் லிருங் இமயமலையின் மேற்கு சரிவுகளில், ராசுவாவின் டென்சிங் பகுதியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பகுதியில் அமைந்துள்ளது.

"மூன்று பக்கங்களிலும் பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்த ஏரி, ஒரு பக்கத்தில் சற்று திறந்த நிலையில் இருப்பது போல் தெரிகிறது," என்று அவர் கூறினார்.

மலைகளுக்கு இடையே அமைந்துள்ள 'லாக் டோ' பனிப்பாறை ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 மீட்டர் உயரத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

"ஆகஸ்ட் 26ஆம் தேதி பனிச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கீழேயும், ஆற்றின் மேல்பகுதியில் மிகவும் உயரமான இடத்திலும் இந்த ஏரி அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இது வேகமாக நிரம்பவில்லை. பனிப்பாறையிலிருந்து உருகி வரும் நீர் மெதுவாக இதில் சேர்ந்துகொண்டிருக்கிறது," என்று பராஜுலி கூறினார்.

வட்ட வடிவிலான இந்தப் பனிப்பாறை ஏரியின் பரப்பளவு 0.3 சதுர கிலோமீட்டர் என அவர் தெரிவித்தார்.

இந்த ஏரியின் ஆழத்தை மதிப்பிடுவது கடினம் என்றும் பராஜுலி கூறினார்.

"ஆழம் முக்கியமானது. ஏனெனில் அதிகரிப்பது நீரின் பரப்பளவு அல்ல, அதன் மொத்த அளவுதான். " என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஏரி எவ்வளவு ஆபத்தானது?

இந்த ஏரியின் ஆழத்தை மதிப்பிடுவது கடினம் என்றும் பராஜுலி கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதிகாரிகளின் கூற்றுப்படி, சமீபத்திய பெருவெள்ளத்தின் போது சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் நேபாளத்தை நோக்கிப் பாய்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது உள்ள பனிப்பாறை ஏரியில் இருக்கும் நீரின் அளவு, அதனுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று பராஜுலி கூறினார்.

"ஆனால், தாழ்வான பகுதிகளில் ஏற்படும் சிறிய நிலச்சரிவுகள், ஆற்றுப் பகுதியில் ஏற்படும் மண் அரிப்பு மற்றும் ஓடைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த ஏரி உடைந்தால், இந்த ஓடைகள் அனைத்தும் மிகவும் வேகமான மற்றும் தீவிரமானதாக மாறக்கூடிய அபாயம் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, பாதுகாப்புப் பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். குறிப்பாக, சுரங்கப் பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும், தாழ்வான பகுதிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்.

இந்தப் பனிப்பாறை ஏரி உடைந்தால், ஆகஸ்ட் 26ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தாண்டி நீர் செல்ல வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

மூத்த நீரியல் நிபுணர் பராஜுலியின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 26ஆம் தேதி பனிச்சரிவு தொடங்கி கீழ்நோக்கிப் பாயத் தொடங்கியதில் இருந்து, இதுவரை பல நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

அபாயம் குறித்து எச்சரித்த அவர், "உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தில் இருப்பது சமீபத்தில் உருவான 'லாக் டோ' மட்டுமே. கூடுதல் அபாயம் என்னவென்றால், எந்த நேரத்திலும் நிலச்சரிவுகள் ஏற்படலாம். அது பல நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவலும் உள்ளது" என்றார்.

பொதுவாக, ஒரு ஏரி நிரம்பும்போது, அதில் நீரின் அழுத்தம் அதிகரித்து, அது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார் பராஜுலி.

தொடர்ந்து பேசிய அவர், "சில பனிப்பாறை ஏரிகள் நீர்க்கசிவு காரணமாக ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு உடைந்து விடுகின்றன. லாக் டோ தற்போது நிரம்பிக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதால், அது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது"என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு