ஸ்ரீரங்கம் கோயில் தொடர்புடைய நிலத்தை விற்க முயற்சியா? உயர் நீதிமன்றம் தடை - ஜி ஸ்கொயர் நிறுவனர் விளக்கம்

பட மூலாதாரம், pjhpix/getty Images
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட 5 கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து வியாழக்கிழமை (செப்டம்பர் 3) உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டதாக, வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், "அது கோயில் நிலம் அல்ல. வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என பிபிசி தமிழிடம் 'ஜி ஸ்கொயர்' நிறுவனர் பாலா ராமஜெயம் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரமணியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
மனுவில், 'ஸ்ரீரங்கத்தில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடியிருப்புப் பகுதியை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மனைகளை விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருவதை பக்தர்கள் மூலம் அறிந்தேன்' எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்து தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை தான் சேகரித்ததாக வழக்கின் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

மனுவில், 1887 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் விவரங்களை அவர் இணைத்துள்ளார். அதனை பிபிசி தமிழ் சரிபார்த்தது.
அதில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள திம்மராய சமுத்திரம் கிராமத்தில் 1821/A1, 1821/A2 மற்றும் 1821/B ஆகிய சர்வே எண்களில் சுமார் 21 ஏக்கர் 6 சென்ட் நிலம் அமைந்துள்ளது.
'இந்த நிலம் அரங்கநாத சுவாமி கோயில், நாச்சியார் கோயில், அழகிய சிங்கர் கோயில், குணசீலம் பெருமாள் கோயில் மற்றும் கொடியாலம் கோபாலகிருஷ்ணசுவாமி கோயில் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரம்மோற்சவம், மண்டகப்படி, அர்ச்சனை, உற்சவ ஊர்வலம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட அறக்கட்டளைக்கு உட்பட்டவை' எனக் கூறப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் பெயர் எதுவும் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. '28.08.1887 அன்று கொடியாலம் வாசுதேவன் மற்றும் கொடியாலம் சேஷாத்ரி ஆகியோருக்கு இடையே பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக', மனுவில் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

'நிலத்துக்கு வரி மற்றும் சொத்துகளைப் பராமரிப்பதற்கான செலவுகளை செலுத்திய பிறகு எஞ்சிய வருமானம் முழுவதும் அறப்பணிகளுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்' எனப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
'அறங்காவலர்களாக நியமிக்கப்படுகிறவர்கள் வெறும் நிர்வாகிகளே தவிர, மூலச் சொத்தின் மீது தனிப்பட்ட அல்லது பிரிக்கக் கூடிய எந்த உரிமையையும் அவர்கள் பெறவில்லை' என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், இந்துசமய அறநிலையத்துறை சட்டப்படி குறிப்பிட்ட அறக்கட்டளையின் சொத்தாக (specific endowment) இந்த நிலங்கள் அமைவதாக வழக்கின் மனுவில் சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
'அறக்கட்டளை நிலத்தில் பாகப் பிரிவினை'
இந்த நிலையில், கடந்த 23.12.2024 தேதி அறக்கட்டளையின் நிலத்தில் பாகப் பிரிவினை பத்திரம் ஒன்றை ஸ்ரீரங்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் அதன் நிர்வாகிகள் மேற்கொண்டதாகக் கூறுகிறார், சுப்ரமணியன்.
'இந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்து மனைப் பிரிவுக்கான (Layout) ஒப்புதலைப் பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொத்துகளை மாற்றிக் கொடுத்துள்ளனர்' என மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, 'இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34ன்படி உரிய அனுமதியைப் பெறாமலும் அறக்கட்டளைச் சொத்து (Immovable Trust Properties) என்ற உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமலும் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது'.

இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீரங்கத்தின் ஜென் (ZEN) என்ற மனைப் பிரிவு திட்டத்தை 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள சுப்ரமணியம், 'சொத்தை மாற்றிக் கொடுத்தவருக்கு (transferor) எந்தவித பயன்பெறும் உரிமையோ, விற்பனை செய்யும் உரிமையோ இல்லாத நிலையில் அதைப் பெறுபவருக்கும் எந்தவகையிலும் சொத்துக்கான உரிமையை உருவாக்கித் தந்துவிடாது' என்கிறார்.
'சட்டத்துக்கு முரணாக பத்திரப்பதிவு'
'சமய அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட அசையா சொத்துகளைப் பரிமாற்றம் செய்தல், விற்பனை, அடமானம் வைத்தல், குத்தகைக்கு விடுதல் போன்றவை அவசியமானவை எனக் கருதி அறநிலையத்துறை ஆணையர் அங்கீகரிக்காவிட்டால் அவை செல்லாது' என, இந்துசமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 34(1) கூறுவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், 'நிலம் தொடர்பான விற்பனைப் பத்திரங்களை செயல்படுத்துவதற்கு முன்னதாக அறநிலையத்துறை ஆணையரிடம் எந்தவித அனுமதியும் கோரப்படவில்லை' என அவர் கூறியுள்ளார்.
'சட்டத்துக்கு முரணாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என மனுவில் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
'சமய சேவைகளுக்கான நிரந்தர ஆதாரமாக இந்தச் சொத்து இருப்பதால், குறிப்பிட்ட அறக்கட்டளையின் பயனாளிகள் மற்றும் எதிர்கால தலைமுறை பக்தர்களை இது பாதிக்கிறது' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பத்திரப்பதிவு மேற்கொள்ள தடை' - உயர் நீதிமன்றம்
வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் நிலங்களை பிறருக்கு மாற்றுவதையோ, விளம்பரம் செய்வதையோ, முன்பதிவு செய்வதையோ தடுத்து நிறுத்தும் வகையில் தடை உத்தரவை வழங்குமாறு நீதிமன்றத்தை சுப்ரமணியன் கோரியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மொத்தமாகவோ அல்லது சிறு பகுதி நிலம் தொடர்பாக எந்தப் பதிவையும் சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் மேற்கொள்ளக் கூடாது" என உத்தரவிட்டனர்.
வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்குமாறு கூறி நவம்பர் 5 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
'200 மனைப் பிரிவுகளாக பிரித்து விற்பனை'

"கடந்த ஓராண்டாக ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ஜென் திட்டத்தில் நிலங்களை வாங்குவதற்கு மக்கள் போட்டி போட்டனர். சதுர அடி ஐந்தாயிரம் ரூபாய் என விற்கப்பட்டது" என்கிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சர்ச்சைக்குரிய நிலம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
250க்கும் மேற்பட்ட மனைப் பிரிவுகளாக பிரித்து இவை விற்கப்பட்டதாகக் கூறும் அவர், "ஸ்ரீரங்கம் பழைமையான கோயில் நகரம் என்பதால் நூற்றாண்டு கால ஆவணங்களை சரிபார்த்த பிறகே நிலங்களை வாங்க வேண்டும். ஆனால், அதனைக் கவனிக்கத் தவறிவிட்டதாக தோன்றுகிறது" எனக் கூறுகிறார்.

"1887 ஆம் ஆண்டு ஆவணத்தை அடிப்படையாக வைத்து தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு நிலத்தை விற்றுள்ளனர். அதில் உள்ள அனைத்து நிலங்களும் அறக்கட்டளைக்குக் கையளிக்கப்பட்டுவிட்டன" என்கிறார், மனுதாரரின் வழக்கறிஞரான அருள்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பொது பயன்பாட்டுக்காக ஒருமுறை நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டால் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை விற்க முடியாது என்பதை வழக்கின் வாதத்தின்போது தெரிவித்தோம்" என்கிறார்.
"திம்மராய சமுத்திரத்தில் உள்ள நிலங்களை சமயப் பணிக்காக தானமாக கொடுத்துள்ளனர். இதனை அதிகாரிகள் கவனமாக கையாண்டிருக்க வேண்டும்." எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் உரிமையாளர் பாலா ராமஜெயம்.

ஜி ஸ்கொயர் நிறுவனர் விளக்கம்
"நாங்கள் வாங்கியுள்ள சர்வே எண், கிராமம் ஆகியவற்றுக்கும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அறக்கட்டளையின் நிர்வாகிக்கு சொந்தமான நிலத்தை மட்டுமே வாங்கினோம்" என்கிறார்.
"இது கோயிலுக்காக ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளையின் நிலம் என்கின்றனர். 'அதை நிரூபித்தால் பெருமாளுக்கே கொடுத்துவிடுகிறோம்' என அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஶ்ரீரங்கத்தில் பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறும் பாலா ராமஜெயம், "பாகப் பிரிவினையில் திம்மராய சமுத்திரம் என்ற கிராமத்தின் பெயர் இல்லை. நாங்கள் வாங்கியுள்ள சொத்து வீரேஸ்வரம் என்ற கிராமத்தில் உள்ளது" எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "1887 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆவணத்தில் திம்மராய சமுத்திரம் என வருவாய்த்துறை பதிவு செய்துள்ளது. திம்மராய சமுத்திரம் கிராம சொத்தில் வீரேஸ்வரம் என்பதைக் குறிப்பிட வாய்ப்பில்லை" என்றார்.
"ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனைகளை நடத்தி வரும் நாங்கள், நில ஆவணங்களை ஆராயாமல் வாங்கவில்லை" எனக் கூறும் பாலா ராமஜெயம், " சிலர் விளம்பரத்துக்காக நாங்கள் வாங்கிய 16 ஏக்கர் நிலத்தை மட்டும் இலக்காக வைத்துச் செயல்படுகின்றனர்" எனக் கூறுகிறார்.
இதுதொடர்பாக, அறக்கட்டளையின் நிர்வாகிகளிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், இந்த கட்டுரை பிரசுரமாகும் வரை அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் தரப்படும் பட்சத்தில், இந்த கட்டுரையில் அந்த தகவல்கள் சேர்க்கப்படும்.
'பத்திரப்பதிவுக்கு தடை போட்ட சார்-பதிவாளர்'
அதேநேரம், கடந்த மே மாதம் 11ஆம் தேதி ஜி ஸ்கொயரின் ஜென் லே-அவுட்டில் 552 சதுர அடி பரப்பளவு உள்ள மனையை லோகநாதன் என்பவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக விற்பனைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், நிலத்தைப் பதிவு செய்வதற்கு ஸ்ரீரங்கம் சார்-பதிவாளர் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, " இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்கிறார்.
"லோகநாதன் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் தடை மனு கொடுத்துள்ளனர். இதற்கு எதிராக மாவட்ட பதிவாளரிடம் முறையீடு செய்துள்ளோம். கோயில் நிலம் என்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து ஓராண்டாக எந்தப் பதிலும் வரவில்லை" என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " வீரேஸ்வரமாக இருந்த கிராமம், திம்மராய சமுத்திரமாக மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். சென்னை தியாகராய நகரை எப்படி நுங்கம்பாக்கமாக மாற்ற முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.
அறக்கட்டளை நிலம் தொடர்பான சர்ச்சை குறித்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் இணை ஆணையர் சிவராம்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. ஆனால், அவர் பதில் அளிப்பதற்கு மறுத்துவிட்டார்.
திருச்சி மாவட்ட பதிவாளர் குமாரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள விவரங்களைப் பகிர்ந்த அவர், "தற்போதைய நிலையில் இதுகுறித்துப் பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































