பாம்புக்கடி விபத்துகளில் எவ்வளவு விரைவாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹர்மன்தீப் சிங்
- பதவி, பிபிசி பஞ்சாபி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் லூதியானா மாவட்டம் பாசியன் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் உடன்பிறந்த இரு குழந்தைகள் பாம்புக்கடியால் உயிரிழந்தனர்.
ரக்ஷா பந்தன் நாளன்று, 8 வயது ஜோபன்பிரீத், அவரது 6 வயது சகோதரி ஜஸ்பிரீத் ஆகிய இருவரும் பாம்புக்கடியால் உயிரிழந்தனர். இரு குழந்தைகளும் தங்கள் பாட்டிக்கு அருகில், வீட்டின் அறைகளுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென, பிற்பகல் 3 மணியளவில், ஏதோவொன்று தன்னைக் கடித்துவிட்டதாக ஜோபன்பிரீத் தனது பாட்டியிடம் தெரிவித்தார். ஆனால், அது பூச்சி அல்லது கொசுவாக இருக்கலாம் என குடும்பத்தினர் நினைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரது சகோதரி ஜஸ்பிரீத்தும் ஏதோவொன்று தன்னைக் கடித்துவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், குழந்தைகளின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதுடன், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு பாம்பும் காணப்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஜஸ்பிரீத் உயிரிழந்தார். அதேவேளையில், லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோபன்பிரீத்தும் உயிரிழந்தார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 முதல் 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 50,000 பேர் உயிரிழக்கின்றனர். உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளில் இது கிட்டத்தட்ட பாதி என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், பாம்பு கடித்த பிறகு என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாபில் காணப்படும் பாம்புகள்
நவான்ஷஹரை சேர்ந்த நிகில் சாங்கருக்கு பாம்புகளை மீட்பதில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர் ஆயிரக்கணக்கான பாம்புகளை மீட்டுள்ளார். பஞ்சாப் வனத்துறை மற்றும் காட்டுயிர் பாதுகாப்புத் துறையிலும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, "பஞ்சாபில் நான்கு வகை பாம்புகள் நஞ்சுள்ள, உயிருக்கு ஆபத்தான பாம்புகளாக வரையறுக்கப்படுகின்றன. அவை நாகப் பாம்பு, கட்டு வரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன்."
நிபுணர்களின் கூற்றுப்படி, "பாம்புக்கடி என்பது மருத்துவ அவசர நிலை. பஞ்சாபில் அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் உள்ளன. ஆனால், பாம்புக் கடி சம்பங்கள் அனைத்திலுமே உயிரிழப்பு நிகழ்வதில்லை. இருப்பினும், பாம்புக்கடியை தீவிரமாக எடுத்துக்கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்."
பஞ்சாபில் உள்ள சமனா அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி மருத்துவர் தீபக் மொங்கியா கூறுகையில், "பாம்பு கடித்த பிறகு மிக முக்கியமான விஷயம் மருத்துவமனைக்குச் செல்வதுதான். பாம்பு விஷத்திற்கான மிகச் சிறந்த சிகிச்சை நஞ்சுமுறி மருந்துதான். இந்த மருந்து எவ்வளவு விரைவாகச் செலுத்தப்படுகிறதோ, அவ்வளவு தூரம் நோயாளிக்கு நல்லது" என்றார்.
லூதியானா சிவில் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி மருத்துவர் அகில் சரின் விளக்குகையில், "பாம்பு விஷத்தின் அறிகுறிகள் தோன்ற எவ்வளவு நேரம் ஆகும், விஷம் செயல்பட எவ்வளவு நேரம் ஆகும் அல்லது நஞ்சுமுறி மருந்து எப்போது செலுத்தப்படத் தொடங்கும் என்பவை அனைத்தும் பாம்பின் வகை, நோயாளியின் வயது, உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்தது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
பாம்பு கடித்தால் மருத்துவமனை செல்லும் முன் என்ன செய்ய வேண்டும்?
தேசிய சுகாதார இயக்கத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) மற்றும் மருத்துவர்களின் பரிந்துரைப்படி, எடுக்கப்பட வேண்டிய அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- நோயாளியை அமைதிப்படுத்த வேண்டும்.
- பதற்றமடைவதையும் அதீத அசைவுகளையும் தவிர்க்க வேண்டும்.
- நோயாளியை ஓடவோ நடக்கவோ கட்டாயப்படுத்தாதீர்கள்.
- பாதிக்கப்பட்ட பகுதியை முடிந்தவரை அசைக்காமலும், தேவைப்பட்டால் மிக மிகக் குறைவாக அசைக்கவும் வகையிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பாம்பு கடித்த கை அல்லது காலை அசைக்க வேண்டாம்.
- பாம்பு கடித்த இடத்திலோ அல்லது அந்த இடத்தைச் சுற்றியோ நகைகள், மோதிரங்கள், காப்பு, இறுக்கமான காலணி, கைக்கடிகாரம், இறுக்கமான ஆடைகள் இருந்தால் உடனே அகற்றிவிட வேண்டும். இவை வீக்கத்தை ஏற்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும்.
- காயத்தைக் கழுவவோ, துணியால் மூடி வைக்கவோ கூடாது.

பட மூலாதாரம், Getty Images
எதையெல்லாம் செய்யவே கூடாது?
தேசிய சுகாதார இயக்கத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைப்படி (SOP), பாம்பு கடித்த இடத்தைக் கயிறு அல்லது துணியால் இறுக்கமாகக் கட்டக்கூடாது. இது ரத்த ஓட்டத்தைத் தடுத்து, அந்த உறுப்பைச் சேதப்படுத்தக்கூடும்.
கத்தி, பிளேடு அல்லது வேறு எந்தப் பொருளையும் பயன்படுத்தி காயத்தை வெட்டக்கூடாது. நஞ்சை உறிஞ்சி எடுக்கவும் முயலக்கூடாது. காயத்தின் மீது ஐஸ், வெப்பம், மின்சாரம் அல்லது ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற முறைகள் நிலைமையை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.
மருத்துவர் தீபக் மொங்கியா கூறுகையில், "மந்திரவாதி, சாமியார் அல்லது பேய் ஓட்டுபவர்களை நாடுவதன் மூலம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. பாம்பு விஷத்திற்கான அறிவியல் அடிப்படையிலான சிகிச்சை மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கிறது. பாரம்பரிய சிகிச்சைகள் பயனுள்ளதாக இருப்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என்று வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
பாம்பு கடித்துவிட்டால் சிறப்புக் கவனம் தேவைப்படும் அறிகுறிகள்
அதுகுறித்து மருத்துவர் மொங்கியா விளக்கியபோது, "பாம்பு கடித்த இடத்தில் வலி, அதிகரிக்கும் வீக்கம், ரத்தக் கசிவு, கொப்புளங்கள், கண் இமைகள் தாழ்வது, பார்வை மங்கலாக அல்லது இரட்டையாகத் தெரிவது, பேசுவதில் சிரமம், விழுங்குவதில் சிரமம், சுவாசிப்பதில் சிரமம், தசை பலவீனம், மூக்கு, ஈறுகள் அல்லது உடலின் வேறு பகுதிகளில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் அதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "எப்படியிருந்தாலும், பாம்பு கடித்தால், அந்தப் பாம்பு நஞ்சற்றதாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நோயாளிக்கு எந்த வகையான சிகிச்சை தேவை அல்லது தேவையில்லை என்பதை மருத்துவர் அல்லது மருத்துவமனை தரப்பில்தான் முடிவு செய்யப்படும். ஆனால், இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், நிலைமை ஆபத்தானது என்று அர்த்தம்" என விவரித்தார்.
அதோடு, "கட்டு வரியன் போன்ற சில நச்சுப் பாம்புகள் கடித்தால் ஏற்படும் அறிகுறிகள் தாமதமாகத் தோன்றக்கூடும். எனவே, ஆரம்பத்தில் நோயாளி நலமாக இருப்பதாக உணர்ந்தாலும், பாம்பு கடித்துவிட்டது தெரிந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் செல்வது அவசியம்" என்றார்.
மருத்துவமனையில் என்ன நடக்கிறது?
லூதியானா சிவில் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி மருத்துவர் அகில் சரின் கூறுகையில், "மருத்துவமனைக்கு வந்தவுடன் நோயாளி முதலில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார். அங்கிருந்தே சிகிச்சை தொடங்குகிறது. முதலில் பாம்புக் கடி நச்சுத்தன்மை கொண்டதா, இல்லையா என்பது கண்டறியப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"பாம்புக் கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் நஞ்சுமுறி மருந்து, அவசர சிகிச்சைப் பிரிவு கட்டமைப்பைக் கொண்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
நஞ்சுமுறி மருந்துக்கு நோயாளி எதிர்வினையாற்றவில்லை என்றால், நஞ்சின் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அவருக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவி அளிக்கப்படுகிறது.
பூச்சி கடிக்கும் பாம்புக் கடிக்கும் என்ன வித்தியாசம்?
அதுகுறித்து மருத்துவர் மொங்கியா கூறுகையில், "பாம்புக் கடியின் அடையாளங்கள் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். சில நேரங்களில் நான்கு தடயங்கள் இருக்கும், சில நேரங்களில் இரண்டு தடயங்கள் இருக்கும், சில நேரங்களில் ஒரே ஒரு தடயம் மட்டுமே இருக்கும். எந்த வகையான பாம்பு கடித்தது என்பதை அனைவராலும் கண்டறிய முடியாது. நிபுணர்களால் மட்டுமே அதற்கான வித்தியாசத்தைக் கண்டறிய முடியும்" என்றார்.
பொதுவாக, பூச்சிக்கடியின் தடயம் மிகவும் நுட்பமாக இருக்கும். சில நேரங்களில் அது கண்ணுக்குத் தெரியாது. சில நேரங்களில் கீறல் போன்று இருக்கும். சில நேரங்களில் தெளிவாகத் தெரியாமலும் இருக்கலாம்.
பருவமழைக் காலத்தில் பாம்புக் கடி சம்பவங்கள் அதிகரிப்பது ஏன்?
பருவமழைக் காலத்தில் பாம்புக்கடி சம்பவங்கள் ஏன் அதிகரிக்கின்றன என்பதைப் பொருத்தவரை, "கனமழை மற்றும் நீர்த் தேக்கம் ஆகியவை பாம்புகளின் மறைவிடங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, அவற்றை வறண்ட பகுதிகளை நோக்கி, சில நேரங்களில் வீடுகள் மற்றும் பிற கட்டடங்களை நோக்கி நகரச் செய்வதாக" நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெப்பமான, ஈரப்பதமான சூழல்கள் பல பாம்புகள் மற்றும் அவை விரும்பியுண்ணும் தவளைகள், எலி போன்ற கொறித்துண்ணிகள், பல்லிகள் போன்றவற்றின் செயல்பாட்டையும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில், அதிகரித்த விவசாயப் பணிகள் மற்றும் ஈரமான, புதர் மண்டிய சுற்றுப் புறங்களில் பார்வைத் தெளிவு குறைவதும் பாம்பு-மனித எதிர்கொள்ளல் அதிகரிக்க வித்திடுகிறது.
குறிப்பாக, "சில இனங்களின் இனப்பெருக்கக் காலம் பருவமழைக் காலத்துடன் ஒத்துப் போகக்கூடும்" எனக் குறிப்பிட்ட நிகில் சாங்கர், "இருப்பினும் அனைத்து பாம்புகளும் இந்தக் காலத்தில்தான் இனப்பெருக்கம் செய்வதாகவோ அல்லது அவற்றின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதால் பாம்புக் கடிகள் அதிகரிப்பதாகவோ கூறுவது துல்லியமற்றது"என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































