நேபாளத்தில் நம்பிக்கை கீற்று: சுரங்கத்திற்குள் 9 நாளாக சிக்கியிருந்த 2 பேர் உயிருடன் மீட்பு

பட மூலாதாரம், NEPAL ARMY
பிபிசி நேபாளி தகவலின்படி, திரிசூலி 3-ஏ நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள மின்சார ஆணையத்தின் இணை மேலாளர் சுரேஷ் ராவத் இதனை பிபிசி நியூஸ் நேபாளியிடம் உறுதிப்படுத்தினார்.
முதலில் மீட்கப்பட்டவர் அத்திட்டத்தின் இயந்திரப் பிரிவு ஃபோர்மன் சஞ்சய் ஷா ஆவார்.
ராவத் கூற்றுப்படி, இரண்டாவது நபர் இயந்திரப் பிரிவு சூப்பர்வைசர் கபீர் மஹர்ஜன் ஆவார்.
"அவர் லேசாகச் சிரித்தார், மீட்புக் குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார், அவர்களை நோக்கிச் சைகை செய்தார்," என்று ராவத் கூறினார்.
சுரங்கப்பாதையில் ஒன்பது நாட்கள் சிக்கியிருந்த நிலையில், பத்தாவது நாளில் அவ்விருவரும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி மீட்புக் குழுவினரையும் நேபாள மின்சார ஆணைய ஊழியர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்ததாக ஆணையத்தின் ஊழியரான ஷோபா பவுடல் பிபிசியிடம் தெரிவித்தார்.
இவர்களில் ஒருவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நுவாகோட்டில் உள்ள பட்டாருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பட மூலாதாரம், NEPAL ARMY
இன்று காலை, நேபாள ராணுவத்தின் தலைமையிலான மீட்புக் குழுவினர் திரிசூலி 3-ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்தவர்களைத் தொடர்புகொள்வதில் வெற்றி பெற்றனர்.
"உள்ளிருந்து ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் குரல்கள் கேட்டன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட நிபுணரான ஸ்ரீராம் நியுபனே சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
ஸ்ரீராம் நியுபனே நேபாள நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
"'பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களைக் காப்பாற்றுகிறோம்' என்று மீட்புக் குழுவினர் கூறியபோது, உள்ளிருந்து 'ஆம்' என்ற பதில் வந்தது," என்று அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு சிறிய பதிவில் குறிப்பிட்டார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்திடமிருந்து இந்தத் தகவல் கிடைத்ததாக அவர் முன்னதாக எழுதியிருந்தார்.
திரிசூலி 3-ஏ திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்தவர்களின் குரல்கள் கேட்டதாகத் தகவல் கிடைத்ததாக நேபாள மின்சார ஆணையத்தின் இணை மேலாளர் சுரேஷ் ராவத் பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.
"தேடுதல் மற்றும் மீட்புப் பணியை வழிநடத்தும் ராணுவ கர்னல் கங்கா பரால், உள்ளிருந்து சத்தங்கள் வருவதாக எங்களிடம் கூறினார்," என்று ராவத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், NEPAL ARMY
மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையின் ஒரு குறிப்பிட்ட இடத்தை (நுழைவாயிலிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை) அடைந்துவிட்டதாகவும், ஆனால் இன்னும் இடிபாடுகளுக்கு இடையே செல்ல வேண்டியுள்ளதாகவும் நேபாள ராணுவம் பிபிசி நியூஸ் நேபாளியிடம் தெரிவித்தது.
இன்று காலை, ஸ்ரீராம் நியுபனே மற்றொரு பதிவில், "நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதைக்குள் நுழைந்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதைக்குள்ளிருந்து மக்களின் குரல்கள் கேட்பதாக வரும் தகவல் ஒரு நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது." என்று தெரிவித்தார்.
"நேற்று மாலை வரை அந்த இடத்தில் ஒரு பொறியாளராக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் நான் ஈடுபட்டிருந்தேன்," என்றும் அவர் எழுதியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































