கோடிக்கணக்கில் நன்கொடை பெற்றாலும் அரிதாகவே தேர்தல் களம் காணும் இந்த கட்சிகளில் என்ன நடக்கிறது? பிபிசி புலனாய்வு

இந்தியாவின் காகித அரசியல் கட்சிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுபாங்கி மிஸ்ரா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள சத்யவாதி ரக்ஷக் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே இருள் சூழ்ந்திருந்தது. அந்த அலுவலக கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அது உண்மையில் அந்தக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் என்பதைக் காட்டும் பெயர்ப் பலகையோ, ஒரு சுவரொட்டியோ கூட அங்கு காணப்படவில்லை.

இந்த சூழலைப் பார்த்தால், அந்தக் கட்சி 2023-24ஆம் ஆண்டில் ரூ.330 கோடி நன்கொடைகளைப் பெற்றது என்பதை நம்புவது கடினமாகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றிருந்தபோதும், 2024 மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது. அந்த ஆண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையின்படி, தேர்தல் பிரசாரத்திற்காக ரூ.8.48 கோடி செலவிடப்பட்டதுடன், "பொது நலனுக்காக" ரூ.316 கோடி செலவிடப்பட்டிருந்தது.

கட்சியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள அதே குடியிருப்பு வளாகத்தில் கட்சித் தலைவர் ஸ்வாதி பென் வசிப்பதை பிபிசி கண்டறிந்தது.

கட்சி பெற்ற நன்கொடைகள் மற்றும் அவற்றின் செலவுகள் குறித்து கேட்டபோது, "நாங்கள் அந்தப் பணத்தை தொண்டு பணிகளுக்காக செலவிட்டோம். ஆனால் அதற்கான பதிவுகளை பராமரிக்கவில்லை" என்று ஸ்வாதி பென் தெரிவித்தார்.

கட்சி நிதி தொடர்பான இந்த வெளிப்படைத்தன்மையற்ற நிலை, 2023-24ஆம் ஆண்டில் அதிக அளவு நன்கொடைகள் பெற்ற 6 பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் (Registered Unrecognised Political Parties - RUPPs) குறித்த பிபிசி விசாரணை முழுவதும் தொடர்ந்து காணப்பட்ட பொதுவான அம்சமாக இருந்தது. இந்த நிதியாண்டுதான் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டாகும்.

இந்தியாவில் 2,800க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் அவற்றில் 73 கட்சிகளுக்கு மட்டுமே இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய அல்லது மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. மீதமுள்ள அனைத்தும் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் வகையைச் சேர்ந்தவையாகும்.

ஜூன் மாதத்தில் பிபிசியின் இந்த புலனாய்வு தொடங்கியது. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்.பி.க்கள் இந்திய தேசிய குடிமக்கள் கட்சி (Nationalist Citizens Party of India - NCPI) என்ற மற்றொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியில் இணைந்திருந்தனர். இந்த புலனாய்வின் கண்டறிதல்கள் இந்திய தேசிய குடிமக்கள் கட்சி குறித்து அல்ல. முன்னதாக குறிப்பிடப்பட்ட 6 கட்சிகளும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன என்பதையும் இவை குறிக்கவில்லை.

ஆனால், இந்தக் கண்டறிதல்களும் அவற்றைப் பற்றிய நிபுணர்களின் பகுப்பாய்வுகளும், இந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன.

இந்தியாவின் காகித அரசியல் கட்சிகள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உதாரணமாக, 2023-24ஆம் ஆண்டில் இந்தக் கட்சிகளின் மொத்த வருமானம், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைத் தவிர மற்ற 5 தேசியக் கட்சிகளின் வருமானத்தைவிட அதிகமாக உள்ளது. இருப்பினும், தேர்தல் ஆணைய தரவுகளின்படி, அதிக வருமானம் பெற்ற ஆறு RUPP கட்சிகள் 2024 பொதுத் தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தின. அதே சமயம், பாஜக அல்லாத அந்த ஐந்து தேசியக் கட்சிகள் 893 வேட்பாளர்களை களமிறக்கியிருந்தன.

பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 6 கட்சிகளில் அதிக நன்கொடை பெற்ற ஆம் ஜன்மத் கட்சி (Aam Janmat Party), தேர்தலில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது.

2020ஆம் ஆண்டு பாட்னாவில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி, முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.20,000-க்கு அதிகமாக எந்த நன்கொடையையும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகள், ரூ.20,000-க்கு அதிகமான அனைத்து நன்கொடைகளின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

ஆனால், 2022-23ஆம் ஆண்டில் ஆம் ஜன்மத் கட்சி ரூ.216 கோடி பெற்றது. பின்னர், 2023-24ஆம் ஆண்டில் அக்கட்சி பெற்ற நன்கொடைகள் ரூ.620 கோடியாக உயர்ந்தன.

பாட்னாவில், அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் அனாமிகா பஸ்வானை பிபிசி சந்தித்தது. தற்போது பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள பஸ்வான், 2022ஆம் ஆண்டிலேயே ஆம் ஜன்மத் கட்சியில் இருந்து விலகிவிட்டதாகக் கூறினார். அவரது கணவர், அவரது ராஜினாமா கடிதத்தை காண்பித்தார். கட்சி அலுவலகம் ஆமதாபாத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், தற்போது கௌரவ் மிஸ்ரா அதன் தலைவராக இருப்பதாகவும் கூறும் ஆவணத்தையும் அவர் காட்டினார்.

இந்தியாவின் காகித அரசியல் கட்சிகள்

பட மூலாதாரம், Facebook_Anamika Paswan

படக்குறிப்பு, ஆம் ஜன்மத் கட்சியின் முன்னாள் தலைவர் அனாமிகா பஸ்வான்

ஆனால் ஆமதாபாத்தில் அந்தக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

தொலைபேசியில் பேசிய கட்சிப் பொருளாளர் தர்மேந்திர வைஷ்ணவ், கட்சியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார். அதேவேளையில், பிபிசியால் அந்தக் கட்சியின் வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அனுப்ப முடிந்தது.

கட்சியின் நிதிநிலை குறித்து கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்று கூறிய வைஷ்ணவ், அனைத்து கேள்விகளையும் மிஸ்ராவிடம் கேட்குமாறு தெரிவித்தார்.

ஆனால், மிஸ்ரா பலமுறை மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை.

ரூ.138 கோடி நன்கொடைகள் பெற்றும், மூன்று வேட்பாளர்களை நிறுத்தியும் இருந்த கரீப் கல்யாண் கட்சி விவகாரத்திலும் இதேபோன்ற நிலை காணப்பட்டது. அந்தக் கட்சியின் அலுவலகம், ஆமதாபாத்தின் நரோடா பகுதியில் உள்ள ஆம் ஜன்மத் கட்சியின் அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ளது.

சுவாரசியமாக, பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத இந்த 6 கட்சிகளில் நான்கின் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்கள் ஒரே பகுதியிலேயே அமைந்துள்ளன. மற்ற இரண்டு கட்சிகளும் குஜராத்திலேயே செயல்பட்டு வருகின்றன.

கரீப் கல்யாண் கட்சியின் அலுவலகமும் பூட்டப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் நீரஜ் குமார் க்ஷத்ரியாவின் வீட்டில், அவரது தாயார் ஆஷா பென், அவர் வீட்டில் இல்லை என்றும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், வருமான வரித்துறை தங்களது வீட்டில் சோதனை நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஏன் அந்தச் சோதனை நடத்தப்பட்டது என்பது தமக்குத் தெரியாது என்று ஆஷா பென் கூறினார்.

இந்தியாவின் காகித அரசியல் கட்சிகள்

பட மூலாதாரம், Deepak Jasrotia

படக்குறிப்பு, கரீப் கல்யாண் கட்சி அலுவலகம்

ஆனால், பிபிசி பேசிய நிபுணர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளும் அதற்கான பதிலை வழங்கினர். இந்தக் கட்சிகள் ஏன் இவ்வளவு பெரிய அளவிலான நன்கொடைகளைப் பெறுகின்றன என்பதற்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.

அதற்கான காரணம் இந்தியாவின் வரிச் சட்டங்களில் உள்ளது. அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வரி செலுத்தும் தனிநபர் தங்கள் வருமான வரியில் சலுகை பெற முடியும்.

"அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதன் மூலம் வரிச் சலுகை பெறும் வரிச் சட்ட விதிகளை பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்" என்று ஆமதாபாத்தைச் சேர்ந்த மூத்த பட்டயக் கணக்காளர் மகேஷ் சஜ்ஜெட் தெரிவித்தார்.

இந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதற்கான ரசீதுகளை சமர்ப்பித்து தனிநபர்கள் வரிச் சலுகை கோருகின்றனர் என சஜ்ஜெட் விளக்கினார். அதற்கு பதிலாக, அந்த அரசியல் கட்சிகள் ஒரு கமிஷனைத் தக்கவைத்துக் கொண்டு, மீதிப் பணத்தை வரி செலுத்துவோருக்கு ரொக்கமாகத் திருப்பி வழங்குகின்றன என்றார்.

2025 டிசம்பரில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருமான வரித்துறை பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கான போலி நன்கொடைகள் மற்றும் பிற நிதி முறைகேடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

"சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், பல பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் வருமான அறிக்கை தாக்கல் செய்யாதவை, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் செயல்படாதவை, எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவை என்பதையும், அவை நிதி பரிவர்த்தனைகள், ஹவாலா பரிவர்த்தனைகள், எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்கள் மற்றும் போலி நன்கொடை ரசீதுகள் வழங்குவதற்கான வழிமுறைகளாக பயன்படுத்தப்பட்டதையும் காட்டுகின்றன" என்று அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் காகித அரசியல் கட்சிகள்

பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளின் வருமானத்தை ஆய்வு செய்து வரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (Association for Democratic Reforms) ஆய்வாளர் ஷெல்லி மஹாஜன், இந்தக் கட்சிகளில் பலவும் அடிக்கடி "பணமோசடி மற்றும் வரி ஏய்ப்புக்கான முகமூடிகளாக" செயல்படுகின்றன என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்தக் கட்சிகள் தேர்தல் அரசியலில் சுறுசுறுப்பாக இல்லை. இருந்தபோதும் இவ்வளவு பெரிய தொகைகள் இவற்றிற்கு கிடைக்கின்றன. அந்தப் பணத்தையும் அவை செலவிடுகின்றன. எனவே, இவை உண்மையில் அரசியல் கட்சிகளா, அல்லது தங்களது பணத்தை சட்டபூர்வமாக்க ஷெல் நிறுவனங்களுக்கான முகமூடிகளாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது" என்று அவர் கூறினார்.

விசாரணையின் போது, ஆமதாபாத், டெல்லி மற்றும் பாட்னாவில் உள்ள மூன்று வருமான வரித்துறை அதிகாரிகளையும் பிபிசி சந்தித்தது. பெயர் வெளியிடப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசிய அவர்கள், பல பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் சுயாதீனமாகவோ அல்லது ஒரு சாதாரண அரசியல் கட்சி செயல்படுவது போலவோ செயல்படுவதில்லை என்று ஒப்புக்கொண்டனர்.

மாறாக, அவற்றின் செயல்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையே இடைத்தரகர்களாக செயல்படும் பட்டயக் கணக்காளர்களால் அவை கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிபிசி ஆய்வு செய்த மற்றொரு கட்சியான சுதந்திரத்தா அபிவ்யக்தி கட்சியின் தலைவர் சுரேந்தர் திவாரி, இந்தக் கருத்தை உறுதிப்படுத்தினார். அவரது கட்சி 2023-24ஆம் ஆண்டில் ரூ.219 கோடி பெற்றிருந்தது. ஆனால், அந்தப் பணத்தைத் தாம் பயன்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.

"கட்சியின் பட்டயக் கணக்காளர் தேர்தல் பிரசாரத்திற்காக எனக்கு சிறிது பணம் கொடுத்தார். பின்னர், நன்கொடை மூலம் வரிச் சலுகை பெற விரும்பிய வாடிக்கையாளர்களுக்கு (வரி செலுத்துவோருக்கு) அந்தப் பிரசாரத்தின் காணொளிகளை அவர் காட்டுவார்" என்று திவாரி வீடியோ அழைப்பில் கூறினார்.

2026 ஜூலையில், வருமான வரித்துறையிடமிருந்து கட்சிக்கு நோட்டீஸ் வந்ததாக திவாரி தெரிவித்தார். தங்களுக்கு விவரங்களை தெரிவிக்காமல் வைத்திருந்ததாகக் கூறி, கட்சியின் பட்டயக் கணக்காளர் மயூர் சிங்கையே அவர் குற்றம்சாட்டினார். உண்மையில், கட்சியின் கட்டுப்பாடு சிங்கிடமே இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் காகித அரசியல் கட்சிகள்
படக்குறிப்பு, சுதந்திரத்தா அபிவ்யக்தி கட்சியின் தலைவர் சுரேந்தர் திவாரி

ஆனால், சிங் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்தார். தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தணிக்கை அறிக்கைகளை மட்டுமே தாம் தாக்கல் செய்வதாக அவர் கூறினார்.

துமற்றொரு கட்சி) போன்ற பல கட்சிகளுக்கு நான் இந்தப் பணியைச் செய்கிறேன். முன்னதாக பாரதிய ஜன பரிஷத் கட்சிக்கும் இந்தப் பணியை செய்துள்ளேன். புரிந்துகொள்ள முயலுங்கள், இந்தக் கட்சிகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் ஒரே நபர்கள்தான்" என்று சிங் தொலைபேசியில் தெரிவித்தார்.

இந்தக் கட்சிகளுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?

பெயர் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில், ஒரு வருமான வரித்துறை அதிகாரி பிபிசிக்கு துறை ரீதியான ஆவணத் தொகுப்பொன்றைக் காட்டினார். அதில், 2022ஆம் ஆண்டிலிருந்தே மோசடி நோக்கத்துடன் செயல்படும் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளை வருமான வரித்துறை விசாரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி சலுகை பெறுவதற்காக, வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு வழங்கியதாகக் கூறப்படும் ரூ.5,591 கோடி மதிப்பிலான போலி நன்கொடைகளை துறை அடையாளம் கண்டுள்ளது என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. இதில், ரூ.2,749 கோடியை துறை மீட்டுள்ளது. ரூ.665 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்சிகளுக்கு எதிராக சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஹார், குஜராத் மற்றும் புதுடெல்லி வருமான வரித்துறை அலுவலகங்களுக்கும், மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கும் (CBDT) பிபிசி கேள்விகளை அனுப்பியுள்ளது. இந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது. விசாரணைக்கு உட்பட்ட இந்த ஆறு கட்சிகளும் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட கட்சிகளில் அடங்குமா என்பதையும் பிபிசி கேட்டுள்ளது.

ஆனால், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

வரிச்சட்ட வழக்கறிஞர் விபு ஜெயின், இத்தகைய விவகாரங்களில் அரசு முழுமையான ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், தகவல்களை பிற அரசு அமைப்புகளுடன் பகிர வேண்டும் என்றும் வருமான வரித்துறை கையேட்டில் கூறப்பட்டுள்ளது என பிபிசியிடம் தெரிவித்தார்.

பொதுவாக பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளின் நிதி முறைகேடுகள் தொடர்பாகவும், குறிப்பாக இந்த ஆறு கட்சிகள் தொடர்பாகவும், வருமான வரித்துறையிடமிருந்து ஏதேனும் தகவல்கள் கிடைத்துள்ளனவா என்று கேட்டு, தேர்தல் ஆணையத்திற்கும் பிபிசி கேள்விகளை அனுப்பியுள்ளது. அதற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையம் 800க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கியது. ஆனால், வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்ட காரணம், கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தக் கட்சிகள் எந்தத் தேர்தலிலும் ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை என்பதுதான்.

நிதி முறைகேடுகளும் இந்த நடவடிக்கைக்கான காரணமாக இருந்ததா என்பது தெளிவாக இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கேள்விப் பட்டியலில், இதுகுறித்த விளக்கத்தையும் பிபிசி கோரியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு