தக்காளி சாப்பிட்டால் சிறுநீரக கல் உருவாகும், வாழைத்தண்டு சாறு அதை கரைக்கும் என்பது உண்மையா? மருத்துவர் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சண்முகப்ரியா செல்வராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் என்றும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும் என்றும் மக்களிடையே சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன.
இவற்றில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது? மருத்துவர்கள் கூறுவது என்ன?
மனித உடலில் உள்ள இரு சிறுநீரகங்கள் முதுகெலும்பின் இருபுறம், வயிற்றின் பின்பகுதியில் அமைந்துள்ளன. அளவில் சிறிதாக இருந்தாலும் உடலின் கழிவு நீக்கும் முக்கிய அமைப்பாக இவை செயல்படுகின்றன.
உடலில் தேங்கும் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுப் பொருட்களை சிறுநீரில் வடிகட்டி வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முதன்மைப் பணியாகும். சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் சிறுநீர், சிறுநீர்க் குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்கு சென்று, குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன் வெளியேற்றப்படுகிறது.
சிறுநீரகக் கற்கள் எதனால் உருவாகின்றன?
சிறுநீரில் வெளியேறும் கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்ற தாதுப் பொருட்கள் அதிகரிக்கும்போது, அவை படிமங்களாகி, படிப்படியாக ஒன்றிணைந்து கடினமான கல் வடிவம் பெறுகின்றன. இதுவே சிறுநீரகக் கல் எனப்படுகிறது. அரிதாக அம்மோனியம் மக்னீசியம் பாஸ்பேட் கற்களும் காணப்படுகின்றன.
சிறுநீரில் தாதுப் பொருட்களின் அளவு அதிகரிப்பது ஒரு காரணமாக இருக்க, சிறுநீர் அளவு குறைவதும் இன்னொரு முக்கிய காரணியாக அமைகிறது. சிறுநீர் அளவு குறையும்போது, அதிலுள்ள தாதுப் பொருட்களின் அடர்த்தி அதிகரித்து, படிமங்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்கிறார் சிறுநீரக மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.
உலக மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதத்தினரைப் பாதிக்கும், அதிகரித்து வரும் ஒரு சிறுநீரக மண்டலம் சார்ந்த நோயாக சிறுநீரகக் கற்கள் இருப்பதாக அமெரிக்காவின் தேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையம் தெரிவிக்கிறது.
இது சிறுநீரகச் செயல்பாடு முற்றிலுமாக நின்றுபோகும் நிலையை அடைவதற்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்றும் சிறுநீரகப் பாப்பிலா (renal papilla) மேற்பரப்புகளில் உள்ள 'ராண்டால் பிளேக்' (Randall's plaque) எனும் பகுதியில் உருவாகும் 'கால்சியம் ஆக்சலேட்' வகைக் கற்களே மிகவும் பொதுவானவை என்றும் கூறுகிறது.
சிறுநீரகக் கல்லின் அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images
பொதுவான அறிகுறிகளாக, விலாப்பகுதியில் திடீரென ஏற்படும் கடுமையான வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. ஆனால் சிறுநீரக கல் பாதிப்பு, நபருக்கு நபர் வேறுபடுகிறது எனக் கூறும் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமலே கூட சிறுநீரகக் கற்கள் உருவாகக் கூடும் என்கிறார்.
சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல் அடைப்பை ஏற்படுத்தி, நோய்த்தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான செப்டிசீமியா (Septicemia) நிலைக்கும் கொண்டு செல்லக்கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
சிறுநீரகக் கல் பாதிப்பின் அறிகுறிகள், அக்கற்கள் சிறுநீரகம், சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்ப்பை ஆகியவற்றில் எங்கு அமைந்துள்ளன என்பதைப் பொறுத்து அமைகின்றன என்று 2018-ஆம் ஆண்டு என்சிபிஐ ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்நோயின் அறிகுறிகளாகக் கடுமையான பிடிப்புடன் கூடிய வலி, விலாப்பகுதி வலி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர்ப்பாதையில் அடைப்பு அல்லது பாதிப்பு, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள், சிறுநீர் வெளியேற்றத்தில் தடை மற்றும் சிறுநீரக வீக்கம் ஆகியவை காணப்படுகின்றன என்று அந்த ஆய்வு கூறுகிறது.
"பொதுவாக, கல்லின் இருப்பிடம், எண்ணிக்கை, அளவு மற்றும் அது நகரக்கூடியதா அல்லது நிலையானதா என்பதைப் பொறுத்து அறிகுறிகளின் தீவிரம் தீர்மானிக்கப்படுகிறது. நகரும் கல் சிறுநீர்க் குழாயின் உள்பரப்பில் காயம் ஏற்படுத்துவதால் கடுமையான வலி ஏற்படுகிறது. பொதுவாக 5 மில்லிமீட்டருக்குக் கீழ் உள்ள கற்கள் இயற்கையாகவே வெளியேறும் வாய்ப்பு அதிகம். அந்த அளவை விட பெரிய கற்கள் தானாக வெளியேறுவது அரிது", என்கிறார் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இப்பிரச்னை அதிகமாகக் காணப்படுவதாகக் கூறும் அவர், வெப்பநிலை அதிகரிக்கும்போது வியர்வை மூலம் நீரிழப்பு அதிகரித்து தண்ணீர் அதிகமாக அருந்தாதவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறார்.
நிறைய தண்ணீர் குடித்தால் கல் தானாக வெளியேறுமா?

பட மூலாதாரம், Getty Images
சிறுநீரகத்தில் வலி தராத சிறிய கற்களுக்கு உடனடி சிகிச்சை தேவையில்லை. அதிக நீர் அருந்தி, தொடர்ந்து கண்காணிப்பது போதுமானது எனக் கூறும் மருத்துவர் கோபாலகிருஷ்ணன், வலியை ஏற்படுத்தும் பெரிய கற்களுக்கு பின்வரும் சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
அதிர்வலை சிகிச்சை (Shock Wave Lithotripsy): அதிர்வலைகள் மூலம் கல்லை உடைக்கும் முறை.
லேசர் சிகிச்சை: எண்டோஸ்கோபி மூலம் சிறுநீர்க்குழாயில் மாட்டியுள்ள கல்லை நேரடியாக அணுகி லேசர் மூலம் உடைக்கும் முறை.
ஸ்டெண்ட் பொருத்துதல் (Stenting): நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், முதலில் தேங்கியிருக்கும் சிறுநீரை வெளியேற்ற ஒரு சிறிய குழாய் (Stent) பொருத்தப்பட்டு, நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளித்த பின்னரே கல் அகற்றப்படும்.
தோல் வழியாகச் சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சை (Percutaneous Nephrolithotomy): பெரிய கற்களுக்கு, முதுகுப் பகுதி வழியாக ஒரு சிறிய பாதை உருவாக்கி சிறுநீரகத்தை நேரடியாக அணுகி கல்லை அகற்றும் முறை. இது பெரிய அறுவை சிகிச்சை அல்ல.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
ஒருமுறை சிறுநீரக கல் ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் அது ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கடைப்பிடிக்குமாறு கூறுகிறார் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.
அதிக அளவு தண்ணீர் அருந்துதல்: குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறும் அளவுக்குத் தண்ணீர் அருந்த வேண்டும். இது வெப்பநிலை மற்றும் தனிநபரின் வேலைச்சூழலைப் பொறுத்து மாறுபடும்.
உப்பு உட்கொள்வதை குறைத்தல்: அதிக சோடியம் உட்கொள்வது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
அசைவ உணவை (Animal Protein) குறைத்தல்: கல்லீரல், மூளை போன்ற உள்ளுறுப்புகளில் ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதால் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.
உடல் எடையைக் கட்டுப்படுத்துதல்: அதிக உடல் எடை கல் உருவாகும் அபாயத்துடன் தொடர்புடையது.
இனிப்பு பானங்களைத் தவிர்த்தல்: இவற்றில் உள்ள ஃபிரக்டோஸ் யூரிக் அமில அளவை அதிகரிக்கும்.
ஆக்சலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துதல்: சில கீரை வகைகள் மற்றும் நட்ஸ் வகைகளில் ஆக்சலேட் அதிகம் உள்ளதால் அவற்றை அளவோடு உட்கொள்ள வேண்டும்.
சில குடும்பங்களில் மரபு ரீதியான வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாகவும் சிறுநீரக கற்கள் ஏற்படலாம் என்பதால், விரிவான பரிசோதனைகள் தேவைப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகுமா?
இது அதிக மக்களால் நம்பப்படும் ஆனால் உண்மையற்ற கூற்று என்கிறார் மருத்துவர் கோபாலகிருஷ்ணன். தக்காளியில் உள்ள ஆக்சலேட் அளவு கல் உருவாக்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதால், மிதமான அளவில் உட்கொள்ளலாம் என்கிறார் அவர்.
வாழைத்தண்டு சாறு சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுமா?
இந்தக் கூற்றிலும் உண்மையில்லை என்று கூறும் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் வாழைத்தண்டு சாறு அருந்துவதன் மூலம் கல் உருவாவது தடுக்கப்படும் என்பதற்கோ அல்லது உருவான கல் எளிதில் வெளியேறும் என்பதற்கோ எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றார்.
அறுவை சிகிச்சை மூலமோ, இயற்கையாகவோ வெளியேறும் கல்லைப் பாதுகாத்து அதன் ரசாயன கூறுகளை ஆய்வு செய்வதன் மூலம், அந்நபர் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேலும் துல்லியமாக வகுக்க முடியும் எனவும் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































