நேபாள வெள்ளம்: காணாமல் போன 85 தமிழர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை எப்படி உதவும்?

நேபாள வெள்ளம்: காணாமல் போன 85 தமிழர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை எப்படி உதவும்?

பட மூலாதாரம், Pedro PARDO / AFP via Getty Images

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ், நேபாளத்தில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 85 பேர் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அங்கு மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் அல்லது உடல் பாகங்களுடன் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு டிஎன்ஏ பொருத்தம் உள்ளதா என்பதை அறிய, உயிரியல் ரீதியாக நெருக்கமான உறவினர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த நடைமுறை எடுக்கப்படுவதாலேயே காணாமல் போனவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகப் பொருள்படாது. வெள்ளம் நிகழ்ந்து பல நாட்களுக்குப் பிறகும் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் தொடர்கின்றன.

காணாமல் போன 85 பேரின் நெருங்கிய உறவினர்களுக்கு இலவசமாக டிஎன்ஏ விவரக் குறிப்பு தயாரிக்கப்படும் எனக் கூறியதுடன், அதற்கான தடய அறிவியல் ஆய்வகங்களின் விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்பாகவே சில குடும்பத்தினர் தனியார் ஆய்வகங்கள் மூலம் டிஎன்ஏ விவரக் குறிப்புகளைத் தயாரித்து நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.

உடல்களை தற்காலிகமாகப் புதைக்கும் நேபாள அரசு

நேபாளத்தின் போட்டே கோஷி (Bhote Koshi) பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் 2 அன்று நேபாளத்தின் தேசிய பேரிடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட நிலவரப்படி, 1,114 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன, 3,916 பேர் காணாமல் போயிருந்தனர், 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 11,993 பேர் மீட்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து மாறி வருவதும் கவனிக்கத்தக்கது.

தமிழக அரசு செப்டம்பர் 3ஆம் தேதி பகிர்ந்த தகவலின்படி, நேபாள வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் சிக்கியிருந்தனர். "அவர்களில் 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 85 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லை" என்று அரசு தெரிவித்தது.

வெள்ளம் நிகழ்ந்து பல நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட உடல்கள் அழுகத் தொடங்கியிருந்ததையும், அவற்றைப் பாதுகாப்பதற்குத் தேவையான குளிர்சாதன வசதிகள் போதுமானதாக இல்லை என்பதையும் நேபாளத்தில் கள செய்திகளைச் சேகரித்து வரும் பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ் தெரிவித்தார்.

நேபாளம் வெள்ளத்தில் உயிரிழந்த தனது மகனுக்கு இறுதிச்சடங்கு செய்யும் தந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாளம் வெள்ளத்தில் உயிரிழந்த தனது மகனுக்கு இறுதிச் சடங்கு செய்யும் தந்தை

மேலும், "உடல்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் மீண்டும் பினாயில் தெளிக்கப்படுவதையும்" அவரும் அவரது குழுவினரும் நேரில் பார்த்தனர்.

சித்வானில் உள்ள தகவல் மையம் ஒன்றில், அடையாளம் தெரியாத உடல்களின் படங்கள் திரையில் காட்டப்பட்டதை பிபிசி செய்தியாளர் ஜூஹல் புரோஹித் நேரில் பதிவு செய்தார். குடும்பத்தினர் தங்கள் உறவினர்களை அடையாளம் காண உதவுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் அங்கு செல்வதற்கு இரு நாட்களுக்கு முன்பு வரை 10 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருந்தன. மீதமுள்ள உடல்களை நான்கு இடங்களில் வைக்க ஏற்பாடு செய்தபோதும் இடம் போதவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசியிடம் பேசிய சித்வான் மாவட்ட தலைமை அதிகாரி கணேஷ் ஆர்யல், "எங்களிடம் போதுமான எண்ணிக்கையில் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகள் இல்லை. விருப்பம் இல்லாவிட்டாலும் சூழ்நிலையால் தற்காலிகமாக அவற்றைப் புதைப்பது என்ற கடைசி வழியைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று கூறினார்.

இதன் காரணமாக சித்வானின் நகர்ப்புறப் பகுதிகளில் இருந்து தொலைவிலுள்ள தேவ்காட் காட்டுப் பகுதியில் உடல்கள் தற்காலிகமாகப் புதைக்கப்படுவதை பிபிசி குழுவினர் நேரில் பதிவு செய்தனர். அங்கு மட்டுமின்றி, நேபாளத்தின் வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாகப் புதைக்கப்பட்ட உடல்களில் இருந்தும் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கினர்.

உடல்களில் இருந்து உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்படுவதுடன், புகைப்படங்கள் மற்றும் பிற அடையாள விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. உடல்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குறியீட்டு எண் அளிக்கப்படுகிறது. பின்னர் குடும்பத்தினரின் டி.என்.ஏ விவரக் குறிப்புடன் பொருத்தம் கண்டறியப்பட்டால், அந்தக் குறியீட்டு எண்ணின் உதவியுடன் குறிப்பிட்ட உடல் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிய முடியும்.

நேபாள வெள்ளம்

பட மூலாதாரம், NEPAL ARMY

அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காணும் பணிகளுக்காக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து தடயவியல் நிபுணர்களும், சிங்கப்பூரில் இருந்து பேரிடர் உயிரிழப்புகளை அடையாளம் காணும் சிறப்புக் குழுவினரும் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.

திரிபுவன் பல்கலைக் கழக பயிற்றுவித்தல் மருத்துவமனையைச் சேர்ந்த, பெயரை வெளியிட விரும்பாத தடயவியல் மருத்துவர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார்.

அப்போது, "வெள்ளத்தில் உயிரிழந்து அடையாளம் காணப்படாத உடல்களில் இருந்து நாங்கள் மரபணு மாதிரியைச் சேகரித்து வைத்துள்ளோம். இங்கு தங்களின் குடும்பத்தினர் உடலைத் தேடி வருபவர்கள், எங்களிடம் தங்களின் மரபணுப் பரிசோதனை முடிவைக் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் ஒப்பிட்டு, அதற்குரிய உடலை அடையாளம் காண்போம்," எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "நாங்கள் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரின் உடலை அடையாளம் காண்பதற்கே உதவி செய்வோம். நேபாள காவல்துறை குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஒப்படைக்கும் பட்சத்தில், அந்த உடல் அல்லது பாகங்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். புதைக்கப்பட்ட உடலாக இருந்தால் அதைத் தோண்டியெடுத்து அவர்களிடம் ஒப்படைப்போம்," என்றும் கூறினார்.

உடல் அடையாளம் காணப்பட்டவுடன் நேரடியாகக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. "உடற்கூறாய்வு, மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்தல், கடவுச்சீட்டு அல்லது பிற அடையாள ஆவணங்களைச் சரிபார்த்தல், தூதரக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட நடைமுறைகள் ஆகியவை நிறைவடைந்த பிறகே உடல் அல்லது உடல் பாகங்கள் ஒப்படைக்கப்படும். தற்காலிகமாகப் புதைக்கப்பட்ட உடலாக இருந்தால், அடையாளம் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்ட பிறகு அதைத் தோண்டியெடுத்து ஒப்படைக்க முடியும்" என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளப் பேரிடரில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப் படுவதற்கு முந்தைய நேபாளம் - சீனா எல்லைப் பகுதியின் தோற்றத்தைக் காட்டும் ஒரு செயற்கைக்கோள் படம்

பட மூலாதாரம், Satellite image (c) 2026 Vanto

படக்குறிப்பு, வெள்ளப் பேரிடரில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப் படுவதற்கு முந்தைய நேபாளம் - சீனா எல்லைப் பகுதியின் தோற்றத்தைக் காட்டும் ஒரு செயற்கைக்கோள் படம்

உடலைப் பெற என்னென்ன தகவல்கள் தேவை?

அடையாளம் தெரியாத உடல்களின் படங்கள் மற்றும் விவரங்களை நேபாள காவல்துறை இணையதளத்தில் குடும்பத்தினர் பார்க்கலாம். அதன் மூலம் அடையாளம் காண முடிந்தால், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் அடுத்தகட்ட நடைமுறைகளுக்கு உதவும்.

படங்கள் அல்லது பிற அடையாளங்கள் மூலம் உறுதிசெய்ய முடியாதபோது, காணாமல் போனவரின் நெருங்கிய உயிரியல் உறவினரின் டிஎன்ஏ விவரக் குறிப்பு, உடலில் இருந்து உருவாக்கப்பட்ட விவரக் குறிப்புடன் ஒப்பிடப்படும்.

இதற்காக காணாமல் போனவரின் முழுப் பெயர், குடியுரிமை, கடவுச்சீட்டு அல்லது பிற அடையாள விவரங்கள், காணாமல் போன தேதி மற்றும் இடம் தெரிந்திருந்தால் அந்தத் தகவல், அங்கீகரிக்கப்பட்ட தடயவியல் ஆய்வகத்தின் டிஎன்ஏ விவரக் குறிப்பு அறிக்கை, மாதிரி வழங்கியவருக்கும் காணாமல் போனவருக்கும் இடையிலான உயிரியல் உறவுமுறை ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் எங்கு மாதிரி அளிக்கலாம்?

தமிழக அரசு அறிவித்துள்ளபடி, காணாமல் போனவர்களின் பெற்றோர் அல்லது குழந்தைகள் போன்ற நெருங்கிய உயிரியல் உறவினர்கள் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள அரசு தடய அறிவியல் ஆய்வகங்களில் இலவசமாகத் தங்கள் டி.என்.ஏ மாதிரிகளைக் கொடுக்கலாம். அதிலிருந்து தயாரிக்கப்படும் டி.என்.ஏ விவரக் குறிப்பு நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

மத்திய அரசும் இதற்காக மத்திய மற்றும் மாநில தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக ஆய்வகங்களின் சேவைகளை வழங்கியுள்ளது. நேபாள காவல்துறை தெரிவித்துள்ள தொழில்நுட்பத் தேவைகளுக்கு உட்பட்டு, அடையாளம் காண்பதற்காக 'Autosomal STR DNA profiling' மேற்கொள்ளலாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் காணாமல் போனவரின் தந்தை, தாய், மகன், மகள் அல்லது உடன்பிறந்தவர் போன்ற நெருங்கிய உயிரியல் உறவினர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

டி.என்.ஏ விவரக் குறிப்பு தயாரானதும், நேபாள அதிகாரிகள் கேட்டுள்ள ஆரம்பக்கட்ட தகவல்களுடன் அதை dnacodis@nepalpolice.gov.np என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஒருங்கிணைப்பு உதவிக்காக அதன் நகலை eoikathmandufloodsupport@gmail.com என்ற இந்திய தூதரக மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். இதற்கான நேபாள காவல்துறை உதவி எண் +977 9841 6160 95.

 மரபணு மருத்துவர் பிரதீப் குமார்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மரபணு மருத்துவர் பிரதீப் குமார்

டி.என்.ஏ மூலம் அடையாளம் காண்பது எப்படி?

டி.என்.ஏ என்பது ஒருவரின் உடலிலுள்ள மரபணு தகவலைக் கொண்டது. பெற்றோர் மற்றும் குழந்தைகள் தங்கள் ஆட்டோசோமல் டி.என்.ஏ-வின் சுமார் பாதியைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

அதுகுறித்து பிபிசியிடம் விளக்கிய மரபணு மருத்துவர் பிரதீப் குமார், "உடன்பிறந்தவர்களும் சராசரியாக சுமார் பாதி டி.என்.ஏ-வை பகிரலாம். இதனால் காணாமல் போனவரின் உடல் கிடைக்காத நிலையிலும், அவரது நெருங்கிய உயிரியல் உறவினர்களின் மாதிரிகள் அடையாளம் காண உதவுகின்றன."

"உறவினரிடம் இருந்து பொதுவாக ரத்தம் அல்லது வாயின் உட்புறத்தில் இருந்து ஸ்வாப் (swab) போன்ற உயிரியல் மாதிரி சேகரிக்கப்படும். அதிலிருந்து டி.என்.ஏ பிரித்தெடுக்கப்பட்டு, அடையாளப் பரிசோதனைக்குத் தேவையான குறிப்பிட்ட எஸ்.டி.ஆர் பகுதிகள் பி.சி.ஆர் (Polymerase Chain Reaction) முறையில் பல பிரதிகளாகப் பெருக்கப்படுகின்றன. பின்னர் அவற்றைக் கொண்டு டி.என்.ஏ விவரக் குறிப்பு உருவாக்கப்படுகிறது" என்று விளக்கினார்.

இதேபோல், "அடையாளம் தெரியாத உடல் அல்லது உடல் பாகத்தில் இருந்து கிடைக்கும் பொருத்தமான உயிரியல் மாதிரியில் இருந்தும் டி.என்.ஏ விவரக் குறிப்பு உருவாக்கப்படும். இரண்டிலும் இருக்கும் எஸ்.டி.ஆர் குறியீடுகள் மற்றும் மரபியல் உறவுக்கான புள்ளியியல் சாத்தியங்கள் ஆய்வு செய்யப்படும். இது முழு டி.என்.ஏ -வும் அப்படியே ஒன்றாக உள்ளதா என்பதைப் பார்க்கும் பரிசோதனை அல்ல, கிடைக்கும் ஆதாரங்கள் குறிப்பிட்ட உயிரியல் உறவை எந்த அளவுக்கு ஆதரிக்கின்றன என்பதைக் கணக்கிடும் நடைமுறை" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"நேபாளத்தில் வெள்ளப் பெருக்கில் இறந்து அடையாளம் காண முடியாதவர்களின் உடலில் தோல் அல்லது முடி ஆகியவற்றில் இருந்து இத்தகைய மரபணு மாதிரி எடுக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து மரபணு மாதிரி முடிவுகளை அவர்களுக்கு அனுப்பினால் அதனுடன் பொருந்துகிற உடலை அவர்களால் அடையாளம் காண முடியும்," என்றும் மருத்துவர் பிரதீப்குமார் விளக்கினார்.

அதாவது அவரது கூற்றின்படி, "மொத்தம் 300 பேருடைய மரபணு மாதிரி அங்கிருந்தால், ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீட்டு எண் வைத்திருப்பார்கள். இங்கிருந்து அனுப்பும் முடிவும், அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள பிரேதங்களின் மரபணு மாதிரியையும் ஒப்பிட்டு, அவற்றில் எந்த எண்ணுடன் உள்ள மாதிரி முடிவு பொருந்தும் எனத் தெரிந்தால் அதை அந்தக் குறிப்பிட்ட நபரின் பிரேதம் அல்லது உடல் பாகம் என அடையாளம் காண்பார்கள்."

ஒருவரின் அடிப்படை மரபணுத் தகவல் பொதுவாக நிலையானதாக இருந்தாலும், இறப்புக்குப் பிறகு வெப்பம், ஈரப்பதம், நீர், நுண்ணுயிர்கள், கால தாமதம் போன்ற காரணங்களால் டி.என்.ஏ சிதைவடையலாம். இருந்தபோதிலும், பாதுகாக்கப்பட்ட திசு, எலும்பு, பல் போன்றவற்றில் இருந்து பயன்படுத்தக்கூடிய டி.என்.ஏ விவரக் குறிப்பை சில நேரங்களில் பெற முடியும்.

இதற்கிடையில், கோவையில் இருந்து நேபாளம் சென்று காணாமல் போன ஐந்து பேரின் குடும்பத்தினர் மற்றும் கரூரில் இருந்து சென்ற நான்கு பேரின் குடும்பத்தினர் என மொத்தம் ஒன்பது பேரிடம் உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து இருப்பதாகவும் கோவையைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழக அரசு இலவசப் பரிசோதனை வசதியை அறிவிப்பதற்கு முன்பாகவே இந்தக் குடும்பத்தினர் தங்களை அணுகியதாகவும் அவர் குறிப்பிட்டார். அவற்றின் பகுப்பாய்வு முடிவுகள் தயாரான பிறகு நேபாளத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டிஎன்ஏ ஒப்பீட்டில் அடையாளம் உறுதிசெய்யப்பட்டு, நேபாள அதிகாரிகள் கோரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டால், அதிகாரபூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு உடல் அல்லது உடல் பாகங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு