ஆப்பிரிக்கா: 'பிறப்புறுப்புகள் திருடப்படுவதாக' பரவும் வதந்திகளால் நடக்கும் தேவையற்ற வன்முறைகள்

பட மூலாதாரம், Alfred Lasteck / BBC
- எழுதியவர், முங்காய் நிகிகே
- பதவி, பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட்
- எழுதியவர், ஆல்ஃபிரட் லாஸ்டெக்
- பதவி, பிபிசி ஆப்பிரிக்கா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, "பிறப்புறுப்புத் திருட்டு" என்றழைக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான தவறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக, 6 ஆப்பிரிக்க நாடுகளின் காவல்துறையிடம் இருந்து தரவுகளைச் சேகரித்த பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட் கண்டறிந்துள்ளது.
ஒருவரின் தோளில் சாதாரணமாகத் தட்டினாலே ஆண்களின் பிறப்புறுப்புகள் சுருங்கிவிடும் அல்லது காணாமல் போய்விடும் என்ற வதந்திகளுடன் இந்தக் கொலைகள் தொடர்புடையவை. சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் தவறான தகவல்கள் இந்த வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்து வருகின்றன.
"யாரோ ஒருவரின் பிறப்புறுப்பை நாங்கள் திருடிவிட்டதாக அவர்கள் கூச்சலிட்டனர். மிகப்பெரிய கூட்டம் இருந்ததால் எங்களுக்குத் தப்பிக்க எந்த வழியும் இல்லை" என்று ஏப்ரல் மாதம்தான் சந்தித்த துயரமான அனுபவம் குறித்து தான்சானியாவை சேர்ந்த மெக்கானிக் போனிஃபேஸ் ங்லா பிபிசியிடம் தெரிவித்தார்.
பிறப்புறுப்பைத் திருடியதாக நம்பப்பட்டதால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். பிபிசி பார்த்த காணொளிகளில் இடம்பெற்ற சம்பவங்களும் அவரது அனுபவத்தைப் போலவே இருந்தன. அந்நியர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு தங்களது பிறப்புறுப்பு உறுப்புகளான ஆண்குறி மற்றும் விதைப்பைகள் காணாமல் போய்விட்டதாகவோ அல்லது சுருங்கிவிட்டதாகவோ ஆண்கள் கூறுகின்றனர்.
பின்னர், அவர்களிடம் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் அந்த உறுப்புகளை மீண்டும் கொடுக்குமாறு ஒரு கும்பல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கோருகிறது. இத்தகைய கூற்றுகள் நீண்ட காலமாக நிலவி வரும் அச்சங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளில் வேரூன்றியவை.
ஆப்பிரிக்கக் கண்டத்தில், குறிப்பாக சூனியம் மீதான நம்பிக்கை இன்னும் பரவலாக உள்ள சமூகங்களில், இவை புதிதானவை அல்ல. சமூக ஊடகங்கள் இந்த அச்சங்களை மேலும் அதிகரித்துள்ளன. சமீபத்திய வதந்திகள் கடந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் தொடங்கியதாகத் தெரிகிறது. அங்கு இதேபோன்ற குற்றச்சாட்டுகள் 2008ஆம் ஆண்டிலும் எழுந்திருந்தன.
பின்னர் இந்த வதந்திகள் படிப்படியாக அந்தப் பிராந்தியம் முழுவதும் பரவி, புருண்டி, ஜாம்பியா, தான்சானியா ஆகிய நாடுகளுடன் மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யாவுக்கும் சென்றன. ஜாம்பியாவில், காணாமல் போகும் பிறப்புறுப்புகள் குறித்த வதந்தி முதன்முதலில் மார்ச் மாதத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது. அப்போது ஒரு பெண் அடித்துக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து எல்லையைக் கடந்து தான்சானியாவிலும் பீதி பரவியது.

பட மூலாதாரம், Getty Images
ஜாம்பியா எல்லையிலுள்ள தான்சானியாவின் பரபரப்பான வர்த்தக நகரமான துந்துமாவுக்கு அருகிலுள்ள எம்பெம்பாவில் உள்ள தனது வீட்டில், ங்லா தனது தலையின் வலது பக்கமாகச் செல்லும் அரிவாள் வடிவத் தழும்பின் மீது விரல்களைத் தடவியபடி, தான் சந்தித்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை நினைவுகூர்கிறார்.
"அன்று நான் மரணத்துக்கு எவ்வளவு அருகில் சென்றிருப்பேன் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால், சாப்பிடுவதற்காக அந்த உணவகத்திற்குள் சென்றிருக்க மாட்டேன். ஆனால், மரணம் நம்மை எவ்வளவு நெருங்கி இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது" என்று அந்த மெக்கானிக் கூறுகிறார்.
அவரும் அவரது நண்பரும் கார் விற்பனை தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவரைச் சந்திப்பதற்காக ஏப்ரல் 1ஆம் தேதி துந்துமாவுக்கு சென்றிருந்தனர். அதற்கு முன்பு மதிய உணவு சாப்பிட முடிவு செய்தனர்.
உணவகத்தில் அமர்ந்து சிறிது நேரமே ஆகியிருந்த நிலையில், ஒரு கும்பல் அவர்களை வெளியே இழுத்துச் சென்றது. அவரது தாடையில் காணப்படும் இரண்டு சிறிய தழும்புகளும், காணாமல் போன ஒரு பல்லும் அவர் சந்தித்த துயரத்திற்கான தடயங்களாக உள்ளன.
அவர்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் சுயநினைவை இழந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் கண்விழித்த ங்லாவுக்கு, அவரது நண்பர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் அவர், தனது வீட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில், தற்போது நடக்கத் தடுமாறுகிறார். மேலும், தொடர்ந்து தலை வலியால் அவதிப்படுவதாகவும் கூறுகிறார்.
தனது மெக்கானிக் கடைக்குத் திரும்பி வேலை செய்ய அவரால் முடியவில்லை. ஆனால், தனக்குத் தேவையான சில மருந்துகளுக்கான செலவுக்கு அண்டை வீட்டாரும் நண்பர்களும் உதவி செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ங்லாவும் அவரது நண்பரும் தாக்கப்பட்ட அதே நாளில், புகைப்படக் கலைஞரும் தொழிலதிபருமான மைக்கேல் சிலாவ்வே, துந்துமாவில் இதேபோன்ற மற்றொரு தாக்குதலை நேரில் பார்த்ததாகக் கூறுகிறார்.
திருடப்பட்டதாகக் கூறப்படும் பிறப்புறுப்புகள் தொடர்பான காணொளிகள் டிக்டோக்கில் பரவத் தொடங்கிய பின்னர், அங்கு பதற்றம் அதிகரித்து வந்ததாக அவர் கூறுகிறார். தனது கடைக்கு வெளியே மக்கள் ஓடுவதைப் பார்த்த அவர், அருகில் ஒரு நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் தாக்கப்பட்டு வருவதாகவும், பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அறிந்துகொண்டார்.
"அவருக்குத் தீ வைத்த பிறகு, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அனைவரும் சிதறி ஓடிவிட்டனர்" என்று 23 வயதான அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட்டால் சரிபார்க்கப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பான ஒரு காணொளி, டிக்டோக் மற்றும் ஃபேஸ்புக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
அதில், ஒரு நபர் தாக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவரிடம் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் பிறப்புறுப்புகளைத் திருப்பிக் கொடுக்குமாறு ஒரு குழுவினர் அவரிடம் கோருவதும் இடம் பெற்றுள்ளது.
"அந்தச் சம்பவங்கள் தொடர்ந்து தீவிரமடைந்தன. மக்களும் தொடர்ந்து தாக்கப்பட்டனர்" என்கிறார் சிலாவ்வே. அந்த நேரத்தில் தன்னைப் போன்ற இளைஞர்கள் அச்சமடைந்ததாகவும், ஆனால் தற்போது அந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
மொம்பா மாவட்டத்தில் உள்ள துந்துமாவை சேர்ந்த 50 வயதான தையல்காரரும் ஆடை வடிவமைப்பாளருமான ஆஷா ஸ்டீவன் ம்வாகிலாசாவும் இதை ஒப்புக்கொள்கிறார்.
"அது உண்மை அல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன்" என்று ஆஷா கூறுகிறார். ஆனால், குறிப்பாக தனது கணவர் அல்லது மகன்கள் வெளியே சென்றிருக்கும்போது, இந்த விஷயம் அவருக்கு ஏற்படுத்திய பதற்றம் நீங்கவில்லை. இருப்பினும், தற்போது காவல்துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதற்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.
சில சம்பவங்களுக்குப் பின்னால் திட்டமிட்ட குற்ற நோக்கம் இருந்ததாக உள்ளூர் விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக மொம்பா மாவட்ட ஆணையர் எலியாஸ் டேனியல் ம்வாண்டோபோ பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
"தனிப்பட்ட ஆதாயங்களுக்காகக் குற்றம் செய்யவும், பொது மக்களிடையே பீதியைத் தூண்டவும் தனிநபர்கள் சதி செய்துள்ளதாக" அவர் கூறினார். தான்சானியாவின் முக்கிய நகரமான டார் எஸ் சலாம் நகரில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு காணொளியில், ஒரு தூசி நிறைந்த சந்தைத் தெருவில் ஒரு நபரை ஒரு கூட்டம் அழைத்துச் செல்கிறது.
அந்த நபரைத் தள்ளியும், பிடித்தும், தாக்கியும், பிறப்புறுப்புகளைத் திருப்பிக் கொடுக்குமாறும் அந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது. அந்த நபரோதான் குற்றமற்றவர் என்று கெஞ்சுகிறார். மொசாம்பிக் மற்றும் கென்யாவில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பான இதேபோன்ற காணொளிகளையும் பிபிசி டிஸ்இன்ஃபர்மேஷன் யூனிட் சரிபார்த்துள்ளது. கும்பல் வன்முறை தொடர்பான இந்தப் பதிவுகளில் டஜன் கணக்கானவை டிக்டோக், ஃபேஸ்புக் தளங்களில் பரவி வருகின்றன.
அவற்றில், சம்பவங்களை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நபர்களின் பதிவுகள், சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்ற எச்சரிக்கைகள், கருத்துகள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களின் செய்தி அறிக்கைகள் போன்று வடிவமைக்கப்பட்ட காணொளிகள் ஆகியவையும் அடங்கும்.
பிபிசி ஆய்வு செய்த பல பதிவுகள், கும்பல் வன்முறையைக் காட்டும் சில காணொளிகள் உள்பட, தொடர்ந்து இணையத்தில் உள்ளன.
"எங்களுடன் பகிரப்பட்டுள்ள உள்ளடக்கங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். எங்களது கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்படும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிபிசி கருத்து கேட்டு அனுப்பிய கோரிக்கைக்கு டிக்டோக் இதுவரை பதிலளிக்கவில்லை. பார்வையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தும், சமூக ஊடகங்களில் உள்ளடக்கங்களை உருவாக்கும் சிலர், இந்தக் கூற்றுகளை உண்மையென நம்புகிறார்களா அல்லது முதன்மையாக அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக அவற்றைப் பகிர்கிறார்களா என்பது பெரும்பாலும் தெளிவாக இருப்பதில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பதிவுகளுடன், சில பயனர்கள் பிறப்புறுப்பு திருட்டிலிருந்து பாதுகாப்பதாகக் கூறப்படும் 'தாயத்துகளையும்' விளம்பரம் செய்கின்றனர். அதே வேளையில், நகைச்சுவைக் கலைஞர்கள் இந்தக் கூற்றுகளை நகைச்சுவை நாடகங்கள் மூலமாகப் பகடி செய்துள்ளனர்.
ஸ்மார்ட்போன்களும் சமூக ஊடகங்களும் வதந்திகள் வேகமாகப் பரவவும், அதிகமான மக்களைச் சென்றடையவும், அவை பரவத் தொடங்கிய பின்னர் அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகவும் செய்வதாக எழுத்தாளர் ஜூலியன் போன்ஹோம் கூறுகிறார்.
அவரது 'தி செக்ஸ் தீவ்ஸ்: தி ஆன்த்ரோபாலஜி ஆஃப் எ ரூமர்' என்ற புத்தகம், "பாலியல் திருடர்கள்" குறித்த வதந்திகள் எவ்வாறு பரவுகின்றன, மக்கள் அவற்றை ஏன் நம்புகின்றனர் என்பதை ஆராய்கிறது.
"யாரோ ஒருவர் தனது பிறப்புறுப்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுவதை மக்கள் வெறுமனே கேட்பதில்லை. அது தங்களுக்கு நேர்ந்துவிட்டதாகக் கூறும் மன உளைச்சலுக்கு ஆளான ஆண்களை அவர்கள் பார்க்கின்றனர் அல்லது குற்றச்சாட்டுகளுக்கு ஒரு கூட்டம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்கின்றனர்" என்று அவர் குறிப்பிடுகிறார்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள், சரிபார்க்கப்படாத கூற்றுகளை மிகவும் நம்பகமானதாகத் தோன்றச் செய்யக்கூடும் என்று ஜூலியன் கூறுகிறார். அதற்கு அவற்றின் உடனடித் தன்மையே காரணம். தற்போதைய டிஜிட்டல் சூழலுக்கும், இது முந்தைய காலங்களில் ஏற்பட்ட வதந்திப் பரவல்களுக்கும் இடையிலான "மிக முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று" என்றும் அவர் விவரிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மொசாம்பிக் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. அங்கு ஆறு வாரங்களில் 55 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக மே மாதம் காவல்துறை தெரிவித்தது. கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் அடங்குவர்.
மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போ, பரவலாகப் பரவிய வதந்திகளையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் வெளிப்படையாகக் கண்டித்தார். இந்தக் கூற்றுகள் பொய்யானவை என்றும், யாருடைய உடலின் ஒரு பகுதியும் காணாமல் போயிருப்பதற்கான எந்த மருத்துவ ஆதாரத்தையும் அரசாங்கம் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் மாதம் காபோ டெல்கடோ மாகாணத்தில் அந்த இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் அவர்களது வீடு மற்றும் பணியிடத்தில் தாக்கப்பட்டனர். இந்தப் பகுதி தான்சானியாவின் எல்லையில் அமைந்துள்ளது. அங்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இஸ்லாமிய கிளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தக் கூற்றுகளை எதிர்கொள்ள அதிகாரிகள் பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டபோது, தாக்குதல்கள் நடந்த பகுதிகளில் இருந்த சுகாதார நிலையங்கள் பல வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தன.
இந்த சுகாதார விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காணாமல் போனது அல்லது பிறப்புறுப்பு சுருங்கும் மனநோய் என அறியப்படும் 'கோரோ சிண்ட்ரோம்' என்ற மனநோயுடன் சில அச்சங்கள் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அரசாங்கம் தெரிவித்தது.
இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மிகச் சமீபத்தில் கென்யாவில் நடந்துள்ளன. அங்கு கடலோரப் பகுதிகளான குவாலே மற்றும் மொம்பாசா மாவட்டங்களில் கும்பல்களால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஜூலை மாதம் முதல் சம்பவங்கள் குறித்து தகவல்கள் வெளியான பின்னர், மொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர், "வெறுமனே பார்வைகளையும் கவனத்தையும் ஈர்ப்பதற்காக" மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கூற்றுகளைப் பரப்பிய, உள்ளடக்கங்களை உருவாக்கும் சிலர் மீது குற்றம்சாட்டினார்.
"இத்தகைய தவறான தகவல்கள் எளிதில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்" என்று நூர் பிபிசியிடம் தெரிவித்தார். அதன் பின்னர் காவல்துறையினர் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், பலரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆண்களின் பிறப்புறுப்புகளை காணாமல் போகச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணைத் தாக்கியதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தை மற்றும் மகனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும் இதில் அடங்கும்.
இதேபோன்ற கூற்றுகளும் மலாவியில் கும்பல் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். அண்டை நாடான தான்சானியாவில் உள்ள துந்துமாவுக்கு திரும்பினால், மெக்கானிக் இங்லா தாக்குதலால் ஏற்பட்ட உடல்ரீதியான பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையிலும், அந்தச் சம்பவம் ஏற்படுத்திய மன வேதனை இன்னும் ஆறவில்லை.
"எனது நண்பர் அர்த்தமற்ற விதத்தில் உயிரிழந்ததை நினைத்துப் பார்க்கும்போது அது இன்னும் என்னை ஆழமாகப் பாதிக்கிறது. ஏனென்றால், அப்போது என்ன நடந்து கொண்டிருந்தது என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை" எனக் கூறும் அவர், "எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென கற்களால் தாக்கப்பட்டு, இறுதியில் உங்கள் உயிரையே இழக்க நேரிடுவதா?" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































