இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே போட்டி - எரிசக்திக் கட்டணங்களில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப், மின்சாரம்
படக்குறிப்பு, காற்றாலைகள் உள்நாட்டிலேயே மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வழியாக இருந்தாலும், அவற்றைச் சார்ந்தும் சில சிக்கல்கள் எழலாம்
    • எழுதியவர், ஜஸ்டின் ரெளலாட்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

வட கடலில் உள்ள ஓர் எரிவாயு ஆலை, டெக்சாஸில் உள்ள ஓர் எண்ணெய் வயல், சீனாவில் உள்ள சூரிய மின்தகடு தயாரிக்கும் தொழிற்சாலை. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, வெவ்வேறு உலகங்களில் இருப்பவைபோல் தோன்றலாம். ஆனால், இவை அனைத்தையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவது உங்கள் எரிசக்தி கட்டணங்கள் தான்.

பிரிட்டிஷ் கேஸ், இ.டி.எஃப் (EDF), இ.ஆன் (E.ON) உள்ளிட்ட முக்கிய எரிசக்தி நிறுவனங்களின் சமீபத்திய கணிப்புகளின்படி, ஜனவரி மாதத்தில் எரிசக்தி கட்டணம் 25 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும். இதனால், பிரிட்டனில் உள்ள ஒரு சராசரிக் குடும்பம் ஆண்டுக்கு சுமார் 460 பவுண்ட் கூடுதலாகச் செலவிட வேண்டியிருக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நடைபெறும் போரின் தாக்கம் பிரிட்டன் மக்களின் வீட்டு எரிசக்தி கட்டணங்களில் எதிரொலிக்கிறது.

பிப்ரவரியில் இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை கிட்டத்தட்ட மூடப்பட்டதால், உலகச் சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

குளிர்காலத்தில் எரிவாயுவின் விலை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஐரோப்பிய நாடுகளிடம் தற்போது எரிவாயு இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. 2011-ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்பட்ட அளவுகளில் இதுவே மிகக் குறைந்த இருப்பாகும். அதே நேரத்தில், குளிர்காலத் தேவையைச் சமாளிக்க எரிவாயுவின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் விலை மேலும் உயரக்கூடும்.

இவற்றுடன் சேர்ந்து புவி வெப்பமடைதல் என்ற மற்றொரு மிகப்பெரிய அச்சுறுத்தலும் உள்ளது. எதிர்காலத்தில் வெப்பநிலை மேலும் உயர்வதைத் தடுக்கவும், காலநிலை மாற்றத்தின் கடுமையான பாதிப்புகளைத் தவிர்க்கவும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைக்க வேண்டியது அவசியம். ஆனால், கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டிய அதே நேரத்தில், எரிசக்திக் கட்டணங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்தச் சவாலை பிரிட்டன் மட்டுமல்ல, பல நாடுகளும் எதிர்கொள்கின்றன.

உலகின் இரு பெரும் எரிசக்தி வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில், எரிசக்தி மற்றும் காலநிலைக் கொள்கைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால், மற்ற நாடுகள் எந்தத் தரப்பை ஆதரிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன.

அமெரிக்கா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. சாதனை அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்வதுடன், அவற்றை வாங்குமாறு தனது நட்பு நாடுகளையும் வலியுறுத்துகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மறுபுறம், சூரிய மின்தகடுகள், மின்கலங்கள், மின்சார கார்கள் போன்ற தூய்மையான எரிசக்தித் தொழில்நுட்பங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து உலகச் சந்தையில் குவித்து வரும் சீனா, இவை புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக அமையும் என்று நம்புகிறது.

புதைபடிவ எரிபொருட்களா அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியா என்பதில் எந்தத் தரப்பு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் உலக நாடுகள் எரிசக்திக்காகச் செலவிடும் தொகையும், புவி வெப்பமடைதலுக்குக் காரணமான வாயுக்களின் உமிழ்வைக் குறைக்கும் வேகமும் அமையும்.

பிரிட்டன் ஏற்கெனவே தான் இறக்குமதி செய்யும் எரிவாயுவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை அமெரிக்காவிலிருந்தும், தூய்மையான எரிசக்திக்கான பெரும்பாலான உபகரணங்களைச் சீனாவிலிருந்தும் வாங்குகிறது. இதனால், இரு நாடுகளின் எரிசக்திக் கொள்கைகளுக்கும் இடையில் பிரிட்டன் சிக்கியுள்ளது.

இந்தச் சூழலில், பிரிட்டன் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கும்? அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் அணுகுமுறைகளுக்கும் இடையே சமநிலையான ஒரு வழி இருக்கிறதா? இந்தப் போட்டி உங்கள் எரிசக்திக் கட்டணங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப், காற்றாலை, சூரிய மின்சக்தி

இரண்டு முடிவுகள்

இன்வெர்னஸ் நகருக்கு அருகே, மோரே ஃபிர்த் கடற்பகுதியில் உள்ள வைட்னெஸ் ஹெட் பகுதியில், மணலும் மணல் குன்றுகளும் நிறைந்த நீண்ட நிலப்பரப்பு கடலுக்குள் வளைந்து செல்கிறது. அதன் பின்னால் ஒரு பெரிய கட்டடம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக, வடகடலில் எண்ணெய் எடுப்பதற்கான பிரமாண்டமான தளங்களை உருவாக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு ஈடுபட்டிருந்தனர்.

சீனாவின் முக்கிய காற்றாலை விசையாழி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மிங் யாங், அந்த இடத்தில் 1.5 பில்லியன் பவுண்டுகள் செலவில் புதிய தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் ஆரம்பகட்டமாக 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால், கடந்த மார்ச் மாதம் தேசியப் பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு பிரிட்டன் அரசு திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

ரஷ்யாவின் யுக்ரேன் படையெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியால், குடும்பங்களுக்கு ஒட்டுமொத்தமாக 63 பில்லியன் பவுண்டுகள் கூடுதல் செலவு ஏற்பட்டதாக, காலநிலை மற்றும் எரிசக்தி ஆய்வு அமைப்புகளான எனர்ஜி அண்ட் கிளைமேட் இன்டெலிஜென்ஸ் யூனிட் மற்றும் E3G கணக்கிட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு குடும்பமும் சராசரியாக 2,200 பவுண்டுகள் வரை வழக்கத்தைவிட கூடுதலாகச் செலவிட வேண்டியிருந்தது.

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப், எரிவாயு

தற்போது, பிரிட்டனுக்குத் தேவையான எரிவாயுவில் பாதிக்கும் குறைவான அளவே வடகடலில் உள்ள அதன் சொந்த எரிவாயு வயல்களில் இருந்து கிடைக்கிறது. இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியும் பெரும்பாலும் அரசியல் அல்லது பொருளாதார நிலையற்ற தன்மை கொண்ட நாடுகளில் இருந்து வருகிறது.

அதே நேரத்தில், பிரிட்டன் இதுவரை கண்டிராத மிக வெப்பமான கோடைக்காலத்துக்குப் பிறகு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது முக்கிய முன்னுரிமையாக இருப்பதாக எரிசக்தித் துறை செயலாளர் மியாட்டா ஃபான்புல்லே கூறுகிறார். புவி வெப்பமடைதல் காரணமாகவே இத்தகைய கடுமையான வெப்ப அலைகள், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படுகின்றன. அது இல்லாமல் இருந்திருந்தால், இவை நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், எரிசக்திக் கட்டணங்களைக் குறைப்பதா அல்லது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதா, இதில் எதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள் என்று ஃபான்புல்லேவிடம் கேட்டேன். அதற்கு தயக்கமின்றிப் பதிலளித்த அவர், வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மக்களுக்கு எரிசக்தி மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதே எனது முதன்மையான நோக்கம். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை."

"நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட உலகச் சந்தைகளையே நாம் பெரிதும் சார்ந்திருக்கிறோம். இதற்கான தீர்வு என்ன? உள்நாட்டிலேயே தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதுதான்" என்று அவர் கூறினார்.

பிரிட்டன் தனது எரிசக்தித் தேவையைத் தானே பூர்த்தி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுப்பது. மற்றொன்று, தூய்மையான எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்வது.

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப், காற்றாலை, சூரிய மின்சக்தி

எண்ணெய், எரிவாயுவை அதிகமாக எடுப்பதற்கான காரணங்கள்

ஜாக்டா திட்டத்துக்கு (Jackdaw) ஒப்புதல் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அந்த முடிவைப் பாராட்டிப் பதிவிட்டார். 2006-ஆம் ஆண்டு, அபெர்டீன்ஷையரில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்துக்கு அருகே காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததிலிருந்து, காற்றாலைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

"பிரிட்டனின் செல்வத்துக்கும் செழிப்புக்கும், அற்புதமான அபெர்டீன் பகுதிக்கும் கிடைத்த சிறந்த செய்தி! செலவு அதிகமான, அபத்தமான காற்றாலைகளை அகற்றுங்கள்!" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, பிரிட்டன் அரசு தற்போது ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஷெட்லாந்து தீவுகளுக்கு மேற்கே அமைந்துள்ள, இதுவரை மேம்படுத்தப்படாத பிரிட்டனின் மிகப்பெரிய எண்ணெய் வயலான ரோஸ்பேங்க் திட்டத்துக்கு அனுமதி அளிப்பதா, வேண்டாமா என்பதுதான் அந்த முடிவு.

ஜாக்டா திட்டத்தைவிட ரோஸ்பேங்க் திட்டம் மிகப் பெரியது; இது ஜாக்டா திட்டத்தைவிட சுமார் ஏழு மடங்கு அதிகமான கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் என்று ஃபான்புல்லே கூறியுள்ளார். மேலும், இந்தத் திட்டத்தில் எடுக்கப்படவிருப்பது பெரும்பாலும் எண்ணெய்தான்; எரிவாயு அல்ல. இந்த விவகாரம் பிரிட்டன் அமைச்சரவையில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த இறுதி முடிவு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, கடந்த மாதம் ஜாக்டா தளத்துக்கு சென்ற ஃபான்புல்லே (நடுவில் இருப்பவர்). துளையிடும் பணிகள் எரிசக்தி விலைகளில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.

அரசாங்கத்தின் எதிர்க்கட்சியினர், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு அரசு தயக்கம் காட்டுவதால்தான் எரிசக்திக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர். கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக், இந்த விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல் திட்டத்துக்கு அனுமதி அளிக்குமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "உயர்ந்து வரும் எரிசக்திக் கட்டணங்களிலிருந்து குடும்பங்களைக் காப்பாற்ற எண்ணெய், எரிவாயு எடுப்பதுதான் ஒரே வழி" என்றும் அவர் கூறியுள்ளார்.

"நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை நாமே பயன்படுத்தினால், எரிசக்திக் கட்டணங்களைக் குறைக்க முடியும்" என்கிறார் ரிஃபார்ம் யுகே கட்சியைச் சேர்ந்த ரிச்சர்ட் டைஸ்.

கடந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல், எரிசக்தி விலை உயர்வு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தியது. பெட்ரோல் விலை உயர்ந்ததே, டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்ததாகப் பலரும் கருதுகின்றனர்.

ஆனால், பிரிட்டனில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதால் எரிசக்திக் கட்டணங்கள் குறையுமா என்று ஃபான்புல்லேவிடம் கேட்டேன். அதற்கு அவர், "இல்லை, குறையாது. ஏனெனில், எண்ணெயும் எரிவாயுவும் இறுதியில் உலகச் சந்தையில்தான் விற்கப்படுகின்றன" என்று தெளிவாகப் பதிலளித்தார்.

விமர்சகர்கள் இதைவிடக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். "ரோஸ்பேங்க் (Rosebank) திட்டத்தால் பிரிட்டனின் எரிசக்திப் பாதுகாப்புக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை" என்கிறார், இந்தத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வரும் அப்லிஃப்ட் அமைப்பின் டெஸ்ஸா கான். மேலும், சமீபத்திய கோடைக்காலத்தில் நிலவிய கடுமையான வெப்பத்தைத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரிட்டன் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ளதா என்ற கேள்வியையும் இந்தத் திட்டம் எழுப்புவதாக அவர் கூறுகிறார்.

ஆனால், இந்த விவகாரத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால் நிலைமை வேறுவிதமாகத் தெரிகிறது. வடகடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நீண்டகாலமாகக் குறைந்து வருகிறது. 1999-ஆம் ஆண்டு உச்சத்தை எட்டிய உற்பத்தி, அதன்பிறகு மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. ரோஸ்பேங்க் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், வடகடல் பகுதியில் உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 10 சதவிகிதம் தொடர்ந்து குறையும் என்று நிதிப் பொறுப்புக்கான அலுவலகம் கணித்துள்ளது.

அமைச்சர்கள் என்ன முடிவெடுத்தாலும், வடகடல் பகுதியில் அதிக அளவில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி செய்யப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஜாக்டா திட்டத்தில் உள்ள எரிவாயு இருப்பு, பிரிட்டனின் சில மாதத் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும். அதேபோல், ரோஸ்பேங்க் திட்டத்தில் உள்ள எண்ணெய் இருப்பும், பிரிட்டனின் ஓராண்டுத் தேவையைவிடக் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, ரோஸ்பேங்க் மற்றும் ஜாக்டா தொடர்பான விவாதம், காலநிலை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதிய ஆய்வு உரிமங்களுக்கான தடையைச் சட்டமாக்குவதற்கான மசோதா ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. ஏற்கெனவே உரிமம் பெற்றுள்ள 'ரோஸ்பேங்க்' திட்டம், இந்தத் தடையின் கீழ் வராது. இது அமைச்சர்களுக்கு ஒரு வசதியான சூழலை உருவாக்கலாம்.

அதாவது, மிகப்பெரிய அளவிலான கடைசித் திட்டத்துக்கு அனுமதி அளித்துக்கொண்டே, இனி இது போன்ற திட்டங்கள் எதுவும் இருக்காது என்று வாக்குறுதி அளிக்க அவர்களுக்கு இது வழிவகுக்கும்.

ஜனவரி மாதம் எரிசக்தி கட்டணங்கள் மீண்டும் உயரவிருக்கும் நிலையில், இத்தகைய அணுகுமுறை அவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாகத் தோன்றக்கூடும்.

மாற்று வழி என்பது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்வது தான்.

மின்சாரம் தயாரிக்க எரிவாயுவைப் பயன்படுத்தினால், அதைத் தொடர்ந்து வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், காற்றாலைகள் அல்லது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க அவற்றுக்கான கட்டமைப்பு செலவுகளை ஆரம்பத்தில் ஒருமுறை செய்துவிட்டால் போதும். அதன் பிறகு, எரிபொருளைத் தொடர்ந்து வாங்கவோ, இறக்குமதி செய்யவோ தேவையில்லை. காற்று மற்றும் சூரிய ஒளியின் உதவியுடன் பல தசாப்தங்களுக்குத் தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

பிரிட்டன் தொடர்ந்து அதிக கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் எரிசக்தி முறையையே சார்ந்திருந்தால், 2022-ஆம் ஆண்டைப் போன்ற மற்றொரு விலை உயர்வு ஏற்படும்போது வீடுகளுக்கான எரிசக்திக் கட்டணங்கள் 59 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். அதேசமயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்தால், இந்த உயர்வு வெறும் 4 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் காலநிலை மாற்றக் குழு கணித்துள்ளது.

சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் கணக்குப்படி, 2010 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சூரிய மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை 90 சதவிகிதம் குறைந்துள்ளது. தரையில் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் 70 சதவிகிதம் குறைந்துள்ளது. இருப்பினும், அண்மைக்கால உலகளாவிய பணவீக்கத்தால், இத்தகைய திட்டங்களைத் தொடங்குவதற்கான ஆரம்பச் செலவுகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு, டென்மார்க்கைச் சேர்ந்த ஓர்ஸ்டெட் நிறுவனம், விநியோகச் சங்கிலி செலவுகள் கடுமையாக உயர்ந்ததைக் காரணம் காட்டி, யார்க்ஷயர் கடற்கரைக்கு அப்பால் அமையவிருந்த ஹார்ன்சீ 4 என்ற பிரமாண்டமான காற்றாலைப் பண்ணைக்கான திட்டங்களைக் கைவிட்டது.

வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதும் இந்தப் பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளன. காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கான பெரும்பாலான செலவுகளைத் தொடக்கத்திலேயே செய்ய வேண்டியுள்ளது. அதாவது, மின்சார உற்பத்தி தொடங்குவதற்கு முன்பே திட்டங்களை உருவாக்கும் நிறுவனங்கள் பெருமளவில் கடன் வாங்க வேண்டியிருக்கிறது.

இதுதவிர, மற்றொரு சிக்கலும் உள்ளது. காற்றாலைகள் மற்றும் சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் கொண்டு செல்ல, பிரிட்டன் புதிய மின்சாரக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கும் அதிக செலவாகும்.

மேலும், மின்சாரத்தின் விலையைப் பெரும்பாலும் எரிவாயு மின் நிலையங்களே தீர்மானிக்கின்றன. இதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் செலவு குறைந்தாலும், அந்தச் சேமிப்பின் பலன் எப்போதும் நுகர்வோரின் மின்சாரக் கட்டணங்களில் தெரிவதில்லை.

எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதால் மட்டுமே வீடுகளுக்கான மின்சாரக் கட்டணங்கள் குறைந்துவிடும் என்று கூற முடியாது.

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப்

எரிசக்தித் துறையில் சீனாவின் செல்வாக்கு

இதைத்தவிர மற்றுமொரு பிரச்னையும் உள்ளது; அதுதான் தூய்மையான தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆதிக்கம். உலகின் பெரும்பான்மையான சூரிய மின் தகடுகள் மற்றும் மின்கலன்களையும், மின்சாரக் கார்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கையும் சீனாதான் தயாரிக்கிறது.

சர்வதேச எரிசக்தித் துறையில் சீனாவின் செல்வாக்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எம்பர் (Ember) என்ற ஆய்வு அமைப்பின்படி, கடந்த மார்ச் மாதத்தில் சீனாவின் சூரிய மின்தகடுகள், மின்கலன்கள் மற்றும் மின்சாரக் கார்களின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 70 சதவிகிதம் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.

வீடுகளின் எரிசக்திக் கட்டணங்களைத் திடீரென உயரச் செய்யும் விலை மாற்றங்களுக்கும், புவி வெப்பமடைதலுக்கும் காரணமாக இருக்கும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை பிரிட்டன் குறைக்க விரும்புகிறது. இதற்கு மாற்றாகத் தேவைப்படும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை சீனாவிலிருந்தே கிடைக்கின்றன. ஆனால், சீனாவை அதிகம் சார்ந்திருக்கவும் பிரிட்டன் தயக்கம் காட்டுகிறது.

பெட்ரோலிய நாடுகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, பெய்ஜிங்கைச் சார்ந்திருக்கும் நிலைக்கு பிரிட்டன் மாறுகிறதா என்று நான் ஃபான்புல்லேவிடம் கேட்டேன். "ஆம், நாங்கள் அப்படித்தான் மாறி வருகிறோம்" என்று அவர் கூறினார், மேலும், "எங்களிடம் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய சந்தை உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

தேவைப்படும் தொழில்நுட்ப உபகரணங்களைச் சீனாவிடமிருந்து தொடர்ந்து வாங்குவோம் என்று ஃபான்புல்லே கூறுகிறார். அதேநேரத்தில், அதிகமான உபகரணங்களைப் பிரிட்டனிலேயே தயாரிக்க வேண்டும் என்பதும் அவரது விருப்பம். "காற்றாலை விசையாழிகள் இங்கேயே தயாரிக்கப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

ஆனால், மிங் யாங் நிறுவனம் வழங்க முன்வந்ததும் பிரிட்டனிலேயே தயாரிக்கப்படும் காற்றாலை விசையாழிகள்தான்.

"தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருந்தது. அதனால், தேசியப் பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளித்தோம்" என்கிறார் ஃபான்புல்லே. ஆனால், அப்படி என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது என்பதை அரசாங்கம் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

ஜாக்டா திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜப்பானின் சுமிடோமோ எலக்ட்ரிக் நிறுவனம், வைட்னெஸ் ஹெட் கடற்கரைக்கு அருகிலுள்ள நிக் பகுதியில் பிரிட்டனின் முதல் ஹெச்.வி.டி.சி கடலடி மின்சாரக் கேபிள் தொழிற்சாலையைத் திறந்தது. இந்தத் தொழிற்சாலை மூலம் 250 பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, இது வெளிநாட்டு முதலீடுதான். ஆனால், சீனாவிலிருந்து வந்த முதலீடு அல்ல.

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப், காற்றாலை, சூரிய மின்சக்தி

நிலைமை மாறுதல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது.

அமெரிக்காவின் அழுத்தம் இல்லாத நிலையில், மற்ற நாடுகளும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக துணிச்சலான இலக்குகளை அறிவிக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய கார்பன் உமிழ்வை வெறும் 6 சதவிகிதம் மட்டுமே குறைப்பதற்கான உறுதிமொழிகளையே நாடுகள் அளித்துள்ளன என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆனால், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமானால், இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக உமிழ்வைக் குறைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சீனா, அமெரிக்கா, எரிசக்தி, எண்ணெய் வளம், போர், வர்த்தகம், டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் புதைபடிவ எரிபொருட்களின் தீவிர ஆதரவாளராக உள்ளார்

சீனா அந்த இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த லி ஷுவோ, இதை ஒரு "பங்கு மாற்றம்" என்று குறிப்பிடுகிறார். ஒரு காலத்தில் காலநிலை பேச்சுவார்த்தைகளில் மிகவும் தயக்கத்துடன் செயல்பட்ட சீனா, இப்போது உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது தேசிய நலனுக்கு ஏற்றது என்று கருதுகிறது. "இந்த மாற்றம் இப்போதுதான் தொடங்கியுள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.

COP31-இன் முக்கிய இலக்குகளில் ஒன்றான, தனது எரிசக்தித் தேவையில் 35 சதவிகிதத்தை மின்சாரம் மூலம் பூர்த்தி செய்வதை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எட்ட சீனா இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசாங்கங்களின் வாக்குறுதிகளைவிட, சீன நிறுவனங்களே இந்த மாற்றத்தை அதிகளவில் முன்னெடுத்து வருகின்றன. "உண்மையில், இது சீனாவை மையமாகக் கொண்ட ஒரு கதைதான்" என்கிறார் லி ஷுவோ.

இது உண்மையாக இருந்தால், பிரிட்டன் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கெனவே குடும்பங்கள் செலவுகளைச் சமாளிக்கத் திணறி வரும் நிலையில், இந்த முடிவுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு