தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்து பாகிஸ்தான் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவராகக் கருதப்படும் தோனி, அந்த அணியில் தற்போது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
"மகேந்திர சிங் தோனி இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழிகாட்டியாகச் செயல்படுவார்! சென்னை எப்போதும் அவரது சொந்த வீடாக இருக்கும்" என்று சிஎஸ்கே அணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகியதன் மூலம், தோனி போட்டி கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் தற்போது முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார்.
அவரது இந்த முடிவு இந்தியாவில் மட்டுமின்றி, பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தோனியின் வெற்றிகரமான கேப்டன்சி, சிறப்புமிக்க கிரிக்கெட் வாழ்க்கை ஆகியவற்றைப் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வர்ணனையாளர்களும் பாராட்டி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், மகேந்திர சிங் தோனி சென்னைக்கு கோப்பைகளைவிட அதிகமானவற்றைக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், தோனியின் அனுபவமும் அறிவும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான உறவை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று வர்ணித்துள்ளார். தோனியும் சிஎஸ்கே அணியும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஷித் லத்தீஃப், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் தாக்கம் ஐபிஎல் அணியுடன் மட்டும் நின்றுவிடாது என்றும், சர்வதேச கிரிக்கெட்டும் அவரது அனுபவத்தால் பயனடையலாம் என்றும் கருதுகிறார்.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீஃப் என்ன கூறினார்?
முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஷித் லத்தீஃப், செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம், "வெற்றிகரமான கேப்டனாக அவர் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். மஞ்சள் நிற சீருடையில் 7-ஆம் எண் கொண்ட அவர் மிகவும் பிரபலமானவராக இருந்தார். இனி அவர் மைதானத்தில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என்றாலும், அவர் விளையாடியபோது சேப்பாக்கம் மைதானத்தில் நிலவிய அதே சூழல் தொடர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும், வழிகாட்டியாக அவர் அணியில் இருப்பது அடுத்த தலைமுறை வீரர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.'' என்றார்
"இந்திய கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் அவர் ஆதிக்கம் செலுத்தினார். சிஎஸ்கே வீரராக இருந்தபோதும், பின்னாளில் பெரிய வீரர்களாக உருவான பலருக்கு அவர் ஊக்கமளித்தார்" என்றார்.
அக்மல் கூறியது என்ன?
கராச்சியில் மூத்த பத்திரிகையாளர் ரஷித் ஷகூரிடம் பேசிய முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல், தோனியை 'சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த தலைவர், சிறந்த மனிதர்' என்று வர்ணித்தார்.
"அவர் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல; பண்பானவரும் எளிமையானவரும் கூட. அனைவரையும் மதிக்கக்கூடியவர்" என்று அக்மல் கூறினார்.
"விளையாட்டின் தரத்தை உயர்த்தும் கிரிக்கெட் வீரர்கள் மிகச் சிலரே உள்ளனர். ஒரு வீரராக அவர் பலமுறை தனது அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். தலைவராக, இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்கிறார். கபில் தேவ், கங்குலி ஆகியோரும் சிறந்த கேப்டன்கள்தான். கங்குலி மிகச்சிறந்த அணியை உருவாக்கினார். அந்த அணியை தோனி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்" என்றும் அவர் கூறினார்.
தோனியின் ஓய்வு குறித்து பேசிய அக்மல், ஒவ்வொரு வீரரும் ஒரு நாள் விளையாட்டில் இருந்து விடைபெற வேண்டியிருக்கும் என்றார்.
தனது உடற்தகுதி, விளையாட்டின் மீதான ஆர்வம், தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வேட்கை ஆகியவற்றின் காரணமாகவே தோனி இவ்வளவு காலம் விளையாட முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளை மிகவும் பிரபலமாக்கியதில் தோனிக்குப் பெரும் பங்கு இருப்பதாக அக்மல் கூறினார். இந்தியாவில் அவர் எங்கு சென்றாலும், ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றதாகவும் குறிப்பிட்டார்.
தோனியுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அக்மல், "நாங்கள் பலமுறை ஒன்றாக விளையாடியிருக்கிறோம். அவர் எப்போதும் மிகவும் நல்லவராகவே நடந்துகொண்டார். மைதானத்தில் எப்படிப்பட்ட சூழல் நிலவினாலும், மைதானத்துக்கு வெளியே அவர் எப்போதும் நல்ல பண்புடன் நடந்துகொள்வார். ஹோட்டலில்கூட நாங்கள் பேசிக்கொள்வோம்" என்றார்.
இனி இதுபோன்ற தருணங்களைப் பார்க்க முடியாது என்றும், தோனி போன்ற தலைவர்கள் மிக அரிதாகவே உருவாகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தோனியின் புதிய பொறுப்புக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அக்மல், "எனது தரப்பிலிருந்து தோனிக்கு வாழ்த்துகள். அவரது புதிய பயணத்துக்கு நல்வாழ்த்துகள்" என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் தோனி வெளிப்படுத்திய ஆட்டத்தையும் அக்மல் பாராட்டினார்.
"விக்கெட் கீப்பிங், பேட்டிங் என இரண்டிலுமே தோனி மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். அவர் எப்போதும் தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார். மற்ற விக்கெட் கீப்பர்கள் செய்வதைப் போல, அவர் யாரையும் கிண்டல் செல்ல மாட்டார்" என்றார்.
பீட்டர்சன், குர்பாஸ் என்ன கூறினார்கள்?

பட மூலாதாரம், Kunal Patil./Hindustan Times via Getty Images
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், தோனியுடன் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "நீங்கள் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்ப்பதே கடினமாக இருக்கிறது. நீங்கள் விளையாடுவதைப் பார்த்துத்தான் நான் கிரிக்கெட்டைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். உங்கள் தலைமைப் பண்பு, நெருக்கடியான சூழலிலும் அமைதியாகச் செயல்படும் விதம், உங்கள் ஆட்டத்தின் மூலம் பதிலளிக்கும் பாங்கு ஆகியவற்றிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.'' என கூறியுள்ளார்.
"உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைப் போலவே, நானும் உங்கள் ஆட்டத்தின் ரசிகனானேன். எனது கிரிக்கெட் பயணத்தில் மிகப்பெரிய உத்வேகமாகத் திகழ்பவர்களில் ஒருவராக நீங்கள் மாறினீர்கள்.''
"தொலைக்காட்சியில் உங்களைப் பார்த்ததில் தொடங்கி, ஐபிஎல் போட்டியில் உங்களுடன் ஒரே மைதானத்தில் விளையாடியது, உங்களுக்கு எதிராகப் போட்டியிட்டது, நேரில் சந்தித்தது, உங்கள் ஆலோசனைகள் மூலம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது என இந்தப் பயணம் எனக்கு மிகவும் சிறப்பானது. இதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்கும் தருணங்கள் இவை" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டனும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன், எக்ஸ் தளத்தில், "வழிகாட்டிகளின் உலகத்துக்கு வரவேற்கிறோம், எம்.எஸ். தோனி!" என்று பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், ANI
தோனியின் சிறுவயது பயிற்சியாளர் என்ன கூறினார்?
தோனியின் சிறுவயது பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சார்யா, "இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. சில நாட்களுக்கு முன்புவரை அவர் தொடர்ந்து விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவின. இந்த முடிவு அந்த நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீண்ட சர்வதேச கிரிக்கெட் பயணம் மற்றும் ஐபிஎல் வாழ்க்கைக்குப் பிறகு, இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
நீண்ட காலமாக கேப்டனாகவும் வீரராகவும் அவர் அங்கம் வகித்த அதே அணியில், இப்போது புதிய பொறுப்பை ஏற்கிறார். வழிகாட்டியாகச் செயல்படும்போது அவரது அனுபவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதும் பயனடையும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசிக் கட்டத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சிஎஸ்கே இழந்தபோது, தோனி ஓய்வு பெறுவாரா என்ற விவாதங்கள் தொடங்கின.
இந்த யூகங்கள் குறித்து அப்போது பேசிய தோனி, "நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப் போவதுமில்லை; மீண்டும் விளையாட வருவது குறித்துப் பேசப் போவதுமில்லை" என்றார்.
மேலும், "இந்த முடிவை எடுப்பதற்கு எனக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. அவசரம் எதுவும் இல்லை. எப்போதும் சிறந்த உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். வீரர்களின் செயல்பாட்டை மட்டும் வைத்து ஓய்வு முடிவுகள் எடுக்கப்பட்டால், சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































