அக்வான் புயல் எப்போது, எங்கு கரையைக் கடக்கும்? தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

செயற்கைக்கோள் புகைப்படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் நாளை(நவம்பர் 19) மாலை மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்? அக்வான் புயல் எப்போது, எங்கு கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது? வங்கக்கடலில் அடுத்தடுத்து புயல்கள் உருவாவது ஏன்?

அக்வான் புயலின் நகர்வு எப்படி இருக்கும்?

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புயலின் பாதையை கணிக்கும் வரைபடம்
படக்குறிப்பு, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புயலின் பாதையைக் கணிக்கும் வரைபடம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, நவம்பர் 18ஆம் தேதி காலை 5:30 மணி நிலவரப்படி வங்கக் கடலின் மத்திய தெற்குப் பகுதி மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல், அதற்கு முந்தைய 6 மணிநேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது.

சென்னைக்குக் கிழக்கே சுமார் 580 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், ஆந்திர பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்குத் தெற்கு-தென்கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 730 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.

தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் அக்வான் புயல், நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் வாக்கில் ஆந்திர பிரதேசம் மற்றும் யானம் கடற்கரையில், நெல்லூருக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அப்போது அது தீவிரப் புயலாக இருக்கும் என்றும், மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் வீசும் காட்சி
படக்குறிப்பு, கோப்புப் படம்

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

சென்னை வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அடுத்த ஏழு நாட்களுக்கான மழை முன்னறிவிப்பை வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நவம்பர் 18

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தின் சில பகுதிகள், வட கடலோர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 19

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நவம்பர் 20 முதல் 23 வரை

நவம்பர் 20ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நவம்பர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் வட கடலோர தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 23ஆம் தேதி தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆந்திர பிரதேசத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

அக்வான் புயல் காரணமாக ஆந்திர பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 18ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும் என்றும், நவம்பர் 19, 20 தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏலூரு, காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா, கிருஷ்ணா, பாபட்லா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யக்கூடும். விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாப்பள்ளி, குண்டூர், பிரகாசம், மார்க்காபுரம், நெல்லூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ஸ்ரீகாகுளம், பார்வதிபுரம் மன்யம், அல்லூரி சீதாராம ராஜு, போலவரம், என்டிஆர், பல்நாடு, திருப்பதி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் இரண்டு நாள்களில் 21 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

புயலை எதிர்கொள்ள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்படக் கூடிய பகுதிகளுக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

புயல் மேகங்கள் திரளும் காட்சி
படக்குறிப்பு, கோப்புப் படம்

மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

அக்வான் புயல் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 17ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

நவம்பர் 18ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. ஆகவும், நவம்பர் 19ஆம் தேதி மணிக்கு 60 முதல் 80 கி.மீ. ஆகவும் அதிகரிக்கக்கூடும். நவம்பர் 19ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவம்பர் 19ஆம் தேதி முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து, புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 145 கி.மீ. வரை வீசக்கூடும். இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் தொடர்ச்சியாகப் புயல்கள் உருவாவது ஏன்?

ஆந்திர பிரதேசத்தில் அடுத்தடுத்து மூன்று புயல்கள் உருவானதற்குப் பின்னால் பல்வேறு வானிலைச் சூழல்கள் இருப்பதாக ஆந்திர பல்கலைக் கழக வானிலைப் பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமகிருஷ்ணா பிபிசியிடம் தெரிவித்தார்.

கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வடகிழக்குப் பருவமழையின் தாக்கம், எல் நினோ நிலை, வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் தன்மை உள்ளிட்ட காரணிகள் புயல்கள் உருவாவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதாக அவர் விளக்குகிறார்.

அவர் சுட்டிக்காட்டும் முக்கியக் காரணிகள்:

1. கடல் வெப்பமாக இருப்பது

புயல்கள் வலுப்பெறுவதற்குக் கடலில் இருந்து கிடைக்கும் வெப்பமும் ஈரப்பதமும் முக்கியமானவை. வங்கக்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, நீர் ஆவியாகி வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் சேர்கிறது. இது காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் வலுப்பெறுவதற்குச் சாதகமாக அமைவதாக பேராசிரியர் ராமகிருஷ்ணா கூறுகிறார்.

2. வடகிழக்குப் பருவமழையின் தாக்கம்

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வங்கக்கடலில் புயல்கள் உருவாவதற்குச் சாதகமான காலமாகும். இந்தக் காலத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கும். வங்கக்கடலில் நிலவும் காற்றின் நகர்வு, ஈரப்பதம், காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் ஆகியவை ஒன்றிணைந்து புயல்கள் உருவாவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன என்கிறார் அவர்.

ஆந்திரப் பல்கலைக்கழக வானிலைப் பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமகிருஷ்ணா
படக்குறிப்பு, ஆந்திர பல்கலைக்கழக வானிலைப் பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமகிருஷ்ணா

3. எல் நினோவின் தாக்கம்

இந்த ஆண்டு கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் எல் நினோ. எல் நினோ நிலவும் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழை சில நேரங்களில் தீவிரமடையலாம். இதனால் தென்னிந்தியாவில் மழை அதிகரிப்பதுடன், வங்கக்கடலில் வானிலை அமைப்புகளும் தீவிரமாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகப் பேராசிரியர் விளக்குகிறார்.

இருப்பினும், எல் நினோ மட்டுமே தொடர்ச்சியான புயல்களுக்குக் காரணம் என்று கூற முடியாது. புயல் உருவாவதற்குச் சாதகமான பல காரணிகளில் இதுவும் ஒன்று.

4. வளிமண்டலத்தில் சாதகமான காற்று நகர்வு

கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும்போது, வளிமண்டலத்தின் வெவ்வேறு உயரங்களில் வீசும் காற்றின் வேகமும் திசையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த வேகம் மற்றும் திசையில் அதிக வேறுபாடு இல்லாதபோது, அதாவது செங்குத்து காற்று வேறுபாடு (Vertical Wind Shear) குறைவாக இருக்கும்போது, புயல் வலுப்பெறுவதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது என்று அவர் கூறுகிறார்.

5. தொடர்ச்சியாகப் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாவது

ஒரு புயல் கரையைக் கடந்த பிறகும் வங்கக்கடலில் வானிலை அமைப்புகள் தொடர்ந்து செயல்படலாம். கடல் மற்றும் வளிமண்டல நிலைமைகள் சாதகமாக நீடித்தால், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகி அவை புயல்களாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணா விளக்குகிறார்.

கடந்த காலத்திலும் தொடர்ச்சியாகப் புயல்கள் உருவாகியுள்ளனவா?

ஒரே மாதத்தில் மூன்று புயல்கள் - வங்கக்கடல் ஏன் இப்படி மாறுகிறது என்பது குறித்து தேசிய கடலியல் ஆய்வு நிறுவனத்தின் விசாகப்பட்டின பிராந்திய முன்னாள் இயக்குநர் முனைவர் கே.எஸ்.என். மூர்த்தி பிபிசியிடம் பேசினார்.

கடந்த 1976, 1987ஆம் ஆண்டுகளிலும் ஆந்திர பிரதேசம் ஒரு மாத கால இடைவெளிக்குள் மூன்று புயல்களை எதிர்கொண்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளும் எல் நினோ ஏற்பட்ட ஆண்டுகள். 2013ஆம் ஆண்டிலும் ஐந்து புயல்கள் உருவாகின. ஆனால், 2013ஆம் ஆண்டு எல் நினோ நிலை இல்லை. அந்த ஆண்டை எல் நினோ இல்லாத, நடுநிலையான ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர்.

தேசிய கடலியல் ஆய்வு நிறுவனத்தின் விசாகப்பட்டினப் பிராந்திய முன்னாள் இயக்குநர் கே.எஸ்.என். மூர்த்தி
படக்குறிப்பு, தேசிய கடலியல் ஆய்வு நிறுவனத்தின் விசாகப்பட்டின பிராந்திய முன்னாள் இயக்குநர் கே.எஸ்.என். மூர்த்தி

1976 நவம்பரில் என்ன நடந்தது?

1. மச்சிலிப்பட்டினம் புயல் (நவம்பர் 3–6): நவம்பர் 4ஆம் தேதி இரவு மச்சிலிப்பட்டினத்துக்கு வடக்கே புயல் கரையைக் கடந்தது. கிருஷ்ணா மாவட்டத்தில் பயிர்களும் வீடுகளும் சேதமடைந்தன. அப்போது வெளியான அறிக்கையின்படி, 18 பேர் உயிரிழந்தனர்.

2. காவலி புயல் (நவம்பர் 15–17): நெல்லூர் - காவலி இடையே நவம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில் புயல் கரையைக் கடந்தது. நெல்லூர் மாவட்டத்தின் காவலி, கொவ்வூர் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது. சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.

3. மூன்றாவது புயல் (நவம்பர் 22–29): தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி இந்தப் புயல் நகர்ந்தது. நவம்பர் 25ஆம் தேதி சென்னைக்கு அருகே வந்த பிறகு, திசை மாறி வடகிழக்குப் பக்கம் நகர்ந்தது. நெல்லூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் வெள்ளமும் ஏற்பட்டன.

1987ஆம் ஆண்டில் 28 நாட்களுக்குள் என்ன நடந்தது?

அந்த ஆண்டு ஆந்திர பிரதேசம் மூன்று புயல்களின் தாக்கத்தை எதிர்கொண்டது. அக்டோபர் 15, 16இல் புயல் ஒங்கோல் அருகே கரையைக் கடந்தது. நவம்பர் 2, 3இல் தீவிர புயல் நெல்லூர் அருகே கரையைக் கடந்தது. நவம்பர் 12, 13இல் குண்டூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலும் மச்சிலிப்பட்டினம் அருகேயும் மற்றொரு தீவிரப் புயல் கரையைக் கடந்தது.

2013ஆம் ஆண்டு வங்கக்கடலில் ஐந்து புயல்கள் உருவாயின

கடந்த 2013ஆம் ஆண்டு மே முதல் டிசம்பர் வரை வங்கக்கடலில் ஐந்து புயல்கள் உருவாகின.

வியாரு: மே 10–16

பைலின்: அக்டோபர் 8–14

ஹெலன்: நவம்பர் 19–23

லெஹர்: நவம்பர் 23–28

மாதி: டிசம்பர் 6–13

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு