'இந்திரா காந்தியைக் கண்டு ஏன் பயந்தேன்?’ காரணத்தை விளக்கிய சோனியா காந்தி

ஆரம்பத்தில் இந்திரா காந்தியை 'அம்மா' என்று அழைக்கத் தயங்கியதாகக் கூறினார் சோனியா காந்தி.
படக்குறிப்பு, ஆரம்பத்தில் இந்திரா காந்தியை 'அம்மா' என்று அழைக்கத் தயங்கியதாகக் கூறினார் சோனியா காந்தி.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நவம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், அவரும் அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் காந்தி குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு அம்சங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டிம்பிள் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, பாஜக தலைவரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சருமான கேப்டன் அமரீந்தர் சிங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்தது.

திருமணத்துக்குப் பிறகு தனது மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியுடனான ஆரம்பகால உறவு எப்படி இருந்தது என்பதை சோனியா காந்தி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

இந்திரா காந்தியை 'அம்மா' அல்லது 'மம்மி' என்று அழைப்பதற்கு ஏன் தயங்கினார் என்பதையும் அவர் விளக்கினார்.

இந்திரா காந்தியுடனான உறவு

தனது மாமியார் இந்திரா காந்தியுடனான உறவு குறித்துப் பேசினார் சோனியா காந்தி.
படக்குறிப்பு, தனது மாமியார் இந்திரா காந்தியுடனான உறவு குறித்துப் பேசினார் சோனியா காந்தி.

இந்திரா காந்தியைக் கண்டு தாம் பயந்ததாக சோனியா காந்தி கூறினார்.

சோனியா காந்தி இந்திரா காந்தியை 'அம்மா' அல்லது 'மம்மி' என்று அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு அழைப்பது எளிதாக இருக்கவில்லை என சோனியா காந்தி கூறினார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "நான் நிச்சயமாக அப்படிச் செய்யப்போவதில்லை. ஏனென்றால், எனக்கு அம்மா என்றால் ஒருவர் மட்டும்தான். அவர் என் அம்மா, என் இத்தாலியத் தாய். இந்திரா காந்தியை நான் என் அம்மா என்று அழைக்கப்போவதில்லை" என்றார்.

அவரை 'அம்மா' என்று அழைக்காமலேயே தனது கருத்துகளைத் தெரிவிக்கக்கூடிய வேறு வழியைத் தேடியதாக சோனியா காந்தி கூறினார்.

"பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கியபோது, அவரை அம்மா என்று அழைக்க முடிந்தது. ஆனால், அதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது" என்றார்.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும்.
படக்குறிப்பு, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தியும் சோனியா காந்தியும்.

இந்திரா காந்தி வலுவான ஆளுமை கொண்ட பெண் என்று சோனியா காந்தி விவரித்தார். அவரால் ஈர்க்கப்பட்டதாகவும், அதேநேரத்தில் அவரைக் கண்டு சற்று பயந்ததாகவும் கூறினார்.

"சில நேரங்களில் அவர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கோபப்படுவார். அப்போது எனக்கு என் தந்தையின் நினைவு வரும். அதனால் நான் முற்றிலும் அமைதியாகிவிடுவேன்" என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

இதுபோன்ற நேரங்களில் ராஜீவ் காந்தியும் சஞ்சய் காந்தியும் அமைதியாக அமர்ந்து, இந்திரா காந்தியின் கோபம் தணியும் வரை காத்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ராகுல் மற்றும் பிரியங்கா பிறந்த பிறகு இந்திரா காந்தியின் நடத்தை மாறியது.

"ராகுலும் பிரியங்காவும் பிறந்தபோது அவர் முற்றிலுமாக மாறிவிட்டார். பெரும்பாலான பாட்டிகள், பேரக்குழந்தைகள் பிறந்த பிறகு மென்மையாகிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர்கள் விஷயங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதாகத் தோன்றும்" என்றார் சோனியா காந்தி.

ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு சோனியா காந்தியின் வாழ்க்கை எப்படி மாறியது?

1983 டிசம்பர் 15ஆம் தேதி புஜ் பயணத்தின்போது ராஜீவ் காந்தியும் சோனியா காந்தியும்.
படக்குறிப்பு, 1983 டிசம்பர் 15ஆம் தேதி புஜ் பயணத்தின்போது ராஜீவ் காந்தியும் சோனியா காந்தியும்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புத்தகம் எழுதும்போது தனது வாழ்க்கையின் பல கடினமான தருணங்களை மீண்டும் நினைவுகூர வேண்டியிருந்ததாக சோனியா காந்தி தெரிவித்தார்.

"எனது குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் பற்றிய நினைவுகளை எழுதுவது மிகவும் எளிதாக இருந்தது. பல ஆண்டுகளாக நான் நினைத்துக்கூடப் பார்க்காத பல விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன" என்றார்.

ஆனால், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள் தொடர்பான அத்தியாயங்களை எழுதுவது அவருக்கு எளிதாக இருக்கவில்லை.

"எனது மாமியார் கொல்லப்பட்டபோதும், பின்னர் எனது கணவர் கொல்லப்பட்டபோதும் அந்தத் தருணங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன. நடந்தவற்றால் நான் மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் இருந்தேன். அந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் சில விஷயங்களை மறந்துவிட்டிருந்தேன்" என்று அவர் கூறினார்.

'’ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்தது, குழந்தைகள் பிறந்தது ஆகிய நினைவுகளை மீண்டும் நினைவுகூர்வது ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தது. ஆனால், இந்த இரு படுகொலைகள் தொடர்பான நினைவுகளை மீண்டும் தொகுப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது.’’

ராகுல் காந்தி என்ன கூறினார்?

இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு மகன் ராகுல் காந்திக்கு ஆறுதல் கூறும் ராஜீவ் காந்தி (கோப்புப் படம்).
படக்குறிப்பு, இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு மகன் ராகுல் காந்திக்கு ஆறுதல் கூறும் ராஜீவ் காந்தி (கோப்புப் படம்).

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியும் தனது தாயின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துப் பேசினார்.

முதலில் இந்திரா காந்தியையும், பின்னர் ராஜீவ் காந்தியையும் குடும்பம் இழந்ததாகக் கூறிய அவர், அவர்கள் இருவரும் குடும்பத்தின் தூணாக இருந்ததாகத் தெரிவித்தார்.

"இந்திரா காந்தி துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காவதைத் திடீரெனப் பார்த்தோம். பின்னர் ராஜீவ் காந்தியை இழந்தோம்" என்றார்.

தனது தந்தை இறந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து தாயிடம் அடிக்கடி பேசுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

"எனது தாய்க்கு நினைவாற்றல் மிகவும் சிறப்பானது. அவர் எதையும் மறப்பதில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அவரால் நினைவுகூர முடியாது. அப்பா இறந்தபோது என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டால், அவருக்கு எதுவும் நினைவுக்கு வராது" என்றார்.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தியுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் அவரது மனைவி டிம்பிள் யாதவும்.
படக்குறிப்பு, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தியுடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் அவரது மனைவி டிம்பிள் யாதவும்.

ராகுல் காந்தியின் கூற்றுப்படி, அந்தக் காலகட்டம் தொடர்பான நினைவுகளை அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் சோனியா காந்தியும் இணைந்து மீண்டும் தொகுத்து, புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.

தனது பெற்றோருக்கு இடையிலான உறவு குறித்துப் பேசிய அவர், "அது ஓர் அற்புதமான வாழ்க்கை. அவர்களுக்கு இடையே அற்புதமான அன்பு இருந்தது. ஆனால், ஒரே நாளில் அதெல்லாம் மறைந்துவிட்டது" என்றார்.

ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு தனது தாயின் வாழ்க்கை மாறிவிட்டதாக ராகுல் காந்தி கூறினார்.

புத்தகத்தின் தலைப்பான 'பிலாங்கிங்' குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "என் தாய் என் தந்தையுடன் ஆழமாகப் பிணைந்திருந்தார்; என் தந்தையும் அவருடன் அப்படியே பிணைந்திருந்தார். பிறகு என் தந்தை சென்றுவிட்டார். அவர் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினார்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "சிரித்துப் பேசிக்கொண்டிருந்த, புன்னகையுடன் இருந்த அந்தத் தாய் மறைந்துவிட்டார். அவருக்குப் பதிலாக ஒரு புதிய தாய் வந்தார்" என்றார்.

புத்தகம் எழுத முடிவு செய்தது ஏன்?

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்.
படக்குறிப்பு, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்

தனது குடும்பத்தைப் பற்றி தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான பல விஷயங்கள் கூறப்பட்டு வருவதே புத்தகம் எழுதுவதற்கான காரணங்களில் ஒன்று என்று சோனியா காந்தி தெரிவித்தார்.

"எனது குடும்பத்தைப் பற்றி நிறைய விஷயங்கள் கூறப்படுகின்றன. எனது மாமியார், எனது கணவர், எனது மகன், எனது மகள் மற்றும் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் தவறானவை. அவற்றுக்கும் எங்களுடைய உண்மையான வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றார்.

அரசியலில் தன்னுடன் பணியாற்றும் சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"உங்களைப் பற்றி கதைகள் உருவாக்கப்படுகின்றன. பொய்யான விஷயங்கள் புனையப்படுகின்றன. உண்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத, மனதைப் புண்படுத்தும் விஷயங்கள் கூறப்படுகின்றன" என்றார்.

தனது உணர்வுகளையும், தனது குடும்பத்தைப் பற்றி தனக்குத் தெரிந்த விஷயங்களையும் புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் என்று நினைத்ததாக அவர் கூறினார்.

"எனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு வழியாக இருக்கலாம் என்று நினைத்தேன். எனது குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்ல முடியும். ஒருவேளை மக்கள் எனது கதையைக் கேட்கவும் தயாராக இருக்கலாம்" என்றார்.

புத்தகத்தின் மீதான விமர்சனங்கள் குறித்து சோனியா காந்தி என்ன கூறினார்?

மேடையில் சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும்.
படக்குறிப்பு, மேடையில் சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும்.

தனது புத்தகத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்தும் சோனியா காந்தி பேசினார். மக்கள் காட்டும் அன்பும் நெருக்கமும் தன்னை நெகிழச் செய்துள்ளதாக அவர் கூறினார்.

"மக்கள் தங்களது கருத்துகள் மூலம் வெளிப்படுத்திய அன்பும் நெருக்கமும் என்னை மிகவும் நெகிழச் செய்துள்ளன. மக்கள் புத்தகத்தை வாங்குவதும், விமர்சகர்களின் கருத்துகளும்கூட எனக்கு முக்கியமானவை. விமர்சனம் அவசியமானது" என்றார்.

அதேநேரத்தில், விமர்சனங்கள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சில விமர்சனங்கள் சற்றுத் தீய நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன. சில விமர்சனங்கள் இன்னும் யதார்த்தமானவை. அவற்றில் மக்கள் தாங்கள் நினைப்பதை அப்படியே கூறுகிறார்கள். நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும், எதைச் சொல்லியிருக்கக் கூடாது என்பதையும் தெரிவிக்கிறார்கள்" என்றார்.

'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி
படக்குறிப்பு, 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் சோனியா காந்தி

சோனியா காந்தியின் 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' புத்தகம் நவம்பர் 10, 2026 அன்று விற்பனைக்கு வந்தது. நவம்பர் 16ஆம் தேதி டெல்லியில் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளியீட்டாளரின் தகவலின்படி, ஒரு வாரத்துக்கும் குறைவான காலத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

இந்தப் புத்தகத்தை மையமாகக் கொண்டு பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே அரசியல் விவாதமும் எழுந்தது.

சோனியா காந்தி தனது குடும்பம் மற்றும் காங்கிரஸின் வரலாறு தொடர்பான சர்ச்சைக்குரிய நிகழ்வுகளைப் புத்தகத்தில் தனக்குச் சாதகமாகச் சித்தரிக்க முயன்றுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், இந்தப் புத்தகம் வரலாற்றைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் காட்டும் முயற்சி என்று விமர்சித்தார். அவசரநிலைப் பிரகடனம் மற்றும் 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களைக் குறிப்பிட்டு சோனியா காந்தியை அவர் விமர்சித்தார்.

மறுபுறம், பாஜகவின் விமர்சனம் புத்தகத்தை அரசியலாக்கும் முயற்சி என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். இது சோனியா காந்தியின் தனிப்பட்ட நினைவுகள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புத்தகம் என்றும், அதை அந்தக் கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு