GTA 6: 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் கதாநாயகி - கேமிங் உலகில் லூசியாவின் வருகை ஆட்டத்தை மாற்றுமா?

பட மூலாதாரம், Rockstar Games
- எழுதியவர், ஃபெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ – ஜிடிஏ வீடியோ கேம் தொடரின் ஆறாவது பதிப்பு பல முக்கிய மைல்கற்களைக் கொண்டுள்ளது. இதற்காக கேமர்கள் (வீடியோ கேம் விளையாடுவோர்) 13 ஆண்டுகளாகக் காத்திருந்தனர். இது இதுவரை தயாரிக்கப்பட்டவற்றிலேயே மிகவும் செலவு மிகுந்த வீடியோ கேம். மேலும், இது வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
சுமார் 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தப் புகழ்பெற்ற கேமில் முழுமையாகக் குரல் கொடுக்கப்பட்ட பெண் முதன்மைக் கதாபாத்திரத்தைக் கொண்ட முதல் கேம் இதுதான். அந்தக் கதாபாத்திரம், லூசியா காமினோஸ். அவர் லத்தீன் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண்.
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் போன்ற முக்கிய சந்தைகளில் கேமர்கள் கிட்டத்தட்ட 50% பேர் பெண்கள். இருப்பினும், பிரபலமான கேம்கள் தொடர்ந்து ஆண்களையே முதன்மைக் கதாபாத்திரங்களாகவும், ஆண்களை மையமாகக் கொண்ட கதைகளையுமே கொண்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் பெண்களை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட கேம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருந்தாலும், ஒட்டுமொத்த வெளியீடுகளில் அவை இன்னும் சிறுபான்மையாகவே உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ஏட்ரியன் ஷா, லூசியா காமினோஸ் ஓர் இணை முதன்மைக் கதாபாத்திரம் மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். விளையாட்டின் கதைப்போக்கு, அவருக்கும் ஆண் கதாபாத்திரமான ஜேசன் டுவாலுக்கும் இடையே மாறி மாறி நகர்கிறது. ஜேசன், அவரது காதலரும் குற்றச் செயல்களில் அவருக்குத் துணையாக இருப்பவரும் ஆவார்.
"இதற்காக மிகையாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென நான் எச்சரிக்க விரும்புகிறேன்" என்று முனைவர் ஷா பிபிசி உலக சேவையிடம் கூறினார்.
அவரது கூற்றுப்படி, "கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ'வை உருவாக்கியவர்கள், ஒரு பெண் முதன்மைக் கதாபாத்திரமாக இருக்க முடியும் என்று நினைப்பதற்கு 30 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த விளையாட்டைப் பொறுத்தவரை, அவர் மிகவும் நுணுக்கமான, சுவாரஸ்யமான கதாபாத்திரமாகத் தெரிகிறார். ஆனால், இந்த கேம் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து உருவாக்கப்படவில்லை."
கேமிங் ஸ்ட்ரீமரும் பாட்காஸ்டருமான அதீனா கார்சியா, பிபிசி உலக சேவையிடம் பேசியபோது, "நான் வீடியோ கேம் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில், பெண் முதன்மைக் கதாபாத்திரங்களே இருக்கவில்லை. மேலும், பெண் கதாபாத்திரங்கள் எப்போதும் ஓர் ஆணால் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலேயே இருந்தனர்" என்றார்.
'அசாசின்ஸ் கிரீட் ஒடிஸி' என்ற வீடியோ கேமை சுற்றியிருந்த சர்ச்சையை கார்சியா நினைவுகூர்கிறார். 2018ஆம் ஆண்டில் வெளியான இந்த விளையாட்டில், கசாண்ட்ரா என்ற பெண் முதன்மைக் கதாபாத்திரமாக இருக்க வேண்டியிருந்தது. ஆனால், ஆண் கேமர்களிடம் இருந்து எதிர்ப்பு வரக்கூடும் என்ற அச்சத்தால், கேம் உருவாக்குநர்கள் ஓர் ஆண் கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் வசதியைச் சேர்த்தனர்.

"ஆண்கள் ஒரு பெண் கதாபாத்திரமாக விளையாட விரும்ப மாட்டார்கள் என்று நிர்வாகிகள் அஞ்சியிருக்கலாம். ஆனால், பெண்கள் ஆண்களாக விளையாடுவது மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறது?" என்று கார்சியா கேள்வி எழுப்புகிறார்.
மேலும் அவர், "வீடியோ கேம்களில் பாலின மற்றும் இன பன்முகத்தன்மை மிக முக்கியமானது. பெண் கேமர்களான நாங்கள், கேம்களை, அவை 'ஆண்களுக்கு உரியவை' எனக் கருதப்படும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி, விளையாடி மகிழ விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார்.
அத்துடன், "ஒரு பெண் கதாநாயகி இல்லாவிட்டாலும் நான் ஜிடிஏ 6 விளையாடுவேன். ஏனெனில், அந்த கேம்களில் பொதுவாக அற்புதமான கதாபாத்திரங்களும் கதைக்களங்களும் இருக்கும். ஆனால், இந்தத் தொடரில் லூசியா போன்ற ஒரு கதாபாத்திரம் இருப்பது அருமை. இது நாம் ஒரு புதிய தளத்தைக் கைப்பற்றுகிறோம் என்பதைக் காட்டுகிறது" என்கிறார் அவர்.
ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் இதழில் 2023ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வில், 13,000க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் 30% பெண்கள் என்பது கண்டறியப்பட்டது. ஆனால், ஆய்வு செய்யப்பட்ட 50 கேம்களில் 47இல் ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவான வசனங்களே இருந்தன.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் பிரிட்டனில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான முனைவர் ஸ்டெஃபனி ரென்னிக், "ஒரு பெரிய கேம் ஸ்டூடியோ புதிய போக்கை உருவாக்கக்கூடிய ஒன்றைச் செய்யும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, ஜிடிஏ வித்தியாசமாக ஒன்றைச் செய்வது மேலும் பல சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான விருப்பத்தைக் காட்டுவதாக" பிபிசி உலக சேவையிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

ஆனால், பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு இணை ஆசிரியரான முனைவர் ஷான் ஜி ராபர்ட்ஸ், "அவர்கள் (ஜிடிஏ-வின் பின்னணியில் உள்ள நிறுவனமான ராக்ஸ்டார் கேம்ஸ்) ஓரளவுக்கு ஒரு சந்தையைப் பின்பற்றுகிறார்கள்" என்று பிபிசி உலக சேவையிடம் கூறினார்.
பொழுதுபோக்கில் அனைவரையும் உள்ளடக்கிய, சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பதற்காக, ஹாலிவுட் நடிகையால் 2024ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, அமெரிக்காவை சேர்ந்த ஜீனா டேவிஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த கேமர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 60% ஆண்கள், விளையாடக்கூடிய கதாபாத்திரங்களாக பெண்களைக் கொண்ட கேம்களை விளையாட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அதுகுறித்துப் பேசிய முனைவர் ராபர்ட்ஸ், "வீடியோ கேம்களை விளையாடுபவர்களில் பெரும்பாலானோர் வயதில் பெரியவர்கள். மேலும் சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுவதைப் போல, பெரும்பாலான கேமர்கள் அதிக பன்முகத்தன்மையை விரும்புகிறார்கள்," என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, 49 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் 45% பேர் வீடியோ கேம்களை விளையாடுகிறார்கள் என்றும் ஜி.டி.ஐ தரவுகள் தெரிவிக்கின்றனர். ஆனால், கேம்களில் அதே வயதுடைய கதாபாத்திரங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.
தலைவரும் தலைமை நிர்வாகியுமான மேடலின் டி நோனோ, பிபிசி உலக சேவையிடம் கூறுகையில், "வயதான கதாபாத்திரங்கள் சித்தரிப்பிலும் பன்முகத்தன்மை இல்லை, அவர்களில் பெரும்பாலோர் வெள்ளையர்களாகவும் ஆண்களாகவும் தோன்றுகிறார்கள்," என்றார்.
ஜிடிஏ 6-இல் வரும் முதன்மைப் பெண் கதாபாத்திரமான லூசியா கமினோஸ் ஒரு லத்தினாவாக இருக்கலாம். ஆனால், அவர் நிச்சயமாக இளமையானவர். மேலும் ஷா கூறுவதைப் போல, "அவர்கள் (ராக்ஸ்டார் நிறுவனம்) லூசியாவை தானாகவே ஓர் எதிர்பாலின ஜோடியாக சேர்த்துள்ளனர்."

பட மூலாதாரம், Sony Interactive Entertainment/Naughty Dog
கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் வீடியோ கேமான 'தி லாஸ்ட் ஆஃப் அஸ் பார்ட் 2' ஒரு தன்பாலின ஈர்ப்பு கொண்ட கதாநாயகியைக் கொண்டுள்ளது. அவருடைய காதல் உறவு கதையின் ஒரு முக்கியப் பகுதியாக அமைந்தது. ஆனால், அமெரிக்க ஆதரவு அமைப்பான 'கிளாட்' 2024ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, முக்கிய தளங்களில் உள்ள விளையாட்டுகளில் 2%-க்கும் குறைவானவற்றில் மட்டுமே பால் புதுமையினர் (LGBTQ) கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
'வலுவான கதைக்களம்'
பிரேசிலிய கேமரும் எழுத்தாளருமான ஆண்ட்ரே கோர்டிரோ, கேமிங் ஸ்டூடியோக்கள் தங்கள் பார்வையாளர்களிடம் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், "சரிபார்ப்புப் பட்டியலின் அடிப்படையில் விளையாட்டை வடிவமைப்பதற்கு" எதிராக அவர் எச்சரிக்கிறார். மேலும், "கலாசார படைப்புகளுக்குப் பின்னால் பிரதிநிதித்துவம் முக்கிய உந்து சக்தியாக இருக்க முடியாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஒரு வலுவான கதையும் கதாபாத்திரங்களும்தான் மிக முக்கியமானவை. இல்லையென்றால் இயற்கையான ஒன்றை உருவாக்குவதற்குப் பதிலாக, நீங்கள் ஒரு செய்முறையை உருவாக்கிவிடுவீர்கள்" என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார்.
இருப்பினும், ஜிடிஏ-வில் ஒரு பெண் கதாநாயகியின் அறிமுகம் காலங்கடந்த ஒன்று. "இரண்டாம் உலகப் போர்க் களங்களில் நேசநாட்டு வீரர்கள் சண்டையிடுவதைக் காட்டும் ஒரு கேம் பற்றி நாம் பேசவில்லை. அதுவொரு ஆணாதிக்கக் களம்" என்கிறார் கோர்டிரோ.
அவரது கூற்றுப்படி, "ஜிடிஏ தற்போதுள்ள அமெரிக்க நகரங்களைப் பிரதிபலிக்கும் உலகங்களில் நடைபெறுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், லூசியா போன்ற ஒருவரின் வருகை முன்பே நடந்திருக்க வேண்டும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























