கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 75.

நீண்டகால சுவாச பாதிப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்தும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாகவும் இந்நிலையில், இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார் எனவும் மருத்துவமனை கூறியுள்ளது.

ஸ்டாலின், கொளத்தூர், திமுக, தவெக
படக்குறிப்பு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தவெகவில் இணைந்தார் வி.எஸ்.பாபு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக வி.எஸ்.பாபு போட்டியிட்டார். தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததால் வி.எஸ்.பாபு அதிக கவனம் பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்று வந்த வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் மனு

அவரது உடல்நலம் குறித்து தொடக்கத்தில் மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வந்தன. ஆனால், அதன்பிறகு அவரது உடல்நலம் குறித்த எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

நவம்பர் 18 ஆம் தேதி கொளத்தூர் தொகுதியை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'கொளத்தூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியன்று அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அலுவல்ரீதியாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை' எனக் கூறியிருந்தார்.

'அவரது தனிப்பட்ட அந்தரங்க உரிமை, கண்ணியம், தனிநபர் ரகசியம் தொடப்பான மருத்துவ விவரங்களை வெளியிடும்படி கோரவில்லை. ஆனால், தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் அவரது உடல்நிலை குறித்து தகவல்களைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது' எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

'மருத்துவ சிகிச்சையில் உள்ள வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு நவம்பர் 5 மற்றும் நவம்பர் 13 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என வழக்கின் மனுவில் தேவராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வி.எஸ்.பாபு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வி.எஸ்.பாபுவின் பின்னணி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வடசென்னையில் அரசியல் கட்சிகள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக வி.எஸ்.பாபு இருந்தார். தி.மு.க தலைவருடன் தனக்கு நன்கு பழக்கம் இருந்ததாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் வி.எஸ்.பாபு கூறியிருந்தார்.

தி.மு.கவின் வடசென்னை மாவட்டச் செயலாளராக பணியாற்றிய வி.எஸ்.பாபு, 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பிறகு புரசைவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவானது.

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரது வெற்றிக்காக தேர்தல் பணிகளில் வி.எஸ்.பாபு தீவிரம் காட்டினார்.

இதன்பிறகு அ.தி.மு.கவில் வி.எஸ்.பாபு இணைந்தார்.

அங்கு அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காததால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக த.வெ.கவில் இணைந்தார். அவருக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேர்தல் முடிவுகள் தி.மு.கவினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு