டிரம்ப், புதினுடன் வரலாற்றுச் சந்திப்பு: ஷி ஜின்பிங்குக்கு கிடைத்த வாய்ப்புகளும் சவால்களும் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா பிக்கர்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
விளாடிமிர் புதின் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சி மாநாட்டை நடத்துவதன் மூலம், வேறு எந்த உலகத் தலைவராலும் சாதிக்க முடியாத ஒன்றைத் தான் செய்துவிட்டதாக ஷி ஜின்பிங் கருதுவார்.
பல தசாப்தங்களாக, அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் உலக ஒழுங்கை வடிவமைத்து வந்தன.
ஆனால், உலகின் மிகச் சக்திவாய்ந்த தலைவர்கள் மூவர் ஒரே மேசையில் அமர்ந்திருக்கும் இந்தக் குறிப்பிடத்தக்க ராஜ்ஜிய நிகழ்வைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திருப்பது சீனாதான்.
இதற்குப் பின்னணியாக, எதிர்காலத் தொழில்நுட்பங்களைப் பிரதிபலிக்கும் ஷென்சென் நகரின் காட்சிகளும் அமைந்துள்ளன. ஓட்டுநர் இல்லாத கார்கள் சாலைகளில் செல்ல, வானில் டிரோன்கள் பறக்கின்றன. ரோபோக்கள் வீதிகளில் நடனமாடுகின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால், இது ஆசிய – பசிபிக் பிராந்தியத் தலைவர்களுக்கான பொருளாதார உச்சி மாநாடு. ஆனால், உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் சீனாவின் செல்வாக்கை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் இது ஷி ஜின்பிங்குக்கு அமைந்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் அல்லது ஐரோப்பிய ஒன்றத்தால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிர்வினையாற்றும் நாடாக மட்டும் சீனா இப்போது இல்லை. மாறாக, சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்கும் பேச்சுவார்த்தைகளின் மையத்தில் சீனா இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், இந்தச் சந்திப்பு ஷி ஜின்பிங்குக்குச் சவால்களும் இல்லாமல் இல்லை. புதின் மற்றும் டிரம்புடன் விவாதிக்க அவர் விரும்பாத பல விவகாரங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
யுக்ரேன் விவகாரத்தில் சமநிலையைப் பேணுதல்
முதலில், ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள யுக்ரேன் போர் குறித்த விவாதம் இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுவதை சீனா விரும்பவில்லை.
இது ஷி ஜின்பிங்குக்கு ஒரு நுட்பமான சமநிலையைப் பேண வேண்டிய சூழலை உருவாக்குகிறது. புதினுடனான தனது உறவு, ஐரோப்பிய நாடுகளுடனான சீனாவின் தொடர்புகளைப் பாதிக்கக்கூடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். குறிப்பாக, சீனப் பொருளாதாரம் ஏற்றுமதியைப் பெரிதும் சார்ந்திருக்கும் தற்போதைய சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுக்கு முக்கியமான சந்தையாக உள்ளது.
அதேநேரத்தில், சீனாவின் முக்கியக் கூட்டாளியும் அண்டை நாடுமான ரஷ்யா நிலைகுலையும் வகையில் இந்தப் போர் முடிவுக்கு வருவதையும் ஷி விரும்பவில்லை.
இந்தப் போரில் தான் நடுநிலை வகிப்பதாகப் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வுக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ள சீனா, ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பைக் கண்டிப்பதைத் தவிர்த்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
குறிப்பாக, முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தின் காலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், யுக்ரேனுக்கு எதிரான போரில் பயன்படுத்தக்கூடிய உதிரிபாகங்களைச் சீனா ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் குற்றம்சாட்டின. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதன் மூலம் அதன் பொருளாதாரத்துக்கும் சீனா ஆதரவளிப்பதாக அவை கூறின.
புதினைத் தன்னுடன் நெருக்கமாக வைத்திருக்க ஷி விரும்புகிறார். ஆனால், அளவுக்கு அதிகமாக நெருக்கமாக இருக்க அவர் விரும்பவில்லை. ஏனெனில், ரஷ்யாவின் பிரச்னைகள் சீனாவின் பிரச்னைகளாக மாறுவதையும் அவர் விரும்பவில்லை.
சீனாவின் அதிகரித்து வரும் அணு ஆயுதக் குவிப்பு
உலகின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து மூன்று தலைவர்களும் விவாதிக்க வேண்டும் என்று விரும்புவதாக டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடமே உள்ளன. ஆனால், சீனாவும் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரித்து வருகிறது. இது அமெரிக்காவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கடைசி முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' இந்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியானது. இதனால் அணு ஆயுதப் போட்டி மீண்டும் தீவிரமடையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ள குறிப்பிட்ட உத்திரீதியிலான அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றை ஏந்திச் செல்லும் அமைப்புகளின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு விதித்திருந்தது.
புதிய ஒப்பந்தம் ஏதேனும் ஏற்பட்டால் அதில் சீனாவும் இடம்பெற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். ஆனால், சீனா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, சீனாவிடம் இருப்பவற்றின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவு என்பதே ஷியின் வாதமாக இருக்கும்.
எனவே, அந்த இரு நாடுகளுக்கும் விதிக்கப்படும் அதே கட்டுப்பாடுகளைச் சீனாவுக்கும் விதிப்பது நியாயமற்றது என்று அவர் கூறக்கூடும். தனது அணு ஆயுதத் திறனைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான சுதந்திரம் தனக்கு இருக்க வேண்டும் என்றும் சீனா கருதுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உலக அரங்கில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நாடாகச் சீனா அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற ஷியின் முயற்சியை இந்த விவகாரம் சிக்கலாக்கக்கூடும்.
ஏனெனில், பொறுப்பான அணு ஆயுத நாடாக இருப்பதும் உலகத் தலைமைப் பொறுப்பின் ஓர் அங்கம் என்று அமெரிக்கா வாதிடக்கூடும்.
அனைவரும் திட்டமிட்டபடி செயல்படுவார்களா?
இந்தச் சந்திப்பின் தொடக்கம் முதல் முடிவு வரை அதன் வெளிப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஷி விரும்புவார்.
சீன அதிகாரிகள் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே உறுதிசெய்து, விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்களைத் தீர்மானித்து, உரைகளையும் கவனமாகத் திட்டமிடுவது வழக்கம்.
ஆனால், இதுவரை இல்லாத வகையிலான இந்த உச்சி மாநாட்டில், கணிக்க முடியாத இரு தலைவர்களுடன் ஷி ஜின்பிங் செயல்பட வேண்டியிருக்கும்.
டிரம்ப், புதின் இருவருக்கும் அவரவர் திட்டங்கள் உள்ளன. ஏற்கெனவே, திட்டமிட்ட உரையிலிருந்து விலகிப் பேசப்போவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.
அவர்கள் இருவருமே இந்தச் சந்திப்பில் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் உள்ளது. இதனால், ஒரு முக்கியமான ராஜ்ஜிய தருணத்தை உருவாக்கிய சிற்பியாகத் தெரிவதற்குப் பதிலாக, ஷி ஜின்பிங் வெறுமனே நிகழ்ச்சியை நடத்துபவராக மட்டுமே தோன்ற நேரிடலாம்.
நிச்சயமாக, இதற்கும் ஷி தயாராக இருக்கலாம். இது அவருக்குச் சாதகமாகக்கூட அமையலாம்.
நிலையான உலகத் தலைவராகத் தன்னைச் சித்தரிக்க சீனத் தலைவர் முயன்று வருகிறார். இந்த உச்சி மாநாட்டில், முடிவுக்குக் கொண்டுவர முடியாத போர்களில் சிக்கியுள்ள இரு தலைவர்களுக்கு இடையே அவர் அமர்ந்திருக்கிறார்.
எனவே, திட்டமிடப்படாத எந்தவொரு நிகழ்வும், மூத்த தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அவர் விரும்பும் பிம்பத்தை வலுப்படுத்தக்கூடும்.
உள்நாட்டில் ஷி எதிர்கொள்ளும் சிக்கல்கள்
வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட மூன்று தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், குறிப்பிடத்தக்க முடிவுகள் எதுவும் எட்டப்பட வாய்ப்பில்லை.
ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை ஷி ஜின்பிங் எதிர்கொள்ளும் நிலையில், இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தும் அதிகார வலிமை அவருக்கு முக்கியமானது. அந்த மாநாட்டில், கட்சிக்கும் நாட்டுக்கும் தலைவராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்று வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சீனா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய உள்நாட்டுப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, இந்தச் சந்திப்பை உள்நாட்டில் தனது அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த ஷி விரும்பக்கூடும்.
நாடு முழுவதும் நிலவும் ரியல் எஸ்டேட் நெருக்கடி, நுகர்வோர் நம்பிக்கையைக் குறைத்துள்ளது. உள்ளாட்சி அரசுகள் அதிக கடனில் சிக்கியுள்ளன. உற்பத்தித் துறை மந்தமடைந்துள்ளது.
ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு போன்ற சலுகைகள் இல்லாத வேலைகளைச் சீனத் தொழிலாளர்கள் அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் வேலை தேடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கருதப்படுகிறது. எதிர்காலம் குறித்த அதிருப்தியும் கவலையும் அவ்வப்போது வெளிப்படுகின்றன.
தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஷிக்கு இல்லை. பல தசாப்தங்களாக அந்த நாட்டில் பெரிய அளவிலான போராட்டங்களும் நடைபெறவில்லை. இருப்பினும், இந்தப் பிரச்னைகளும் அவற்றால் உருவாகும் வெளிப்படையான அதிருப்தியும் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் உயர் மட்டத் தலைவர்களிடையே தனக்குள்ள ஆதரவு குறித்து அவர் கவலைப்படுவார்.
இத்தகைய சூழலில், புதின் மற்றும் டிரம்புடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு புகைப்படம், சீனாவின் 'நூற்றாண்டு கால அவமானம்' முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கான சான்றாக ஷி ஜின்பிங்குக்கு அமையலாம்.
சீனா இனி வளர்ந்து வரும் வல்லரசு மட்டுமல்ல; மாறாக, புதிய உலக ஒழுங்குக்கான விதிகளைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு செலுத்தும் நாடாக உருவெடுத்து வருகிறது என்று அவர் வாதிடலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































