தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத் தலைவராக முன்னாள் நீதிபதி முரளிதரன் நியமனம் - விமர்சனம் ஏன்?

பட மூலாதாரம், MANIPUR HIGH COURT-OFFICIAL
- எழுதியவர், யாழினியன்
- பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமிக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவர் வழங்கிய தீர்ப்பும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது பிறப்பித்த உத்தரவும் இந்த விவாதத்துக்குக் காரணமாகியுள்ளன. இந்த நியமனத்துக்கு தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
யார் இந்த நீதிபதி எம்.வி. முரளிதரன்? அவரது முந்தைய தீர்ப்புகள் ஏன் விவாதப் பொருளாகிறது? அவரது நியமனம் தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்படும் கருத்துகள் என்ன?
யார் இந்த நீதிபதி எம்.வி. முரளிதரன்?
எம்.வி. முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். பின்னர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தபோது அவர் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் கவனம் பெற்றது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஓய்வுபெற்ற பிறகு தற்போது தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் சர்ச்சையை ஏற்படுத்திய தீர்ப்பு என்ன?

பட மூலாதாரம், Getty Images
2023-ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த முரளிதரன், மெய்தி பழங்குடியினர் ஒன்றியம் தாக்கல் செய்த மனுவை விசாரித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
மெய்தி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் 2013-ஆம் ஆண்டு மணிப்பூர் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் மெய்தி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்த கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
மேலும், இந்தக் கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டது.
மெய்தி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் கோரிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியைத் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டன. இந்த வன்முறைக்கு நீதிமன்றத்தின் உத்தரவும் ஒரு காரணமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்திலும் சவாலுக்கு உள்ளானது. பழங்குடியினர் பட்டியலில் ஒரு சமூகத்தைச் சேர்ப்பது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்ற சட்டப்பூர்வ கேள்வி எழுப்பப்பட்டது.
பின்னர், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மணிப்பூர் உயர் நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்து, மெய்தி சமூகத்தின் பழங்குடியினர் அந்தஸ்து கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற விவாதத்துக்குள்ளான அந்தப் பத்தியை நீக்கியது.
உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அந்த உத்தரவு இருப்பதாக, மறுஆய்வு நீதிமன்றம் குறிப்பிட்டது.
'வந்தே மாதரம் பாடல் தொடர்பான உத்தரவு'

பட மூலாதாரம், Getty Images
முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது பிறப்பித்த மற்றொரு உத்தரவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், வந்தே மாதரம் பாடலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாரத்துக்கு ஒரு முறையும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மாதத்துக்கு ஒருமுறையும் பாட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு சரியான பதில் அளித்த தேர்வருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
"பாடுவதில் சிரமம் அல்லது ஆட்சேபனை இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது," என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தது. 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், அதை அரசே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
அரசியல் கட்சிகள் எழுப்பும் எதிர்ப்பு

பட மூலாதாரம், X/Idumbavanam Karthik
இந்த இரண்டு உத்தரவுகளின் பின்னணியில்தான் முரளிதரனின் தற்போதைய நியமனத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் பிபிசி தமிழிடம் பேசும்போது, மணிப்பூர் வன்முறைக்கு நீதிபதியின் உத்தரவும் ஒரு காரணம் என்று கூறினார்.
"மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையிலான மோதலுக்கு அவரது தீர்ப்பும் ஒரு காரணமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் தலைவராக எப்படி நியமிக்க முடியும்? இந்தப் பதவிக்குத் தகுதியான வேறு நபர்கள் இல்லையா? அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது நியமனத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீடு இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது" என்றார்.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியும் இந்த நியமனத்தைக் கண்டித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், "மணிப்பூரில் கலவரம் மூன்று ஆண்டாக நடக்கிறது. இந்த ஆர்எஸ்எஸ் நபருக்கு தமிழ்நாட்டு எஸ்சி, எஸ்டி கமிஷன் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. ஆட்சி நடத்துவது ஆளுநரா? முதல்வரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நியமனத்தை ஆதரிப்பவர்களின் கருத்து என்ன?

பட மூலாதாரம், Punitha Pandian
தமிழ்நாடு எஸ்.சி மற்றும் எஸ்.டி ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் புனிதபாண்டியன் இந்த நியமனத்தை உடனடியாக விமர்சிப்பது சரியல்ல என்கிறார்.
"அவர் நீதிபதியாகப் பணியாற்றியபோது ஒரு தீர்ப்பை வழங்கினார் என்பதற்காக, தமிழகத்திலும் அதேபோன்ற முடிவுகளை எடுப்பார் என்று கூற முடியாது. இப்போது அவர் ஓய்வுபெற்றுவிட்டார். அவர் சிறந்த நிர்வாகியாக இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். குறைந்தது ஆறு மாதங்களாவது அவரது செயல்பாட்டைக் கவனித்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இப்போதே அவரது நியமனத்தைப் பற்றி முடிவெடுப்பது மிகவும் முன்கூட்டியதாக இருக்கும்" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சமூகநீதி அமைச்சர் வன்னியரசுவும் இந்த நியமனம் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
"ஒரு தீர்ப்பை வழங்கினார் என்பதற்காக அவர் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர் என்று கூற முடியாது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அதேநேரத்தில், நீதிபதி ஒருவரை ஆணையத்தின் தலைவராக நியமிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீதிபதி ஒருவர் ஆணையத்தின் தலைவராக இருந்தால், ஒவ்வொரு பிரச்னைக்காகவும் களத்துக்குச் சென்று ஆய்வு செய்ய முடியாது. இதை எதிர்த்து எங்கள் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், 2021-ஆம் ஆண்டு சட்டத்தில் நீதிபதியை ஆணையத்தின் தலைவராக நியமிக்க வகை செய்யும் ஏற்பாட்டை எதிர்த்து தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார்," என்றார்.
ஏழு மாதங்களாகக் காலியாக இருந்த தலைவர் பதவி
தமிழ்நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்கவும் 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தனி ஆணையம் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையச் சட்டம் 2021 அக்டோபர் 13-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, ஆணையத்தின் தலைவர் பட்டியலின அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும்.
இந்த ஆணையத்தின் முந்தைய தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். தமிழ்வாணன், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக 2026 மார்ச் 22ஆம் தேதி காலமானார். இதையடுத்து தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை மூலம் முரளிதரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் அல்லது 75 வயதை அடையும் வரை, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































