எவரெஸ்ட் சிகரத்தில் 'சாக்லேட், பனிக்கட்டியை உண்டு' 6 நாட்கள் உயிர் பிழைத்த வழிகாட்டி

பட மூலாதாரம், Tsering Lama
- எழுதியவர், கமால் பரியார், பிபிசி நேபாளம், டோபி மான் & ஃப்ளோரா ட்ரூரி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கடைசியாக உயிருடன் காணப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, எவரெஸ்ட் சிகரத்திலிருந்து தவழ்ந்து இறங்கிக்கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட நேபாள வழிகாட்டி, "பனிக்கட்டி" மற்றும் தனது சட்டைப்பையில் இருந்த சில சாக்லேட்டுகளைச் சாப்பிட்டதன் மூலமும் உயிர் பிழைத்ததாக பிபிசியிடம் கூறியுள்ளார்.
மலையிலிருந்து கீழே இறங்கும்போது தான் 'காணாமல் போகவில்லை' என்றும், மாறாக ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் அங்கேயே 'இருக்க வேண்டிய' கட்டாயம் ஏற்பட்டதாகவும் தாவா ஷெர்பா உறுதியாகக் கூறினார்.
மலைப்பகுதியில் தாவா ஷெர்பா உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்டு, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்த அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்யத் தொடங்கியிருந்த நிலையில், அடிவாரத்திலுள்ள முகாம் பகுதியை நோக்கி மலையிலிருந்து அவர் கீழே 'சறுக்கி' வருவதை அங்கு சுத்தப்படுத்தும் ஒரு குழுவினர் கண்டனர்.
அவர் விமானம் மூலம் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு நீர்ச்சத்து குறைபாடு, கடும் குளிரால் ஏற்படும் திசு பாதிப்பு மற்றும் எலும்பு முறிவு ஆகியவற்றுக்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் பிபிசியிடம் பேசினார்.
"நான் உயிருடன் இருப்பேன் என்று நினைக்கவில்லை," என்று அவர் வெள்ளிக்கிழமை பிபிசி நேபாள மொழி சேவையிடம் கூறினார். "அப்படியே இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்."
வியாழக்கிழமையன்று கும்பு ஐஸ்ஃபால் பகுதிக்கு அருகில் மீட்கப்படுவதற்கு முன்பு, தாவா ஷெர்பாவை உயிருடன் பார்த்ததாக அறியப்படும் கடைசி நபர் மலையேற்ற வீரரான கிறிஸ் த்ரால் ஆவார்.
முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரரான அவர், 57 வயதான அந்த நபர் 'கேம்ப் 3'-க்கு சற்று மேலே - சுமார் 7,500 மீட்டர் (24,600 அடி) உயரத்தில் - "முன்பு நூற்றுக்கணக்கான முறை செய்தது போலவே, சிறிது ஓய்வெடுப்பதற்காக" தனது பையின் மீது அமர்ந்திருந்தார் என்று தெரிவித்தார்.
சுமார் 50 முதல் 100 மீட்டர் வரை தனியாகக் கீழே இறங்கிய பிறகு, தங்களது குழுவைச் சேர்ந்த மற்றொருவரை த்ரால் சந்தித்தார். அவர் ஆக்சிஜன் உதவியின்றி இருந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும், கடுமையான பனிப்புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்தது.
"எனவே, உடனடியாக எனது கவனம் அந்த நபர் மீது திரும்பியது. அவ்வளவுதான்," என்று அவர் பிபிசியின் நியூஸ்ஹவர் நிகழ்ச்சியில் கூறினார்.
"அந்த நபர் கீழே இறங்க நான் உதவியவாறே மலையின் மேல் பகுதியைத் திரும்பிப் பார்த்தபோது, தாவா அங்கிருந்து நகர்ந்ததாகத் தெரியவில்லை; நிச்சயமாக அவர் கீழே இறங்கிக்கொண்டிருக்கவும் இல்லை, ஏனெனில் அப்படி இறங்கியிருந்தால் அவரது தலையில் மாட்டியிருக்கும் டார்ச் விளக்கு எங்கள் கண்ணில் பட்டிருக்கும்."
பனிப்பிளவில் சிக்கிக்கொண்ட நிலை
மேலே இருந்த நிலையில், தான் சிக்கிக்கொண்டதாக தாவா ஷெர்பா பிபிசியிடம் கூறினார்.
"ஆக்சிஜன் தீர்ந்துபோனதால், என்னால் நடக்க முடியவில்லை," என்று அவர் விளக்கினார்.
"முதல் இரண்டு நாட்களுக்கு நான் எதுவும் சாப்பிடவில்லை. பிறகு நான் பனிக்கட்டியை மெல்லத் தொடங்கினேன். அது என் பற்களுக்கு வலியை ஏற்படுத்தியது. நான் பனிக்கட்டியை பலமாக மென்றேன்."
பிறகு, தன் பையில் சாக்லேட்டுகள் இருப்பதைக் கண்டறிந்த அவர், குடிப்பதற்குச் சிறிது உருகிய பனிக்கட்டியையும் கண்டறிந்தார்.
அவரது துயர அனுபவம் குறித்து தாவா ஷெர்பாவிடம் பேசிய இருவரின் தகவலின்படி, அவர் மெதுவாகக் கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு பனிப்பிளவுக்குள் விழுந்துவிட்டார்.
வெளியேறுவதற்கான வழியைக் காண முடியாமல், அவர் இரண்டரை நாட்களாக அதில் சிக்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Sagarmatha Pollution Control Committee (SPCC)
அப்போது, பனிச்சரிவு ஒன்று பனியை அந்தப் பிளவுக்குள் சரிந்து விழச் செய்தது; அது பல நாட்களுக்குப் பிறகு அவருக்குள் ஒரு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்தது.
"பனியின் மீது காலடி வைத்துக்கொண்டு எழுந்து நின்று மேலே பார்த்தேன்... அங்கிருந்து என்னால் வெளியேற முடியும் என்று தோன்றியது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
அவர் சிரமப்பட்டு வெளியே வந்ததும், உலகின் மிக உயரமான மலையில் மேலும் கீழே இறங்க உதவும் கயிறுகளை அருகிலேயே கண்டார்.
மற்றொரு பனிச்சரிவு அவரது முன்னேற்றத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது, ஆனால் அவர் தொடர்ந்து செல்ல உறுதியுடன் இருந்தார்.
"நான் பனியைக் கடந்து கீழ்நோக்கிச் சென்றேன். அந்த இரவு முழுவதும் நடந்தேன்.
"பிறகு, நான் அடிவார முகாம் பகுதிக்கு அருகில் வந்தேன்."
அங்குதான், ஏறக்குறைய ஒரு வாரத்துக்குப் பிறகு அவர் முதன்முதலாக மனிதர்களைக் கண்டார்.
"சிறுவர்கள் கழிவுகளைச் சேகரிக்க மேலே சென்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னைக் கீழே சுமந்து வந்தார்கள்."

பட மூலாதாரம், Sagarmatha Pollution Control Committee (SPCC)
'வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது'
அவர் உயிர் பிழைத்த செய்தி, பரந்த ஷெர்பா சமூகம், அவருடன் சென்றிருந்த மலையேற்ற வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடையே அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு மலையேற்றப் பருவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; 1920-களில் உயிரிழப்பு தொடர்பான பதிவுகள் தொடங்கியதிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தேடுதல் பணிகளை மேற்பார்வையிட்டு வந்த 8K எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெம்பா ஷெர்பா, இது "உண்மையிலேயே ஒருவர் தன்னைத்தானே மீட்டுக்கொண்ட நிகழ்வு" என்று குறிப்பிட்டார்.
"எல்லாவிதமான சவால்களையும் மீறி தாவா பல நாட்களாக உயிர் பிழைத்திருந்தார். இது ஒரு அதிசயம் என்றே சொல்லலாம்," என்று அவர் கூறினார்.
தாவா ஷெர்பா உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வந்த கருத்துக்களை த்ரால் முதலில் பார்த்தபோது, அது "பொய்யான தகவல்" என்று நினைத்ததாகக் கூறினார்.
"ஒரு கணம் தன் மகளுடன் கண்ணீரை அடக்கப் போராடுவதைப் பார்ப்பதும், அடுத்த கணமே அவர் ஊருக்குள் வருவதைப் பார்ப்பதும் நம்பவே முடியாத ஒரு விஷயம்," என்று த்ரால் பிபிசியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் கூறினார். "இது முற்றிலும் வியக்கத்தக்கது; வார்த்தைகளால் விவரிக்க முடியாதது."
மீட்பு நடவடிக்கை சாத்தியமில்லை என்று பயண ஏற்பாட்டு நிறுவனம் தெரிவித்தபோது, தாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவரது மனைவி தமு ஷெர்பா பிபிசியிடம் கூறினார். அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைத் தொடங்கியிருந்தனர்.
"அவரை முதன்முதலில் பார்த்தபோது நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். அவர் இனி ஒருபோதும் வீடு திரும்ப மாட்டார் என்று எங்களிடம் கூறப்பட்டிருந்ததால், நான் மிகுந்த பதற்றத்தில் இருந்தேன். அவர் எப்படி உயிருடன் திரும்பி வந்தார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவர் பாதுகாப்பாகத் திரும்பியதை என் கண்களாலேயே என்னால் நம்ப முடியவில்லை," என்று அவர் கூறினார்.
"உணவோ அல்லது அத்தியாவசியப் பொருட்களோ இல்லாமல் அவர் எவ்வளவு காலம் உயிருடன் இருந்தார் என்று நான் வியக்கிறேன்... அவ்வளவு உயரத்தில் என் கணவர் எப்படி உண்டார், நீர் அருந்தினார் என்பது எனக்குப் புரியவில்லை. யாருக்கும் இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று நான் நம்புகிறேன்."
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை நேபாள அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
"அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார்... அவர் நலமாக இருக்கிறார், பேசுகிறார்," என்று அவரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு அவரது மகள் மெண்டோ ல்ஹாமோ ஷெர்பா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். "நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்."
காத்மண்டுவில் உள்ள மருத்துவர்கள், தாவா ஷெர்பா "தீவிர சிகிச்சைப் பிரிவில் முழுமையான மருத்துவக் கவனிப்பைப் பெற்று வருகிறார்" என்றும், அதேவேளையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதோடு "உடலில் நீரிழப்பு நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த பருவத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்; இதன் மூலம் இதுவே இதுவரை பதிவானவற்றிலேயே மிகவும் பரபரப்பான பருவமாக அமைந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































