'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்

- எழுதியவர், சுதாகர் பா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
46 வயதான அப்துல் ரஹீம், கடந்த வியாழக்கிழமை அதிகாலை சௌதி தலைநகர் ரியாத்திலிருந்து புறப்பட்டு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் குடும்பத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்ச்சிபூர்வமாக அவரை வரவேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ரஹீம், "ஒரு கட்டத்தில் நான் உயிருடன் வெளியே வருவேன் என்று கூட நம்பவில்லை. என்னைக் காப்பாற்ற பிரார்த்தித்தவர்களுக்கும், உதவி செய்த அனைவருக்கும் நன்றி சொல்லி இதனை முடிக்க முடியாது," என்று உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
யார் இந்த அப்துல் ரஹீம் ?

பட மூலாதாரம், Photo Credit: Naseer
கோழிக்கோடு மாவட்டம் ஃபெரோக் அருகே உள்ள கொடம்புழா பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம், 2000களின் தொடக்கத்தில் வேலைக்காக சௌதி அரேபியா சென்றுள்ளார். அப்போது அவரது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அப்துல் ரஹீமின் உறவினர் அபூபக்கர், "அவர்களின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. வீட்டுக் கடன், மருத்துவச் செலவுகள், குடும்பப் பொறுப்புகள் போன்றவற்றை சமாளிக்கவே ரஹீம் வளைகுடாவுக்குச் சென்றார்," என்றார்.
வெளிநாட்டில் வேலை செய்தால் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்ற நம்பிக்கையுடன் அப்துல் ரஹீம், சௌதி சென்றதாக அவரது நண்பர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
கோழிக்கோட்டில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த ரஹீம், கார் ஓட்டுநராக வேலை செய்ய சௌதி அரேபியாவிற்குச் சென்றார். சௌதியில் வேலைக்குச் சேர்ந்த 20 நாட்களில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே ரஹீம் அவருடைய முதலாளியின் மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். ரியாத்தில் உள்ள ஹைப்பர்மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போது காரின் பின் பக்க இருக்கையில் இருந்த அந்தச் சிறுவனின் சுவாசக் கருவி தற்செயலாக துண்டிக்கப்பட்டதாக ரஹீ ரிவித்தார்.
இது விபத்தா அல்லது அலட்சியமா என்ற விவாதம் நீண்ட காலம் நீடித்தது. பின்னர் அவருக்கு சௌதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
தந்தையை பார்க்க முடியாமல் வாடிய குழந்தைகள்

அவரது மனைவி சைனபா, கடந்த இருபது ஆண்டுகளாக கணவரின் விடுதலைக்காக காத்திருந்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் அவரே தனியாக ஏற்றுக்கொண்டார்.
இது தொடர்பாக அவரது உறவினர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "ஒரு கட்டத்தில் குடும்பச் செலவுக்கே பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. குழந்தைகளை வளர்ப்பது முதல் நீதிமன்ற செலவுகள் வரை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியிருந்தது," என்றனர்.
அப்துல் ரஹீமுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மூத்த மகள் சிறுவயதிலேயே தந்தையிடமிருந்து பிரிந்ததாகவும், இரண்டாவதாக மகன் பிறந்த பிறகு தந்தையை நேரில் பார்க்க முடியாத சூழல் இருந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
சிறையில் இருந்தபோது சில நேரங்களில் மட்டுமே அப்துல் ரஹீமுக்கு குடும்பத்தினருடன் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொலைபேசி உரையாடல்களில் குழந்தைகள் பெரும்பாலும் அழுது கொண்டே பேசுவார்கள் என அவரது சகோதரர் நசீர் ரஹீம் செய்தியாளர்களிடம் கூறினார். "பல ஆண்டுகள் அவருடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் கடைசி அழைப்பாகிவிடுமோ என்ற அச்சம் எங்களிடம் இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
"ஒவ்வொரு ரமலானும் கண்ணீரோடு கடந்தது"

பட மூலாதாரம், Naseer
அப்துல் ரஹீமின் தாய் ஃபாத்திமா, "ஒவ்வொரு ரமலானும், ஒவ்வொரு ஈத்தும் என் மகன் இல்லாமல் தான் கடந்தது. அவர் திரும்பி வருவாரா என்றே தெரியாமல் இருந்தது," என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பகிர்ந்துகொண்டார்.
அப்துல் ரஹீமின் தந்தை முகம்மது குட்டி தனது மகன் சிறையில் அடைபட்டிருந்த கால கட்டத்தில் உயிரிழந்தார்.
"மகன் திரும்பி வருவதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய கடைசி ஆசையாக இருந்தது," என்று அவரது உறவினரான அபூபக்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அவரது தாய் பாத்திமா, "என் மகனை மீண்டும் பார்க்க முடியுமா என்று தினமும் அழுதேன். இன்று அல்லாஹ் என் மகனை எனக்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார்," என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
"ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய கூலித் தொழிலாளர்கள்"
இணைய பரவலும், சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் அப்துல் ரஹீம் வழக்கை உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளிடையே கொண்டு சேர்த்தது.
"Save Abdul Rahim" என்ற பெயரில் ஆன்லைன் இயக்கம் தொடங்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் முதல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா வரை வாழும் மலையாளிகள் நிதி வழங்கத் தொடங்கினர்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சமூக ஆர்வலர் அஷ்ரஃப் தாமரச்சேரி, "இது ஒரு மனிதனைக் காப்பாற்றும் முயற்சி மட்டும் இல்லை. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அச்சங்களையும் வெளிக்கொணர்ந்த இயக்கம்." என்றார்.
"பல தினக்கூலி தொழிலாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர். சிலர் தங்களது குழந்தைகளின் சேமிப்பு பணத்தையும் கூட அனுப்பினர்," என்றும் அவர் கூறினார்.
கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பல மசூதிகளில் அப்துல் ரஹீமுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை தொழுகைகளில் நிதி திரட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
சில பள்ளிவாசல் நிர்வாகங்கள் தனியாக வங்கி கணக்குகள் திறந்து நிதி சேகரிப்பு இயக்கங்களை நடத்தின.

ரூ.34 கோடி குருதிப் பணம்
பிபிசி ஆப்பிரிக்கா அறிக்கையின்படி, ஷரியா என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சட்டத்தில் தியா அல்லது குருதிப் பணம் என்பது ஒரு வகையான நீதியாகக் கருதப்படுகிறது.
கொலை, காயப்படுத்துதல் அல்லது சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான குற்றங்களுக்கு இது பொருந்தும். இதன் மூலம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது முழு மன்னிப்பும் பெறலாம்.
அப்துல் ரஹீம் வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் ஆரம்பத்தில் மன்னிப்பு வழங்க மறுத்தது. பல ஆண்டுகள் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1.5 கோடி சௌதி ரியால் இழப்பீடு வழங்கப்பட்டால் சமரசத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 கோடியாகும்.
இதையடுத்து, அப்துல் ரஹீமின் விடுதலைக்காக பல தரப்பினரும் இணைந்து செயல்பட்டனர். இதுகுறித்துப் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ. சலாம், "இது ஒரு குடும்பத்தின் வெற்றி மட்டும் அல்ல. உலக மலையாளிகளின் மனிதநேய வெற்றி," என்று கூறினார்.
முஸ்லிம் யூத் லீக் மாநில தலைவர் பி.கே. ஃபிரோஸ், "அப்துல் ரஹீமுக்காக கேரளா முழுவதும் மக்கள் ஒன்றிணைந்தனர். மதம், அரசியல், நாடு என்ற எல்லைகளைக் கடந்து மக்கள் உதவினர்," என்றார்.
சமூக ஆர்வலர் மற்றும் வளைகுடா விவகார செயற்பாட்டாளர் நஜீப் காந்தபுரம், "இந்த வழக்கைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்தது பொதுமக்களின் அழுத்தம்தான்," என்று கூறினார்.

"இந்திய தூதரகத்தின் உதவி"
இந்த வழக்கில் சௌதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபாடு காட்டியதாக ரஹீமின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அப்துல் ரஹீமின் வழக்கு ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நீடித்தது. மொழிபெயர்ப்பு சிக்கல்கள், சௌதி சட்ட அமைப்பை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம், வழக்கறிஞர் கட்டணங்கள் போன்றவை குடும்பத்திற்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தியது.
குடும்பத்தின் சார்பில் செயல்பட்ட சட்ட உதவி குழு உறுப்பினரான சித்திக் துவ்வூர், "இந்த வழக்கு பலமுறை முடிந்துவிட்டதாக தோன்றியது. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய சட்ட சிக்கல்கள் வந்துகொண்டே இருந்தன," என்று கூறினார்.
பல ஆண்டுகள் நீடித்த நிதி திரட்டும் முயற்சியில், குருதிப் பணமாக வழங்கத் தேவையான 1.5 கோடி சௌதி ரியால் திரட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பம் மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டது.
பின்னர் சௌதி நீதிமன்றம் அப்துல் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால் 2006 முதல் அவர் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், தண்டனை காலம் நிறைவடைந்ததாக கருதி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில் உணர்ச்சிமிகு தருணம்
சௌதியில் இருந்து தாயகம் திரும்பிய அப்துல் ரஹீமை வரவேற்க கோழிக்கோடு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.
விமான நிலையத்தில் அப்துல் ரஹீமை வரவேற்றவர்களில் கேரள தொழிலதிபர் பாபி செம்மண்ணூரும் ஒருவர். "ஒரு சாதாரண தொழிலாளியை காப்பாற்ற உலகம் முழுவதும் மக்கள் ஒன்று சேர்ந்திருப்பது மனிதநேயத்தின் மிகப்பெரிய எடுத்துக்காட்டு," என்று அவர் கூறினார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரஹீம் தனது தாயைச் சந்தித்த தருணம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. மனைவி சைனபாவையும், வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட குழந்தைகளையும் பார்த்தபோது அப்துல் ரஹீம் உணர்ச்சிவசப்பட்டார்.
"நான் இவ்வளவு நாளும் இந்த தருணத்துக்காகவே உயிரோடு இருந்தேன்," என்று குடும்பத்தினரிடம் அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். "இது மனிதநேயத்தின் வெற்றி," என்று அங்கு அவரை வரவேற்க வந்தவர்கள் முழக்கமிட்டனர்.
"அப்துல் ரஹீமின் வாழ்க்கை ஒரு மனிதனின் கதை மட்டும் அல்ல; வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் ஏழை குடும்பங்களின் வாழ்க்கையைக் குறிக்கும் ஒன்று," என்கிறார் என்று சமூக ஆர்வலர் டாக்டர் ஷம்சுதீன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வெளிநாடுகளில் பணிபுரியும் ஏழை தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு மற்றும் தூதரக உதவிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது," என்று தெரிவித்தார்.

"இனி சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும்"
சுமார் 20 ஆண்டுகளை சிறையில் கழித்த அப்துல் ரஹீம், இனி தனது குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
"இனி மற்றவர்களைப் போல் நானும் என் குடும்பத்துடன் சராசரி வாழ்க்கையை வாழ வேண்டும். என் அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































