மோதியுடனான நட்பு குறித்து பேசி இந்தியாவுக்கு அழுத்தம் தருவதாக டிரம்ப் மீது விமர்சனம் ஏன்?

டொனால்ட் டிரம்ப் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வந்ததாகவும், ஆனால் இப்போது அதற்கு நேர்மாறான நிலை ஏற்பட்டு, அமெரிக்கா இந்தியாவிடமிருந்து பெருமளவு பணம் ஈட்டி வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஜூன் 1 முதல் ஜூன் 4 வரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, டிரம்பின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டிரம்ப், இந்தியா அமெரிக்கா மீது மிக அதிக அளவிலான இறக்குமதி வரிகளை விதித்ததாகவும், அதற்குப் பதிலாக எதையும் வழங்கவில்லை என்றும் கூறினார்.

தற்போது, ​​அமெரிக்கா இந்தியாவின் மீது பத்து சதவிகித இறக்குமதி வரியை விதித்துள்ளது.

ஒரு காலகட்டத்தில், அமெரிக்கா இந்தியாவின் மீதான இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக உயர்த்தியிருந்தது.

இதன் பிறகு இது 18 சதவிகிதமாகவும், பின்னர் 10 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இறக்குமதி வரிகள் குறித்து டிரம்ப் என்ன கூறினார்?

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், பல ஆண்டுகளாக நீடிக்கும் இறக்குமதி வரி தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோதியுடன் தனக்கு மிகச் சிறந்த உறவு உள்ளதாகக் கூறினார்.

நரேந்திர மோதி ஒரு நல்ல நண்பர் என்றும், இந்த உறவு பேச்சுவார்த்தைகளை (வர்த்தக ஒப்பந்தம்) 'இறுதிக் கட்டத்தை' நோக்கி வெற்றிகரமாகக் கொண்டு செல்லும் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே வரிகள் தொடர்பாகப் பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி வருவதாகவும், இருப்பினும் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் அனைத்து அம்சங்களும் தீர்க்கப்பட்டுவிட்டதாக, இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும் கூறியிருந்தார்.

இருப்பினும், இதற்கிடையில், இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளின் மீது 10 முதல் 12.5 சதவிகிதம் வரையிலான கூடுதல் வரிகளை விதிக்க முன்மொழிந்ததன் மூலம், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பினர் நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளார்.

கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாக இந்த நாடுகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

12.5 சதவிகித கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியா எவ்வாறு எதிர்வினையாற்றியது?

அமெரிக்கா முன்பு இந்தியாவின் மீது 50 சதவிகித இறக்குமதி வரியை விதித்தது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா முன்பு இந்தியாவின் மீது 50 சதவிகித இறக்குமதி வரியை விதித்தது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டிரம்பின் கருத்து குறித்துக் கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது, ​​இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஜூன் 1 முதல் ஜூன் 4 வரை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக் குழு ஒன்று இந்தியாவில் இருந்தது. வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், தற்போது விவாதத்தில் உள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இரு தரப்பும் இறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

ஆனால், இதற்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

தன் எக்ஸ் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "டிரம்ப் மீண்டும் ஒருமுறை இந்தியாவை அவமானப்படுத்தியுள்ளார். தோல்வியடைந்த வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு முகம் என்று ஒன்று இருக்குமானால், அது இதுவாகத்தான் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.

ராஜீய ரீதியிலான விவகாரங்கள் குறித்த பல நிபுணர்களும் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் தன் எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் அதிகப்படியான இறக்குமதி வரிகள் அமெரிக்காவுக்காக மட்டும் விதிக்கப்பட்டவை அல்ல; அதேபோல, அமெரிக்காவின் ஒப்பீட்டளவில் குறைவான வரிகளும் இந்தியாவுக்காக மட்டும் அமைக்கப்பட்டவை அல்ல" என பதிவிட்டுள்ளார்.

"அமெரிக்க ஏற்றுமதிப் பொருட்கள் மீது இந்தியா ஒட்டுமொத்தமாக 200 சதவிகித இறக்குமதி வரியை விதித்துள்ளது என்ற கருத்து முற்றிலும் தவறானது."

"முரண் என்னவென்றால், அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க அதிக இறக்குமதி வரிகளை விதிப்பது ஒரு சிறந்த வழி என்று டிரம்ப் கருதுகிறார். ஆனால், இந்தியாவின் சில முக்கியப் பொருளாதாரத் துறைகளைப் பாதுகாக்க இந்தியா அதிக வரிகளை விதிப்பதை அவர் ஏற்பதில்லை."

"மோதியை விரும்புவது பற்றிப் பேசுவதுகூட, உண்மையான பிரச்னையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவது போலவே தோன்றுகிறது."

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த வியூக விவகார நிபுணர் பிரம்மா செல்லானி தன் எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பதை நியாயப்படுத்த, டிரம்ப் மீண்டும் ஒருமுறை பிரதமர் மோதியுடனான தனது நட்பை மேற்கோள் காட்டியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், முன்னாள் தூதர் கே.சி. சிங் தன் எக்ஸ் பக்கத்தில், "டிரம்பிடம் உள்ள சிக்கலே இதுதான். ஒருபுறம் அவர் மோதியைத் தனது நண்பர் என்று கூறுகிறார்; மறுபுறம், இந்தியாவின் மீது அழுத்தம் கொடுத்து அதிகபட்ச ஆதாயங்களைப் பெறுவது குறித்தும் பேசுகிறார். இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. இது உண்மையான நட்பா, அல்லது ஆழ்ந்த சுயநலம் மற்றும் பேரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நோக்கத்தை மறைப்பதற்கான ஒரு வழியா?" என பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு