காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் முடிவடைந்தது - அமெரிக்காவில் இருந்து வந்த அபிஜீத் தீப்கே என்ன பேசினார்?

பட மூலாதாரம், Reuters
டெல்லியின் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமையன்று நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டம் முடிவடைந்தது.
போராட்டம் முடிந்துவிட்டதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளதாகவும், கூடியிருந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
சனிக்கிழமை அதிகாலையில்,காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினார்.
அபிஜித் தீப்கே அப்போது மக்களிடையே பேசுகையில், "கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகங்களில் ஒரு பக்கத்தை நடத்துவதால் என்ன பயன் என்று மக்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். கேமராவைத் திருப்பி, வீடுகளிலிருந்து எத்தனை கரப்பான் பூச்சிகள் வெளியே வந்துள்ளன என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள்," என்று கூறினார்.
அவர் பேசுகையில், "இன்னும் ஓரிரு நாட்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் எங்களுடன் இணைவார்கள். 'காக்ரோச் ஜனதா கட்சி' என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஒவ்வொரு மாணவரின் குரல்தான் இந்தக் கட்சி," என்று கூறினார்.
மேலும், "கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக இந்துக்கள் - முஸ்லிம்கள் என்ற அரசியலில் மக்களைச் சிக்கவைத்தனர். அதனால் யாருக்கு பயன் கிடைத்தது? இந்து - முஸ்லிம் அரசியல் பேசி நாட்டில் யாருக்காவது வேலைவாய்ப்பு கிடைத்ததா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அபிஜீத் தீப்கே மேலும், "கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனது தாயும் சகோதரியும் 'நீ இந்தியா திரும்பினால், அவர்கள் உன்னைக் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்' என்று அழுதுகொண்டிருந்தனர். இது எனது தாயின் தனிப்பட்ட பயம் மட்டுமல்ல. இந்த நாட்டில், அரசியலைப் பற்றியும் இந்த அரசாங்கத்திற்கு எதிராகவும் பேசும் எந்தவொரு மாணவர் அல்லது இளைஞரின் தாயும், 'தன் மகன் சிறையில் அடைக்கப்பட்டுவிடுவானோ' என்று அஞ்சுகிறார். நாம் எவ்வளவு காலம் இப்படி அச்சத்துடன் வாழ்வது? இவர்களுடைய பயம் காட்டும் அரசியலுக்கு இனி அஞ்சப்போவதில்லை என்பதை அவர்களுக்கு ஒருமுறை புரியவையுங்கள்" என்றார்.
இதனிடையே கல்வியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சோனம் வாங்சுக் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
காக்ரோச் ஜனதா கட்சி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இப்போராட்டத்தை "அன்புடனும் அமைதியுடனும் முன்னெடுத்துச் செல்லுமாறு" அக்கட்சி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டது,
முன்னதாக, டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய உடனேயே, "கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்" என்று அபிஜித் தீப்கே வலியுறுத்தியிருந்தார்.
ஜந்தர்மந்தரில் என்ன நடக்கிறது?
லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இருப்பினும், சிஜேபி தனது எக்ஸ் பக்கத்தில் அபிஜீத் திப்கே விமான நிலையத்திலிருந்து வெளியேறி காரில் செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்தப் புகைப்படத்தில் திப்கே, பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் கையில் வைத்திருப்பது தெரிகிறது.
இதற்கிடையில், ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அங்கே இளைஞர்கள் கூட்டமும் காணப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கருதப்படுகிறது.
ஜந்தர் மந்தரில் ஏராளமான ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் காணப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
சிஜேபி போராட்டம் நடக்கும் ஜந்தர் மந்தரில் சுமார் 700 சிஆர்பிஎஃப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கே, போராட்டக் களத்தை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்கு வெளியே பாஜக ஆதரவாளர்கள் திரண்டு சிஜேபிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.
இந்தச் சூழலில், 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற நகைச்சுவையான சமூக ஊடகப் பிரசாரம், இணைய உலகிலிருந்து நிஜ உலகில் தெருக்களுக்கு வருகிறது.
முன்னதாக, சி.ஜே.பி தனது எக்ஸ் பக்கமான 'காக்ரோச் இஸ் பேக்' என்பதில், "ஜூன் 6, காலை 9 மணி - நாளை சந்திப்போம், சக கரப்பான் பூச்சிகளே. நாம் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைப் பெறுவோம். ஒரு சிறிய நகைச்சுவையை ஒரு இயக்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தது.
சனிக்கிழமை டெல்லியில் கூடும் மக்களின் எண்ணிக்கை பல விஷயங்களைத் தீர்மானிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ், "உங்கள் அனைவரையும் எனக்குத் தெரியாது, ஆனால் உங்களுடைய உணர்ச்சிகள், கோபம் மற்றும் இலக்குகளை என்னால் உணரமுடிகிறது. காக்ரோச் ஜனதா கட்சியையோ, அதன் தலைவர்களையோ அல்லது உங்கள் அனைவரையும் எனக்குத் தெரியாது, ஆனால் எப்படி ஒன்றுபட்டு நிற்பது என்று எனக்குத் தெரியும். உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், கட்சியின் பெயர் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்பதே நமது கடமை. கட்சியை விட நாடு பெரியது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறினார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி, காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்த அனுமதித்ததன் மூலம் டெல்லி காவல்துறை சரியானதைச் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
"நாட்டில் தேர்வுத் தாள் கசிவுகள், ஆள்சேர்ப்பில் ஊழல், வேலையின்மை மற்றும் மோசடிகள் தினந்தோறும் நடந்து வருகின்றன. வெளியுறவுக் கொள்கை முற்றிலுமாகச் சீர்குலைந்து, அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையம், நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்களும் பலவீனமடைந்துள்ளன" என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷன் கூறியுள்ளார்
'மூவர்ணக் கொடி, புத்தகம் மற்றும் பூக்களை கொண்டு வாருங்கள்'
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே இன்று (ஜூன் 6) காலையில் இந்தியா வந்தார்.
முன்னதாக, அவரது பயணத் திட்டங்களை விவரிக்கும் காணொளி ஒன்று, சிஜேபியின் எக்ஸ் பக்கமான "காக்ரோச் இஸ் பேக் " எனும் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் சிஜேபி செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் காணப்படுகின்றனர். அந்தக் காணொளியில் சௌரவ் தாஸ், "அபிஜித் தீப்கே காலை 8 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை வந்தடைவார்'' என்று கூறியிருந்தார்.
போராட்டத்திற்கு காவல்துறையின் ஒத்துழைப்பும் அனுமதியும் கோரப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அமைதியைக் கடைப்பிடித்து, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துமாறு காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்களுக்கு சௌரவ் தாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
மூவர்ணக் கொடி, புத்தகங்கள், மலர்கள் ஆகியவற்றைத் தங்களுடன் கொண்டு வருமாறும், தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்து வருமாறும் ஆதரவாளர்களிடம் அஷுதோஷ் ரங்கா வேண்டுகோள் விடுத்தார்.
'தர்மந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்து, ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்' என அவர் பிரதமர் நரேந்திர மோதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் வரவேற்கப்படுகிறார்கள் என்று சௌரவ் தாஸ் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், @Cockroachisback
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் நிறுவனரும் ஒருங்கிணைப்பாளருமான அபிஜீத் திப்கே, பிபிசி நியூஸ் மராத்திக்கு அளித்த பேட்டியில், தான் ஏன் சிஜேபி-யைத் தொடங்கினேன் என்பது குறித்துக் கூறினார்.
"அமைப்பை விமர்சிப்பதற்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் நாட்டின் இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் ஒப்பிட்டு, இந்தியத் தலைமை நீதிபதி வெளியிட்ட அறிக்கையை நான் எக்ஸ் தளத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று அவர் கூறியிருந்தார்.
"இது எனக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றியது, ஏனென்றால் தலைமை நீதிபதிதான் நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாவலராக இருக்க வேண்டும்; அந்த அரசியலமைப்புதான் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரத்தை வழங்குகிறது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒருவர், இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் எப்படி ஒப்பிட முடியும்?"
"இது எனக்கு கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது, இதுகுறித்த எனது கருத்தை நான் எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தினேன். எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் என்று நான் கேட்டேன். நாம் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய ஜென் ஸி மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து எனக்கு அற்புதமான பதில்கள் கிடைத்தன" என்று தீபக் கூறினார்.

பட மூலாதாரம், X/Cockroachisback
"இது, 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற பெயரில் இணையத்தில் ஒரு நகைச்சுவையான இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குத் தந்தது. நீங்கள் எங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைத்தால், சரி, காக்ரோச் ஜனதா பார்ட்டியை உருவாக்குவோம் என நான் நினைத்தேன். இந்தக் கட்சியில் சேர்வதற்கான நிபந்தனைகளை நான் நிர்ணயித்துள்ளேன். தலைமை நீதிபதி கூறியது போல் நீங்கள் சோம்பேறியாக இருக்க வேண்டும், வேலையில்லாமல் இருக்க வேண்டும், மேலும் அவர் கூறியது போல் நீங்கள் தொடர்ந்து இணையத்தில் இருக்க வேண்டும்."
இந்த நையாண்டிப் பிரசாரம் எப்படிப் பிரபலமானது என்பது குறித்துப் பேசிய தீபக், "இதற்குப் பிறகு, இது பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும், இனி இது வெறும் நகைச்சுவை அல்ல என்றும் நாங்கள் உணரத் தொடங்கினோம். ஏனென்றால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அதனால் நாங்கள் ஒரு இணையதளத்தையும், கட்சியின் தேர்தல் அறிக்கையையும் உருவாக்கினோம்," என்றார்.
மேலும், "இன்ஸ்டாகிராமில் எங்களை இரண்டு மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். (தற்போது 22.1 மில்லியன் அல்லது 2 கோடியே 21 லட்சத்திற்கும் அதிகமானோர்). இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் காக்ரோச் ஜனதா பார்ட்டியில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய அரசியலில் இது ஒரு முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


































