2004-ல் சோனியா பிரதமராவதை ராகுல் எதிர்த்ததால் மன்மோகன் பிரதமராக்கப்பட்டாரா? சுயசரிதை மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
1998ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றபோது, அவர் எதிர்பாராத மற்றும் பெரும்பாலும் புதிரான அரசியல் தலைவராக இருந்தார்.
இத்தாலியில் பிறந்தவரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான அவர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்கும் முன்பு, பல ஆண்டுகளாக அரசியல் வெளிச்சத்தைத் தவிர்த்து வந்தார்.
அவர் பொறுப்பேற்ற ஆரம்ப மாதங்களில், இந்தியா டுடே இதழ் சோனியா காந்தியை "தனது கட்சியினருக்கே புரியாத புதிராக" இருப்பதாக வர்ணித்தது. "புரிந்துகொள்ள முடியாதவர்" என்றும், பாதுகாப்பு வளையத்தால் உலகத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டவர் என்றும், "அந்நிய உச்சரிப்பில் சுருக்கமான ஒரு வரி பதில்களுக்காக" அறியப்பட்டவர் என்றும் அந்த இதழ் குறிப்பிட்டது.
எனினும், அவரது தயக்கத்துக்குப் பின்னால், அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஏற்கெனவே கற்றுக்கொண்டிருந்த ஒரு அரசியல்வாதியை அந்த இதழ் அடையாளம் கண்டது.
மாறுபட்ட கருத்துகளைக் கேட்டு, தகவல்களைத் திரட்டி, பின்னர் தனது சொந்த முடிவை அவர் எடுப்பார்.
"முடிவெடுக்கும் செயல்முறையில் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை, எந்தக் குரலும் அடக்கப்படுவதில்லை. ஆனால் இறுதியில் அவரது வார்த்தையே மேலோங்குகிறது" என்று அந்த இதழ் தெரிவித்தது.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் அரசியலுக்குள் வந்த வெளிநபராக இருந்து, இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உயர்ந்த அரசியல் பயணத்துக்குப் பிறகு, சோனியா காந்தி தனது சொந்த கதையை தற்போது பகிர்ந்துகொள்கிறார்.

பட மூலாதாரம், William Collins
79 வயதான சோனியா காந்தியின் வாழ்க்கை, அசாதாரணமான தனிப்பட்ட இழப்புகளால் நிறைந்துள்ளது.
அவரது மாமியாரான இந்திரா காந்தியை, அவரது பாதுகாவலர்கள் சுட்ட பிறகு, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்கொலைப்படைத் தாக்குதலில் அவரது கணவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அவரது உடலை வீட்டுக்குக் கொண்டு வந்தார்.
அவரது சுயசரிதையான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' (Belonging: A Journey of Love) என்ற புத்தகம், அமெரிக்காவில் ஆல்ஃபிரட் ஏ. நாப்ஃப் பதிப்பகத்தாலும், பிரிட்டனில்ல் வில்லியம் காலின்ஸ் பதிப்பகத்தாலும் நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் அரசியல் புத்தகங்களில் ஒன்றாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ஃபிரட் ஏ. நாப்ஃப் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில், சோனியாகாந்தி தனது நினைவுக் குறிப்புகள் "எனது வாழ்க்கையை வடிவமைத்த மென்மையான மகிழ்ச்சிகள் மற்றும் இருண்ட விரக்திகளைக் கடந்து சென்ற எனது இதயத்தின் பயணத்துக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டும்" என்று விரும்புவதாகக் கூறியுள்ளார்.
வில்லியம் காலின்ஸ் பதிப்பகத்தின் கூற்றுப்படி, இந்தப் புத்தகம் 1965ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் தொடங்குகிறது. அங்கு 19 வயதான இத்தாலிய மாணவி சோனியா மைனோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனான ராஜீவ் காந்தியை காதலிக்கிறார்.
இந்தப் படைப்பில், மிகவும் அமைதியானவராக அறியப்பட்ட சோனியா, காதல், நாடு கடந்து வருதல், அரசியல் அதிகாரம் மற்றும் பேரழிவை ஏற்படுத்திய இழப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட தனது வாழ்க்கையை "அன்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும்" திரும்பிப் பார்க்கிறார் என்று பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் அவர் கழித்த குழந்தைப் பருவம் முதல், எதிர்பாராத வகையில் இந்திய அரசியலின் மையப்பகுதிக்குள் அவர் மேற்கொண்ட பயணம் வரை இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Keystone/Getty Images
இந்த நினைவுக் குறிப்புகள் ஏற்கெனவே இந்தியாவில் ஒரு பதிப்பக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.
பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, கையெழுத்துப் பிரதியின் சில பகுதிகளில் மாற்றங்களைக் கோரியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அரசை விமர்சிக்கும் பகுதிகளை மாற்றுவதற்கு பதிப்பகம் அரசியல் அழுத்தத்துக்கு உள்ளானதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்தக் குற்றச்சாட்டை பென்குயின் மறுத்துள்ளது.
"தொடர்புடைய விவாதங்கள்" நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், புத்தகத்தை வெளியிடுவதில் "தொடர்ந்து ஆர்வமாகவும் விருப்பமாகவும் இருந்ததாக" அந்தப் பதிப்பகம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட இளம் வெளிநாட்டுப் பெண்ணின் கதையைத் தாண்டி, வாசகர்கள் பல விஷயங்களை எதிர்பார்ப்பார்கள்.
நவீன இந்திய அரசியலில் இன்னும் விடை கிடைக்காத மிகப்பெரிய கேள்விகளுக்கு அவர்கள் பதில்களைத் தேடுவார்கள். அவரை அரசியலுக்குள் இழுத்தது எது? எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதிருந்த காங்கிரஸ் 2004ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, திரைக்குப் பின்னால் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தபோதிலும், சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் முக்கிய வடிவமைப்பாளரான மன்மோகன் சிங்கை பிரதமராகத் தேர்வு செய்தது ஏன் என்பதே மிகப்பெரிய மர்மமாக இருக்கலாம்.
தான் வெளிநாட்டில் பிறந்தது, தனது அரசாங்கத்துக்கு நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அஞ்சினாரா?
"இதுதான் உண்மையில் மிகப்பெரிய விடை கிடைக்காத கேள்வி என்று நான் நினைக்கிறேன். அவர் எளிதாக பிரதமராகியிருக்க முடியும். அவரது கட்சியும் கூட்டணிக் கட்சிகளும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருந்தன. அரசை அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதமும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தயாராக இருந்தது" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீரஜா சௌத்ரி கூறுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர் சிங் தனது நினைவுக் குறிப்புகளில், சோனியா காந்தி பிரதமராக வருவதை அவரது மகன் ராகுல் காந்தி "கடுமையாக" எதிர்த்ததாக எழுதியுள்ளார். தனது பாட்டி மற்றும் தந்தைக்கு நேர்ந்த கதியே தனது தாய்க்கும் நேரிடும் என்று ராகுல் அஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா பிரதமராவதைத் தடுக்க " எந்த நடவடிக்கையையும்" எடுக்கத் தயாராக இருப்பதாக ராகுல் கூறியபோது இந்த விவகாரம் "உச்சக்கட்டத்தை" அடைந்ததாக சிங் எழுதியுள்ளார்.
இந்த அசாதாரணமான முடிவு குறித்து சோனியாவின் நினைவுக் குறிப்புகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுமா? அல்லது திரைக்குப் பின்னால் உண்மையில் நடந்தது குறித்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விபரத்தை அளிக்குமா?

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images
காரணம் எதுவாக இருந்தாலும், அவரது முடிவு இந்திய அரசியலையே மாற்றியமைத்தது. ஆனால் அந்த முடிவு ஒரு பெரிய மர்மத்தின் ஒரு பகுதி மட்டுமே. சோனியா காந்தி முதலில் அரசியலுக்குள் நுழைந்தது ஏன்?
அவர் பல ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையை எதிர்த்து வந்தார். 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகும், அவர் பெரும்பாலும் பொது வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தார்.
ஆனால் 1990களில் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், 1997ஆம் ஆண்டு அவர் அக்கட்சியில் இணைந்தார். ஒரு ஆண்டுக்குள் கட்சியின் தலைவராகவும் ஆனார்.
அந்த நேரத்தில், அவரது அரசியல் எதிரிகளால் அவர் பெரிதும் நிராகரிக்கப்பட்டார். 1998 டிசம்பரில், இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில், ஆரம்பத்தில் முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை "இல்லத்தரசி" அல்லது "இத்தாலிய அதிசயம்" என்பதைத் தாண்டி வேறு எதுவுமில்லை என்று அழைத்ததாகக் குறிப்பிட்டது.
எனினும், சில மாதங்களுக்குள் அவர் தனது கட்சியை மாற்றியமைக்கத் தொடங்கினார். காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர், "அந்தப் பெண் இப்படியொரு ஆச்சரியத்தை நிகழ்த்துவார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
அந்த இதழ், ஏற்கெனவே வலிமையான அரசியல் செயல்பாட்டாளராக சோனியாவை அடையாளம் கண்டுகொண்டிருந்தது.
அவரிடம் "வெல்வெட் கையுறைக்குள் இரும்புக் கரம்" இருப்பதாக வர்ணித்த அந்த இதழ், "இமயமலை அளவிலான ஆணவங்களை மலை அடிவாரங்களின் உயரத்துக்குக் குறைக்க" அவருக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டது.
அதன்பிறகு, அவரது அரசியல் வாழ்க்கையை சாத்தியமாக்கிய துயரங்களும் உள்ளன.

பட மூலாதாரம், AFP via Getty Images
1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சோனியா நேரில் கண்டார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்கொலைப்படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தியை அவர் இழந்தார். இந்த மரணங்கள் இந்திய அரசியலின் போக்கையும், அவரது சொந்த வாழ்க்கையின் போக்கையும் மாற்றின.
அந்த ஆண்டுகள் குறித்து அவர் என்ன கூறுவார்? ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை குறித்து என்ன கூறுவார்? அந்த அரசியல் வாழ்க்கையில் அவர் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தனது குழந்தைகளைச் சுற்றியிருந்த பாதுகாப்பு அச்சங்கள் குறித்து என்ன கூறுவார்? காந்தி குடும்பத்தின் அரசியல் வாரிசுத் தன்மையை அப்படியே கைவிட முடியாது என்று அவர் முடிவு செய்த தருணம் குறித்து என்ன கூறுவார்?
இதுபோன்ற சங்கடம் தரும் கேள்விகளும் இருக்கின்றன.
ராஜீவ் காந்தியின் அரசாங்கத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதும், இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியுடனான குடும்பத்தின் தொடர்புகள் குறித்து பல ஆண்டு காலங்களாக சர்ச்சையை ஏற்படுத்தியதுமான போஃபர்ஸ் விவகாரம் குறித்து அவர் பேசுவாரா? அந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் பரிசீலித்து, தனக்கு என்ன தெரியும் என்பதை விளக்குவாரா?
அவரது இத்தாலியப் பூர்வீகம் தொடர்பான சர்ச்சை குறித்து என்ன கூறுவார்?
பல ஆண்டுகளாக, இந்தியாவை வழிநடத்துவதற்கான தகுதி ஒரு வெளிநாட்டவரான சோனியாவுக்கு இல்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. டெல்லியின் சமூக வட்டாரங்களில், அவர் சில நேரங்களில் "இத்தாலிய பணிப்பெண் " என்று கேலி செய்யப்பட்டார்.
2004ஆம் ஆண்டு, வெளிநாட்டில் பிறந்த ஒருவர் பிரதமராக வருவது "தேசத்துக்கு அவமானம்" என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். சோனியா பிரதமர் பதவியை ஏற்றால், தான் ராஜினாமா செய்து, தலையை மொட்டையடித்து, வெள்ளை ஆடை அணிந்து, துறவியைப் போல வாழப்போவதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images)
"1999ஆம் ஆண்டிலேயே, காங்கிரஸ் தலைவர்கள் குழு ஒன்று கூட அவரது வெளிநாட்டுப் பூர்வீகம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. அவர் எப்போதாவது நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்தாரா?" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரஷீத் கிட்வாய் கேட்கிறார்.
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் நிலவிய முரண்பாடுகள் குறித்தும் இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சோனியாவின் தலைமையின் கீழ், காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளுக்கும் அக்கட்சி ஆதரவளித்தது.
எனினும், இரண்டாவது ஆட்சிக்காலம் ஊழல் குற்றச்சாட்டுகள், கொள்கை முடக்கம் மற்றும் கட்சி தனது சொந்த தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது என்ற அதிகரித்து வந்த கருத்து ஆகியவற்றால் சூழப்பட்டது.
சோனியாவின் விமர்சகர்கள் அவரை அரசாங்கத்தின் "ரிமோட் கண்ட்ரோல்" என்று அழைத்தனர். மன்மோகன் சிங் மீது அவர் எந்த அளவுக்கு அதிகாரம் செலுத்தினார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அவரது ஆதரவாளர்களோ, மிகவும் கடினமான கூட்டணியை ஒன்றிணைத்து வைத்திருந்த அரசியல் சக்தியாக அவரைப் பார்த்தனர்.
அதன்பிறகு ராகுல் காந்தி இருக்கிறார்.
2017ஆம் ஆண்டு சோனியா இறுதியாக காங்கிரஸ் கட்சியின் தலைமையை தனது மகனிடம் ஒப்படைத்தார். கட்சியை மீண்டும் எழுச்சியடையச் செய்வதில் அவர் தோல்வியடைந்தது, காந்தி குடும்பத்தின் வீழ்ச்சிக் கதையின் முக்கியமான பகுதியாக இருப்பதாக பலர் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
1994ஆம் ஆண்டு 'ராஜீவ்' என்ற தனது புத்தகத்தில், ராஜீவ் காந்தி அரசியலுக்குள் நுழைவதைத் தடுக்க தான் "ஒரு புலியைப் போல போராடியதாக" சோனியா எழுதியிருந்தார். ஆனால் இறுதியில் அந்த அரசியல் மரபை அவர் ராகுலிடம் ஒப்படைத்தார்.
ராகுலின் அரசியல் பயணம் அவ்வளவு சுமூகமானதாக இருக்கவில்லை. ஒரு காலத்தில் அவர் அரசியலில் ஆர்வமில்லாதவராகக் கருதப்பட்டார். எதிரிகளால் பெரும்பாலும் அரசியலில் இருந்து விலகி இருப்பவர் என்று கேலி செய்யப்பட்டார்.
"தனது மகனின் முற்றிலும் மாறுபட்ட அரசியல் பாணியையும் உலகக் கண்ணோட்டத்தையும் சோனியா எவ்வாறு பார்க்கிறார்? அவரது அரசியலை அவர் எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதிலளிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்கிறார் கிட்வாய்.
இயல்பாகவே அதிக அரசியல் ஈர்ப்பைக் கொண்ட அவரது சகோதரி பிரியங்காவைவிட ராகுலை சோனியா தேர்வு செய்தது ஏன் என்பதும் மற்றொரு கேள்வியாகும்.
அரசியலில் பிரியங்காவின் பங்கு குறித்து பல ஆண்டுகளாக ஊகங்கள் நிலவி வந்தபோதிலும், அவர் 2019ஆம் ஆண்டில் தான் அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் அரசியலில் நுழைந்தது ஏன் என்பதும் கேள்வியாக உள்ளது.
"அரசியலில் சேருவதா இல்லையா என்பதை எனது குழந்தைகளே முடிவு செய்வார்கள் என்பது தான் சோனியா வழக்கமாக அளிக்கும் பதில்" என்கிறார் கிட்வாய்.
தனது அரசியல் பங்களிப்பின் மூலம் இந்தியாவை வடிவமைக்க உதவிய சோனியா காந்தி, இன்றைய இந்தியாவின் நிலையைப் பற்றி என்ன நினைக்கிறார்? என்ற ஒரு முக்கியக் கேள்வியும் உள்ளது.

பட மூலாதாரம், Sygma via Getty Images
இந்திய அரசியல் கூட்டணி அரசுகள் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் காலகட்டத்திலிருந்து, நரேந்திர மோதியின் பாஜக மற்றும் இந்துத்துவ தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் காலகட்டத்தை நோக்கி நகர்ந்தபோது, அந்தக் காலகட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகித்தார்.
ஆனால், சோனியாவின் நினைவுக் குறிப்புகள் எதைப் பற்றி பேசத் தேர்வு செய்கின்றன, எதைப் பற்றி பேசாமல் விடுகின்றன என்பதே இந்தப் புத்தகத்தைப் பற்றிய மிக முக்கியமான வெளிப்பாட்டைக் கொடுக்கக்கூடிய கேள்வியாக இருக்கலாம். இதற்கான பதில் புத்தகத்தின் தலைப்பான 'பிலாங்கிங் (Belonging)' என்பதில் இருக்கலாம் என்று நீர்ஜா சௌத்ரி கருதுகிறார்.
"நேரு-காந்தி குடும்பத்தின் அரசியல் மரபைப் பெற்றவர் என்ற உணர்வு சோனியாவுக்கு எப்போதும் இருந்துள்ளது. அந்த மரபு தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க வேண்டும்" என்று சௌத்ரி கூறுகிறார்.
இந்த நினைவுக் குறிப்புகள் குடும்பம் மற்றும் அதன் வரலாறு குறித்து மீண்டும் பேசும் என அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் குடும்பத்தின் அரசியல் வம்சத்துடன் தனக்குள்ள தொடர்பு மற்றும் காங்கிரஸ் தலைவராக அந்த அரசியல் மரபை ஏற்றுக்கொண்டது குறித்த சோனியாவின் சொந்த உணர்வைப் பற்றி இந்தப் புத்தகம் பேசும் என அவர் எதிர்பார்க்கிறார்.
ஆனால், அந்த அரசியல் மரபு தற்போது தொடர்ந்து கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
ஆளும் பாஜக "காங்கிரஸ்-முக்த் பாரத்" (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற முழக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அதே நேரத்தில், அந்தக் கட்சியின் விமர்சகர்கள், காங்கிரஸுக்கு எதிரான தங்களது சவாலை பெருகிய முறையில் வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டமாக முன்வைத்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், அதன் பல தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்குத் தாவியுள்ளனர்.
இதனால், காந்தி குடும்பத்தால் காங்கிரஸ் கட்சியை மீண்டும் எழுச்சியடையச் செய்ய முடியுமா என்பது மட்டுமல்லாமல், அக்கட்சியை ஒன்றுபட்டு வைத்திருக்க முடியுமா என்பதும் கேள்வியாகியுள்ளது.
சோனியா தனது நினைவுக் குறிப்புகளில் ஆராய முயற்சிப்பதாகக் கூறும் விஷயத்தின் மையத்துக்கே இந்தக் கேள்வி செல்கிறது.
"எனது குடும்பத்தைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் நோக்கங்கள், செயல்கள் குறித்த உண்மையைச் சில கதைகளால் மட்டுமே வெளிக்கொணர முடிந்தது. பல வகைகளில், இந்தப் புத்தகம் அவர்களின் மனிதத் தன்மைக்கான ஒரு அஞ்சலியாகும்" என்று சோனியா அந்தப் புத்தகம் குறித்து கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
எனவே, அவரது நினைவுக் குறிப்புகள் அரசியல் விவகாரங்களுக்கு கணக்குத் தீர்க்கும் முயற்சியாக இருப்பதைவிட, தான் அந்த அரசியல் மரபைச் சேர்ந்தவர் என்ற உணர்வை நியாயப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். நேரு-காந்தி குடும்பத்திடமிருந்து வந்த அரசியல் மரபு தனக்கு என்ன பொருளைக் கொண்டுள்ளது என்பதையும், அந்த மரபு இன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தான் ஏன் நம்புகிறார் என்பதையும் விளக்குவதற்கான முயற்சியாக இது இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































