'நான் ஏதாவது கொடுக்கலாம் என வந்தேன், ஆனால் அதிகம் பெற்றுவிட்டேன்' - உத்தரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரி ராஜிநாமா

பட மூலாதாரம், dmdeoria
உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான திவ்யா மிட்டல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தற்போது உத்தரப் பிரதேச அரசின் வருவாய்த்துறையில் சிறப்பு செயலாளராக அவர் பணியாற்றி வருகிறார்.
தனது ராஜிநாமா குறித்து திவ்யா மிட்டல் சமூக வலைதளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். எனினும், அவர் தனது ராஜிநாமாவுக்கான காரணம் குறித்து அதில் குறிப்பிடவில்லை.
அவரது சமூக வலைதளப் பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வகையான கருத்துகளும் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், எந்தவொரு சம்பவத்தையும் குறிப்பிடாமல், அதிகாரிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னையாக ஊழல் இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
1983-ஆம் ஆண்டு பிறந்த திவ்யா மிட்டல், டெல்லி ஐஐடி-யில் பொறியியல் படிப்பையும், பெங்களூரு ஐஐஎம்-மில் மேலாண்மைப் படிப்பையும் படித்துள்ளார். இதற்கு முன்பு லண்டனிலும் பணியாற்றியுள்ளார்.
அவர் ஐஏஎஸ் அதிகாரியான பின்னர், உத்தரப் பிரதேச அரசில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
திவ்யா மிட்டல் பதிவிட்டது என்ன?

பட மூலாதாரம், @divyamittal_IAS
மீரட்டில் இணை மாஜிஸ்திரேட்டாக பணியில் சேர்ந்த திவ்யா மிட்டல், தனது பணியின் தொடக்கக் காலத்தில் கோண்டா மாவட்டத்தின் தலைமை வளர்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
சந்த் கபீர் நகர், மிர்சாபூர் மற்றும் தியோரியா மாவட்டங்களில் மாவட்ட மாஜிஸ்திரேட் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
இந்த ஆண்டு மே 6-ஆம் தேதி, திவ்யா மிட்டல் உத்தரப் பிரதேச அரசின் வருவாய்த் துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ராஜிநாமா செய்த பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், " நான் ஐஏஎஸ் பதவியில் இருந்து தானாக முன்வந்து ராஜிநாமா செய்துள்ளேன். இதன் மூலம் மறக்க முடியாத 13 ஆண்டுகாலப் பயணத்தை முடித்துக்கொள்கிறேன். எளிமையான சூழலில் வளர்ந்த நான், நல்ல மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு கண்டேன். இரவு பகலாக கடினமாக உழைத்து, டெல்லி ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம்மில் படித்த பிறகு, லண்டனில் எனக்கு வேலை கிடைத்தது" என்று பதிவிட்டுள்ளார்.
தனது பதிவில், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சி தொடர்பான பல உணர்ச்சிகரமான விஷயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் இருந்து திரும்பி வந்தது குறித்து, "நான் ஏதாவது கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் என்று நினைத்தது எனது முட்டாள்தனம். உண்மை என்னவென்றால், நான் பெற்றதுதான் அதிகம். அந்தக் கடனும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. நான் அளவில்லாத அன்பையும், மிகுந்த மரியாதையையும், பாசத்தையும் பெற்றேன். அதனால் எனது மனம் நிரம்பிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கினார்
அரசுப் பணியில் இருந்தபோதிலும், திவ்யா மிட்டல் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
சில நேரங்களில் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய அவர், சில நேரங்களில் புத்தகம் குறித்தும் விவாதித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பல்வேறு விவகாரங்கள் குறித்து மக்களை ஊக்குவிப்பது அல்லது அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் திவ்யா மிட்டல் மேற்கொண்டுள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் வீடியோக்கள் மூலம் மக்களுக்கு தகவல்களைத் தெரிவித்தும், அவர்களிடம் உரையாற்றியும் வந்துள்ளார்.
பல ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகுகின்றனர்

பட மூலாதாரம், Sakib Ali/Hindustan Times via Getty Images
திவ்யா மிட்டல் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசின் ஊழல் காரணமாக நேர்மையான அதிகாரிகள் பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு உள்ளாகி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
"கமிஷன் மூலம் ஊழல் செய்வது, பாஜக உறுப்பினர்களுக்கு டெண்டர்களைப் பெற்றுத்தர முறைகேடு செய்வது, இடமாற்றம் மற்றும் பதவி நியமனத்தை ஒரு தொழிலாக மாற்றி பணம் பெறுவது, நன்கொடை ரசீதுகளை வழங்கி பணம் வசூலிப்பது, எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்வது" உள்ளிட்ட பல்வேறு தீவிர குற்றச்சாட்டுகளை அவர் சமூக வலைதளத்தில் முன்வைத்துள்ளார்.
2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ஆம் தேதியிட்ட ஆங்கில நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து விஆர்எஸ் (விருப்ப ஓய்வு) கோரி வருகின்றனர்.
அதிகாரிகள் இதற்கான காரணமாக தனிப்பட்ட காரணங்களையோ அல்லது அரசுப் பணிக்கு வெளியே கிடைக்கும் சிறந்த வேலை வாய்ப்புகளையோ குறிப்பிடுவதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
செய்திகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த சுமார் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் (விருப்ப ஓய்வு பெற்றவர்கள் உட்பட) பணியில் இருந்து விலகியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































