காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த தோழிகள் எப்படி வாழ்கிறார்கள்?

ரெனி மற்றும் ஏப்ரல்

பட மூலாதாரம், Renee Wong

படக்குறிப்பு, ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
    • எழுதியவர், ஜூலியா கிராஞ்சி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ரெனி வோங் மற்றும் ஏப்ரல் லீ இருவரும் தங்களுக்கு 12 வயது முதல் ஒருவரையொருவர் அறிவர். இந்த ஆண்டில் (2026) அவர்கள் தங்கள் இரண்டாவது திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள்: அவர்கள் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒரு வங்கிக் கணக்கைப் பராமரிக்கிறார்கள், எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்துகொள்ளாத ஒரே விஷயம் அவர்களது படுக்கை மட்டுமே; அவர்கள் தங்களை ஒரு காதல் ஜோடியாகக் கருதிக் கொள்வதில்லை.

29 வயதான இந்த இரண்டு பெண்களின் கதை, உளவியலால் இன்னும் முழுமையாக ஆராயப்படாத ஒரு வகையான இணைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: அதுதான் பிளேட்டோனிக் ஜோடி (platonic couple).

"இன்னும் தோன்றவே செய்யாத ஒரு காதல் துணைக்காக, வாழ்க்கைத்துணை மற்றும் திருமணம் போன்ற அந்த மதிப்புமிக்க இடத்தை நாம் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? ஒருவேளை அப்படிப்பட்ட நபர் பின்னர் வந்தால் நல்வாய்ப்புதான், நாம் அதை அனுபவிக்கலாம். ஆனால், ஏற்கனவே என்னிடம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கும் நபர் என் கண்முன்னே இருக்கும்போது, இன்னும் வராத ஒருவருக்காக அந்த இடத்தை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?" என்று ரெனி பிபிசியிடம் கூறுகிறார்; அவர் தனது மனைவியான ஏப்ரலைக் குறிப்பிடுகிறார்.

அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறவும் திட்டமிட்டுள்ளனர், ஆனால் வழக்கமான அர்த்தத்தில் அவர்கள் ஒரு காதல் ஜோடி அல்ல: அவர்களுக்கு இடையே காதலோ அல்லது பாலியல் ஈர்ப்போ இதுவரையிலும் இருந்ததில்லை, தற்போதும் இல்லை.

அவர்கள் இருவரும் ஆன்ம தோழிகள் (soulmates) என்று வர்ணித்துக் கொள்கிறார்கள்; எந்தவொரு காதலாலும் நிரப்ப முடியாத ஒரு இடத்தை ஒருவர் மற்றவரின் வாழ்க்கையில் பிடித்துள்ளனர்.

16 ஆண்டு கால நட்பு, வாழ்நாள் முழுமைக்குமான அர்ப்பணிப்பாக உணர்வுபூர்வமாக மாற்றப்பட்டது.

"நான் இறக்கும் போது என் அருகில் அவர் இருக்க வேண்டும்"

அந்த இரண்டு தோழிகளுக்கும் 12 வயது ஆனது முதல் ஒருவரையொருவர் தெரியும்.

பட மூலாதாரம், Renee Wong

படக்குறிப்பு, அந்த இரண்டு தோழிகளுக்கும் 12 வயது முதல் ஒருவரையொருவர் தெரியும்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ரெ மற்றும் ஏப்ரல் சந்தித்தபோது, அவர்களுக்கிடையேயான தொடர்பு உடனடியாகத் தொடங்கியது.

வகுப்பு முடிந்ததும் ஒருவருக்கொருவர் வீட்டிற்குச் செல்வது, சனிக்கிழமைகளில் ஒன்றாகத் தனிப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்குச் செல்வது என அவர்கள் தங்களது முழு நேரத்தையும் ஒன்றாகச் செலவிட்டனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"உண்மையில், வாரத்தில் ஏழு நாட்களும் நாங்கள் ஒன்றாகத்தான் இருந்தோம்" என்று ரெனி நினைவு கூர்கிறார்.

அவர்கள் இருவருக்கும் உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை, அதனால்தான் சிறு வயதிலிருந்தே அவர்கள் அந்த இடத்தை ஒருவர் மற்றவருக்காக நிரப்பினர் என்று அவர் கூறுகிறார்: அவர்கள் சகோதரிகளாக மாறினர்.

அவர்களது குடும்பங்களும் நெருக்கமாயின. அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் சந்திர புத்தாண்டு பண்டிகைகளைக் ஒன்றாகக் கொண்டாடினர் மற்றும் முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டனர். காலப்போக்கில், அவர்கள் ஒருவருக்கொருவர் உறவு போல் மாறினர்.

பல டீன் ஏஜ் நட்பு வட்டங்களைப் போலவே, வாழ்க்கை அவர்களைப் புவியியல் ரீதியாகப் பிரித்தது. ரெனி பல்கலைக்கழகப் படிப்பிற்காக லாஸ் ஏஞ்சலீசுக்குச் சென்றார். ஏப்ரல் சிங்கப்பூரிலேயே தங்கினார், ஆனாலும் அவர்களது நட்பு காலத்தின் சோதனையைத் தாண்டி நிலைத்தது.

ஒவ்வொருவரும் வெவ்வேறு கண்டங்களில் தங்கள் சொந்தப் பாதையில் சென்றனர், அந்த நட்பு இருந்ததை விட அதிகமாக மாறும் என்று அவர்கள் எப்போதுமே கற்பனை செய்ததில்லை.

கொரோனா பெருந்தொற்று பரவும் வரை, அவர்கள் சிறந்த நண்பர்கள் செய்யக்கூடிய அத்தனை விஷயங்களையும் சுருக்கமாகச் செய்தனர்.

கொரோனா வைரஸ் எல்லைகளை மூடியபோது வெவ்வேறு கால மண்டலங்களால் பிரிக்கப்பட்ட அவர்கள், நாளொன்றுக்கு 12 மணி நேரம் வரை பேசத் தொடங்கினர். அப்படிப்பட்ட கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில்தான் புறக்கணிக்க முடியாத ஒரு விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

ரெனிக்கு, அந்த நட்பின் பிரமாண்டம் தெளிவாகப் புரிந்தது.

"இந்த உலகில் நான் மிகவும் நேசிக்கும் நபர் அவர்தான் என்பது எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. காதல் ரீதியாக அல்ல, ஆனால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால், என் அருகில் அவர் இருக்க வேண்டும் என்று நான் விரும்பும் ஒரே நபர் அவர்தான்" என்று அவர் கூறுகிறார்.

"அப்போதுதான் அது எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது: நான் இறக்கும் தருவாயில் என் அருகில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பும் நபர் அவர்தான் என்றால், நான் ஏன் அவருடன் சேர்ந்து வாழக்கூடாது? நம் வாழ்க்கை ஏன் இவ்வளவு தனித்தனியாக இருக்க வேண்டும்? நம் வாழ்க்கையை நாம் ஏன் இணைக்க முயற்சிக்கக் கூடாது?"

தங்களது நட்பு திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு வலுவானது என்பதைத் தாங்கள் உணர்ந்ததாக அந்தப் பெண்கள் இருவரும் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Personal file

படக்குறிப்பு, தங்களது நட்பு திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு வலுவானது என்பதைத் தாங்கள் உணர்ந்ததாக அந்தப் பெண்கள் இருவரும் தெரிவித்தனர்.

இவர்கள் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து வெளியேறிய தருணத்தில்தான் பெருந்தொற்று பரவத் தொடங்கியது; அந்தத் தருணம் எல்லாவற்றிலிருந்தும் ஒரு "இடைவெளி எடுத்துக் கொள்ள" தமக்குச் சரியானதாக இருந்ததாக ரெனி கூறுகிறார்.

அவர்கள் பேசும்போது, தான் விரும்பிய நபராகவே தான் உருவெடுத்து வருவதாக அவர் உணர்ந்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் திட்டமிடத் தொடங்கினர். 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

இப்போது பொதுவாக விளக்கமளிக்கத் தேவைப்படும் அந்தப் பகுதி வருகிறது. அவர்கள் இருவரும் இருபாலுறவினர் (bisexual) ஆவர், ஆனால் அவர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் ஈர்ப்பு கிடையாது.

ஒன்றாக வளர்ந்த அனுபவம், அந்தப் பிணைப்பைச் சகோதரிகளின் உறவைப் போன்றதொன்றாக மாற்றியுள்ளது.

"அறிவியல் ரீதியாகச் சொன்னால், எமக்கு ஒருவர் மற்றவரின் வாசனைப் பிடிக்கும்படி இருக்காது. எனவே, அது ஒருபோதும் சாத்தியமில்லை."

உறுதிப்பாட்டின் தேர்வு

ரெனி மற்றும் ஏப்ரல் இருவரும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரெனி மற்றும் ஏப்ரல் இருவரும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் என்பது காதலின் முகமூடி அணிந்த நடைமுறை ஏற்பாடோ அல்லது நட்பின் முகமூடி அணிந்த காதலோ அல்ல.

தங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான உறவு ஒரு தசாப்தத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வந்துள்ளது என்பதன் ஒப்புதலே இதுவென்றும், சமூகம் வழக்கமாகக் காதல் அன்பிற்கு மட்டுமே வழங்கும் அந்த அந்தஸ்து இந்த உறவுக்கும் தகுதியானது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

"17 வருட நண்பர்களாக இருந்த நாங்கள் இருவரும் எங்களது தனிப்பட்ட உறவுகளில் இருந்திருக்கிறோம், காதலர்களைக் கொண்டிருந்தோம், மற்றவர்களுடன் டேட்டிங் செய்துள்ளோம்" என்று ரெனி சுட்டிக்காட்டுகிறார்.

"ஆனால் இந்த உறவு மட்டுமே நிலைத்து நிற்கிறது. நான் எனது காதலனுடன் சண்டையிடுவேன், ஆனால் அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்று என்னுடன் வளர்ந்தவள் அவள்தான். ஒரு வாழ்க்கைத்துணையிடம் நான் எதிர்பார்க்கும் அனைத்து வழிகளிலும் தன்னைத் தாண்டி எனக்கு அனைத்து உணர்வுபூர்வமான ஆதரவையும் வழங்கும் நபர் அவள்தான்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"அந்த இடம் ஏன் ஒரு காதல் ஜோடிக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்?" என்று ரெனி வாதிடுகிறார்.

"ஒரு பூவைப் போல என்னை வளர்த்துப் பராமரித்த, உண்மையில் என் மீது முதலீடு செய்த அந்தப் பெண்ணுக்காக அந்த இடம் ஏன் இருக்கக்கூடாது? அவளால்தான் இன்று நான் இந்தப் பெண்ணாக இருக்கிறேன். அனைத்து அர்ப்பணிப்புகளையும் செய்த நபர் இதோ இங்கேயே இருக்கும்போது, இன்னும் வந்து சேராத ஒரு காதல் துணைக்காக அந்த இடத்தை நாம் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்?" என்று அவர் மேலும் கூறுகிறார்.

"ஆனால் நீங்கள் வெறும் சிறந்த தோழிகள் தானே?" என்று மிகவும் பொதுவான கேள்வியைக் தங்களிடம் கேட்கும்போது, அவர்களுக்கான பதில் தயார் நிலையிலேயே இருக்கிறது.

"மக்கள் ஒரு நண்பரிடமிருந்தும் கூட்டாளியிடமிருந்தும் எந்த அளவிலான அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்கிறார் ரெனி.

"அவர்தான் எனக்கு அந்தத் துணை" என்று அவர் கூறுகிறார்.

அந்த அர்ப்பணிப்பு என்பது ஒரே கூரையின் கீழ் வாழ்வதை விட மிக அப்பாற்பட்டது. ரெனி மற்றும் ஏப்ரல் இருவரும் தங்களுக்குள் நிதிப் பங்குதாரர்களாகக் கருதுகின்றனர்.

"எங்கள் வருமானம் அனைத்தும் ஒரே பொதுவான நிதியில்தான் சேர்க்கப்படுகிறது" என்று ஏப்ரல் விளக்குகிறார்.

தொழில் ரீதியான மாற்றுக் கட்டத்தில் ஏப்ரல் கிரெடிட் கார்டு கடனில் சிக்கியிருந்தபோது, ரெனிக்கு அலுவலகத்தில் போனஸ் கிடைத்தது.

அவரது தோழி செய்த முதல் காரியம், எந்தவிதப் பெருமையோ அல்லது தயக்கமோ இல்லாமல் அந்தக் கடனை முழுமையாக அடைத்ததுதான்.

"அவர் என்னிடம், 'இனி இது நம் தலையில் இருக்காது' என்று கூறினார்" என்றார்.

ஈர்ப்போ அல்லது உடல் ரீதியான தொடர்போ இருப்பதை விட, இந்த வகையான ஒத்துழைப்பும் குழுப்பணியும்தான் ஒரு பிணைப்பை வரையறுக்கிறது என்பது அவர்கள் இருவரின் கருத்தாகும்.

இல்லற வாழ்க்கையில்

ரெனி மற்றும் ஏப்ரல் இருவரும் தற்போது கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Personal File

படக்குறிப்பு, ரெனி மற்றும் ஏப்ரல் இருவரும் தற்போது கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகின்றனர்.

ரெனி மற்றும் ஏப்ரல் இருவரும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் காதல் அன்பையும் முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. அவர்கள் தற்போது தீவிரமாகத் தேடவில்லை என்றாலும் மற்றும் இப்போதைக்குத் தனியேயிருக்க விரும்பினாலும், எதிர்காலத்தில் மற்றவர்களுடன் டேட்டிங் செய்வதற்குத் தயாராகவே உள்ளனர்.

தாங்கள் கட்டமைத்துள்ள உணர்வுபூர்வமான அடித்தளம் தங்களது எதிர்பார்ப்புகளை மிக அதிக அளவுக்கு உயர்த்தியுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

"நாங்கள் எந்தவொரு வெறுமையையும் நிரப்ப முயற்சிக்கவில்லை. நாங்கள் தனியாக இல்லை" என்கிறார் ரெனி.

அவர் கூறுவதன்படி, இணைந்து வாழ்ந்த ஆண்டுகள் அவர்கள் இருவருக்கும் பற்றுதல் பாணிகள் (attachment styles) மற்றும் ஆரோக்கியமான தகவல் தொடர்பு வடிவங்கள் போன்ற காதல் உறவுகளில் பொதுவாகத் தோன்றும் வடிவங்களை வளர்த்துக்கொள்ள உதவியுள்ளன.

"உங்களிடம் ஏற்கனவே வீட்டில் ஒரு ஐந்தடுக்கு உணவு இருந்தால்..." என்று அவர் நகைச்சுவையாகக் கூறிவிட்டு, தான் காதல் அன்பைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

"ஆனால், சாதாரணமான ஒரு டேட்டிங் செல்வதை விட, போனில் அவளுடன் பேசி மகிழ்வதையே நான் அதிகம் விரும்புவேன்."

அவர்களைப் பொறுத்தவரை, காதல் உறவுகள் அவர்களது திருமணத்துடன் போட்டியிடாது, மாறாக அதை மேலும் செழுமைப்படுத்தும்.

கடந்த காலத்தில் ஏப்ரல் ஒரு உறவில் இருந்தபோது இதேதான் நடந்தது: அந்த அனுபவம் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் குறைவாகச் சார்ந்திருக்க உதவியது.

"எங்கள் பிளேட்டோனிக் வாழ்க்கை இணைக்குள் ஒரு காதல் உறவைக் கொண்டிருப்பது அதை மேலும் வளப்படுத்துகிறது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ரெனி குறிப்பிடுகிறார்.

"அளிப்பதற்கு அன்பு குறையவில்லை, மாறாக அதிகமாகவே உள்ளது. இங்கு எந்தப் போட்டியும் இல்லை" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உளவியல் என்ன சொல்கிறது?

அந்தத் தோழிகள் இருவரும் 2025 ஆம் ஆண்டில் தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடினர்.

பட மூலாதாரம், Personal File

படக்குறிப்பு, அந்தத் தோழிகள் இருவரும் 2025 ஆம் ஆண்டில் தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடினர்.

ரெனி மற்றும் ஏப்ரல் இடையேயான இந்த உறவுக்கென்று ஒரு பெயர் உள்ளது, இருப்பினும் அது சமீபத்தியது மற்றும் சற்று தெளிவற்றது: அதுதான் பிளேட்டோனிக் வாழ்க்கை இணை (platonic life partnership). எனினும், இது அறிவியல் இப்போதுதான் ஆராயத் தொடங்கியுள்ள ஒரு புதிய களமாகும்.

"இது இன்றும் கூட பரவலாக விவாதிக்கப்படாத ஒரு தலைப்பு" என்கிறார் சமூக உளவியலில் முனைவர் பட்டமும் பிரேசிலிய உளவியல் சங்கத்தின் உறுப்பினருமான உளவியலாளர் மரியா கிறிஸ்டினா அன்டுனெஸ்.

இப்பொருள் குறித்து சில தரமான ஆய்வுகள் உள்ளன, அவை பெரும்பாலும் உளவியலை விட தத்துவார்த்தமானவை அல்லது சட்டப்பூர்வமானவை, ஆனால் பெரிய அளவிலான மக்கள்தொகை ஆய்வுகளுக்கு இணையாக எதுவும் இல்லை.

இந்த வகையான இணைப்பை எது துல்லியமாக வரையறுக்கிறது என்பதில் "இன்னும் மிகத் தெளிவான எல்லைக்கோடு இல்லை."

"பிளேட்டோனிக் காதல்" (platonic love) என்ற சொல் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவின் கருத்துகளிலிருந்து, குறிப்பாக ஆன்மீக மற்றும் அறிவுசார் வளர்ச்சியின் பாதையாக அவர் அன்பை விவரிக்கும் "தி சிம்போசியம்" (The Symposium) நூலிலிருந்து உருவானது என்று உளவியலாளர் விளக்குகிறார்.

நீண்ட காலமாக, இச்சொல் அடைய முடியாத அல்லது ஒருதலைப்பட்சமான காதலுடனும், உடல்ரீதியான எல்லைகளைத் தாண்டி நற்பண்பு, ஞானம் மற்றும் தார்மீக வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட பாசத்துடனும் தொடர்புடையதாக இருந்தது.

தற்போதைய "பிளேட்டோனிக் ஜோடி" என்பது அந்தக் கருத்தின் மறுவடிவமாகும்: அதாவது, பாலின ஈர்ப்பு அல்லது காதல் ஈர்ப்பை அடிப்படையாகக் கொள்ளாத, பெரும்பாலும் நடைமுறை வசதியையும் சட்டப்பூர்வ பாதுகாப்பையும் வழங்கும் ஒரு உறவு முறையாகும்.

ரெனி மற்றும் ஏப்ரல் இருவரும் உணர்வுபூர்வமாக உருவாக்கிய இந்த உறவுதான், பல வழக்கமான திருமணங்களின் இறுதி இலக்காகவும் அமைகிறது என்று உளவியலாளர் கூறுகிறார்.

"காலப்போக்கில், பிளேட்டோனிக் காதலைப் போன்ற ஒரு நிலைக்கு, அதாவது நட்பு மற்றும் தோழமை நிறைந்த உறவுக்கு சில சமயங்களில் பாலியல் உறவுகள் இல்லாமலேயே மாறிவிடும் பல நீண்ட கால ஜோடிகளை நாம் பார்க்கிறோம். கலந்தாலோசனைகளின் போது இந்த நிகழ்வைக் கவனிப்பது மிகவும் பொதுவானது."

பண்பாடு, குடும்பம் மற்றும் விசித்திரம்

கொரோனா வைரஸ் (Covid-19) பெருந்தொற்றுப் பரவல்தான் தங்களது நட்புறவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று இருவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Personal File

படக்குறிப்பு, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல்தான் தங்களது நட்புறவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று இருவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பழமைவாதச் சமூகமான சிங்கப்பூரில் வளர்ந்ததால், அவர்களின் இந்த முடிவு சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

"ஒற்றைப் பாலினத் திருமணம் குறித்தே யாரும் சிந்திக்க மாட்டார்கள், அதிலும் பிளேட்டோனிக் முறையிலான திருமணம் பற்றியெல்லாம் யோசிப்பதே இல்லை" என்கிறார் ரெனி.

அவர்களின் குடும்பத்தினர் முதலில் ஆச்சரியமடைந்தனர். ஆனால், காலப்போக்கில் அந்த யோசனை அவர்களுக்குப் புரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களுக்கு 12 வயது முதல் ஒருவரையொருவர் தெரியும் என்பதால், அவர்களது குடும்பங்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் உறவினர்களைப் போலவே நடத்தி வந்தன.

"எங்களுக்கு இடையே இருந்த பிணைப்பு பற்றி அவர்களுக்குத் தெரியும். நாங்கள் சகோதரிகளைப் போலத்தான் பழகுகிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்."

குழந்தைகள், பூனைகள் மற்றும் எதிர்காலம்

குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது அவர்களது எதிர்காலத் திட்டங்களின் ஒரு பகுதியாகும், இருப்பினும் அவர்கள் அதை அவசரமாகச் செய்ய விரும்பவில்லை. இப்போதைக்கு அவர்களிடம் இரண்டு பூனைகள் உள்ளன.

குழந்தைகளைத் தத்தெடுப்பது அல்லது ஞானத்தாய்மார்களாக அல்லது வழிகாட்டிகளாக இருப்பது போன்ற பிற வழிகளில் ஒரு குழந்தைக்கு ஆதரவளிப்பதற்கும் இருவரும் தயாராகவே உள்ளனர்.

"எங்களில் ஒருவர் மற்றவரை கர்ப்பமாக்கப் போவதில்லை என்பது தெளிவு" என்று ரெனி நகைச்சுவையாகக் கூறுகிறார்.

" எதிர்காலத்தில் அவளுடன் சேர்ந்து தாயாக மாறுவதில் என்னை மிகவும் உற்சாகப்படுத்துவது, நாங்களிருவரும் தாயாக மாறுவதை நேரில் பார்ப்பதுதான்" என்று அவர் கூறுகிறார்.

2024 ஆம் ஆண்டில் அவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அவர்களது குடும்பத்தினரால் கலந்துகொள்ள முடியவில்லை, ஆனால் நண்பர்கள் கலந்துகொண்டனர், அவர்களுடன் சேர்ந்து அவர்களது வீட்டிலேயே அதைக் கொண்டாடினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு