'எனது சட்டைக்குள் மறைந்துள்ள குறைபாட்டுடன் வாழ்வது நரக வேதனையாக இருந்தது' - பள்ளி கழிப்பறையில் இவர் ஒளியும் அளவுக்கு என்ன பிரச்னை?

தனது உடல்நலக்குறைவு சில சமயங்களில் தனது வாழ்க்கையை நரகமாக மாற்றியிருப்பதாக சார்லி கூறுகிறார்.
படக்குறிப்பு, தனது உடல்நலக்குறைவு சில சமயங்களில் தனது வாழ்க்கையை நரகமாக மாற்றியிருப்பதாக சார்லி கூறுகிறார்.
    • எழுதியவர், மேரி லூசி கொனோலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பதின்ம வயதில் இருந்தபோது, பள்ளிக்குச் செல்வதற்காகச் சீருடை அணிவதே சார்லி கிளார்க்கிற்குக் கடினமான ஒன்றாக இருந்தது.

தனது உடல் குறைபாட்டால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை காரணமாக, சக மாணவர்களிடமிருந்து அவர் மறைந்துகொள்ள வேண்டியிருந்தது.

வீட்டில்கூட தனது உடலமைப்பு மற்றவர்களுக்குத் தெரியாதபடி, மேலங்கியை மார்பைச் சுற்றி இறுக்கமாக அணிந்துகொள்வார். ஒரு கட்டத்தில், தனது பிரச்னையைப் பெற்றோரிடம்கூட அவர் தெரிவிக்கவில்லை.

தற்போது 26 வயதாகும் சார்லி, பிறவியிலேயே ஏற்படும் மார்புக்கூட்டின் வடிவக் குறைபாடான 'பெக்டஸ் எக்ஸ்கவேட்டம்' என்ற பாதிப்புடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

இந்தக் குறைபாட்டால் மார்புப் பகுதி உள்நோக்கி வளைந்து, பள்ளமாகக் காட்சியளிக்கும்.

தற்போது அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் சார்லி, இந்தப் பிரச்னையால் தான் அனுபவித்த மனரீதியான மற்றும் உடல்ரீதியான வேதனைகள் 'கற்பனை செய்ய முடியாத அளவுக்கும் தாங்க முடியாத அளவுக்கும்' இருந்ததாகக் கூறுகிறார்.

"எனது சட்டைக்குள் மறைந்திருக்கும் இந்தக் குறைபாட்டுடன் வாழ்வது, ஒரு கட்டத்தில் எனக்கு நரக வேதனையாக இருந்தது," என்று சார்லி வேதனையுடன் தெரிவித்தார்.

பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, சக மாணவர்கள் தனக்கு 'நான்கு மார்பகங்கள்' இருப்பதாகக் கேலி செய்வார்கள் என்ற அச்சத்தில் கழிப்பறையில் ஒளிந்துகொண்ட நாட்களே தனது பதின்ம வயதின் மிகவும் கசப்பான நினைவுகள் என்று அவர் கூறுகிறார்.

"யாரிடமும் சொல்ல முடியவில்லை..."

சார்லி தனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை பல ஆண்டுகளாகத் தனது பெற்றோரிடமிருந்து மறைத்து வைத்தான்.
படக்குறிப்பு, சார்லி தனது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை பல ஆண்டுகளாகத் தனது பெற்றோரிடமிருந்து மறைத்து வைத்திருந்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"எனது உடலமைப்பையும், மார்புப் பகுதி குறித்து மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் வெறுக்கும் நிலைக்கு நான் வந்துவிட்டேன்," என்று சார்லி கூறினார்.

200 பேரில் ஒருவரைப் பாதிக்கும் இந்தப் பிரச்னை, இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் மூச்சுத்திணறல், இதயத் துடிப்பு அதிகரித்தல், சில நேரங்களில் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

வடக்கு அயர்லாந்தில் மார்புக்கூட்டின் வடிவக் குறைபாடு தொடர்பான அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 85 பேரில் சார்லியும் ஒருவர்.

இவர்களில் பலர் இரண்டு ஆண்டுகளாக அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நிலையில், ஐந்து பேர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர்.

வடக்கு அயர்லாந்தில் சில நோயாளிகள் 'நீண்ட காலமாகக்' காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை சுகாதாரத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளும், மார்பு அறுவை சிகிச்சைப் பிரிவில் நிலவும் பிற நெருக்கடிகளும் காத்திருப்பு நேரம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருப்பதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் பட்டியலைக் குறைப்பதற்காகக் கூடுதல் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் மார்புக்கூட்டு வடிவக் குறைபாடு தொடர்பான அறுவை சிகிச்சைகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

"அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையையும், அவர்கள் காத்திருக்க வேண்டிய காலத்தையும் குறைக்க உதவும்" மற்றொரு திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

'எனக்கு தவறான நோயறிதல் வழங்கப்பட்டது'

'பெக்டஸ் எக்ஸ்கவேட்டம்' குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
படக்குறிப்பு, 'பெக்டஸ் எக்ஸ்கவேட்டம்' குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தப் பிரச்னையைச் சிறுவயதிலேயே கண்டறிந்தால், பல நேரங்களில் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்க முடியும்.

ஆனால், சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம். மார்புக்கூட்டின் வடிவக் குறைபாட்டின் வகை, அதன் தீவிரம் மற்றும் நோயாளியின் வயது ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

கடந்த காலத்தில் நோயறிதல் செயல்முறையில் பதற்றக் கோளாறு இருப்பதாக தவறுதலாக தெரிவிக்கப்பட்டதாகச் சார்லி வேதனையுடன் கூறினார்.

"ஒருமுறை ஸ்கேன் பரிசோதனையின் போது நான் எனது சட்டையைக் கழற்றிய பிறகு, எனது இதயம் அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும், ஸ்கேன் பரிசோதனையில் அது தெளிவாகத் தெரியவில்லை என்றும் மருத்துவத் தொழில்நுட்ப நிபுணர் கூறினார். அதன் பிறகுதான் நான் மார்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பப்பட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.

அப்போது சார்லிக்கு ஏற்கெனவே 23 வயதைக் கடந்திருந்ததால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், தனது வேதனையை உண்மையாகப் புரிந்துகொண்ட ஒருவரைச் சந்தித்தபோது சார்லியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

தான் அனுபவித்த வேதனைகளால் மருத்துவரானவர்

பெக்டஸ் எக்ஸவேட்டம் பாதிப்பால் சிரமப்பட்ட நைல் மெக்கோனிகல், மருத்துவராக முடிவெடுத்தார்.
படக்குறிப்பு, பெக்டஸ் எக்ஸவேட்டம் பாதிப்பால் சிரமப்பட்ட நைல் மெக்கோனிகல், மருத்துவராக முடிவெடுத்தார்.

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த மார்பு அறுவை சிகிச்சை நிபுணரான நியால் மெக்கோனிகல், மார்புக்கூட்டு எலும்புகளின் வடிவக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

சிறுவயதில் அவரும் மார்புக்கூட்டின் வடிவக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது 17ஆவது வயதில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

"பள்ளியில் என்னை விசித்திரமான மனிதன் என்றும், விகாரமான உயிரினம் என்றும் அழைத்தார்கள்," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

"பள்ளியில் விளையாட்டுகளில் பங்கேற்க உடை மாற்ற வேண்டியிருக்கும் என்பதால், விளையாட்டுகளைத் தவிர்த்தேன். நான் அதிகமாகக் கேலி, கிண்டல்களுக்கு ஆளானேன்," என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

"அந்த அனுபவம்தான் என்னை மருத்துவத் துறைக்கு அழைத்துச் சென்றது. அறுவை சிகிச்சையில், குறிப்பாக மார்புக்கூட்டு வடிவக் குறைபாட்டுக்கான சிகிச்சையில் எனக்கு ஆழமான ஆர்வம் ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.

வடக்கு அயர்லாந்தில் இந்தப் பிரச்னை சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த பாதிப்பால் அவதிப்படுபவர்கள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புவதாகக் கூறப்படுவதை மறுத்த மெக்கோனிகல், அது உண்மையல்ல என்று தெரிவித்தார்.

"இந்தப் பிரச்னை நுரையீரல் மற்றும் இதயத்தின் செயல்பாட்டைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி, ஒருவரை இயலாத நிலைக்குத் தள்ளக்கூடும் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன," என்று அவர் விளக்கினார்.

"இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அறுவை சிகிச்சை அல்லாத முறைகளில் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், வடக்கு அயர்லாந்தில் அந்த வசதி இல்லாததால், எங்கள் இளைஞர்கள் இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது," என்று அவர் கூறினார்.

வடக்கு அயர்லாந்தில் மார்புக்கூட்டு வடிவக் குறைபாட்டுக்கான அறுவை சிகிச்சை சேவைகள் குறைவாக இருப்பதற்குப் போதிய நிதி இல்லாததே தடையாக இருப்பதாகவும் மெக்கோனிகல் குறிப்பிட்டார்.

சார்லிக்கு விரைவில் நடைபெறவுள்ள அறுவை சிகிச்சையின்போது, அவரது மார்புக்கூட்டில் இரண்டு உலோகக் கம்பிகளும் மார்பெலும்பில் ஓர் உலோகத் தகடும் பொருத்தப்படும். இதன் மூலம் அவரது இதயம் மற்றும் நுரையீரல்கள் இயல்பான நிலைக்குக் கொண்டுவரப்படும்.

இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தான் வெளிப்படையாகப் பேசுவதாகச் சார்லி தெரிவித்தார்.

தனது 11 வயது தங்கை உட்பட இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

"என்னைப் போல எனது தங்கையும் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. அவளுடைய வாழ்க்கை முடங்கிவிடக்கூடாது. அவளுடைய உடல்நிலை உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடக்கூடாது என்பதே எனது விருப்பம்," என்று சார்லி தெரிவித்தார்.

'பெக்டஸ் எக்ஸ்கவேட்டம்' என்றால் என்ன?

வெற்றிட மணி சிகிச்சை என்பது மார்பு உள்ளிழுத்தல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு அறுவை சிகிச்சையற்ற சிகிச்சையாகும். இது இளம் வயதினருக்குச் சிறப்பாகப் பலனளிக்கிறது.
படக்குறிப்பு, வெற்றிட மணி சிகிச்சை என்பது மார்பு உள்ளிழுத்தல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு அறுவை சிகிச்சையற்ற சிகிச்சையாகும். இது இளம் வயதினருக்குச் சிறப்பாகப் பலனளிக்கிறது.

'ஃபனல் செஸ்ட்' என்றும் அழைக்கப்படும் பெக்டஸ் எக்ஸ்கவேட்டம், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகக் காணப்படும் ஒரு குறைபாடாகும்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பலருக்குப் பிறவியிலேயே இது காணப்படுகிறது.

இந்தக் குறைபாட்டில், நோயாளியின் மார்பெலும்பு உள்நோக்கி வளைவதால் விலா எலும்புகளுக்கு இடையே பள்ளம் உருவாகிறது. இதனால் மார்புப் பகுதி உள்நோக்கி அழுந்தியதுபோலக் காட்சியளிக்கிறது.

பொதுவாகக் குழந்தைப் பருவத்திலோ அல்லது பதின்ம வயதிலோ இந்தக் குறைபாடு வெளிப்படையாகத் தெரியத் தொடங்குகிறது.

இதற்குக் கிடைக்கும் சிகிச்சைகளில் ஒன்று 'வேக்குவம் பெல் தெரபி'.

இந்தச் சிகிச்சையில், மார்பில் உள்நோக்கி அழுந்தியிருக்கும் பகுதியில் உறிஞ்சும் கருவி ஒன்று பொருத்தப்பட்டு, மார்பெலும்பு படிப்படியாக முன்னோக்கி இழுக்கப்படுகிறது.

மார்பெலும்புகள் மென்மையாகவும், வடிவக் குறைபாடு குறைவாகவும் உள்ள சிறு குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை சிறப்பாகப் பலனளிக்கிறது.

மற்றொரு சிகிச்சை முறை 'கம்ப்ரஷன் பிரேசிங்' ஆகும். இதில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பட்டை போன்ற சாதனம் பயன்படுத்தப்படுகிறது.

பதின்ம வயதினருக்கு இந்தச் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பெரியவர்களுக்கு மார்பெலும்புகள் கடினமடைவதால், அதன் செயல்திறன் குறைகிறது.

தங்களது முயற்சிகளின் விளைவாக, 2023ஆம் ஆண்டில் 'பெக்டஸ் கரினேட்டம்' பாதிப்புக்கான அறுவை சிகிச்சை அல்லாத பிரேசிங் சிகிச்சை சேவைகளைத் தொடங்கவுள்ளதாகச் சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது.

"சரியான நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டால், அறுவை சிகிச்சைக்கான தேவையைத் தவிர்க்க முடியும்" என்று நம்பப்படுகிறது.

"இந்தச் சேவையின் தாக்கத்தை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளுக்காக அறுவை சிகிச்சை அரங்குகளின் நேரத்தை இது ஒதுக்க உதவக்கூடும்," என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக பிரிட்டன் முழுவதிலும் இருந்து நோயாளிகளும் சுகாதாரத்துறை நிபுணர்களும் பெல்ஃபாஸ்ட் நகரில் சந்தித்தனர்.

'பெக்டஸ் மேட்டர்ஸ்' என்ற தொண்டு அமைப்பைச் சேர்ந்த சைமன் கெண்டல், சிறுவயதிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம் நீண்டகால அடிப்படையில் சுகாதார அமைப்புக்கான செலவைக் குறைக்க முடியும் என்று கூறினார்.

"நோயாளி சிறுவயதில் இருக்கும்போதும், மார்பெலும்புகள் மென்மையாக இருக்கும் போதும் சிகிச்சை அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய தேவையைத் தவிர்க்க முடியும்," என்று அவர் தெரிவித்தார்.

பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு