டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடக்கும் நாளில் ராகுல் காந்தி சென்னை சென்றது ஏன்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ஷுபாங்கி மிஸ்ரா
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியின் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை திரண்டு போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது. போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை அடைவதைத் தடுக்கும் வகையில் டெல்லி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இருப்பினும், ஏராளமான மாணவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரும் காவலில் எடுக்கப்பட்டனர். அபிஜீத் தீப்கே, நேஹா போரா ஆகியோருடன் மமதா பானர்ஜி, பிருந்தா காரத், தீபங்கர் பட்டாச்சார்யா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில், கடந்த சில நாள்களாக ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இல்லை.
சென்னையில், காங்கிரஸ் கட்சியின் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அவர் தமிழ்நாடு வந்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யையும் அவர் சந்தித்திருந்தார்.
சனிக்கிழமை மாலையில் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அனைத்துத் தலைவர்களையும் கைது செய்யுங்கள். அனைத்து இளைஞர்களையும் கைது செய்யுங்கள். எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். நாங்கள் உங்களைச் சுற்றி வளைத்திருக்கிறோம்; பின்வாங்கப் போவதில்லை." என்று குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்காதது விவாதப் பொருளாகியுள்ளது.
டெல்லி காவல்துறையின் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் இன்றைய போராட்டம் நடைபெற்றது. ஜந்தர் மந்தரை அடைவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்த போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று காவல்துறையினர் முந்தைய நாளே தெரிவித்திருந்தனர்.

பட மூலாதாரம், Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Images
அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லிக்கு வந்து செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. டெல்லியின் எல்லைகளில் சோதனைகளும் தடுப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டன. பலர் அவர்களது வீடுகளிலிருந்தும் காவலில் எடுக்கப்பட்டனர்.
அக்டோபர் 6 முதல் 8 வரை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல் காந்தியும் இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களும் டெல்லி வீதிகளில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களும் காவலில் எடுக்கப்பட்டனர். இத்தகைய சூழலில், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று டெல்லியில் இல்லாதது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி டெல்லியில் இல்லாதது குறித்து பலரும் எக்ஸ் தளத்தில் கருத்துகளைப் பதிவிட்டனர்.
கன்டென்ட் கிரியேட்டர் அமித் கில்ஹோர் தனது பதிவில், "டெல்லியில் இவ்வளவு பதற்றம் நிலவும் நிலையில், ராகுல் காந்தி இன்று ஏன் சென்னைக்குச் சென்றுள்ளார்?" என்று கேள்வி எழுப்பினார்.
பத்திரிகையாளர் பூபேந்திர சௌபே வெளியிட்ட பதிவுக்குப் பதிலளித்த பாஜக எம்.பி தவல் படேல் கிண்டலாக, "முக்கியமான நாளில், போராட்டத்தின் முகமாக நீங்கள் முன்னிறுத்தும் ராகுல் காந்தி சென்னைக்குத் தப்பிச் சென்றுவிட்டார்" என்று குறிப்பிட்டார்.
காங்கிரசும் காக்ரோச் ஜனதா கட்சியும்: நெருக்கம் எவ்வளவு, இடைவெளி எவ்வளவு?
காங்கிரசும் காக்ரோச் ஜனதா கட்சியும் ஒரே மாதிரியான பிரச்னைகளை எழுப்பினாலும், பொதுவாகத் தனித்தனியாகவே போராட்டங்களை நடத்துகின்றன.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், இந்திய தேசிய மாணவர் சங்கம் நாடு முழுவதும் நடத்திய 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சிகளில் அவர் கவனம் செலுத்தினார்.
எனினும், ஜூலை 20-ஆம் தேதி காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய பேரணியின்போது மாணவர்கள் மீதான வன்முறை மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து, ஜூலை 21ஆம் தேதி பிரதமரின் இல்லத்துக்கு வெளியே அவர் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
காக்ரோச் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமான அமைப்பாகவும் பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவும் இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்காவும் முன்பு ஆம் ஆத்மி கட்சிக்காக பணியாற்றியவர்கள்.
எனினும், மூத்த பத்திரிகையாளர் அதிதி பத்னிஸ், "இந்த இயக்கத்துக்கு இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தொண்டர்கள் ஆதரவளித்து வருகின்றனர் என்பதில் எனக்கு உறுதியுண்டு. இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால், இத்தகைய சூழலில் எந்த மாணவர் அமைப்பும் காக்ரோச் ஜனதா கட்சியிடமிருந்து விலகி இருக்க முடியாது" என்றார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியர் அஜய் குடவார்த்தியின் கருத்துப்படி, ராகுல் காந்தி இதற்கு முன்பு 'காக்ரோச்' இயக்கத்தின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. ராகுல் காந்தி டெல்லியில் இருந்திருந்தாலும், பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறுகிறார்.
"காங்கிரசும் காக்ரோச் ஜனதா கட்சியும் ஒருபோதும் ஒன்றிணைந்ததில்லை. இரு கட்சிகளும் ஒரே மாதிரியான பிரச்னைகளை எழுப்பினாலும், காக்ரோச் ஜனதா கட்சி என்பது ஆம் ஆத்மி கட்சியின் மறைமுக அமைப்பு என்று காங்கிரஸ் கருதுகிறது" என்கிறார் அவர்.
காக்ரோச் ஜனதா கட்சியும் எந்த அரசியல் கட்சியுடனும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் அதிதி பத்னிஸ் கூறுகிறார்.
"ஏதேனும் ஓர் அரசியல் கட்சியுடன் இணைந்துகொண்டால், பாஜகவுக்கு ஆதரவளித்து வந்த தற்போது அந்தக் கட்சி மீது கோபத்தில் இருக்கும் இளைஞர்களை இழக்க நேரிடும் என்று காக்ரோச் ஜனதா கட்சி அஞ்சுகிறது. இந்த இளைஞர்கள் காக்ரோச் ஜனதா கட்சியை ஆதரிக்கலாம்; ஆனால், காங்கிரஸை ஆதரிக்க மாட்டார்கள்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், SANKAR / AFP via Getty Images
'ராகுல் காந்தி கதாநாயகனாக இருக்க விரும்பவில்லை
டெல்லியில் ராகுல் காந்தி இல்லாதது திட்டமிட்ட அரசியல் உத்தியாக இருக்கலாம் என்றும் நாங்கள் பேசிய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அரசியல் ஆய்வாளர் கில்லஸ் வெர்னியர்ஸ், ''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து டெல்லி வீதிகளில் பேரணியாகச் சென்று ராகுல் காந்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தனது பங்கை ஆற்றினார். ஆனால், இன்றைய போராட்டம் அரசியல் கட்சி சார்ந்த நடவடிக்கை அல்ல; அது சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கும் இயக்கம்.'' என்றார்.
"தற்போதைய சூழலில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு மிகவும் நுட்பமானது என்று நினைக்கிறேன். ராகுல் காந்தி அதைச் சிறப்பாகக் கையாள்கிறார். தன்னை ஒரு கதாநாயகனைப் போலப் போற்ற வேண்டும் என்றோ, ஒவ்வொரு இயக்கமும் தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும் என்றோ அவர் விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
''இந்தச் சூழலில், போராட்டத்தில் பங்கேற்பதற்குப் பதிலாகக் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவது, இந்த இயக்கம் ராகுல் காந்தியைப் பற்றியதோ எதிர்க்கட்சிகளின் அரசியலைப் பற்றியதோ அல்ல; நாட்டின் பரந்த நலன்களைப் பற்றியது என்பதை வலியுறுத்துகிறது. சமூக இயக்கத்துக்கு ஆதரவளிப்பது முக்கியம். அந்த வகையில் ராகுல் காந்தி பெருமளவில் வெற்றி பெற்றுள்ளார் என்று நான் கருதுகிறேன். காங்கிரஸ் தொண்டர்களுடனான அவரது சந்திப்பும் இந்த நன்கு சிந்திக்கப்பட்ட அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. ஒட்டுமொத்த இயக்கத்தின் மையமாகத் தானே இருப்பதாக அவர் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.''
இன்று டெல்லிக்கு வந்த விமானம் தரையிறங்கிய பிறகு, அதிலிருந்த காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்கள் அபிஜீத் தீப்கே, அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை டெல்லி காவல்துறையினர் காவலில் எடுத்தனர்.
குருகிராமில் உள்ள தனது வீட்டிலிருந்து உள்ளடக்க உருவாக்குநர் துருவ் ராத்தியும் காவலில் எடுக்கப்பட்டதாகவும், நேஹா போரா, யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோரும் காவலில் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல பத்திரிகையாளர்களும் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்தச் சூழலில், ராகுல் காந்தியும் காவலில் எடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்று பேராசிரியர் குடவார்த்தி கூறுகிறார்.
"இன்று ராகுல் காந்தியும் காவலில் எடுக்கப்பட்டிருந்தால், ஒட்டுமொத்த இயக்கமும் தலைமை இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்" என்றார் அவர்.
மேலும், "ராகுல் காந்தி இதை நீண்டகாலம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய இயக்கமாகவும் பார்க்கிறார். இன்று போராட்டம் நடத்தினால், நாளையே ஒருவர் பதவி விலகிவிடுவார் என்ற வகையிலான ஒருநாள் போராட்டம் இது அல்ல. இந்த இயக்கத்தை ராகுல் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறார்" என்றும் அவர் கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


































