குஜராத்தின் வல்லபி பேரரசு ஒரு சீப்புக்காக நடந்த போரில் அழிக்கப்பட்டதா? வரலாற்றுப் பின்னணி

பட மூலாதாரம், Puneet Barnala/BBC
- எழுதியவர், அர்ஜுன் பர்மர்
- பதவி, பிபிசி குஜராத்தி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
குஜராத்தின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மௌரியர் காலத்தின் தொடக்கத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால், அதன் விரிவான, ஆதாரபூர்வமான வரலாறு வல்லபிபூரில் இருந்து தொடங்குகிறது.
குப்த பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி. 470ஆம் ஆண்டில் வல்லபியில் மைத்ரேய வம்சம் நிறுவப்பட்டது. முனைவர் ஹரிபிரசாத் கங்காதர் சாஸ்திரி தனது 'குஜராத்தின் வரலாறு - பண்டைய காலம்' என்ற நூலில், மைத்ரகர்களின் ஆட்சிக் காலம் குஜராத்தின் பண்டைய வரலாற்றில் இரண்டாவது நீண்ட காலகட்டம் என்று குறிப்பிடுகிறார்.
கி.பி. 470 முதல் 788 வரை, மொத்தம் மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தில் அவர்களது ஆட்சி நீடித்தது. வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களின்படி, மைத்ரக வம்சத்தை நிறுவிய படைத் தளபதி பட்டார்க்கில் தொடங்கி, குஜராத்தில் பல புகழ்பெற்ற மன்னர்கள் தோன்றினர். பட்டார்க், சௌராஷ்டிர பகுதி முழுவதையும், கட்ச், வடக்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத்தின் பரந்த பகுதிகளையும் ஆட்சி செய்தார்.
மைத்ரகர்களின் ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் தலைநகராக வல்லபி இருந்தது. கிரிநகருக்கு பிறகு மைத்ரகர்களின் ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் அரசியல் மையமாக வல்லபி உருவெடுத்தது. அதன் செழிப்பும் அளவற்ற செல்வமும் குறித்து வரலாற்றில் பதிவுகள் உள்ளன.
பேராசிரியர் மௌலானா சையத் அபு ஜஃபர் நத்வி தனது 'குஜராத்தின் வரலாறு - ஆரியர்களின் வருகை முதல் முஸ்லிம்களின் படையெடுப்பு வரை' என்ற நூலில், "இந்த நகரின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தது. ஹூணர்கள் காலத்தில் இருந்து கடைசியாக வந்த அரபுப் பயணிகள் வரை, அதன் செல்வத்தைப் புகழ்ந்து வந்துள்ளனர், வர்த்தகமும் செழித்திருந்தது. இந்த நகரத்தில் பல செல்வந்தக் குடும்பங்கள் வாழ்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் அங்கு இருந்தனர்" என்று எழுதுகிறார்.
பிரபுத்துவ செல்வமும் அறிவுச் செழுமையும் நிறைந்த இந்த நகரின் இருப்பு எவ்வளவு 'கம்பீரமானதாக' இருந்ததோ, அதன் வீழ்ச்சியின் கதை அதே அளவுக்கு 'அதிர்ச்சியூட்டுவதாகவும் வியப்பளிப்பதாகவும்' இருந்தது.
வரலாற்று நூல்களில் உள்ள பதிவுகளின்படி, படைத்தளபதி பட்டார்க்கின் தலைநகராக விளங்கியதும், சுமார் ஆயிரம் மைல் பரப்பளவில் பரந்து விரிந்து இருந்ததுமான இந்த பிரம்மாண்ட நகரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு 'சீப்பு' காரணமாக இருந்தது. வல்லபி நகரம் உருவானது முதல் வீழ்ச்சியடைந்தது வரையிலான முழுக் கதையையும் தெரிந்து கொள்வோம்.

பட மூலாதாரம், Akshara Prakashan
மைத்ரேய வம்சத்தின் எழுச்சி
முனைவர் ஹரிபிரசாத் கங்காதர் சாஸ்திரி குறிப்பிடுகையில், "ஸ்கந்தகுப்தர் மறைவுக்குப் பிறகு, குப்த பேரரசின் அதிகாரம் பலவீனமடைந்தது. தொலைதூர மாகாணங்கள் சுதந்திரம் பெறத் தொடங்கியபோது, படைத் தளபதி பட்டார்க் வல்லபியில் தனது சொந்த சுதந்திர அரசை நிறுவினார்" என்கிறார்.
'குஜராத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாறு: தொகுதி 3 மைத்ரகர்கள் மற்றும் பிந்தைய மைத்ரகர்கள் காலம்' என்ற நூலில் அதன் ஆசிரியர் ரசிக்லால் சோ. பரிக் எழுதுகையில், "பட்டார்க் எவ்வாறு அரசைக் கைப்பற்றினார் என்பது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், அவரது புகழுரையில், 'வலிமைமிக்க எதிரிகள் இருந்த மண்டல் பகுதியில் நூற்றுக்கணக்கான தாக்குதல்களைச் சகித்துக் கொண்டு புகழைப் பெற்றேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து, இதற்காக அவர் தற்போதைய அரசுடன் ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது" என்கிறார். மேலும், "பட்டார்க் ஒரு படைத் தளபதியாக அறியப்படுவதில் இருந்து, அரியணை ஏறுவதற்கு முன் அவர் ஏதோவொரு அரசில் படைத் தளபதி பதவியை வகித்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. சௌராஷ்டிராவில் உள்ள வல்லபிபூரில் அவர் தனது ஆட்சியை நிறுவியதில் இருந்து, இதற்கு முன்பு குப்த பேரரசின் சௌராஷ்டிர மாகாணத்தில் படைத் தளபதியாக இருந்திருக்கலாம் என்பது தெரிய வருகிறது."
வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதன்படி, படைத் தளபதி பட்டார்க்கில் தொடங்கி ஷீலாதித்யர் வரை பல புகழ்பெற்ற ஆட்சியாளர்களை மைத்ரக வம்சம் கண்டுள்ளது. இவர்களின் ஆட்சிக் காலத்தில், 'வல்லபியின் புகழ் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவியது.'
முனைவர் சாஸ்திரி குறிப்பிடுகையில், "மைத்ரகர்கள் மற்றும் பிந்தைய மைத்ரகர்கள் காலத்தில், சோலங்கி ஆட்சிக் காலத்தில் குஜராத் அடைந்த அதே அளவிலான சாதனைகளை எட்டியிருக்காமல் இருக்கலாம். ஆனால், முந்தைய காலகட்டத்தைத் தொடர்ந்து சுயாட்சியை நோக்கி அது அடியெடுத்து வைத்தது முன்னெப்போதும் இல்லாத சாதனையாகக் கருதப்படுகிறது."
"முந்தைய காலகட்டத்தில், பிற பிராந்தியங்கள் அல்லது நாடுகளைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் யாராவது குஜராத்தை ஆட்சி செய்து வந்தனர். ஆனால், தற்போது அந்நிய ஆட்சியின் கீழ் இருந்த நிலை முடிவுக்கு வந்து, இங்கு சுயாட்சிக்கான சூரியன் உதித்தது. உள்ளூர் அரச வம்சங்களின் அதிகாரம் இப்பகுதியில் மேலோங்கியது என்பது சிறிய நிகழ்வாகக் கருதப்பட முடியாது" என்கிறார்.
ரசிக்லால் சோ. பரிக், "வெளிப்புறப் பிராந்தியங்களின் ஆட்சியில் இருந்து விடுபட்டு, குஜராத்தில் மைத்ரக வம்சம் தனது சுதந்திரமான அதிகாரத்தை நிறுவியது அதன் முதல் முக்கியமான சாதனை. "அதன் பிறகு, சௌராஷ்டிரம், கட்ச், வடக்கு குஜராத், மத்திய குஜராத், மேற்கு மாளவம் ஆகிய பகுதிகளில் மைத்ரக வம்சத்தின் அதிகாரம் மேலோங்கியது. பல நூற்றாண்டுகளாக நீடித்த இந்த ஆட்சி, மைத்ரக அரசின் இரண்டாவது மிகப்பெரிய அரசியல் சாதனையாகக் கருதப்படுகிறது."
"மைத்ரக மன்னர்கள் தங்களது பரந்த அரசில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்சி முறையை உருவாக்கியிருந்தனர். அவர்கள் மதம், கல்வி, இலக்கியம், கலை, வர்த்தகம், தொழில் உள்ளிட்டவற்றை ஊக்குவித்ததுடன், தங்களது அரசில் பொருளாதார மற்றும் பண்பாட்டு வாழ்க்கை சார்ந்த செயல்பாடுகளையும் மேம்படுத்தினர்" என்று எழுதியுள்ளார்.
இவ்வாறு, 'குஜராத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றில் பல்வேறு வகைகளில் மைத்ரக அரசு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.'

பட மூலாதாரம், Puneet Barnala/BBC
வல்லபியின் வற்றாத மகிமை
முனைவர் சாஸ்திரி குறிப்பிடுகையில், "சௌராஷ்டிரத்தின் கிழக்குப் பகுதியில் வல்லபி ஒரு புகழ்பெற்ற நகரமாக இருந்தது. சமஸ்கிருத அகராதிகளில் வல்லபி என்ற சொல்லுக்கு இரு முக்கியமான பெயர்க் காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன." அவை,
- "மூங்கில் உள்ளிட்டவற்றால் அமைக்கப்படும் கூரை"
- "ஒரு வீட்டின் மிக உயரமான பகுதி"
மேலும், "மைத்ரக அரசின் தலைநகராக வல்லபி மாறியபோது, அது ஏற்கெனவே சௌராஷ்டிரத்தின் பழமையான நகரமாகப் புகழ்பெற்றிருந்தது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
வல்லபியின் செழிப்பை ஆராய்ச்சியாளர்களும் வரலாற்றாசிரியர்களும் வரலாற்று நூல்களில் அழகாகப் பதிவு செய்துள்ளனர். 'சௌராஷ்டிரத்தின் வரலாறு' என்ற நூலில் அதன் ஆசிரியர் ஷம்புபிரசாத் தேசாய் எழுதுகையில், "கி.பி. 640ஆம் ஆண்டில் ஹியுவென் சாங் வல்லபிபூரை வந்தடைந்தார். தனது பார்வையில் வல்லபி குறித்து அவர் ஒரு விவரணையை எழுதியுள்ளார். இதன் மூலம் வல்லபியின் செழிப்பு மற்றும் அதன் பரப்பளவு குறித்து ஓரளவு புரிந்துகொள்ள முடியும்" என்கிறார்.
மேலும், "இந்த அரசின் பரப்பளவு 6,000 லி (6,000 லி என்பது 1,200 மைல்கள்). இதன் தலைநகரம் ஆறு மைல் பரப்பளவைக் கொண்டது. நிலத்தின் தன்மை, காற்று மற்றும் நீரின் வகை, மக்களின் பழக்க வழக்கங்கள், குணநலன்கள் ஆகியவை மாலாபோ (மாளவம்) பகுதியைப் போன்றவை" எனக் குறிப்பிடுகிறார்.
"மக்கள்தொகை அதிகமாக உள்ளது. அனைத்து குடும்பங்களும் செல்வந்தர்களாக உள்ளன. பத்து லட்சத்துக்கும் அதிகமான செல்வத்தைக் கொண்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள்கூட இங்கு உள்ளன. தொலைதூர நாடுகளில் இருந்து கிடைக்கும் அரிய பொருட்கள் இங்கு ஏராளமாகக் கிடைக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
'குஜராத்தின் பண்பாட்டு வரலாறு' என்ற நூலில் அதன் ஆசிரியர் ரஜினிகுமார் பாண்டியா எழுதுகையில், "ஹியுவென் சாங்கின் விவரிப்பில் இருந்து, வல்லபி மிகப்பெரிய வர்த்தக மையமாக இருந்தது தெரிகிறது. வல்லபியில் சுமார் நூறு குடும்பங்கள் கோடீஸ்வரர்களாக இருந்தன. மைத்ரகர்கள் காலத்தில் வல்லபி பௌத்தத்தின் முக்கிய மையமாக விளங்கியது" என்கிறார்.
அதே நூலில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "சீன பயணியான இட்சிங்கின் கூற்றுப்படி, கிழக்கில் நாளந்தாவும் மேற்கில் வல்லபியும் இந்தியாவின் இரண்டு முக்கியமான பௌத்த பல்கலைக் கழகங்களாக இருந்தன" என்கிறார்.
பேராசிரியர் மௌலானா சையத் அபு ஜஃபர் நத்வி குறிப்பிடுகையில், "ஹியுவென் சாங்கின் பயணக் குறிப்பில், நகரத்தின் மக்கள்தொகை அதிகமாக இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பிரபுக்களும் அங்கு இருந்ததாக அந்தக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏராளமான பள்ளிகள், மடங்கள், கோயில்கள் இருந்தன. ஒரு கணிப்பின்படி, நகரத்தின் மக்கள்தொகை பல லட்சங்களாக இருந்திருக்கலாம்."
"இந்த நகரத்தின் பொருளாதார நிலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஹியுவென் சாங் முதல் கடைசியாக வந்த அரபுப் பயணிகள் வரை அனைவரும் அதன் செல்வத்தைப் புகழ்ந்துள்ளனர். வர்த்தகமும் செழித்திருந்தது. அனைத்து துறைமுகங்களும் வர்த்தகப் பொருட்களால் நிரம்பியிருந்தன."
அதுமட்டுமின்றி, தொலைதூர நாடுகளின் செல்வம் இங்கு கொண்டு வரப்பட்டு சேமிக்கப்பட்டதாக சீன பயணி எழுதுகிறார். அந்நகரில் பல செல்வந்தக் குடும்பங்கள் இருப்பதாகவும் சீன பயணி குறிப்பிட்டுள்ளார்.
"நூற்றுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் இங்கு வாழ்கின்றனர். தியூ, கம்பாட், பரூச், செமூர், சோபாரா, தானே ஆகியவை முக்கியத் துறைமுகங்களாக இருந்தன. தொலைதூர நாடுகளின் செல்வங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு வைப்புச் செய்யப்பட்டதாக" சீன பயணி எழுதுகிறார். "இந்த நகரத்தில் பல செல்வந்தக் குடும்பங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் இங்கு வாழ்ந்தனர்" என்கிறார்.

பட மூலாதாரம், Puneet Barnala/BBC
வல்லபி வீழ்ச்சிக்குக் காரணம் ஒரு சீப்பு காரணமானதா?
பேராசிரியர் மௌலானா சையத் அபு ஜஃபர் நத்வி தனது நூலில் குறிப்பிடுகையில், "இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து நகரங்களிலும் புகழ்பெற்று விளங்கிய இந்த மகத்தான நகரம் எவ்வாறு அழிவைச் சந்தித்தது என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஹாரூனின் புதையலைப் போல் இதுகுறித்து பல புராணக் கதைகள் உள்ளன" என்கிறார்.
அவரது கூற்றுப்படி, "பொது வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள ஒரு கதை உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து இந்து எழுத்தாளர்களும் இந்தக் கதையைக் குறிப்பிட்டுள்ளனர்."
"வல்லபிபூரில் காகு என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நகரத்தில் இருந்த பெரிய மாளிகைகள் அவருக்குச் சொந்தமானவை. அவரது மகளிடம் வைரங்கள் பதிக்கப்பட்ட சீப்பு ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மன்னரின் மகளுக்குத் தெரிய வந்தபோது, அந்தச் சீப்பைத் தனக்குத் தருமாறு கேட்டார். ஆனால் காகுவின் மகள் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த இளவரசி, தனது தந்தையிடம் புகார் அளித்தார். மன்னர் நேரடியாகவே காகுவிடம் அந்தச் சீப்பைக் கேட்டார். ஆனால் அவரும் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், காகுவின் மகளை பாலியல் வன்கொடுமை செய்யுமாறு படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்."
"இதைத் தாங்கிக்கொள்ள முடியாத காகு, இந்த அநீதிக்குப் பழிவாங்க முடிவு செய்தார். பெரும் தொகையைப் பரிசாக வழங்கி, வெளிநாட்டுப் படையைக் கொண்டு வந்தார். அந்த வெளிநாட்டுப் படை வல்லபிபூரை கொள்ளையடித்துவிட்டு, மன்னரை துயரத்தில் ஆழ்த்திச் சென்றது" என்று அந்தக் கதை கூறுகிறது.
டாக்டர் சாஸ்திரி எழுதுகையில், "வல்லபியின் அழிவு குறித்து சமண நூல்களில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்வழிக் கதையின்படி, வல்லபியின் மன்னரான ஷிலாதித்யா, நகரின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெண்ணான காகுவின் மகளிடம் இருந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க வளையலைப் பறித்ததுடன், அவரது கற்பையும் சூறையாடினார். இதற்குப் பழிவாங்க அந்தப் பெண் மிலேச்ச மண்டலத்துக்குச் சென்று, மிலேச்சர்களின் தலைவன் கேட்ட பணத்தை வழங்கி, வல்லபியின் மீது படையெடுக்க ஏற்பாடு செய்தார்" என்கிறார்.

பட மூலாதாரம், Puneet Barnala/BBC
"மிலேச்சர்கள் வல்லபிபூரை வந்தடைந்தபோது, காகுவின் தந்திரத்தால் மன்னர் ஷிலாதித்யாவின் தெய்வீக குதிரை வானில் பறந்தது. இதனால் மன்னர் செய்வதறியாது திகைத்து நின்றார். போரில் அவர் கொல்லப்பட்டார், மிலேச்சர்கள் வல்லபியை அழித்தனர். இந்தச் சம்பவம் விக்ரம் சம்வத் 845இல் (கி.பி. 788–789) நிகழ்ந்தது" என அந்தக் கதை கூறுகிறது.
அரபு எழுத்தாளர் அல்-பிரூனியின் குறிப்புகளில் இருந்து, சமண நூல்களில் குறிப்பிடப்படும் 'மிலேச்சர்களின் தலைவன்' என்பவர் அல்-மன்சூராவின் ஆட்சியாளர், அதாவது சிந்து பகுதியின் அரபு ஆளுநர் என்பது தெரிய வருகிறது.
'சௌராஷ்டிரத்தின் வரலாறு' என்ற நூலில், "ஷிலாதித்யாவின் சூரிய குண்டம்" தொடர்பாக மற்றொரு கதையும் உள்ளது. பேரிடர்க் காலங்களில் சூரிய குண்டத்தில் இருந்து சூரியனின் குதிரை ஒன்று வெளிப்படும். ஷிலாதித்யா அந்தக் குதிரையில் ஏறிப் போரிடுவார். அதனால்தான் அவர் எப்போதும் வெற்றி பெற்று வந்தார். இந்த ரகசியத்தை காகு அரேபியர்களிடம் தெரிவித்தார். அவர்கள் பசுக்களைக் கொன்று, அவற்றை அந்தக் குளத்தில் வீசினர். இதனால் குதிரை வானில் பறந்தது, ஷிலாதித்யா பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நூலின் குறிப்புகளின்படி, "எதிர்பாராத விதமாகத் தாக்குதல் நடத்தப்பட்டதால் வல்லபிபூரின் மக்களும் படை வீரர்களும் அச்சமடைந்தனர். போர் எவ்வளவு கடுமையாக இருந்தது அல்லது எவ்வளவு காலம் நீடித்தது என்பது தெரியவில்லை. ஆனால் கலீஃபாவின் தளபதி அமர் பின் ஜமாலின் படை, போரில் ஷிலாதித்யாவை கொன்றது. இதன் மூலம் வல்லபி பேரரசு உலக வரலாற்றில் இருந்து நிரந்தரமாக மறைந்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமண ஆவணங்களில் இருந்து, மன்னர் ஷிலாதித்யாவையும் தலைநகர் வல்லபியையும் அழித்த பிறகு அரபுப் படை பின்வாங்கியது தெரிய வருகிறது. இருப்பினும், அதற்குப் பிறகு மைத்ரக வம்சத்தின் அதிகாரம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. இவ்வாறு, கடைசி மன்னரான ஷிலாதித்யாவின் 'கொடுங்கோன்மைக் கொள்கையே' மைத்ரக அரசின் துயரமான முடிவுக்குக் காரணமாக அமைந்தது.
சமண நூல்கள் உள்ளிட்ட பல வரலாற்று ஆவணங்கள் வல்லபியின் அழிவு குறித்து வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன. அவற்றில் எந்தக் கதை மறுக்க முடியாத வகையில் உண்மையானது என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும், பெரும்பாலான கதைகளில் ரங்கா காகுவை பற்றிய கதையோ அல்லது அதை ஒத்த கதையோ பல வரலாற்று ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































