நர்மதை ஆற்றில் கிடைத்த பிரமாண்ட தாடை: 7 முதல் 9 வரிசைகளில் பற்கள் - ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இந்தத் தாடை ஒரு பழங்கால யானைக்கோ அல்லது அதுபோன்ற ஒரு விலங்குக்கோ சொந்தமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்.
படக்குறிப்பு, இந்தத் தாடை ஒரு பழங்கால யானைக்கோ அல்லது அதுபோன்ற ஒரு விலங்குக்கோ சொந்தமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்.
    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மத்தியப் பிரதேச மாநிலம், ரைசன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உள்ள பதாய் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்ற சிறுவர், தனது நண்பர்களுடன் பதாய் படித்துறைக்கு விளையாடச் சென்றிருந்தார். அப்போது, மண்ணுக்குள் புதைந்திருந்த பற்கள் அவரது கண்ணில் பட்டன. ஆர்வத்தில் அவர்கள் மண்ணை அகற்றி பார்த்தபோது, ஆயிரக்கணக்கான, ஏன் பல லட்சம் ஆண்டுகால வரலாற்றை வெளிக்கொண்டு வர உதவும் பொருள் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது.

இந்தச் சம்பவம் நவம்பர் 10-ஆம் தேதி நடந்தது.

அந்த விசித்திரமான எச்சங்கள் என்னவென்று அருணுக்கோ அவரது நண்பர்களுக்கோ தெரியவில்லை.

நிலத்தடியில் புதைந்திருந்த அந்த எச்சங்கள், ஒரு பெரிய தாடை எலும்பைப் போலத் தோற்றமளித்தன. அதன் ஒரு பக்கத்தில் இணையான வரிசைகளில் பற்கள் காணப்பட்டன.

படிப்படியாக, இது பற்றிய செய்தி சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பரவியது. இதுபற்றி அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்தவுடன், ஒரு சிறிய ஆய்வுக் குழு அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டது. குழந்தைகள் செய்த இந்தச் சிறிய கண்டுபிடிப்பு, நர்மதா பள்ளத்தாக்கின் இந்தப் பகுதி மீது ஆய்வாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதைபடிவங்கள் இந்தப் பகுதி நிலத்தடியில் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர்கள், இந்தத் தாடை எலும்பு பண்டைய யானை அல்லது அதைப் போன்ற தோற்றமுடைய உயிரினத்தைச் சேர்ந்ததாக இருக்க சாத்தியமுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதைபடிவம் அழிந்துபோன 'பாலியோலாக்சோடான் நமாடிகஸ்' என்ற யானை இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக நம்பப்படுகிறது.

இந்த இனம், பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய யானை இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முனைவர் ரவி உபாத்யாய், நர்மதா பள்ளத்தாக்கில் கிடைத்த புதைபடிவங்கள் மற்றும் பண்டைய உயிரினங்களின் எச்சங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

"இந்தப் புதைபடிவத்தின் அமைப்பு, பழங்கால யானையைப் போன்ற உயிரினத்தின் அமைப்பை ஒத்திருக்கிறது. முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இது 'பாலியோலாக்சோடான் நமாடிகஸ்' என்ற யானை இனத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று புதைபடிவத்தின் ஆரம்பகட்ட பரிசோதனையை நடத்திய முனைவர் ரவி உபாத்யாய் தெரிவித்தார்.

இந்தப் புதைபடிவம் எப்படிப்பட்டது? எந்த உயிரினத்தைச் சேர்ந்தது?

இந்தப் புதைபடிவம் சுமார் 75 சென்டிமீட்டர் நீளமும் 25 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் ஏழு முதல் ஒன்பது கடைவாய்ப் பற்களின் அமைப்புகள் காணப்படுகின்றன.

பற்களின் அமைப்பும் தாடையின் வடிவமும் பழங்கால யானையைப் போன்ற உயிரினம் ஒன்று வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் கொண்டுள்ளன என்று முனைவர் உபாத்யாய் கூறுகிறார்.

அந்த உயிரினம் பாலியோலாக்சோடான் இனத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், அதேசமயம், ஸ்டெகோடான் இனமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறுகிறார். இவை இரண்டுமே யானையைப் போன்ற தோற்றமுடைய அழிந்துபோன உயிரினங்களாகும்.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தப் புதைபடிவம் சுமார் 75 சென்டிமீட்டர் நீளமும் 25 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது.
படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்தப் புதைபடிவம் சுமார் 75 சென்டிமீட்டர் நீளமும் 25 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது.

தாடையில் உள்ள பற்களின் வரிசைகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த உயிரினம் முழுமையாக வளர்ந்த முதிர்ச்சியடைந்த விலங்காக இருந்திருக்க வாய்ப்பில்லை என உபாத்யா கூறுகிறார்.

"தாடையில் உள்ள பற்களைக் கவனித்தால், ஒரு பக்கத்தில் ஆறு வரிசைகளும் மறுபக்கத்தில் ஏழு வரிசைகளும் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் இது வளரிளம் பருவத்தில் இருந்த யானையாகவோ அல்லது முழுமையாக வளர்ச்சியடையாத உயிரினமாகவோ இருக்கலாம்," என்கிறார் அவர்.

"இந்தத் தாடை எலும்பில் பற்களின் உள்புற அடுக்கான டென்டின் தெளிவாகத் தெரிகிறது. பற்களைத் தொடர்ந்து ஆய்வு செய்வது இந்தப் புதைபடிவத்தை அடையாளம் காண்பதற்கு உதவியாக இருக்கும்," என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்தப் புதைபடிவம் எவ்வளவு பழமையானது?

ஆராய்ச்சியாளர்கள் இந்தப் புதைபடிவத்தின் வயது குறித்து பல்வேறு முதற்கட்ட மதிப்பீடுகளைச் செய்துள்ளனர்.

"இந்தப் புதைபடிவம் கண்டெடுக்கப்பட்ட மஞ்சள் நிற மண், பிளீஸ்டோசீன் காலத்தைச் சேர்ந்தது. இந்தக் காலம் சுமார் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11,700 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தக் காலகட்டத்தில் பாலியோலாக்சோடான் போன்ற யானை இனங்கள் வாழ்ந்தன." என்று ரவி உபாத்யாய் கூறுகிறார்.

இந்தப் புதைபடிவம் சுமார் நான்கு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று தனது முதற்கட்ட மதிப்பீட்டின்படி அவர் தெரிவித்தார்.

இந்தப் புதைபடிவம் சுமார் 7 முதல் 8 லட்சம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மரபியல் பேராசிரியர் முனைவர் எச்.கே. கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

இந்தப் புதைபடிவம் நான்கு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என ஆய்வாளர் முனைவர் ரவி உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, இந்தப் புதைபடிவம் நான்கு முதல் ஐந்து லட்சம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என ஆய்வாளர் முனைவர் ரவி உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதேசமயம், முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் அதன் வயது குறித்து இறுதியான முடிவுக்கு வர முடியாது என்றும் கோஸ்வாமி கூறுகிறார்.

"இது மிகவும் நல்ல நிலையில் உள்ள ஒரு புதைபடிவம். அதன் பற்கள் பரிசோதிக்கப்பட்டு, அதன் உடல் அமைப்பு ஆய்வு செய்யப்பட்டு, அறிவியல் பூர்வமாக நிர்ணயிக்கப்படும் வரை, அதன் சரியான வயதை நிர்ணயிக்க முடியாது." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதைபடிவத்தின் வயதைக் கண்டறிய, அதன் பற்களையும் அதைச் சுற்றியுள்ள மண் மாதிரிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒரு புதைபடிவத்தின் வயதைக் கணக்கிட, அதன் உட்பொருள்கள் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள மண் அல்லது பாறைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கு கதிரியக்கக் காலக்கணிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காலப்போக்கில் பாறைகளில் உள்ள குறிப்பிட்ட தனிமங்களில் ஏற்படும் மாற்றங்களை இந்த முறை கணக்கிடுகிறது. இதன் மூலம் பாறைகளின் வயதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் புதைபடிவங்களின் வயதையும் துல்லியமாக மதிப்பிட முடியும்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பதாய் படித்துறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரே புதைபடிவம் இதுவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பழங்கால உயிரினங்கள் குறித்த ஆய்வுகளுக்கு இந்தப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

"தற்போது புதைபடிவம் கண்டெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் மண்ணின் வெவ்வேறு அடுக்குகள் காணப்படுகின்றன. இந்த அடுக்குகளில் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த உயிரினங்களின் புதைபடிவங்கள் இருக்கலாம்." என்கிறார் ரவி உபாத்யாய்.

காண்டாமிருகம், நீர்யானை, குதிரை போன்ற விலங்குகளின் புதைபடிவங்கள் ஏற்கெனவே நர்மதா பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்தப் பகுதி முழுவதையும் அறிவியல் பூர்வமாக அகழாய்வு செய்தால், தற்போது கண்டெடுக்கப்பட்ட புதைபடிவத்துடன் தொடர்புடைய மற்ற உடல் எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

காண்டாமிருகம், நீர்யானை, குதிரை போன்ற விலங்குகளின் புதைபடிவங்கள் ஏற்கெனவே நர்மதாபள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

ஆய்வாளர்கள் அருகிலுள்ள பகுதிகளில் சில எலும்புத் துண்டுகளையும், கனிமப் படிவுகளையும் கண்டறிந்துள்ளனர். எனவே, இவை அனைத்தும் ஒரே உயிரினத்தின் உடல் பாகங்களா அல்லது வேறு உயிரினங்களின் புதைபடிவங்களும் உள்ளனவா என்பதைக் கண்டறிவது முக்கியமாகும்.

பதாய் படித்துறையில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவம் குறித்த முனைவர் எச்.கே. கோஸ்வாமியின் ஆர்வம், பழங்கால விலங்குகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மனிதப் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு நர்மதா முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருதுகிறார்.

மனிதப் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் முனைவர் கோஸ்வாமி நீண்டகாலமாக ஆர்வம் கொண்டுள்ளார்.

நர்மதா ஆற்றங்கரையிலும், குறிப்பாக ஆற்றின் மணல் பரப்புகளிலும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோஸ்வாமி கூறுகிறார்.

இதுபோன்ற ஆய்வுகள் மூலம், மனிதப் பரிணாம வளர்ச்சியின் தொடக்ககால வரலாறு தொடர்பான இதுவரை வெளிவராத ஆதாரங்கள் கிடைக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார்.

இந்திய புவியியல் ஆய்வு மையமும் தொல்லியல் துறையும் கூறுவது என்ன?

இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, போபாலைச் சேர்ந்த இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் நான்கு பேர் கொண்ட குழு பதாய் படித்துறையைப் பார்வையிட்டது.

இந்தக் குழுவினர் புதைபடிவத்தையும் அதைச் சுற்றியுள்ள மண்ணின் அடுக்குகளையும் ஆய்வு செய்தனர்.

இந்தக் குழுவுடன் சென்ற ரைசன் மாவட்டத்தின் டியோரியின் சப் டிவிஷனல் ஆபீசர் அங்கித் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆய்வாளர்கள் புதைபடிவத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் குழு விரைவில் தனது அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் என்றும், அதன்பிறகு இந்தப் புதைபடிவத்தின் அடையாளமும் வரலாற்று முக்கியத்துவமும் குறித்து கூடுதல் தெளிவு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, மத்தியப் பிரதேச தொல்லியல் துறையும் இந்தப் புதைபடிவத்தை ஆய்வு செய்வதற்காக ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் மானுடவியல் நிபுணர்கள், விலங்கியல் நிபுணர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தப் புதைபடிவத்தின் வயது மற்றும் அடையாளத்தைக் கண்டறிவதுடன், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்தக் குழு ஆய்வு செய்யவுள்ளது.

தற்போது, ​​புதைபடிவம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மக்கள் தோண்டவோ அல்லது புதைபடிவத்தை எந்த வகையிலும் சேதப்படுத்தவோ முடியாதபடி நிர்வாகம் தடுப்புகளை அமைத்துள்ளது.

இந்தப் பகுதியைப் பாதுகாப்பதுடன், இங்கு அறிவியல் பூர்வமான முறையில் அகழாய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ரவி உபாத்யாய் கூறுகிறார்.

இதற்கிடையே, பல லட்சம் ஆண்டுகள் பழமையான புதைபடிவத்தைக் கண்டுபிடித்தது பற்றிய விவாதத்திலிருந்து அருணும் அவரது நண்பர்களும் விலகிவிட்டனர். அவர்கள் இப்போது விளையாடுவதற்கு வேறு இடத்தைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், அவர்கள் தற்செயலாகக் கண்டுபிடித்த இந்தப் புதைபடிவம் ஆய்வாளர்கள் முன் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது மிகப்பெரிய பழங்கால யானை ஒன்றின் தாடை எலும்பா? அந்த உயிரினத்தின் உடலின் மற்ற பாகங்களும் அருகிலுள்ள பகுதிகளில் புதைந்துள்ளனவா? நர்மதாவில் இதுபோன்று இன்னும் எத்தனை புதைபடிவங்கள் கண்டறியப்படாமல் உள்ளன?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மூலமே கண்டறிய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு