திருப்பரங்குன்றத்தில் இன்று எங்கே தீபம் ஏற்றப்படும்?களத்தில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் மலையில் டிரோன் பறக்கத் தடை, காவல்துறையினர் குவிப்பு - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அங்கே 5 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் நகர், மலைப்பகுதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பகுதிகள் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்காக 12 காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.), 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ஏ.டி.எஸ்.பி.), 57 உதவி ஆணையர்கள் மற்றும் 132 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் மொத்தம் 5,618 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மதுரை காவல்துறை கூறியுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் இன்று எங்கே தீபம் ஏற்றப்படும்?களத்தில் என்ன நடக்கிறது?

இந்தநிலையில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை அனுமதியற்ற கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வழிபாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றத்திற்குள் நுழையும் அனைத்துச் சாலைகளிலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். தீவிர சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என களத்தில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் சிராஜ் கூறுகிறார்.

திருப்பரங்குன்றத்தில் இன்று எங்கே தீபம் ஏற்றப்படும்? களத்தில் என்ன நடக்கிறது?
படக்குறிப்பு, வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன

வழக்கமாகத் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு முன்புள்ள கல் மண்டபம் வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், இந்த முறை எந்த வாகனங்களுக்கும் அந்தப் பகுதி வரை அனுமதி வழங்கப்படவில்லை. கல் மண்டபத்திலிருந்து வெகு தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றன என்கிறார் சிராஜ்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர்.

'’கல் மண்டபத்தின் முன்பிருந்து பார்க்கும்போது, மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் தெளிவாகத் தெரிகிறது. அங்கு தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது இங்கிருந்து பார்க்கும்போது தெரிகிறது. அதேநேரத்தில், உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தூணும் இங்கிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அந்தப் பகுதியில் காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அங்கு தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது போன்ற எந்த அறிகுறியும் தென்படவில்லை. தூணை சுற்றிலும் காவல்துறையினர் தடுப்புகளை வைத்துள்ளனர்.’’ என்கிறார் சிராஜ்.

திருப்பரங்குன்றத்தில் இன்று எங்கே தீபம் ஏற்றப்படும்? களத்தில் என்ன நடக்கிறது?
படக்குறிப்பு, உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தூண்

உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 20ஆம் தேதி உத்தரவிட்டது.

அதேநேரத்தில், அங்கு தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக 'லைவ் லா ' செய்தி குறிப்பிட்டது.

ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதிப்பதை, அங்கு தீபம் ஏற்றுவது பாரம்பரிய வழக்கம் என்ற கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட இறுதி அங்கீகாரமாகக் கருதக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் லைவ் லா தெரிவித்துள்ளது.

அச்செய்தியின்படி, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியை, எந்தவொரு தரப்பினரும் நிறுவப்பட்ட பழக்கவழக்கத்துக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற வழிபாடுகளைக் கோருவதற்கு இதைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களும் அரசு அதிகாரிகளும் மட்டுமே தீபம் ஏற்றுவதற்காக மலை உச்சிக்குச் செல்லலாம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தேவை மற்றும் நடைமுறை சாத்தியத்தைப் பொறுத்து மத்திய ரிசர்வ் காவல் படையினரை பணியில் ஈடுபடுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறையாகும்.

கூடுதல் தகவல்: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு