அமெரிக்காவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்கள் முன்னிலையில் மரண தண்டனை - ஏன் இந்த முடிவு?

1936-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ரெய்னி பெத்தேயா பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டதைக் காண சுமார் 20,000 பேர் திரண்டனர்.
படக்குறிப்பு, 1936-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ரெய்னி பெத்தேயா பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டதைக் காண சுமார் 20,000 பேர் திரண்டனர்.
    • எழுதியவர், ஷீலா ஃபிளின்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அருகிலிருந்தும் தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டனர். அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில், கணவரை இழந்த வயதான வெள்ளையின பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கறுப்பின ஆண் ஒருவரைப் பொதுவெளியில் தூக்கிலிடுவதைக் காண ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஆற்றங்கரையில் வரிசையாக நின்றனர்.

1936 ஆகஸ்ட் 14-ஆம் தேதி, கென்டக்கி மாகாணத்தின் ஓவன்ஸ்பரோ நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெப்ப அலையின் நடுவே, வெப்பம் தகித்துக்கொண்டிருந்த வெள்ளிக்கிழமை அது. தூக்குமேடைக்கு அருகில் சிலர் தங்களுக்கான இடத்தைப் பிடித்து வைத்துக்கொள்வதற்காக முந்தைய இரவே வந்து உறங்கினர். வேறு சிலர் முந்தைய மாலையில் 'நெக்டை விருந்துகள்' நடத்தினர். மது அருந்தியதால் ஏற்பட்ட மயக்கம் தெளியாத நிலையில் அவர்கள் அங்கு வந்தனர். பார்வையாளர்களுக்குப் பதின்ம வயதினர் பாப்கார்ன் மற்றும் குளிர்பானங்களை விற்றுக்கொண்டிருந்தனர்.

அதிகாலை 5 மணிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில், அங்கு திரண்டிருந்த கூட்டம் சுமார் 20,000 பேராக அதிகரித்திருந்தது.

அப்போதுதான், இருபது வயதுகளில் இருந்த ரெய்னி பெத்தேயா தூக்குமேடையை நோக்கிச் சென்றார். பெற்றோரை இழந்த அவர், 70 வயதான பெண்ணைக் கொள்ளையடித்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

மரணதண்டனைக்கு முந்தைய நாள் பிற்பகலில் அவர் தனது கடைசி உணவைச் சாப்பிட்டிருந்தார். அதில் பொரித்த கோழிக்கறி, பன்றி இறைச்சித் துண்டுகள், மசித்த உருளைக்கிழங்கு, ஊறுகாயிட்ட வெள்ளரிக்காய், சோள ரொட்டி, எலுமிச்சை பை மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

சிகாகோ, நியூயார்க் போன்ற தொலைதூர நகரங்களில் இருந்தும் செய்தியாளர்கள் அங்கு வந்திருந்தனர். அவர்களில் பலர், ஒரு பெண் தூக்கிலிடும் பணியை செய்ய உள்ளார் என் பரவிய வதந்தியை காணவே வந்திருந்தனர்.

அந்தப் பகுதியின் ஷெரிஃப் நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்குப் பதிலாக, அவரது மனைவி எதிர்பாராத விதமாக அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனால், தூக்குமேடையின் லிவரை இழுக்க அவர் மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, பணியமர்த்தப்பட்ட தூக்கிலிடுபவர்கள் பெத்தேயாவுக்கு மரணதண்டனையை நிறைவேற்றினர்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் கவனத்தைப் பெற்ற கடைசிப் பொது தூக்கிலிடலாக அமைந்தது. பெத்தேயாவின் மரணதண்டனையைச் சுற்றி அரங்கேறிய கேளிக்கை நிகழ்ச்சியைப் போன்ற சூழல் கென்டக்கி மக்களில் பலருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 18 மாதங்களுக்குப் பிறகு அந்த மாகாணத்தின் ஆளுநர் பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்தார்.

அதற்குள், பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றும் நடைமுறையைப் பெரும்பாலான மாகாணங்கள் கைவிட்டிருந்தன. சமூகத்தின் பார்வையில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மேலும் மனிதாபிமானமான, தனிப்பட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது.

இருப்பினும், 1937-ஆம் ஆண்டு மிசூரி மாகாணத்தில் நடந்த மற்றொரு தூக்கிலிடலைச் சில நூறு பேர் நேரில் பார்த்தனர். அந்தச் சம்பவம் பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும், அதுவே அமெரிக்காவின் கடைசிப் பொது மரணதண்டனையாக அமைந்தது — இப்போது வரை.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் கலந்துகொண்ட அந்தத் தூக்கிலிடல், அமெரிக்காவில் பெரும் கவனத்தைப் பெற்ற கடைசிப் பொது மரணதண்டனையாக அமைந்தது.
படக்குறிப்பு, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் கலந்துகொண்ட அந்தத் தூக்கிலிடல், அமெரிக்காவில் பெரும் கவனத்தைப் பெற்ற கடைசிப் பொது மரணதண்டனையாக அமைந்தது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெத்தேயா தூக்கிலிடப்பட்டு 90 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலத்துக்குப் பிறகு, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், 2009-ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில் ஆயுதமற்ற 13 சக ராணுவ வீரர்களைக் கொன்ற நிடல் ஹசனுக்கு ராணுவம் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்றும் என அறிவித்தார்.

இதையடுத்து, துப்பாக்கிச் சூடு மூலம் நிறைவேற்றப்படும் அந்த மரணதண்டனை நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

"இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்," என்று ஹெக்செத் கூறினார்.

மரணதண்டனை குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்துவரும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் மைக்கேல் ராடெலெட் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

"மீண்டும் ஒரு பொது மரணதண்டனை நடைபெறும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மரணதண்டனைக்கு பொதுமக்கள் மத்தியில் நிலவும் ஆதரவு தொடர்ந்து குறைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். உதாரணமாக, 1994-ஆம் ஆண்டில் மரணதண்டனைக்கு ஆதரவு 80 சதவீதமாக இருந்தது. தற்போது அது 52 சதவீதமாகக் குறைந்துள்ளது.

"குறிப்பாக, பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்குவதற்கான மாற்று வாய்ப்பையும் முன்வைக்கும்போது, மரணதண்டனைக்கான ஆதரவு மிக வேகமாகக் குறைந்துள்ளது," என்று அவர் கூறினார்.

மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் யோசனை குறித்து அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் காலம் ஆகலாம். ஆனால், இந்த ஒளிபரப்பைக் காண மில்லியன் கணக்கானோர் அல்லது அதற்கும் அதிகமானோர் இணையலாம் என்பது கிட்டத்தட்ட உறுதி.

ஹெக்செத்தின் அறிவிப்பு குறித்து ராடெலெட், "இதனால் மரணதண்டனைக்கான நியாயப்படுத்தல் ஒரு பொழுதுபோக்காக மாறுகிறது… பாப்கார்னைக் கொண்டு வாருங்கள், நண்பர்களை அழையுங்கள் என்பதுபோல ஆகிவிடுகிறது," என்றார்.

2012-ஆம் ஆண்டு அதிகாரிகள் வெளியிட்ட, ஹசனின் தேதி குறிப்பிடப்படாத புகைப்படம்.
படக்குறிப்பு, 2012-ஆம் ஆண்டு அதிகாரிகள் வெளியிட்ட, ஹசனின் தேதி குறிப்பிடப்படாத புகைப்படம்.

பெத்தேயாவின் மரணதண்டனை குறித்து கடந்த ஆண்டுதான் ஒரு புத்தகத்தை வெளியிட்ட சோன்யா லீ, துப்பாக்கிச் சூடு மூலம் நிறைவேற்றப்படும் மரணதண்டனை நேரலையில் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டபோது, "நமது எதிர்காலத் தலைமுறையினரை நினைத்து மிகுந்த அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தேன்" என்றார்.

"1936-ஆம் ஆண்டு இதை 'கொடூரமான வன்முறையின் கேளிக்கை நிகழ்ச்சி' என்று அழைத்தனர். அப்போது கென்டக்கி மாகாணத்தின் ஓவன்ஸ்பரோவில் இதைப் பார்ப்பதற்காக 20,000 பேர் திரண்டனர். இப்போது, அந்தக் காட்சியை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. இது நிலைமையை இன்னும் கொடூரமானதாக மாற்றுகிறது," என்று அவர் கூறினார்.

1936-ஆம் ஆண்டு அந்தக் கூட்டத்தில் சோன்யா லீயின் தாத்தா, பாட்டியும் இருந்தனர். அப்போது அவர்கள் பதின்ம வயதிலேயே திருமணமானவர்கள்.

தனது பாட்டி 2002-ஆம் ஆண்டு இறந்த பிறகுதான் இதைப் பற்றி சோன்யா லீ தெரிந்துகொண்டார். தனது பாட்டி உயிருடன் இருந்தபோது எழுதி வைத்திருந்த பதிவைப் படித்தபோது, பெத்தேயாவின் கழுத்து முறியும் சத்தத்தைக் கேட்கும் அளவுக்கு அவர்கள் தூக்குமேடைக்கு அருகில் நின்றிருந்தது தெரியவந்தது.

அந்த மரணதண்டனை குறித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள், அந்தச் சம்பவம் கென்டக்கி மக்களில் பலரின் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததை வெளிப்படுத்தின.

"இதுபோன்ற கொடூரமான நடைமுறையை நாம் கடந்த காலத்திலேயே விட்டுவிட்டோம் என்று முழு மனதுடன் நம்பினேன். இரான், வட கொரியா, ஆப்கானிஸ்தான் போன்ற உலகின் மிகச் சில நாடுகளில்தான் இத்தகைய கொடூரங்கள் நடைபெறுகின்றன என்று நினைத்தேன். அமெரிக்கர்களான நாம் இப்போது அத்தகைய ஆட்சிமுறையின் ஒரு பகுதியாக இருக்கிறோமா என்று கருதிக்கொள்கிறோமா? இது மிகவும் கொடூரமானது," என்று அவர் கூறினார்.

அமெரிக்க அரசியலில் நிலவும் துருவமயமாக்கலும் கடுமையான பேச்சுகளும் இத்தகைய அறிவிப்பு வெளியாக வழிவகுத்திருக்கலாம் என்று ஓஹியோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் பேராசிரியர் கர்ட் கிரே தெரிவித்தார்.

"சில அமெரிக்கர்கள் ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று விரும்பலாம். ஆனால், பலர் அப்படி விரும்புவதில்லை. சொல்லப்போனால், இன்னும் பலர் இதுபோன்ற காட்சிகளைக் கண்டு உணர்ச்சியற்றவர்களாக மாறியிருக்கலாம். அதாவது, அவர்கள் ஒரு பொது மரணதண்டனையைக் கண்டு ஆரவாரம் செய்யவில்லை. மாறாக, 'ஓ, சரி, இப்போது நாம் இருக்கும் நிலை இதுதான் போலிருக்கிறது' என்று நினைக்கிறார்கள்," என்றார் அவர்.

பீட் ஹெக்செத்
படக்குறிப்பு, பீட் ஹெக்செத்

மற்ற ஆய்வுகளும், அமெரிக்க மக்களின் மனநிலையை அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது நிர்வாகமும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் செயல்படும் வன்முறைத் தடுப்பு ஆய்வுத் திட்டத்தின் இயக்குநர் கரென் வின்டெம்யூட், அமெரிக்காவில் வன்முறைக்கான ஆதரவு குறைந்து வருவதை ஆய்வுத் தரவுகள் காட்டுகின்றன என்கிறார்.

"இன்று காலை, அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், இந்த மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் அறிவிப்பை 'காட்டுமிராண்டித்தனமானது' என்று குறிப்பிட்டார். அவர் பலரின் கருத்தைப் பிரதிபலிப்பதாகவே நான் நினைக்கிறேன்," என்றார் அவர்.

"ஒரு பொது மரணதண்டனை என்பது நாம் யார் என்பதைக் காட்டுவதில்லை. ஒரு நாடாக நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க விரும்புகிறோம் என்பதையும் அது பிரதிபலிக்கவில்லை," என்றும் அவர் கூறினார்.

கத்தோலிக்கரான அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இந்த மரணதண்டனையைத் தான் பார்க்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப், தாமே அந்த ஒளிபரப்பைப் பார்ப்பாரா என்ற கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார். இருப்பினும், நிடல் ஹசனின் மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் முடிவுக்கு ஒப்புதல் அளித்ததை அவர் உறுதிப்படுத்தினார்.

"அவர் எப்படி இறக்கிறார் என்பது குறித்து எனக்கு உண்மையில் அக்கறையில்லை; அவர் இறந்தால் போதும்," என்று டிரம்ப் கூறினார். "அவருக்கு, மரணதண்டனை என்பது மிகவும் பொருத்தமான தண்டனை என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு