'யாரும் பெண் தருவதில்லை' - என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளில் மூன்று இடங்களுக்குத் தங்களை என்.எல்.சி நிர்வாகம் இடம்பெயர வைத்ததாகக் கூறுகிறார், வாணாதி ராயபுரத்தில் வசிக்கும் சுசீலா மேரி.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

"எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தில் நன்றாக வாழ்ந்து வந்தோம். அதை சுரங்க விரிவாக்கம் என்ற பெயரில் எடுத்துக் கொண்டனர். அதற்கான இழப்பீடு இன்னும் வரவில்லை. இப்போது இந்த இடத்தையும் எடுக்க உள்ளதாக சொல்கின்றனர். இதையும் கொடுத்துவிட்டு எங்கே போவது எனத் தெரியவில்லை"

நெய்வேலியில் தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த ராதாமணியின் குமுறல் இது. என்.எல்.சி (நெய்வேலி நிலக்கரி நிறுவனம்) சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒரு சாரார் உரிய இழப்பீடு மற்றும் வேலை கேட்டுப் போராடி வருகின்றனர்.

நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசின் நில எடுப்புப் பிரிவு அதிகாரிகளும் என்.எல்.சி நிர்வாகமும் தீவிரம் காட்டி வரும் நிலையில், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்பதை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

கடலூர் மாவட்டத்தில் வாணாதி ராயபுரம், தென்குத்து ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ என்ற பகுதியை ஒட்டியுள்ள இக்கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை மேய்த்தல் பிரதான தொழில்களாக உள்ளன.

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

இந்த இரண்டு கிராமங்களில் இருந்து 3.40 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த உள்ளதாக, தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தென்குத்து கிராமத்தில் 29 சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களும் வாணாதி ராயபுரத்தில் 101 சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இவை உலர் நிலங்கள் வகையைச் சேர்ந்தவை என்றும் இங்கு தகரக் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் இருப்பதாகவும் சில நிலங்களில் தென்னை, வேம்பு, பனை, பூவரசு, கொய்யா ஆகிய மரங்கள் உள்ளதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

'நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை, என்.எல்.சி. நிறுவனத்தின் நிர்வாகத்தில் உள்ள நிதியில் இருந்து வழங்கப்படும்' என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

'நிலத்தை அளக்க எதிர்ப்பு... கைது'

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
படக்குறிப்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்களுடன் இணைந்து போராடி வருவதாகக் கூறுகிறார், தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை இக்கிராம மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்களுடன் இணைந்து போராடி வருவதாகக் கூறுகிறார், தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல்.

அரசின் நில எடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே மாதம் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைக் காவல்துறை வெளியேற்றிய காட்சிகள் இணையத்தில் பரவியது.

அவ்வப்போது தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் சில நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்தாலும் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதாகக் கூறுகிறார், பழனிவேல்.

தென்குத்து கிராமத்தில் நிலத்தை அளப்பதற்காக மாநில அரசின் நில எடுப்புப் பிரிவு அதிகாரிகளும் நெய்வேலி நிலக்கரி நிறுவன அதிகாரிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக பழனிவேல் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. 15 நாள் நீதிமன்றக் காவல் முடிந்து அண்மையில் சிறையில் இருந்து அவர் வெளியில் வந்துள்ளார்.

"நிலத்தை அளக்க வந்தபோது அதை எதிர்த்து வாக்குவாதம் செய்ததால் என் மீது வழக்குப் போட்டனர். இந்த வழக்கு என்ன ஆகும் எனத் தெரியவில்லை. எங்கள் பூர்வீக நிலங்களை என்.எல்.சிக்கு கொடுக்கப் போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்" எனக் கூறுகிறார் அவர்.

'30 ஆண்டுகளில் 3 இடப்பெயர்வுகள்'

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
படக்குறிப்பு, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கருக்கு சுமார் நான்காயிரம் ரூபாயும் மூன்று சென்ட் நிலம் மட்டுமே இழப்பீடாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறும் சுசீலா மேரி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கத்தையொட்டி வாணாதி ராயபுரம், தென்குத்து ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

சுரங்க விரிவாக்கப் பணிக்காக தங்கள் பூர்வீக நிலங்களை ஒப்படைத்துவிட்டு இக்கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் மூன்று இடங்களுக்குத் தங்களை என்.எல்.சி நிர்வாகம் இடம்பெயர வைத்ததாகக் கூறுகிறார், வாணாதி ராயபுரத்தில் வசிக்கும் சுசீலா மேரி.

"தெற்கு மூலை என்ற இடத்தில் எங்களுக்கு நான்கு ஏக்கர் நிலம் இருந்தது. அதில் வரகு, கொள்ளு, தினை எல்லாம் விளைவித்து வாழ்ந்து வந்தோம். சுரங்க விரிவாக்கம் என்ற பெயரில் அந்த நிலத்தை இழந்தோம்" எனக் கூறுகிறார் அவர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கருக்கு சுமார் நான்காயிரம் ரூபாயும் மூன்று சென்ட் நிலம் மட்டுமே இழப்பீடாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறும் சுசீலா மேரி, "அங்கிருந்து இதுவரை மூன்று பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டோம். இப்போது இந்த இடத்தையும் எடுக்க உள்ளனர்" என்கிறார்.

தற்போது தகரக் கொட்டகை வீட்டில் மூன்று பிள்ளைகளுடன் சுசீலா மேரி வாழ்ந்து வருகிறார்.

"ஒரு சென்ட் நிலத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு தருவதாகக் கூறுகின்றனர். அதை வைத்து என்ன செய்ய முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

"இதுவரை பல இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டதால் எங்களிடம் இருந்து எடுக்கப்படும் நிலங்களுக்கு இணையான இடமும் உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். என் மகன்களுக்கு என்எல்சியில் நிரந்தர வேலை கொடுத்தால் மட்டுமே நிலத்தைக் கொடுப்பேன்" எனவும் அவர் தெரிவித்தார்.

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு
படக்குறிப்பு, வாணாதி ராயபுரத்தில் வசிக்கும் ஸ்டாலின்.

கடந்த சில ஆண்டுகளாக தென்குத்து, வாணாதி ராயபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு பத்திரப்பதிவு மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், வாணாதி ராயபுரத்தில் வசிக்கும் ஸ்டாலின்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தென்குத்து, வாணாதி ராயபுரம், பினாச்சி குப்பம் ஆகிய கிராமங்களில் பத்திரப்பதிவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.

இதனால் தங்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு திருமணத்துக்கு வரன் கிடைப்பதில் சிரமம் உள்ளதாகக் கூறும் அவர், "ஊரையே எடுக்கப் போவதாகக் கூறுவதால் யாரும் பெண் தருவதில்லை. இதனால் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்குத் திருமணம் ஆகவில்லை" என்கிறார்.

தங்களிடம் உள்ள பத்திரங்களை திருமணம், மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு அடமானம் வைக்க முடியாத நிலைக்கு அதிகாரிகள் தள்ளிவிட்டதாகவும் கூறுகிறார், ஸ்டாலின்.

இதே கருத்தை முன்வைக்கும் பழனிவேல், "என் தாத்தா பெயரில் நிலம் உள்ளது. பத்திரப்பதிவுக்குத் தடை நீடிப்பதால் எங்கள் குடும்பத்தில் நிலத்தைப் பாகப் பிரிவினை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்" எனக் கூறுகிறார்.

"என் மகன் பொறியியல் படித்து வருகிறார். அவரது படிப்புக்காக என் நிலத்தை அடமானம் வைத்து ஒரு ரூபாய் கூட பெற முடியவில்லை. எதற்கும் உதவாத நிலையில் வீட்டுப் பத்திரம் உள்ளது," எனவும் அவர் வேதனைப்பட்டார்.

கடலூரில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வந்த மக்களிடம் 1960-ஆம் ஆண்டு முதலே நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்துள்ளன.

''போதுமான இழப்பீடு, வேலை ஆகியவற்றுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாததால் நிலங்களை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு'' தெரிவித்து வருவதை அவர்களின் பேச்சில் உணர முடிகிறது.

'இழப்பீடுக்காக 15 ஆண்டுகளாக போராட்டம்'

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

உதாரணமாக, தென்குத்து கிராமத்தில் வசிக்கும் ராதாமணியின் குடும்பத்தைப் பார்க்கலாம். கடந்த 2010-ஆம் ஆண்டு என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்காக சுமார் 30 சென்ட் நிலத்தை இவரது மாமனார் ராமசாமி அளித்துள்ளார்.

"இதற்காக ஆறு லட்ச ரூபாய் இழப்பீடாக அறிவிக்கப்பட்டாலும் அதனைத் தற்போது வரை பெற முடியவில்லை" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"நாங்கள் வாழ்ந்த மாடி வீட்டை இடிக்கும்போது ஆளுக்கு 5 சென்ட் நிலமும் வேலையும் தருவதாகக் கூறினர். ஒரே ஒருவருக்கு மட்டும் ஒப்பந்தப் பணியைக் கொடுத்தார்கள்" என்கிறார் ராதாமணி.

இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் பல்வேறு அலைக்கழிப்புகளை எதிர்கொண்டதாக அவர் கூறுகிறார்.

"ஒருமுறை அனைத்து வாரிசுகளையும் அழைத்து வருமாறு கூறுவார்கள். அவ்வாறு கூட்டிச் சென்றால் கையெழுத்து சரியில்லை என்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

"மாடி வீடு, விவசாயம் என வசதியோடு வாழ்ந்தோம். இன்று எங்கள் வீட்டைப் பார்த்தாலே எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் எனத் தெரியும். பணமும் இல்லை. நல்ல வேலையும் இல்லை. பூர்வீக நிலத்தை எடுத்தது மட்டுமல்லாமல் இப்போது இந்த இடத்தையும் எடுக்க உள்ளனர்," என அவர் வேதனைப்பட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "வீட்டை இடிக்கும்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் என்.எல்.சி நிர்வாகம் கடைபிடிக்கவில்லை. என்.எல்.சி உள்ளே சென்றாலே எங்களை விரட்டுகின்றனர்." என்கிறார்.

நில எடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுவது என்ன?

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

கிராம மக்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மாநில அரசின் நில எடுப்புப் பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமியை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.

"நிலத்தைக் கொடுப்பதற்கு யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நிலம் பெறப்படுகிறது" என்கிறார் அவர்.

கடந்த காலங்களில் நிலம் தொடர்பான அறிவிப்பு வெளியான காலத்தில் என்ன மதிப்பு இருந்ததோ அதன்படியே இழப்பீடு வழங்கப்படுவதாகக் கூறிய அழகிரி சாமி, "தொழிலியல் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துவிட்டால் அதனை விற்க முடியாது. அதில் பத்திரப்பதிவு எதையும் மேற்கொள்ள முடியாது" எனத் தெரிவித்தார்.

என்.ஓ.சி கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

"பத்திரப்பதிவுக்கு தடை விதித்தது தொடர்பாக அரசு உத்தரவு ஏதேனும் வந்துள்ளதா?" என வடலூர் சார்-பதிவாளர் அன்பிற்கரசரிடம் பிபிசி தமிழ் நேரில் கேட்டது.

"இவ்விரு கிராமங்களில் இருந்து பத்திரப்பதிவு செய்வதற்கு மக்கள் வந்தால் இதுதொடர்பாக நில எடுப்புப் பிரிவுக்கு தெரிவிப்போம். சர்வே எண்களுக்கு எதிர்ப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்வோம். அவர்கள் தடையில்லா சான்று கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும்" என அவர் கூறுகிறார்.

"பட்டியலில் சர்வே எண் வெளியிடப்பட்டிருந்தால் அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவோம். எது முடக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியாது என்பதால் நில எடுப்புப் பிரிவுக்குத் தெரியப்படுத்துகிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார் அன்பிற்கரசர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் விளக்கம்

என்.எல்.சியை எதிர்த்து 2 கிராமங்கள் போராடுவது ஏன்? பிபிசி தமிழ் களஆய்வு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறையின் துணைப் பொது மேலாளர் அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

"நிலங்களை ஒப்படைக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பும் போதிய இழப்பீடும் உரிய முறையில் கொடுக்கப்பட்டு வருகிறது. மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின் அடிப்படையில் இவை வழங்கப்படுகிறது," என என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிரந்தர வேலை தொடர்பான கோரிக்கை குறித்துக் கேட்டபோது, "நிரந்தர வேலைவாய்ப்பை அதற்குரிய சட்டத்துக்குட்பட்டே வழங்க முடியும். ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன" என என்எல்சி நிர்வாகம் கூறியது.

இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பது தொடர்பான குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "அது தவறான தகவல். நிலம் எடுக்கும்போது வாரிசு தொடர்பாக சட்டரீதியான சிக்கல்கள் சில இடங்களில் எழுந்துள்ளன. அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன" என விளக்கம் அளித்துள்ளது.

நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளதைக் களத்தில் பார்க்க முடிகிறது. நிலங்களை ஒப்படைக்க முடியாது என ஒரு சாராரும் நிலத்துக்குப் போதிய இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என மற்றொரு சாராரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

'இதனை அரசு எவ்வாறு கையாளப் போகிறது?' என இரு கிராம மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு