'சரிந்த ஜி.எஸ்.டி வசூல், அதிகரித்த பணவீக்கம்' - தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன?

பட மூலாதாரம், X/Marie wilson
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஜி.எஸ்.டி வரி வசூல், சில்லறை பணவீக்கம், உணவுப் பொருள் பணவீக்கம் மற்றும் கடன் பெறுதல் ஆகியவை பற்றி சில முக்கியமான தரவுகள் வெளிவந்துள்ளன. இவை தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை பற்றிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.
ஜி.எஸ்.டி வரி வசூல் சரிவு
கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்பான தரவுகள் வெளியாகியிருந்தன. ஆனால் முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வசூல் 5% வரை சரிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய சராசரியும் பிற பெரிய மாநிலங்களின் சராசரியும் நேர்மறையாக இருந்த நிலையில் தமிழ்நாட்டின் சராசரி எதிர்மறையாக இருந்தது விவாதப் பொருளானது.
அதிகரித்த பணவீக்கம்
கடந்த செப்டம்பர் மாதத்தின் பணவீக்கம் தொடர்பான தரவுகளும் சமீபத்தில் வெளியாகியிருந்தன. அதன்படி இந்தியாவின் பெரிய மாநிலங்களில் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்) தமிழ்நாடு தான் சில்லறை பணவீக்கத்திலும் உணவுப் பொருள் பணவீக்கத்திலும் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுடன் இந்தத் தரவுகள் விவாதிக்கப்பட்டன.

பட மூலாதாரம், X/TNDIPR
கடன் குறைவு
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான அரையாண்டில் (நிதியாண்டு) தமிழ்நாடு பெற்ற கடன் அளவு அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக எஸ்.பி.ஐ கேப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே வேளையில் அடுத்த காலாண்டில் பெறுவதற்கான எத்தனிக்கப்பட்டுள்ள கடன் அளவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது திமுக - தவெக இடையே அரசியல் விவாதமாக மாறியது.
இந்த நிலையில் இந்தத் தரவுகள் உணர்த்துவது என்ன? தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு பொருளாதார விமர்சகர் தி.ரா.அருள் ராஜன் பதிலளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: ஜி.எஸ்.டி வரி வசூல் சரிவதை எவ்வாறு புரிந்து கொள்ளலாம்? அதற்கான காரணம் என்ன? அதனுடைய தாக்கம் என்னவாக இருக்கும்?
பதில்: ஒரு பொருளாதாரத்துக்கு வருமானம் என்பது முதன்மையானது. ஜி.எஸ்.டி வருமானம் தான் மிக முக்கியமான ஒரு வருமானமாக உள்ளது. இந்த வருமானம் கடந்த 4 மாதங்களாக சரிந்துள்ளது உண்மை தான். ஒட்டுமொத்த இந்தியாவில் ஜி.எஸ்.டி வசூல் கூடியிருக்கிறது. கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஜி.எஸ்.டி வசூல் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி இரண்டு வகையாக உள்ளது. மாநில அரசுக்கு நேரடியாக கிடைப்பது, மத்திய தொகுப்பில் இருந்து கிடைப்பது. அவ்வாறு கிடைத்த ஐ.ஜி.எஸ்.டி அதிகரித்துள்ளது.
பொருட்களின் விற்பனை குறைவதால் வரி வசூல் குறைகிறது. இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று பொருட்களின் உற்பத்தி குறைவது, மற்றொன்று நுகர்வோரின் வாங்கும் திறன் குறைவது. இவை இரண்டுமே குறைந்திருக்கின்றன. விலை கூடியிருப்பதும் மக்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதும் தான் விற்பனை சரிவுக்கும் வரி வசூல் குறைவுக்கும் காரணங்களாக இருக்கும்.
கேள்வி: இது சாமானியர்களை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கும்?
பதில்: அரசாங்கத்தின் வருவாய் குறைந்தால் அவர்கள் செலவிடுவது குறையும். அத்தகைய சூழலில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி போன்ற முக்கியமான விஷயங்களில் கை வைக்க முடியாது. நலத்திட்டங்களில் தான் கை வைக்க வேண்டும். நலத்திட்டங்கள் பாதிக்கப்படும்போது அது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கும். மக்கள் கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தால் அது மீண்டும் நுகர்வு மற்றும் வரி வசூலை பாதிக்கும்.
இந்த நிலை தொடர்ந்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வியாபாரமும் பாதிக்கும். அதுவும் ஜி.எஸ்.டி வரி வசூலைப் பாதிக்கும். அனைவரும் தான் ஜி.எஸ்.டி வரி கட்டுகிறார்கள். தொழில்களின் வருமானம் குறைந்தால் அதைச் சார்ந்துள்ள வேலைவாய்ப்பும் பாதிக்கும்.
இவைபோக அரசாங்கம் செய்யக்கூடிய மூலதனச் செலவுகள் பாதிக்கும். சாலை, பாலங்கள் தொலைநோக்கு பார்வையுடன் செய்யக்கூடிய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தள்ளிப்போட வேண்டியிருக்கும். இது தமிழ்நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், GST
கேள்வி: சில்லறை பணவீக்கம் மற்றும் உணவுப் பொருள் பணவீக்கத்தில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது எதை உணர்த்துகிறது? இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
பதில்: தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணவீக்கம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி அபரிமிதமாக கூடியிருப்பது உண்மை தான். இரண்டு குறியீடுகளிலும் தேசிய சராசரிக்கும் மாநில சராசரிக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. வெங்காயம், தக்காளி போன்ற உணவுப் பொருட்களின் விலை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. இது தேவை மற்றும் விநியோகத்தைச் சார்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் உற்பத்தியைவிட நுகர்வு அதிகமாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மற்ற மாநிலங்களில் தங்களின் தேவைக்குப் போக தான் வழங்குவார்கள். தேவையைவிட வரத்து குறைவாக இருக்கிறது. மக்களிடம் வருமானம் அதிகரிக்கவில்லை, ஆனால் செலவு அதிகரிக்கிறது என்பது அவர்களின் திட்டமிடலைப் பாதிக்கிறது. மக்கள் ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
இது பொதுமக்களைத் தாண்டி தொழில்துறையையும் பாதிக்கும். தட்டுப்பாடு ஏற்படுகிறபோது மூலப் பொருட்களின் விலை கூடும். அதனால் மற்ற பொருட்களின் விலைகூடி அது அவர்களின் விற்பனையைப் பாதிக்கும். நிறுவனங்கள் இந்தக் கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்களுக்கு கடத்தினால் அவர்களின் லாபம் பாதிக்காது. ஆனால் விலை அதிகரிப்பதால் மக்கள் வாங்குவதை குறைத்துக் கொள்வார்கள். அது விற்பனை, உற்பத்தி அந்த துறைகளைச் சார்ந்திருப்பவர்களின் வேலைவாய்ப்பு என அனைத்தையும் பாதிக்கும்.

கேள்வி: பணவீக்கம் அதிகரிப்பதற்கும் ஜி.எஸ்.டி வரி வசூல் குறைவதற்கும் தொடர்பு உள்ளதா? இந்த இரண்டு குறியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
பதில்: இரண்டுக்கும் தொடர்பு உள்ளது. ஆனால் முழுவதும் தொடர்பிருப்பதாக கூறிவிட முடியாது. இங்கு சேவை, உற்பத்தி மற்றும் விவசாயம் என மூன்று முக்கியமான துறைகள் உள்ளன. ஜி.எஸ்.டி என்பது சேவை மற்றும் உற்பத்தியிலிருந்து வருகிறது. உற்பத்தி துறை சீராக இருந்தால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய ஜி.எஸ்.டியில் பாதிப்பு இருக்காது. ஆனால், இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து அது சார்ந்த நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்தால் அதுவும் ஜி.எஸ்.டியை பாதிக்கும்.
கேள்வி: தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டால் மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் என்ன செய்ய வேண்டும்?
பதில்: வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளை நாம் யோசிக்க வேண்டும். பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விலைவாசி குறைந்து அதன்மூலம் நுகர்வு அதிகரித்தால் வரி வருமானமும் அதிகரிக்கும். மறுபுறம் ஜி.எஸ்.டி வசூல் கசிவதும் அதிகம் இருக்கிறது. ஜி.எஸ்.டி வசூலித்துவிட்டு செலுத்தாமல் இருப்பார்கள் அல்லது ஜி.எஸ்.டி இல்லாமல் வணிகம் மேற்கொள்வார்கள். அரசாங்கம் அனைத்தையும் டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஜி.எஸ்.டி கசிவை தடுக்க முடியும்.
தமிழ்நாடு மின்சாரத் துறை கடன் சுமையில் இருக்கிறது. அதில் நிறைய மானியங்கள் உள்ளன. அந்த இடத்தில் மானியத்தைக் குறைத்து வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும். ஏனெனில் சூரிய சக்தி தொடர்பான பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. விவசாய நிலங்களில் இந்தத் திட்டங்களை அமல்படுத்தினால் ஒருமுறை செலவுடன் முடிந்துவிடும். அங்கு மானியம் சேமிக்கப்படும். மத்திய அரசும் இதற்கு பல்வேறு மானியங்கள் வழங்கி வருகிறது. மாநில அரசு இது போன்ற திட்டங்களைப் பயன்படுத்தி மானியத்துக்கு ஆகின்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். இது போக முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் பணப்புழக்கம் மற்றும் வாங்கும் திறன் அதிகரித்து ஜி.எஸ்.டி வசூல் அதிகரிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: கடந்த அரையாண்டில் தமிழ்நாடு அரசு பெற்றுள்ள கடன் அளவு குறைந்துள்ளது என எஸ்.பி.ஐ கேப்ஸ் அறிக்கை கூறுகிறது. அதே வேளையில் அடுத்த காலாண்டில் அதிக கடன் பெற இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதை எப்படி புரிந்துகொள்வது?
பதில்: முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டை விட தற்போது பெற்றுள்ள கடன் அளவு குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதனால் கடன் குறைந்துள்ளது, சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று உடனடியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கடந்த நிதிநிலை அறிக்கையில் இந்த ஓராண்டுக்கான மதிப்பிடப்படும் தொகை தீர்மானிக்கப்பட்டிருக்கும். அதன்படி, தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு 1.71 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற உள்ளது. இதற்கான திட்டமிடல் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
அதில் தற்போது வரை சுமார் 40,000 கோடி ரூபாய் தான் கடன் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது எதற்காக செலவிடப்பட்டுள்ளது என்பதைப் பொருத்து இருக்கும். ஆனால், இந்த ஆண்டில் இறுதியில் சென்ற ஆண்டு பெற்ற கடனைவிட கூடுதலாகவே இருக்கும். ஏனெனில் அது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமாக ஒரு போக்காகவே பார்க்க வேண்டும். இதை ஓர் அளவுகோலாக வைத்து இந்த அரையாண்டைப் போல அடுத்த அரையாண்டிலும் 40,000 கோடி ரூபாய் மட்டுமே வாங்குவார்கள் என்று பார்க்க முடியாது.
கேள்வி: அடுத்த சில ஆண்டுகளுக்கு தனிநபர்களும் அரசும் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்னவாக இருக்கும்?
பதில்: மாநில அரசின் வருவாய் என்று வருகிறபோது ஆட்டோமொபைல், மின்னணு சாதனங்கள் துறை, ஜவுளித்துறை எனப் பல துறைகளைப் பற்றி பேசுகிறோம். இவை மாநில அரசின் வருமானத்துக்குப் பெரும் பங்காற்றுகின்றன. தற்போது ஜவுளித்துறை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாத சூழலில் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். உலகளாவிய சூழ்நிலையைப் பொருத்து இந்தியாவும் குறிப்பாக தமிழ்நாடும் பாதிக்கப்படும். இனி வரும் ஆண்டுகளில் கொள்கை ரீதியான ஒப்பந்தங்கள் எட்டப்பட வேண்டும், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு தற்போதும் வலிமையான மாநிலம் தான். இந்த நான்கு மாதங்களில் நடந்ததை வைத்து மோசமான சூழலுக்குச் சென்றுவிட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இந்த நான்கு மாதங்களில் நடந்தது அடுத்த நான்கு மாதங்களும் நடந்தால் சூழ்நிலை மாறும். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.1% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தற்போது சற்று மட்டுப்பட்டிருந்தாலும் இன்னும் இந்தியாவின் வேகமாக வளரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
ஆனால் தொடர்ந்து ஜி.எஸ்.டி வசூல் குறைந்து, உற்பத்தி குறைந்து, மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சி வேகம் குறைந்தால் தமிழ்நாடு மீள்வதற்கு மேலும் பல மாதங்கள் எடுக்கும். தற்போதைய சூழலை மோசம் என்று சொல்ல முடியாது, ஆனால் ஓர் எச்சரிக்கை மணி வந்துவிட்டது. நான்கு மாதங்களில் சரி செய்யவில்லையென்றால் பிரச்னை இன்னும் பெரிதாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































