50 மீட்டர் நீச்சல் குளம், நீர் சறுக்குப் பாதைகள் கொண்ட சொகுசுப் படகு: கிம் ஜாங் உன்னின் ரகசிய கோடைக்கால ஓய்விடத்தை வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்

கிம் ஜாங் உன்னுடன் தொடர்புடைய நான்கு சொகுசுக் கப்பல்களின் செயற்கைக்கோள் படங்கள்
    • எழுதியவர், சோரம் சியோன்
    • பதவி, பிபிசி கொரியன்
    • எழுதியவர், அக்னியா அட்ஸ்கியா
    • பதவி, கிழக்கு ஆசிய காட்சி இதழியல்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாத நடுப்பகுதி வரை, வட கொரியாவின் வோன்சான் கடற்கரைக்கு அருகே 80 மீட்டர் நீளமுள்ள சொகுசுக் கப்பல் ஒன்று செயற்கைக்கோள் படங்களில் தொடர்ந்து தென்பட்டுள்ளது. அந்தக் கப்பலின் மேல்தளத்தில் 50 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளமும், அதன் ஒரு முனையில் பல நீர் சறுக்குப் பாதைகளும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பல மாதங்களாகப் பராமரிப்பு மையத்தில் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டிருந்த அந்தக் கப்பல், ஜூலை மாதத் தொடக்கத்தில் கிழக்குக் கடற்கரையில் உள்ள கல்மா தீபகற்பம் எனப்படும் பகுதிக்கு மாற்றப்பட்டது.

இந்தப் பகுதி வோன்சானுக்கு அருகில் அமைந்துள்ளது. கடலோர சுற்றுலாத் தலமான வோன்சானில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் பிரமாண்டமான மாளிகை உள்ளது.

இடம் மாறிய பெரிய கப்பல் அது மட்டுமல்ல. பிபிசி ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்களில், கிம் ஜாங் உன்னின் மாளிகைக்கு அருகே வேறு சில பெரிய கப்பல்களும் தொடர்ந்து தென்பட்டுள்ளன.

இந்தக் கப்பல்கள் கிம் ஜாங் உன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பயன்பாட்டுக்கானவை என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆட்சித் தலைமையுடன் தொடர்பில்லாத ஒருவர் இந்த அளவிலான கப்பல்களைச் சொந்தமாக வைத்திருப்பதோ, சுதந்திரமாகப் பயன்படுத்துவதோ கடினம் என்று வட கொரியாவின் முன்னாள் அதிகாரிகள், அந்நாட்டிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், 80 மீட்டர் நீளமுள்ள கப்பல் காணப்படுகிறது. அதன் இடதுபுறத்தில் நீர் சறுக்குப் பாதைகளும், சுமார் 50 மீட்டர் நீளமுள்ள நான்கு வழித்தடங்களைக் கொண்ட பெரிய நீச்சல் குளமும் உள்ளன.

"குளிர்காலத்தில், அவற்றைக் கப்பல் கட்டும் தளத்தில் வைத்திருப்பார்கள். கோடைக்காலம் வந்ததும், அவற்றை வெளியே கொண்டுவந்து கிம் ஜாங் உன்னின் மாளிகைக்கோ அல்லது கல்மா பகுதியை நோக்கியோ எடுத்துச் செல்வார்கள். அங்கு நீச்சல் மற்றும் பொழுதுபோக்குக்காக அவற்றைப் பயன்படுத்துவார்கள்," என்கிறார் ரி ஜோங் ஹோ.

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் 39ஆவது அலுவலகத்தில் ரி ஜோங் ஹோ முன்பு அதிகாரியாகப் பணியாற்றியவர். ஆட்சித் தலைமைக்காக வெளிநாட்டு நாணயத்தைத் திரட்டுவதிலும் நிர்வகிப்பதிலும் இந்த அலுவலகம் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

ரகசியமாகச் செயல்படும் வட கொரிய சர்வாதிகார ஆட்சியின் உச்சத்தில் இருப்பவர்களின் செல்வத்தைக் கணக்கிடுவது, அந்நாட்டின் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவதைப் போலவே கடினமானது.

வட கொரியா உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருப்பதாக வகைப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையும் பிற அமைப்புகளும் மதிப்பீடுகளைச் சார்ந்துள்ளன. அந்நாட்டின் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பாக அதிகமாக உள்ளது. அந்த நிதி, சர்வதேசத் தடைகளுக்கு உள்பட்ட அணுசக்தித் திட்டத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

வோன்சான் பராமரிப்புக் கப்பல் துறையில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களின் செயற்கைக்கோள் படங்கள் 2×2 கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ளன. மேல் இடதுபுறத்திலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில், படங்கள் 2025 அக்டோபர் 24, 2026 ஜனவரி 31, 2026 ஜூலை 9 மற்றும் 2026 ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்டவை.
2025 அக்டோபர் படத்தில், சுமார் 55 மீட்டர் மற்றும் 80 மீட்டர் நீளமுள்ள கப்பல்கள் காணப்படுகின்றன. 2026 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதப் படங்களில் 50 மீட்டர் மற்றும் 80 மீட்டர் நீளமுள்ள கப்பல்கள் உள்ளன. அதேவேளையில், 2026 ஜூலை மாதப் படத்தில் 50 மீட்டர் நீளமுள்ள கப்பல் மட்டுமே காணப்படுகிறது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

2025ஆம் ஆண்டு ஐ.நா. அறிக்கையின்படி, வட கொரியாவில் பெரும்பாலான மக்கள் "முறையான, பரவலான மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு" உள்ளாகி வாழ்கின்றனர். அரசின் முழுமையான கட்டுப்பாடு, பரவலான கட்டாய உழைப்பு மற்றும் நீடித்த உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியில், அந்நாட்டு மக்கள்தொகையில் சுமார் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வட கொரிய ஆட்சியாளர்கள் நீண்டகாலமாகவே ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக அறியப்படுகிறது.

செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்ட கப்பல்களின் விலை எவ்வளவு என்பது நமக்குத் தெரியவில்லை. இருப்பினும், இதேபோன்ற சொகுசுப் படகுகளின் விலை பல கோடி டாலர்களில் இருந்து 10 கோடி டாலர்களுக்கும் அதிகமாக (75 மில்லியன் பவுண்டுகள்) இருக்கும். கிம்முக்குச் சொந்தமான, இதைவிட மிகவும் சிறியதான 29 மீட்டர் நீளமுள்ள பிரின்சஸ் சொகுசுப் படகின் மதிப்பு சுமார் 70 லட்சம் டாலர்கள் என ஏற்கெனவே மதிப்பிடப்பட்டிருந்தது.

கப்பல்கள் இருக்கும் இடங்களை மட்டும் வைத்து, கிம் குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், கிம் பொதுவெளியில் தோன்றாத காலகட்டங்களுடன் ஒத்துப்போகும் இந்தக் கப்பல்களின் நகர்வுகள், பொதுமக்களின் பார்வைக்கு வராத நடவடிக்கைகள் குறித்து சில குறிப்புகளை அளிக்கின்றன.

வோன்சான் பகுதியின் செயற்கைக்கோள் படம். இதில் வோன்சான் மாளிகை, வோன்சான் பராமரிப்புக் கப்பல் துறை, கல்மா தீபகற்பம், டே தீவு மற்றும் சின் தீவு ஆகிய இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

கிம் ஜாங் உன் தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியைத் தாயுடன் வோன்சானில் கழித்ததாக வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களும் உளவுத்துறை அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. கிம் ஜாங் இல்லின் ஆட்சிக்காலத்திலிருந்தே இந்த நகரம் அவரது குடும்பத்துடன் தொடர்புடையதாக இருப்பதாக நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

1990களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை, அப்போதைய தலைவர் கிம் ஜாங் இல்லின் குடியிருப்புகளைப் பாதுகாக்கும் 'யூனிட் 974' எனப்படும் பிரிவில் 13 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர், வட கொரியாவிலிருந்து வெளியேறிய பின்னர் பிபிசியிடம் பேசினார். வோன்சானைச் சுற்றியுள்ள மாளிகைகள், ஆட்சியின் உயர்மட்டத்தில் இருப்பவர்களின் ஓய்விடங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். கோடைக்காலத்தில் பல குழந்தைகளும் இளைஞர்களும் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டதைப் பார்த்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

கிம் விடுமுறையில் இருப்பது குறித்த செய்திகளை வட கொரிய அரச ஊடகங்கள் அரிதாகவே வெளியிடுகின்றன. அதற்குப் பதிலாக, இத்தகைய பயணங்கள் அதிகாரப்பூர்வ ஆய்வுப் பயணங்களாகவோ வழிகாட்டுதல் நிகழ்வுகளாகவோ சித்தரிக்கப்படுகின்றன. இருப்பினும், கடந்த காலங்களில் பிபிசியிடம் பேசிய வட கொரியாவிலிருந்து வெளியேறியவர்கள், கிம் குடும்பத்தினர் வோன்சானில் விடுமுறையைக் கழிப்பதை அறிந்திருந்ததாகத் தெரிகிறது. இதன் மூலம், குறைந்தபட்சம் வட கொரியர்கள் சிலருக்கு இது குறித்துத் தெரிந்திருந்தது என அறியமுடிகிறது.

வோன்சானில் உயரமான ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள், விளையாட்டு வசதிகள் மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காக்கள் இருப்பதாகவும், அங்கு கிட்டத்தட்ட 20,000 பார்வையாளர்களுக்கு இடமளிக்க முடியும் என்றும் வட கொரிய அரச ஊடகங்கள் கூறுகின்றன.

2025-ஆம் ஆண்டு ஜூலையில் திறக்கப்பட்ட வோன்சான் கல்மா சுற்றுலா வளாகத்துக்கு ரஷ்யாவிலிருந்து வந்த சிறிய சுற்றுலாக் குழுக்களின் படங்களை வட கொரிய அரச ஊடகங்களும் ரஷ்ய ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்தச் சுற்றுலா வளாகம் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் திறக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜூலையில் திறக்கப்பட்ட வோன்சான் கல்மா சுற்றுலா வளாகத்துக்கு ரஷ்யாவிலிருந்து வந்த சிறிய சுற்றுலாக் குழுக்களின் படங்களை வட கொரிய அரச ஊடகங்களும் ரஷ்ய ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுப் பார்வையாளர்களைக் கவரும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்தச் சுற்றுலா வளாகம் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கும் திறக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, கல்மா கடற்கரையில் வட கொரிய சுற்றுலாப் பயணிகள்

பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரை மேற்கோள் காட்டி வெளியான தென் கொரியச் செய்தியின்படி, உள்ளூர் மக்கள் சிலருக்கு நான்கு இரவுகள் கொண்ட சுற்றுலாப் பயணத் திட்டங்கள் சுமார் 100 டாலர்களுக்கு வழங்கப்பட்டன. வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு இது கணிசமான தொகையாகும். ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2024-ஆம் ஆண்டில் அந்நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 667 டாலர்களாக இருந்தது. இது தென் கொரியாவின் 36,227 டாலர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.

எனவே, வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு விடுமுறைக்குச் செல்வது எட்டாக்கனியாகவே உள்ளது. அங்கு வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர் இருந்தாலும், அவர்களுக்குப் பொழுதுபோக்குக்காக அதிக நேரம் கிடைப்பதில்லை.

தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு விவசாயிகள் ஆண்டுக்கு 14 நாட்கள் விடுமுறை பெறச் சட்டப்பூர்வமாக உரிமை பெற்றுள்ளதாகவும், ஆனால் இந்த நடைமுறை அரிதாகவே பின்பற்றப்படுவதாகவும் வட கொரியாவிலிருந்து வெளியேறியவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக பல நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பயணம் செய்வது அங்கு வழக்கமல்ல. மக்கள் பொதுவாக வார இறுதி நாட்களில் குறுகிய பயணங்களை மேற்கொள்கின்றனர் அல்லது குறிப்பிட்ட 'கோடை விடுமுறை' காலத்துக்குப் பதிலாக தேசிய விடுமுறை நாட்களில் பயணம் செய்கின்றனர்.

அப்படியே விடுமுறை அனுமதிக்கப்பட்டாலும், பயணம் செய்வதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. மக்கள் தங்கள் நகரம் அல்லது மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும். சுதந்திரமாகப் பயணம் செய்வதே சில நேரங்களில் விடுமுறையைப் போல ஓர் ஆடம்பரமாக உள்ளது.

தொடர்ச்சியாக பல நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பயணம் செய்வது அங்கு வழக்கமல்ல. மக்கள் பொதுவாக வார இறுதி நாட்களில் குறுகிய பயணங்களை மேற்கொள்கின்றனர் அல்லது குறிப்பிட்ட ‘கோடை விடுமுறை’ காலத்துக்குப் பதிலாக தேசிய விடுமுறை நாட்களில் பயணம் செய்கின்றனர்.
படக்குறிப்பு, சாதாரண வட கொரிய மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்காகப் போராடுகின்றனர்.

வோன்சான் பகுதியில் நான்கு பெரிய கப்பல்களின் நகர்வுகளை பிபிசி கண்காணித்தது. அவை முறையே சுமார் 50 மீட்டர், 55 மீட்டர், 60 மீட்டர் மற்றும் 80 மீட்டர் நீளம் கொண்டவை. இந்த ஆண்டு நான்கு கப்பல்களும் கிம்மின் வோன்சான் மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தென்பட்டன.

இவற்றில் மிகப்பெரிய கப்பலின் நகர்வுகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன. அது கப்பல் துறையிலிருந்து நகர்ந்து, கல்மா தீபகற்பத்துக்கு அப்பாலுள்ள கடல் பகுதிக்குச் சென்றது. ஜூலை மாதம் முதல் அந்தக் கப்பல் அங்கேயே இருந்து வருகிறது.

2026 ஜூலை 4 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள் படங்கள், கல்மா தீபகற்பத்துக்கு அப்பால் கடலில் 80 மீட்டர் நீளமுள்ள கப்பல் இருப்பதைக் காட்டுகின்றன.

மற்ற இரண்டு கப்பல்கள், 50 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளம் கொண்டவை. அவை ஆகஸ்ட் மாத இறுதி வரை வோன்சானுக்கு அருகிலுள்ள டே மற்றும் சின் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தென்பட்டன.

2026 ஆகஸ்ட் 25ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், வோன்சானுக்கு அருகிலுள்ள டே மற்றும் சின் தீவுகளுக்கு அப்பால் கடலில் 50 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள இரண்டு கப்பல்கள் காணப்படுகின்றன.

50 மீட்டர் நீளமுள்ள கப்பலுக்கு அருகே நான்கு சிறிய படகுகள் இருந்ததையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டின.

2026 ஜூலை 4ஆம் தேதி, டே தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் 50 மீட்டர் நீளமுள்ள கப்பல் காணப்பட்டது.
படக்குறிப்பு, 2026ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி, டே தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் 50 மீட்டர் நீளமுள்ள கப்பல் காணப்பட்டது.

செயற்கைக்கோள் பட நிபுணர் ஜியோங் சியோங்-ஹாக் கூறுகையில், சிறிய படகுகள் பெரிய கப்பலுக்குப் பயணிகள், எரிபொருள் மற்றும் தேவையான பொருள்களைக் கொண்டு சென்றன. டே மற்றும் சின் போன்ற சிறிய தீவுகள், "பொதுமக்களின் பார்வையிலிருந்து விலகி, தனியுரிமையைப் பராமரிக்கக்கூடிய கடல்சார் ஓய்விடங்களை" வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

60 மீட்டர் நீளமுள்ள கப்பல், கடந்த வாரம் வரை கிம்மின் வோன்சான் மாளிகைக்கு அருகே தொடர்ந்து தென்பட்டது.

2026 ஜூலை 9ஆம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், வோன்சான் மாளிகைக்கு அப்பால் கடலில் நங்கூரமிட்டுள்ள 60 மீட்டர் நீளமுள்ள கப்பல் காணப்படுகிறது. அதனுடன் அந்தக் கப்பலின் படமும் இடம்பெற்றுள்ளது.

வட கொரியா இந்தக் கப்பல்களின் அதிகாரப்பூர்வ உரிமையாளர்கள் குறித்த தகவல்களை ஒருபோதும் பொதுவெளியில் வெளியிட்டதில்லை. இருப்பினும், வரலாற்று செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்ததில், வட கொரியாவை கிம் ஜாங் இல் ஆட்சி செய்த 2002ஆம் ஆண்டிலும் இதே தனித்துவமான அம்சங்களைக் கொண்ட பெரிய கப்பல் ஒன்று வோன்சானில் இருந்தது தெரியவந்தது.

செயற்கைக்கோள் பட நிபுணர் ஜியோங் சியோங்-ஹாக் கூறுகையில், சிறிய படகுகள் பெரிய கப்பலுக்குப் பயணிகள், எரிபொருள் மற்றும் தேவையான பொருள்களைக் கொண்டு சென்றன. டே மற்றும் சின் போன்ற சிறிய தீவுகள், “பொதுமக்களின் பார்வையிலிருந்து விலகி, தனியுரிமையைப் பராமரிக்கக்கூடிய கடல்சார் ஓய்விடங்களை” வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு வட கொரியாவுக்குச் சென்ற முன்னாள் என்பிஏ நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன், வோன்சான் பகுதியில் கிம் ஜாங் உன்னுடன் தனது ஏழு நாள் பயணத்தின் பெரும்பகுதியைக் கழித்ததாக தி சன் நாளிதழிடம் தெரிவித்தார். அப்போது இருவரும் ஜெட் ஸ்கீயிங் மற்றும் குதிரை சவாரியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

அவர்கள் பயன்படுத்திய 60 மீட்டர் நீளமுள்ள ஒரு கப்பலை, படகுப் போக்குவரத்துக் கப்பலுக்கும் டிஸ்னி படகுக்கும் இடைப்பட்ட ஒன்றாகவும் அவர் விவரித்தார். இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில் காணப்படும் 60 மீட்டர் கப்பல் இதுதானா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வட கொரியாவின் பெரும்பாலான மக்களுக்கு, கிம் குடும்பத்தினரும் ஆட்சியை ஆதரிப்பவர்களும் வாழும் வாழ்க்கை ஆடம்பரமானதாக மட்டுமல்லாமல், கற்பனை செய்துகூட பார்க்க முடியாததாக இருக்கும். குறிப்பாக, நாட்டையே எப்போதும் முதன்மையாகக் கருதும் தன்னலமற்ற மனிதராக "உச்ச தலைவர்" இருப்பதாகச் சித்தரிப்பதிலேயே அரசின் பிரசாரம் கவனம் செலுத்துகிறது.

"கிம் ஜாங் உன் 'மக்களின் தலைவராக' இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சாதாரண மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவையாவது பெறுவதற்குப் போராடிக்கொண்டிருக்கும்போது, அவரிடம் இதுபோன்ற நான்கு சொகுசுக் கப்பல்கள் உள்ளன" என்கிறார் ரி ஜோங் ஹோ.

கிராஃபிக்ஸ்: அர்வின் சுப்ரியாடி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு