"நூறு முறை கேட்ட பிறகே திருமணம்" - விஜய் தேவரகொண்டா பேசியது ராஷ்மிகாவை அவமதிக்கிறதா? விவாதம் ஏன்?

விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
படக்குறிப்பு, விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
    • எழுதியவர், கமலாதேவி நல்லபனேனி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராஷ்மிகா: நாம் திருமணம் செய்துகொள்ளலாம்...

விஜய் தேவரகொண்டா: சரி... பார்க்கலாம். இப்போது ஏன்?

ராஷ்மிகா: நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.

விஜய் தேவரகொண்டா: இதே விஷயத்தை நீ என்னிடம் நூறு முறை கேள். அதன் பிறகு நாம் திருமணம் செய்துகொள்ளலாம்.

கரண் ஜோஹர்: உண்மையிலேயே நூறு முறை கேட்டீர்களா?

ராஷ்மிகா: திருமணத்துக்கு முன்பு ஓராண்டு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தேன். தினமும் கேட்டேன்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து பங்கேற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்த உரையாடலே தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
படக்குறிப்பு, ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா

திருமணமாகி இன்னும் ஓராண்டுகூட ஆகாத, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒரு திரை ஜோடி, தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது குறித்த விவாதம் மட்டுமல்ல இது.

திரையுலகில் பல வெற்றிகளைப் பெற்று, நாடு முழுவதும் புகழ்பெற்ற நடிகை ஒருவர், அதே துறையில் பிரபலமாக இருக்கும் நடிகரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்க வைக்கத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியிருந்தது ஏன்? அந்தச் சூழலை அவர் உருவாக்கியது சரியா? காதல் மற்றும் திருமண முன்மொழிவு தொடர்பான முற்றிலும் தனிப்பட்ட விஷயத்தை ஒரு தேசிய அளவிலான நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்வது சரியா? இத்தகைய கேள்விகளை முன்வைத்து சமூக ஊடகப் பயனர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த விவரங்களை விஜய் தேவரகொண்டா வெளிப்படுத்தியதால் ராஷ்மிகாவின் மரியாதைக்குப் பாதிப்பு ஏற்பட்டதா? விஜய் கூறியதன் உண்மையான பொருள் என்ன? இறுதியில், இருவருக்கும் இடையிலான காதலின் ஆழம் உலகத்துக்கே தெரியவந்துள்ளதா? காதல் மற்றும் திருமண விஷயத்தில் ராஷ்மிகா பலவீனமானவராகத் தோன்றுகிறாரா எனப் பல கோணங்களில் இந்த உரையாடல் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தன்னை திருமணம் செய்து கொள்ள விஜயை ஒரு வருடம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்ததாக ரஷ்மிகா கூறினார்.
படக்குறிப்பு, தன்னை திருமணம் செய்து கொள்ள விஜயை ஒரு வருடம் முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்ததாக ராஷ்மிகா கூறினார்

'விஜய் தேவரகொண்டா அவமதிக்கும் வகையில் பேசினாரா?'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நிகழ்ச்சி முழுமையாக ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே, திருமணம் குறித்து விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் பேசிய உரையாடலின் ஒரு பகுதி வெளியானது.

அப்போதே தொடங்கிய ட்ரோலிங் மற்றும் விமர்சனங்கள், நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு தீவிரமடைந்தன. தன்னைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் எழும் என்று தெரிந்திருந்தும் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொள்வதாக விஜய் தேவரகொண்டா கூறினார்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ராஷ்மிகாவை நூறு முறை கேட்கச் சொன்னதோடு, அந்த விஷயத்தை அந்நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்தியதன் மூலம் விஜய் தேவரகொண்டா அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், தனது ஆணவத்தை வெளிப்படுத்தியதாகவும் சிலர் விமர்சிக்கின்றனர்.

ஒரு உறவில் இருவருக்கு மட்டுமே இடையிலான விஷயங்களை, தேசிய அளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இருப்பதைத் தெரிந்துகொண்டே விஜய் வெளிப்படுத்தியதாகச் சிலர் கூறுகின்றனர். ராஷ்மிகாவின் சுயமரியாதையைப் பற்றி அவர் சிந்தித்திருந்தால் இந்த விஷயங்களை அனைவரின் முன்னிலையிலும் கூறியிருக்க மாட்டார் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ராஷ்மிகா தனது சுயமரியாதையைப் பேண வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ராஷ்மிகா தன்னை நிபந்தனையின்றிக் காதலிக்க வேண்டும் என்று விஜய் விரும்பியதாகவும், அவரது காதலை அவர் அலட்சியமாக எடுத்துக்கொண்டது போன்ற தோற்றம் ஏற்படுவதாகவும் மற்றொரு பயனர் கூறியுள்ளார்.

விஜய் ஆணவத்துடன் நடந்துகொண்டதாகவும், தான் கெட்டவன் அல்ல என்று அவர் கூறியதுகூட சரியான அணுகுமுறை அல்ல என்றும் மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்குச் சம்மதிக்கும் வரை, தனது துணையிடம் நூறு முறை திருமணம் செய்துகொள்ளக் கேட்கச் சொல்வதை நினைத்துப் பார்ப்பதற்கே சங்கடமாக இருப்பதாக மற்றொரு பயனர் கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு விஜயும் ராஷ்மிகாவும் இணைந்து ‘ரணபாலி’ திரைப்படத்தில் நடித்தனர்
படக்குறிப்பு, திருமணத்துக்குப் பிறகு விஜயும் ராஷ்மிகாவும் இணைந்து 'ரணபாலி' திரைப்படத்தில் நடித்தனர்

'விஜய் யோசித்துத்தான் முடிவெடுத்தார்'

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றும், அவரே விஜயிடம் திருமணத் திட்டத்தை முன்வைத்தார் என்ற காரணத்துக்காக பெண்ணியவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.

'ஆண்தான் முதலில் காதலைத் தெரிவிக்க வேண்டும் என்று பெண்கள் ஏன் காத்திருக்க வேண்டும்? ஒரு பெண் திருமண திட்டத்தை முன்வைப்பதில் என்ன தவறு? சமத்துவம் என்பதே அதுதானே?' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிகழ்ச்சியில் விஜய் தெரிவித்த கருத்துகளை சிலர் ஆதரிக்கின்றனர். ராஷ்மிகாவை நூறு முறை கேட்கச் சொன்னதற்கான காரணத்தைக் கவனித்தால், விஜயின் சிந்தனையைப் புரிந்துகொள்ள முடியும் என்று சமூக ஊடகப் பயனர்கள் சிலர் கூறுகின்றனர்.

வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். விஜயும் அந்தக் கொள்கையைத்தான் பின்பற்றியுள்ளார் என்பது அவர்களது கருத்து.

'திருமண முன்மொழிவை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு பெண் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்றால், ஓர் ஆண் கால அவகாசம் எடுத்துக்கொள்ளக் கூடாதா? விஜயை ஏன் குறிவைக்கிறார்கள்?' என்று பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் ராஷ்மிகாவை அவமதிக்கவில்லை என்றும், இருவரும் இணைந்து ஒரு உறவைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் மற்றொரு பயனர் கூறியுள்ளார். ராஷ்மிகாவைப் பாதிக்கப்பட்டவராகச் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் கரண் ஜோஹர், 'விஜய், ஏன் நூறு முறை?' என்று கேட்டபோது, விஜய் தேவரகொண்டா அளித்த விளக்கம்:

"திருமணம் என்பது மிக முக்கியமான முடிவு. எல்லா தடைகளையும் கடந்து நீடிக்கும் ஓர் உறவை விரும்புபவன் நான். 'நீ என்னைச் சோதிக்கிறாயா?' என்று ராஷ்மிகா கேட்டார். அப்போது எனக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டது.

ஆனால், நான் என்னையே சோதித்துக்கொண்டிருந்தேன். எங்கள் உறவையும் சோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்தக் கணத்தில் எதிரிலிருப்பவர் மீது மிகுந்த காதல் இருப்பதாகத் தோன்றுகிறது என்பதற்காக மட்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது.

மகிழ்ச்சியாக இருக்கும்போதும், சோகமாக இருக்கும்போதும், தொழிலுக்காக முழு நேரத்தையும் செலவிடும்போதும் அல்லது நடிப்பையே விட்டுவிட்டு வீட்டில் இருக்கும்போதும், வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் திருமணம் மிக முக்கியமானதாகத் தோன்றினால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் மனதில் இருந்தது. அதனால்தான் ராஷ்மிகாவை காத்திருக்கச் செய்தேன்" என்று விஜய் தேவரகொண்டா கூறினார்.

இதே நிகழ்ச்சியில், ஒரு நாள் மட்டும் திருமணம் ஆகாதவராக இருக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கரண் ஜோஹர் கேட்டார். அதற்குப் பதிலளித்த விஜய், தன்னால் தனியாக இருக்க முடியாது என்றும், ராஷ்மிகாவுடன் வாழப் பழகிவிட்டதாகவும், அவருடன் இருப்பது மிகவும் வசதியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

"என்னை நூறு முறை திருமணம் செய்து கொள்ளச் சொன்னால் திருமணம் செய்கிறேன்" என்று ரஷ்மிகாவிடம் கூறியதாக விஜய் தேவரகொண்டா கூறிய கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன
படக்குறிப்பு, "என்னிடம் நூறு முறை கேட்டால் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று ராஷ்மிகாவிடம் கூறியதாக விஜய் தேவரகொண்டா கூறிய கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன

'ராஷ்மிகா அப்படிப் பேசியிருக்கக் கூடாது'

விஜய் தேவரகொண்டாவின் கருத்துகளுக்கு பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் தேவரகொண்டா பாதுகாப்பின்மை உணர்வால் பாதிக்கப்பட்டிருப்பதாக அகில இந்திய பெண்ணியவாதிகள் சங்கத்தைச் சேர்ந்த வி. சுனீதா கருதுகிறார்.

"விஜய் தேவரகொண்டாவுடன் ஒப்பிடும்போது ராஷ்மிகாவின் வெற்றி விகிதம் அதிகம். அப்படிப்பட்ட ஒரு நடிகையைத் தனது மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவருக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அது இல்லாததால்தான் அவர் ராஷ்மிகாவை அத்தனை முறை கேட்கச் செய்திருக்கிறார். இப்போது திருமணத்துக்குப் பிறகும் அந்த விஷயத்தை வெளியில் கூறுகிறார்" என்று சுனீதா கருத்து தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகும் பெண்களை முழுமையான கதாநாயகிகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தெலுங்கு திரையுலகில் இன்னும் உருவாகவில்லை என்றும், இந்த விஷயத்தில் பாலிவுட்டின் நிலை ஓரளவு மேம்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

"திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஓராண்டு முழுவதும் விஜயிடம் கேட்டுக்கொண்டிருந்ததாக ராஷ்மிகா கூறியதும் சரியல்ல. ஒரு பெண் தனது தொழிலில் எவ்வளவு வெற்றி பெற்றிருந்தாலும், திருமணம்தான் அவரது இறுதி இலக்கு என்ற தவறான கருத்தை இந்தக் கூற்று சமூகத்துக்கு எடுத்துச் செல்கிறது" என்று சுனீதா விளக்கினார்.

தனக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஒரு பெண் திரும்பத் திரும்பக் கேட்பதைப் பெண் அதிகாரமளித்தலாகக் கருதுவது தவறு என்றும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்காலிக உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல், நீண்ட காலத்தில் அந்த உறவு எப்படியிருக்கும் என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா நினைப்பதில் தவறில்லை என்கிறார், பிரபல மருத்துவ மற்றும் மறுவாழ்வு உளவியலாளர் ராதிகா ஆச்சார்யா.

"விஜயின் கருத்துகளை அகந்தை என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. ஒருவருக்கொருவர் பிடித்தமான விஷயங்களிலும் பிடிக்காத விஷயங்களிலும் இணைந்து இருக்க வேண்டும் என்று தோன்றும்போது திருமணம் செய்துகொள்ளலாம் என நினைப்பது சரியானதே. அவர்களுடையது மிகவும் முதிர்ச்சியான உறவு. சிந்தனையுடனும் நிலைத்தன்மையுடனும் எடுக்கப்பட்ட முடிவு இது" என்று ராதிகா ஆச்சார்யா கூறினார்.

ராஷ்மிகாவுடன் ஒப்பிடும்போது விஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருந்ததாகவும், அதனால்தான் திருமண முடிவை எடுக்க அவர் அதிக காலம் எடுத்துக்கொண்டதாகவும் ராதிகா தெரிவித்தார். இருவரும் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறையை இன்றைய தலைமுறையினர் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

"ராஷ்மிகா திருமணம் செய்துகொள்ளுமாறு நூறு முறை கேட்டார் என்பதற்காக, அவர்களுடைய உறவில் ராஷ்மிகாவை பலவீனமானவராகக் கருதக் கூடாது. விஜயின் கருத்துகளை சரியான கோணத்தில் அவரால் புரிந்துகொள்ள முடிந்ததால்தான் ஓராண்டு காத்திருந்தார். இதில் எதிர்மறையான அம்சம் எதுவும் இல்லை" என்று ராதிகா கருத்து தெரிவித்தார்.

ரஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் இந்த ஆண்டின் பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டனர்.
படக்குறிப்பு, ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் இந்த ஆண்டின் பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் நடந்தது எப்படி?

ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் முதன்முதலில் 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். 2018-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'டியர் காம்ரேட்' படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். ராஷ்மிகா தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

'புஷ்பா' திரைப்படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் புகழ்பெற்று, 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரியில் ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் உதய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு