திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது ஏன்? வழக்கின் பின்னணி

அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது, ரூ.100 கோடி புகார்
படக்குறிப்பு, கோப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக பதிவான வழக்கில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த சில மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து சென்றுள்ளனர்

அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணை மேற்கொள்வார்கள்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் ஏற்கனவே அரசக்குமார் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் பின்னணி

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, நகர ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக, தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அரசகுமார், பதிவு செய்யப்படாத 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்டு, அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்குத் தேவையான அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியிருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தெரிவித்த தகவலின்படி, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது, ரூ.100 கோடி புகார்
படக்குறிப்பு, கோப்புப் படம்

அன்பில் மகேஸின் பெயர் எப்படி வந்தது?

அரசகுமார் தொடர்பான விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், கைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கிடைத்த தகவல்கள் மற்றும் அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் கூற்றுப்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பேசிய அவர், "மடியில் கனம் இல்லை" என்று கூறியதுடன், இந்தச் சோதனையால் தாங்கள் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு