'புதைத்த இடத்திலேயே மீண்டும் புதைக்க வேண்டிய நிலை' - கோவையில் அருந்ததியர் மக்கள் போராடுவது ஏன்? பிபிசி களஆய்வு

''எனது அம்மா துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர். அவர் கடந்த பிப்ரவரியில் இறந்துவிட்டார். அவரை இங்கேதான் புதைத்தோம். இப்போது அந்த இடமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக்கிடக்கிறது. குப்பைகளுக்கு மத்தியில்தான் நாங்கள் எங்கள் மக்களை புதைத்து வருகிறோம். நாங்கள் அருந்ததியர் என்பதால் 84 சென்ட் மயான இடத்தில் வெறும் 10 சென்ட் இடத்துக்குள் எங்களை முடக்குகின்றனர்!''
தன்னுடைய தாயார் புதைக்கப்பட்ட இடத்தை நேரில் காண்பித்த மென்பொருள் பொறியாளரான ஸ்ரீஹரிஹரன், பிபிசியிடம் வேதனையுடன் பகிர்ந்த வார்த்தைகள் இவை.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நகரப் பகுதியில் அமைந்துள்ள பட்டியலின மக்களுக்கான மயான இடத்தை முழுமையாக மீட்பதற்காக இந்த இளைஞர் உட்பட அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பல ஆயிரம் மக்களும் போராடி வருகின்றனர்.
இதுவரை மனுக்களை கொடுத்து வந்த அவர்கள், கடந்த நவம்பர் 18-ஆம் தேதியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிவதற்காக பிபிசி தமிழ் அங்கு களஆய்வு மேற்கொண்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த இடத்தில் மயானம் இருப்பதற்கு 2 சமாதிகளைத் தவிர வேறு எந்த அடையாளங்களுமே இல்லை.
மொத்தமுள்ள 84 சென்ட் இடத்தில் 9 சென்ட் இடம், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு எடுத்தது போக, மீதமுள்ள இடத்தில் குப்பைகள், புதர்களுக்கு மத்தியில் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
அரசு ஆவணங்களில் மயானம் என்றிருந்தும், உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றும் தங்களுக்கான மயான இடத்தை மீட்டுத்தர அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மறுத்துவருவதாக அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டினர்.
இதை மறுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கு 14 சென்ட் இடத்தை மட்டுமே மயானம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான விக்னேஷ் ஆகியோர் பதில் தரவில்லை. .
அடையாளம் எதுவுமே இல்லாத மயானம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட சிக்கலாம்பாளையம், அண்ணாநகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதிகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானம், கிணத்துக்கடவு நகரில் செக்போஸ்ட் (முன்பு வருவாய்த்துறை சோதனைச்சாவடி இருந்த இடம்) என்ற பகுதியில் அமைந்துள்ளது.
மொத்தம் 84 சென்ட் இடம் ஹரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என்று, வருவாய்த்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கான மயானத்தை 10 சென்ட் இடமாகக் குறுக்கி, மீதமுள்ள இடத்தில் 6 அடியாக இருந்த சாலையை விரிவாக்கம் செய்து, பிற பகுதிகள் ஆக்கிரப்பில் இருப்பதாக அருந்ததிய மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் புதைத்த இடத்திலேயே மீண்டும் உடல்களைப் புதைக்க வேண்டியிருப்பதாகவும் தங்களுடைய மயான இடத்தை முழுமையாக மீட்டு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்று இவர்கள் கோருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கிணத்துக்கடவில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
அருந்ததியர் இன மக்கள் குறிப்பிடும் அந்த மயான இடம், கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மேம்பாலத்துக்கு இடதுபுறத்தில் அமைந்துள்ளது.
பாலம் கட்டும்போது, சர்வீஸ் சாலை அமைப்பதற்காக இந்த 84 சென்ட் இடத்தில் 10 சென்ட் இடத்தை எடுத்து விட்டதாக மக்கள் தெரிவித்தனர். மீதமுள்ள 74 சென்ட் இடம் எங்கே துவங்கி எந்த இடத்தில் முடிவடைகிறது என்பதற்கு எந்த எல்லைக்கற்களையும் பார்க்க முடியவில்லை.
அதன் ஒரு பகுதியில் அதாவது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தையே மயானமாக மக்கள் பயன்படுத்தி வருவதை அறிய முடிந்தது. ஆனால் அங்கே மயானம் என்பதற்கான எந்த அடையாளங்களுமே இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பழமையான சமாதியும், கடந்த மாதத்தில் அதே பகுதியில் புதைக்கப்பட்ட ஒருவரின் மண் சமாதியும் மட்டுமே அது மயானம் என்பதற்கான அடையாளங்களாக இருந்தன.
மற்ற இடம் முழுவதிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. மயானம் என்பதற்கான அறிவிப்புப் பலகை, வேலி, எல்லைக்கற்கள் எதுவுமே அங்கில்லை.
மயான இடம் என்பதற்கான வரைபடம், வருவாய்த்துறை ஆவண ஆதாரங்களை, மயான மீட்புக்குழுவினர் பிபிசியிடம் பகிர்ந்தனர்.
அந்த இடத்தில் ஒரு மின்மாற்றி உள்ளது. அருகிலுள்ள ஒர்க் ஷாப் செல்வதற்கான பாதை உள்ளது. மீதமுள்ள இடத்தில் குறைந்த பட்சம் 15 முதல் 20 அடி வரையிலான சாலை அமைந்துள்ளது. மற்ற இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மயானத்துக்குரிய இடத்தில் நிரந்தர ஆக்கிரமிப்பு எதுவும் இருந்ததை பிபிசியால் உறுதி செய்யமுடியவில்லை.
மயான இடம் எப்படி சுருக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து, சிக்கலாம்பாளையம், அண்ணாநகர் மற்றும் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மக்கள் பலரும், குறிப்பாக இளைஞர்கள் பலரும் அங்கு வந்து நேரில் விளக்கினர்.
பிபிசியிடம் பேசிய சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீஹரிஹரன், ''எனது தாயார் தேன்மொழி, துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர். அவர் கடந்த பிப்ரவரியில் இறந்துவிட்டார். அவரை இங்கேதான் புதைத்தோம். இப்போது அவர் புதைத்த இடம் எதுவுமே தெரியாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த இடம் பராமரிப்பின்றியும், பாதுகாப்பின்றியும் இருப்பதால்தான் இங்கு குப்பைகளைக் கொட்டுகின்றனர். அவற்றைக் கடந்து சமாதிக்கு செல்ல முடியாததால் புதர் மண்டியுள்ளது.'' என்றார்.
''இதே பகுதியில் மயானத்துக்குரிய வேறிடத்தில்தான் எனது தாயாரைப் புதைக்க நினைத்தோம். ஆனால் அங்கே புதைக்க இங்குள்ள ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் வேறு வழியின்றி இங்கே புதைத்தோம். இங்கே வெளிப்படையாக சாதியப் பிரச்னைகள் தெரிவதில்லை. ஆனால் நாங்கள் அருந்ததியர் என்ற ஒரே காரணத்துக்காகவே எங்கள் மக்களை இங்கே புதைக்கவிடக்கூடாது என்று அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடிச் செயல்படுகின்றனர்.'' என்றார் ஸ்ரீஹரிஹரன்.
உயர்நீதிமன்ற உத்தரவும் அருந்ததியர் இன மக்களின் ஆர்ப்பாட்டமும்!

இதே கருத்தை அங்கிருந்த பல்வேறு இளைஞர்களும் தெரிவித்தனர்.
மயான இடத்தை மீட்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மயான மீட்புக்குழுவைச் சேர்ந்த சிவகாமி, பிபிசியிடம் பல்வேறு ஆவணங்களைப் பகிர்ந்ததுடன் இந்த மயான பிரச்னை எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது என்பதையும் விவரித்தார்.
இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை கிழக்கு மாவட்ட ஒன்றியச்செயலாளராகவும் இருக்கிறார்.
பிபிசியிடம் பேசிய சிவகாமி, ''எங்களுடைய முன்னோர் காலத்தில் 84 சென்ட் இடமுமே மயானமாகத்தான் இருந்தது. அப்போது 6 அடியாக இருந்த வண்டிப்பாதையை இப்போது 15 அடி, 20 அடிக்கு அகலப்படுத்தி விட்டனர். மற்ற இடங்களை பலவிதமாக ஆக்கிரமித்து விட்டனர். இதனால் 10 சென்ட் இடத்துக்குள் எங்கள் மயானத்தைச் சுருக்கிவிட்டனர். இதுதொடர்பாக எங்களிடம் இருக்கின்ற ஆவணங்களை வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். இதில் முடிவெடுக்க கோவை கலெக்டருக்கும், தாசில்தாருக்கும் கோர்ட் உத்தரவிட்டது.'' என்றார்.
''அதன்பின்பு, கிணத்துக்கடவு தாசில்தார் எங்களிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் டிஜிட்டல் முறையில் அளந்ததாகக் கூறி, மொத்தம் 10 சென்ட் இடம்தான் எங்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறி கல்லை நட்டுள்ளார். மீதமுள்ள இடம் மற்றவர்கள் பயன்பாட்டில் இருப்பதால் அவர்களிடமே ஒப்படைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். பட்டியலின மக்களுக்குரிய மயான இடம், மற்ற சமுதாயத்தினருக்குப் போகக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இப்போது ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.'' என்றார் சிவகாமி.

மயான இடத்தை மீட்பது தொடர்பாக, சிக்கலாம்பாளையம், அண்ணாநகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதியிலுள்ள அருந்தியர் இன மக்களால் மயான மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் சார்பில் மயான இடத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி தராததால், கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையப் பகுதியில் நவம்பர் 18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச்சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக ''மயானத்திற்கு 10 சென்ட் இடம் போதுமா'' என்ற தலைப்பில் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
பிபிசியிடம் பேசிய மயான மீட்புக்குழுவைச் சேர்ந்த புருஷோத்தமன், ''எங்களுடைய தாத்தா, அவர்களின் தாத்தா காலத்திலிருந்து அங்கே எங்கள் சமுதாய மக்கள் புதைக்கப்பட்டுள்ளனர். அப்போது ஆறடி இருந்த பாதையில் பாலம் கட்டுவதற்காக மாற்றுப்பாதை அமைத்தனர். அதை அப்படியே நிரந்தரமாக அகலப்படுத்தி எங்களுடைய மயான இடத்தைச் சுருக்கி 10 சென்ட் இடத்தில் எங்களை முடக்கிவிட்டனர்.'' என்றார்.
''இதனால் புதைத்த இடத்திலேயே ஒரு உடலைத் தோண்டி எடுத்துவிட்டு, வேறு உடலைப் புதைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அருந்ததியர் என்ற ஒரே காரணத்தால்தான் எங்களுடைய மயானத்தை அங்கிருந்து அகற்றப் பார்க்கின்றனர். அந்த இடத்தை அளந்தால்தான் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று தெரியவரும். ஆனால் அதிகாரிகள் நேரில் வந்து அளக்காமல் டிஜிட்டல் முறையில் அளந்ததாகக் கூறி, 10 சென்ட் இடத்தை மட்டும் எங்களுக்கு ஒதுக்கித் தந்துள்ளனர். நாங்கள் பல ஆண்டுகளாக மனுக்கொடுத்து எந்த பலனுமின்றிதான் இப்போது நேரடியாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.'' என்றார் புருஷோத்தமன்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்புக்குழுவின் மாநில துணைச்செயலாளர் அந்தோணி அன்பரசு, ''எங்கள் சமுதாய மக்கள் உடல்களை எரியூட்டுவதில்லை. புதைப்பதே எங்கள் வழக்கம். இந்த மக்கள் தங்களுக்கு வீடுகள் கட்ட இடம் கேட்கவில்லை. இறந்த பின்பு தங்களை புதைப்பதற்கு ஒரு நிரந்தரமான இடம் கேட்கின்றனர். அதையும் தர அதிகாரத்தில் இருப்பவர்கள் மறுக்கின்றனர். அதனால்தான் இங்கு மக்கள் நடத்தும் போராட்டத்தை விசிக ஆதரிக்கிறது.'' என்றார்.
கிணத்துக்கடவு தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ். அவரிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்றும் அவரும் இதற்கு தீர்வு காணவில்லை என்று குற்றம்சாட்டுகிறார் சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த விஜயா.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த அவர் பிபிசியிடம் பேசியபோது, ''நான் சிறுவயதாக இருக்கும்போது அந்த மயானத்தில் வண்டிப்பாதை மட்டும்தான் இருந்தது. இப்போது பஸ் போகும் அளவுக்கு ரோட்டை அகலப்படுத்தி, மயானத்தைச் சுருக்கிவிட்டனர். மற்ற இடங்களில் ஒர்க் ஷாப், கட்டடம் கட்டியும், வண்டிகளை நிறுத்தியும் ஆக்கிரமித்துவிட்டனர். எங்களுக்கு மயான இடத்தை மறுபடியும் மீட்டுத்தர வேண்டும்.'' என்றார்.
தற்போதுள்ள தவெக கூட்டணி ஆட்சியில் வி.சி.க. பங்கேற்றுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து அமைச்சர் விக்னேஷின் கவனத்திற்கு கொண்டு சென்றீர்களா, அப்போது அவர் அளித்த பதில் என்ன, எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வியை அன்பரசுவிடம் பிபிசி தமிழ் கேட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ''அமைச்சர் விக்னேஷின் கவனத்திற்கு சமீபத்தில்தான் கொண்டு சென்றோம். அவர் இதற்கு தீர்வு காண்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பே இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை திட்டமிட்டு இருந்ததால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்துகிறோம். அமைச்சர் வன்னி அரசு கவனத்திற்கும் இதைக் கொண்டு சென்றிருக்கிறோம். இங்கேயிருக்கும் அதிகாரிகள்தான், மயானத்தை மீட்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். விரைவில் தீர்வு காணாவிட்டால் மயானத்திலேயே போராட்டம் நடத்துவோம்.'' என்றார்.
தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இளவேனில், ''அரசுக்குச் சொந்தமான அரை சென்ட் இடத்தை சாதாரண மக்கள் யாராவது ஆக்கிரமித்தால், உடனே அவற்றை அதிரடியாக அகற்றும் அரசு அதிகாரிகள், இங்கே 84 சென்ட் மயான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அகற்றாமல் 10 சென்ட் இடத்தை மட்டும் ஒதுக்கிக் கொடுக்கின்றனர். அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இதுவே அதிகம் என்று இங்குள்ள அதிகாரிகளிடம் காணப்படுகிற மனோபாவத்தையே இது வெளிப்படுத்துகிறது.'' என்றார்.
மயான இடத்தை பலரும் ஆக்கிரமித்துள்ளதாக அருந்ததியர் இன மக்கள் குற்றம்சாட்டும் நிலையில், அந்த மயானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கடை வைத்திருப்போர், வண்டிகள் நிறுத்தியிருப்பவர்களிடம் இதுகுறித்து கருத்துக்கேட்க பிபிசி முயன்றபோது யாரும் பதில் தரமறுத்துவிட்டனர்.
பெயர் கூற விரும்பாத ஒரு ஊழியர், ''இங்கே ஆக்கிரமிப்பு எதுவுமில்லை. பாதையாக மட்டுமே அந்த இடத்தைப் பயன்படுத்துகிறோம். இந்த பாதை அடைக்கப்பட்டாலும் இந்த கடைகளுக்கு வருவதற்கு மற்றொரு வழியாக பாதை இருக்கிறது.'' என்றார்.
அமைச்சரின் தொகுதி: ஆட்சியர் உத்தரவு: போராடும் மக்களின் 3 ஆலோசனை!

சொலவம்பாளையம் கிராம ஊராட்சியிலுள்ள அருந்ததியர் இன மக்களின் போராட்டக்கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிவதற்காக இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான விக்னேஷை தொடர்பு கொண்டபோது அவரிடம் பதில் பெறமுடியவில்லை.
கிணத்துக்கடவு வருவாய் வட்டாட்சியர் வாசுதேவனை நேரில் சந்தித்த பிபிசி, அருந்தியர் இன மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ''மொத்தம் 84 சென்ட் இடமும் ஹரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என்று மட்டுமே வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. எவ்வளவு இடம் மயானத்துக்கு, எவ்வளவு இடம் வண்டிப்பாதைக்கு என்று பிரிக்கப்படவில்லை. இதில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு 9 சென்ட் இடம் எடுக்கப்பட்டு விட்டது.'' என்றார்.
''மீதமுள்ள இடத்தை மயானமாக அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு முடிவெடுக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 14 சென்ட் இடம் மயானம் என்றும், பிற பகுதி பாதை என்றும் இப்போதுள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த இடம் நகரப்பகுதியாகிவிட்டதால் அந்த சாலை மிகவும் அவசியமானதாகவுள்ளதால் 14 சென்ட் இடம் பிரித்துத் தரப்பட்டுள்ளது.'' என்றார்.
இதில் மயானத்தை ஒட்டியுள்ள சாலையின் ஒரு புறம், சொலவம்பாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டதாகவும், சாலையின் மறுபகுதி வடபுதூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டதாகவும் இருப்பதாகக் கூறிய வட்டாட்சியர் வாசுதேவன், இவ்விரு பகுதிகளிலுமே எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்றும் உறுதி கூறினார்.
மேலும் பேசிய வட்டாட்சியர், ''மயானத்துக்கு மாற்று இடம் கோரினால் அதுபற்றி ஆய்வு செய்யப்படும். ஆனால் அதற்கான இடத்தை அவர்களே தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்து கொடுத்தால் அந்த இடத்தில் மயானம் அமைக்கப்பட்டு, தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

மாற்று இடம் கோரிக்கையை மக்கள் ஏற்பார்களா என்று மயான மீட்புக்குழு உறுப்பினர் சிவகாமியிடம் கேட்டபோது, ''நாங்கள் 3 விதமான தீர்வுகளை முன் வைக்கிறோம். இதே கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரிலிருந்து 2 ஏக்கர் இடத்தை ஒதுக்கி, அங்கே மயானத்தை அமைத்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். அடுத்ததாக சிக்கலாம்பாளையத்திலேயே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மயானம் உள்ளது. அதை பொது மயானமாக அறிவிக்க வேண்டும்.'' என்றார்.
''இதுபற்றி அதற்கு அதிகாரமுள்ள அதிகாரிகள் யாரும் எங்களுடன் பேசுவதற்குத் தயாராகயில்லை. மற்றொரு தீர்வு, இந்த 74 சென்ட் இடத்திலேயே மின்மாற்றியை இடம் மாற்றிக் கொடுத்து, அருகிலுள்ள தனியார் காலியிடத்தை கையகப்படுத்தி சதுர வடிவில் இடத்தைத் தயார் செய்து, சுற்றுச்சுவர், கழிப்பிடம், தண்ணீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும்.'' என்றார் மயான மீட்புக்குழு உறுப்பினர் சிவகாமி.
அரசு ஆவணங்களில் ஹரிஜன் மயானம் மற்றும் வண்டிப்பாதை என்று 84 சென்ட் இடம் குறிக்கப்பட்டுள்ள நிலையில், 9 சென்ட் இடம் மட்டுமே சாலை விரிவாக்கத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் வெறும் 14 சென்ட் இடத்தை மட்டும் மயானமாக தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் குறித்துத் தந்துள்ளதாக கிணத்துக்கடவு வருவாய் வட்டாட்சியர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
வெறும் 14 சென்ட் இடம், 2 ஆயிரம் பேருக்கான மயானமாக எப்படி பயன்படுத்த முடியும் என்பதே இங்குள்ள மக்களின் கேள்வியாக இருக்கிறது.
இதுகுறித்து கருத்துக்கேட்பதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரை நேரில் சந்திக்கச்சென்றும், அலைபேசியில் கருத்துக் கேட்க முயன்றும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை. அவர் பதிலளிக்கும்பட்சத்தில் அது இந்தக் கட்டுரையில் இணைக்கப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































