மிசா சட்டத்தில் கைதானபோது ஸ்டாலின் தாக்கப்பட்டாரா? வரலாற்று ஆவணங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், DMK
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரை நூற்றாண்டுக்கு முன் நடந்தவை குறித்து பேசிய சில கருத்துகள் தற்போது சர்ச்சையாகி வருகின்றன. 1976-ஆம் ஆண்டில் மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சட்டப்பேரவையில் பேசிய விஜய், "அந்த மிசா வரலாற்றைப் பற்றி எல்லாருக்கும் தெரியும்" என்றார். இதுகுறித்து பேசிய போது அவர் செய்த உடல்மொழியே எதிர்ப்பையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். 'தம்பி' விஜய் என்று குறிப்பிட்டு, மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து பேசிய அந்த வீடியோவில், "ஒரு பானையில் பத்து பேர் சிறுநீர் கழிக்க வேண்டும். இரவில் தூங்கவிடாமல் போலீஸார் பூட்ஸ் காலால் மிதிப்பார்கள், லத்தியால் அடிப்பார்கள், ஆயுள் தண்டனை கைதிகளை கொண்டு எங்களை அடிப்பார்கள். அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பு எல்லாம் உடைந்துவிட்டது. நீங்கள் கை வைத்து தாடையை காண்பித்தது சரி தான். இன்றும் நான் அடி வாங்கிய தழும்புகள் என் உடம்பில் உள்ளன. யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
அதே நேரம் சட்டப்பேரவையில் மக்கள் நலன், சட்டம்-ஒழுங்கு, தமிழ்நாட்டின் உரிமை ஆகியவற்றை குறித்து பேச வேண்டும் என்றும் தேவை இல்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம் என்பது தன்னுடைய கோரிக்கை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
மிசா சட்டம்
விசாரணையின்றி கைது செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்கும் 'உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்பு சட்டம்' (MISA – Maintenance of Internal Security Act) அதாவது மிசா சட்டம் 1971-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 1975-77 காலக்கட்டத்தில் இந்த சட்டம் பரவலாக பயன்படுத்தப்பட்டது. அரசியல் எதிரிகளை, பத்திரிகையாளர்களை கைது செய்ய பயன்படுத்தப்பட்டதாக கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளான இச்சட்டம், 1978-ஆம் ஆண்டில் திரும்பப் பெறப்பட்டது.
காங்கிரஸ் பதவி இழந்து 1977-ஆம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு நெருக்கடி காலத்தில் நடைபெற்ற உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஷா ஆணையம் அமைக்கப்பட்டது.
அதே ஆண்டு, தமிழ்நாட்டின் அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி உத்தரவின் பேரில் நீதிபதி இஸ்மாயில் ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை மத்திய சிறையில் 1976ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1977ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மிசா கைதிகளுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காகவும் இதர காரணங்களுக்காகவும் அந்த ஆனையம் நியமிக்கப்பட்டது.

பட மூலாதாரம், DMK
2019-ஆம் ஆண்டில் சர்ச்சை
மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரா, சிறையில் இருந்த போது அவர் போலீஸாரால் இன்னல்களை அனுபவித்தாரா என்பது தற்போது திமுக மற்றும் தவெகவினர் இடையே சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையாக்கப்படுவது இது முதல் முறை அல்ல.
மு.க.ஸ்டாலினின் மிசா அனுபவம் குறித்து முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் 2019-ஆம் ஆண்டில் கேள்வி எழுப்பிய போதும் இது விவாதிக்கப்பட்டது. அப்போது இது குறித்து ஊடகங்களில் விளக்கம் அளித்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, "மிசா சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் திமுகவினர் 419 பேரும், திராவிடர் கழகத்தினர் 35 பேரும் கைது செய்யப்பட்டனர். அதில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் இருந்தனர். அவர்கள் கைதுக்கு முகாந்திரமே இல்லை என்றும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிசா தடுப்புக் காவல் உத்தரவு தெளிவற்றதாக இருந்ததாகவும் நீதிபதி ஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்." என்று தெரிவித்திருந்தார்.
ஷா ஆணையம் அமைப்பதற்கு முன்பாகவே இஸ்மாயில் ஆணையம் அமைக்கப்பட்டதால், ஷா ஆணையத்தின் விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் பங்குகொள்ளவில்லை என்றும் நீதிபதி சந்துரு குறிப்பிடுகிறார்.
நீதிபதி கே.சந்துரு 1976-ஆம் ஆண்டில் வழக்கறிஞராக இருந்தபோது, மிசா கைதிகள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த உடன், மிசா கைதிகளை நேரில் சென்று பார்த்தவர். மனித உரிமைகள் குறித்த வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் என்ற முறையில் சென்னை மத்திய சிறையில் அவர்களை சந்துரு சந்தித்திருந்தார். மேலும் இஸ்மாயில் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆஜராகியிருந்தார்.
நீதிபதி இஸ்மாயில் ஆணையம்
2019-ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையொன்றில் நீதிபதி கே.சந்துரு - "1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 9வது பிளாக்கில் ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் மனுவிலேயே சொல்லியிருந்தனர். சிறை அதிகாரிகள் இதனை மறுத்திருந்தாலும் இந்த (இஸ்மாயில்) விசாரணை ஆனையம் கைதிகள் தாக்கப்பட்டது உண்மை, அதற்காக சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்தது. அதனை ஏற்று அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தது" என்று தெரிவித்துள்ளார்.
1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையில் சிறை வார்டனின் நடத்தை குறித்து குறிப்பிடும் பத்தியில்,
"இதன் விளைவாக,1976ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இரவு ஒன்பதாவது பிளாக்கில் கைதிகளை அடித்ததில் திரு மனோகரன் பங்கேற்றார் என்ற முடிவுக்கு வர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த சூழ்நிலையில், சிறையில் அடைக்கப்படும் அரசியல் கைதிகளை முதல் வாய்ப்பிலேயே அடிக்கும், ஒரு வழக்கமான கொள்கையை சிறை அதிகாரிகள் கொண்டிருந்தனர் என்றும் அந்த அடி கொடூரமாகவும் இரக்கமற்றதாகவும் இருந்தது என்றும் நான் உறுதியாக கருதுகிறேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'அவரும் நானும்' புத்தகத்தில்...
மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் "அவரும் நானும்" என்ற தனது நூலில்,மிசா சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலினை சிறையில் சென்று சந்தித்தபோது நிகழ்ந்ததை குறிப்பிட்டுள்ளார். அதில், "அவர் லுங்கியும் முழு கைச்சட்டையும் அணிந்திருந்தார். மல்லிகா அக்கா அவர் ஏன் எப்போதும் போல் தனது சட்டை கையை சுருட்டி மேலே மடித்து வைக்கவில்லை என்று கேட்டார். அவர் (ஸ்டாலின்) தடுக்க முற்பட, மல்லிகா அக்கா சட்டையை மேலே தூக்கிவிட்டார். அவரது கையை நாங்கள் பார்த்தபோது பேரதிர்ச்சியுற்றோம். உடம்பில் வேறு எங்கேனும் காயங்கள் உள்ளனவா என்று அவர் கேட்டார். வேறு காயங்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் அவர் சொன்னார்" என்று எழுதியுள்ளார்.
மேலும், அந்நேரத்தில் அது குறித்து கேள்விகளை மேலும் கேட்க வேண்டாம் என்று சிறைக்கு உடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர் கூறியதாகவும், அப்படி கேட்டால் அவர் மீண்டும் அதே போன்ற தாக்குதல்களை சந்திக்க நேரிடும் என்றும் துர்கா ஸ்டாலின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1978-ஆம் ஆண்டு எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவையில் நீதிபதி இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கை குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை சிறையில் சந்தித்ததை குறிப்பிட்டு பேசினார்.
"செளக்கியமாய் இருக்கிறாயா என்று கேட்கலாம். ஆமாம், இருக்கிறேன் என்று சொல்லலாம். அடிப்பட்டாயாமே என்று நான் கேட்டதற்கு அதையெல்லாம் கேட்கக்கூடாது என்று என்னிடத்தில் சொல்லிவிட்டு, என் மகனிடத்தில் அந்தப் போலீஸ் அதிகாரி ஒரு பார்வையைத் திருப்ப, அவன் கண்கள் கலங்கி என்னிடத்தில் சொன்ன அந்தக் காட்சியினை நான் மறந்துவிடவில்லை. அடிபடவில்லை என்றுதான் சொன்னான். ஆனால், ஆம் அடிபட்டோம் என்று அவன் சொல்லியிருப்பானேயானால் அன்று மாலையோ அல்லது அடுத்த நாள் காலையோ அவன் மட்டுமல்ல, சிறைச்சாலையில் இருந்த அரசியல் கைதிகள் அனைவரும் அதே கோர நிலையைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது என்பதை நான் இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்" என்று பேசினார்.

பட மூலாதாரம், DMK
சென்னையின் மேயராக இருந்த திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான சிட்டிபாபு, மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எழுதிய நாட்குறிப்பில் மு.க.ஸ்டாலின் மீது விழவிருந்த அடிகளை தான் வாங்கிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
"ஸ்டாலின் தான் தமிழகத்து முதலமைச்சரின் மகன் என்று நேற்று வரை அறிந்த அந்த சுருளிராஜன் தன் கால் பூட்சால் அவன் அழகிய முகத்தை சுவைப் பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில், காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் கன்னத்தில் கை நீட்டினான்" என்று அவர் எழுதியதை கருணாநிதி 1978-ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் வாசித்து காண்பித்தார்.
இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையில் பக்கம் 40-ல் அன்றைய சிறைக் கண்காணிப்பாளராக இருந்த வித்யாசாகர் 1976ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் முந்தைய நாள் (மார்ச் 3, 1976) திமுக தலைவர் கருணாநிதி, மிசா கைதியாக இருந்த மு.க.ஸ்டாலினை மத்திய சிறையில் சந்தித்ததாகவும், அப்போது அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலில் ஸ்டாலின் தன்னை யாரும் அடித்ததாகக் கூறவில்லை என்றும் எழுதியிருந்தார்.
"இதுகுறித்து நீதிபதி இஸ்மாயில் தனது அறிக்கையில் அவரது சாட்சியம் நம்ப முடியவில்லை என்றும், அப்படியே அடிபட்டிருந்தால் அன்றைய காலகட்டத்தில் யாரும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் தாங்கள் அடிபட்டதைப் பற்றி சொல்லியிருக்க முடியாது என்றும், ஒருவேளை சொல்ல முயன்றிருந்தால் சிறை அதிகாரிகள், உறவினர்களை சந்திப்பதைத் தடுத்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தவிர, மோசமாக நடத்தப்பட்டதையும் திமுகவினரைக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய பலவந்தப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்ட நீதிபதி இஸ்மாயில், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரைத்திருந்தார்" என்று நீதிபதி கே.சந்துரு கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























