சீனா, துருக்கி உதவியுடன் பாகிஸ்தான் உருவாக்கிய வான் பாதுகாப்பு அமைப்பு - இந்தியாவின் பிரம்மோஸை தடுக்க முடியுமா?

பாகிஸ்தான் விமானப்படை செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட காணொளியில் மூன்று வெவ்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், DGPR_PAF

    • எழுதியவர், முனஸ்ஸா அன்வர்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகன (யுஏவி) ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள ராணுவங்களுக்கு வான் பாதுகாப்பு மேலும் சவாலானதாக மாறியுள்ளது.

இதனால் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சிறிய டிரோன்களின் பெருமளவிலான தாக்குதல்களை எவ்வாறு தடுக்கலாம் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் விமானப்படை தனது குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த சீனா மற்றும் துருக்கியின் உதவியை நாடியுள்ளது.

இதில் ஏவுகணைகள், தானியங்கி பீரங்கிகள் மற்றும் டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன.

பாகிஸ்தான் விமானப்படை செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட காணொளியில் மூன்று வெவ்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகள் காணப்பட்டன.

அவை:

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹெச்க்யூ-17ஏஇ குறுகிய தூர தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை அமைப்பு

துருக்கியின் அசெல்சான் கோர்குட் 35 மிமீ தானியங்கி வான் பாதுகாப்பு பீரங்கி அமைப்பு

துருக்கியின் அசெல்சான் சாஹின் 40 மிமீ டிரோன் எதிர்ப்பு அமைப்பு

இந்த அமைப்புகள் அனைத்தும் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்புக் கவசமாக செயல்படுகின்றன. முக்கிய ராணுவ தளங்களை டிரோன்கள், யுஏவி ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் தாழ்வான உயரத்தில் பறக்கும் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதே இவற்றின் நோக்கமாகும்.

இந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மூன்று அடுக்குகளைக் கொண்ட குறுகிய தூர வான் பாதுகாப்பின் அடிப்படை யோசனை என்னவென்றால், வரும் அச்சுறுத்தலைத் தடுக்க ஒரே ஆயுதத்தை நம்பாமல், வெவ்வேறு தூரங்களில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதாகும்.

இதன் மூலம் ஒரு வான்வழி இலக்கை (ஏவுகணை) அதன் குறிக்கோள் இடத்தை அடையும் முன்பே கண்டறிந்து, கண்காணித்து, அழிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆய்வாளர் ஃபாரூக் சௌத்ரியின் கூற்றுப்படி, டிரோன்கள் மற்றும் பிற தாழ்வான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாகிஸ்தான் விமானப்படை சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹெச்க்யூ-17ஏஇ ஏவுகணை அமைப்புடன் பீரங்கி அடிப்படையிலான பல அடுக்குப் பாதுகாப்பு முறைகளை இணைக்கும் உத்தியை பின்பற்றியிருப்பதைக் காட்டுகின்றன.

அவருடைய கருத்துப்படி, டிரோன்களுக்கு எதிரான இந்த பாதுகாப்பு கட்டமைப்பில் பீரங்கி அடிப்படையிலான மூன்று தனித்தனியான பாதுகாப்பு அடுக்குகள் உள்ளன.

  • சாஹின் 40 மிமீ அமைப்பை சுமார் 700 மீட்டர் தூரத்திற்குள் உள்ள சிறிய டிரோன்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.
  • 35 மிமீ கோர்குட் பீரங்கியின் செயல்திறன் மிக்க தாக்குதல் வரம்பு சுமார் 4 கிலோமீட்டர்.
  • 76 மிமீ எல்டி-76 பீரங்கியை அடிப்படையாகக் கொண்ட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, சுமார் 10 கிலோமீட்டர் வரையிலான தொலைவைக் கொண்ட கூடுதல் வெளிப்புறப் பாதுகாப்பு அடுக்கை வழங்க முடியும்.

எனினும், பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்ட காணொளியில் எல்டி-76 அதிகாரப்பூர்வமாக இடம்பெறவில்லை என்று ஃபாரூக் கூறுகிறார். சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் விமானப்படையின் அதிகாரப்பூர்வ சின்னம் இடம்பெற்ற புகைப்படம் ஒன்று வெளியாகியதாகவும், அதில் பாகிஸ்தான் மற்றும் சீனக் கொடிகளுடன் எல்டி-76 பீரங்கியும் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், எதிர்காலத்தில் இந்த அமைப்புக்கான ஆர்டர் வழங்கப்படலாம் என்று அவர் கருதுகிறார்.

அவரது கருத்துப்படி, இந்த பீரங்கி அடிப்படையிலான அமைப்புகளுக்கு ஆதரவாக சீனாவில் தயாரிக்கப்பட்ட ஹெச்க்யூ-17ஏஇ குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு உள்ளது.

இந்த அமைப்பு சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை டிரோன்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. மேலும், பீரங்கிகளால் தடுக்க முடியாத பல்வேறு வான்வழி ஆயுதங்களையும் எதிர்கொள்வதற்குப் பயன்படுத்த முடியும்.

ஹெச்க்யூ-17ஏஇ என்பது சீனாவில் தயாரிக்கப்பட்ட குறுகிய தூர தரை-வான் ஏவுகணை அமைப்பு

பட மூலாதாரம், DGPR_PAF

படக்குறிப்பு, ஹெச்க்யூ-17ஏஇ என்பது சீனாவில் தயாரிக்கப்பட்ட குறுகிய தூர தரை-வான் ஏவுகணை அமைப்பு

முதல் பாதுகாப்பு அடுக்கு: சீனாவின் ஹெச்க்யூ-17ஏஇ

வெளிப்புற பாதுகாப்பு அடுக்கை ஹெச்க்யூ-17ஏஇ வழங்குகிறது. இது சீனாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் தாக்குதல் நடத்தும் குறுகிய தூர ஏவுகணை அமைப்பாகும்.

விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பிற வான்வழி இலக்குகளை தாக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நகர்த்தக்கூடிய தன்மை, பல்வேறு இடங்களில் இதை நிலைநிறுத்த அனுமதிக்கிறது.

இந்த பாதுகாப்பு கட்டமைப்பில் ஹெச்க்யூ-17ஏஇ, ஒப்பீட்டளவில் நீண்ட தூரங்களில் வரும் அச்சுறுத்தல்களை இலக்காகக் கொண்டு முக்கிய ராணுவ தளங்களுக்கான முதல் வரிசை பாதுகாப்பாக செயல்படுகிறது.

துருக்கியின் கோர்குட்: பீரங்கி அடிப்படையிலான பாதுகாப்பு

துருக்கியில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சியில் காணப்பட்ட அசெல்சான் நிறுவனத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம், Serhat Cagdas/Anadolu via Getty Images

படக்குறிப்பு, துருக்கியில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சியில் காணப்பட்ட அசெல்சான் நிறுவனத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு

இரண்டாவது பாதுகாப்பு அடுக்காக துருக்கி நிறுவனமான அசெல்சான் உருவாக்கிய கோர்குட் 35 மிமீ தானியங்கி வான் பாதுகாப்பு பீரங்கி அமைப்பு உள்ளது.

கோர்குட், புரோகிராம் செய்யக்கூடிய வான்வெடிப்பு வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகிறது. அவை வானில் வெடித்து உலோகத் துண்டுகளின் மேகத்தை உருவாக்குகின்றன. இதன் மூலம் டிரோன்கள், ஹோவர்கிராஃப்ட்கள் மற்றும் தாழ்வாக பறக்கும் பிற இலக்குகளை தாக்க முடியும்.

பெருமளவிலான டிரோன் தாக்குதல்களுக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

குறைந்த செலவிலான வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக விலையுயர்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதை விட இது சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.

இறுதி பாதுகாப்பு அடுக்கு: துருக்கியின் சாஹின்

23 அக்டோபர் 2024 அன்று துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மற்றும் விண்வெளிக் கண்காட்சியில் அசெல்சான் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட “கோர்குட் 25 மிமீ நெருங்கிய வான் பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம், Serhat Cagdas/Anadolu via Getty Images

படக்குறிப்பு, 23 அக்டோபர் 2024 அன்று துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மற்றும் விண்வெளிக் கண்காட்சியில் அசெல்சான் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட கோர்குட் 25 மிமீ நெருங்கிய வான் பாதுகாப்பு அமைப்பு

மிகவும் உள்புறத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அடுக்கில் 40 மிமீ டிரோன் எதிர்ப்பு அமைப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிய மற்றும் மிகச் சிறிய ஆளில்லா வான்வழி வாகனங்களை (யுஏவி) எதிர்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாஹின் அமைப்பில் ரேடார், மின்னணு-ஒளியியல் உணரிகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிச் சூட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இலக்கை நெருங்கியதும் காற்றிலேயே வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 40 மில்லிமீட்டர் ஏர்பர்ஸ்ட் குண்டுகளை இது பயன்படுத்துகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைச் சுற்றி இறுதிப் பாதுகாப்பு அரணாகச் செயல்படும் இந்த அமைப்பு, முதல் இரண்டு பாதுகாப்பு அடுக்குகளையும் கடந்து வரும் சிறிய வான் அச்சுறுத்தல்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்களுக்கு எதிரான குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ப்பதற்கு பாகிஸ்தான் விமானப்படை முன்னுரிமை அளித்து வருகிறது.

பட மூலாதாரம், DGPR_PAF

பாகிஸ்தான் விமானப்படையின் மாறிவரும் உத்தி

பாதுகாப்பு ஆய்வாளர் ஃபாரூக் சௌத்ரியின் கூற்றுப்படி, 2025 வரை பாகிஸ்தான் விமானப்படை தனது வான் பாதுகாப்புக்கு பெருமளவில் போர் விமானங்களையும் வான்வழி திறன்களையும் நம்பியிருந்தது.

ஆனால் டிரோன்கள் மற்றும் பிற வான்வழி ஆயுதங்களால் உருவான அச்சுறுத்தல்களால், இப்போது அதற்கு தனது உத்தியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தரைவழி வான் பாதுகாப்பில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.

அண்மையில் காட்சிப்படுத்தப்பட்ட மூன்று மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு விரிவான பாதுகாப்பு உத்தியின் அங்கமாகும் என்று அவர் கூறினார்.

இந்த உத்தியின் கீழ், டிரோன்களுக்கு எதிரான பயன்பாட்டிற்காக குறுகிய தூர வான் பாதுகாப்பு திறன்களைச் சேர்ப்பதற்கு பாகிஸ்தான் விமானப்படை முன்னுரிமை வழங்கி வருகிறது.

மேலும், மே 2025க்குப் பிறகு ஒரு ஆண்டுக்குள் இந்த அமைப்புகளை தன் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒருங்கிணைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.

டிரோன்களுக்கு எதிரான பலஅடுக்கு பாதுகாப்பு

பாகிஸ்தானிய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மாற்றங்கள் சமீபத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல்களில் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாகும்.

அந்த மோதல்களில் டிரோன்கள் மற்றும் யுஏவி ஆயுதங்களின் அதிகரித்த பயன்பாடு, பாரம்பரிய வான் பாதுகாப்பு அமைப்புகளின் குறைபாடுகளை வெளிப்படுத்துவதுடன் புதிய சவால்களையும் உருவாக்கியது.

இதன் விளைவாக உலகம் முழுவதும் உள்ள ராணுவங்கள் பலஅடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை நோக்கி நகர்கின்றன. இவை பலவிதமான வான்வழி அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.

ஒவ்வொரு டிரோன் அல்லது வான்வழி அச்சுறுத்தலுக்கும் விலையுயர்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இத்தகைய பலஅடுக்கு அமைப்புகள் ஏவுகணைகள், வான் பாதுகாப்புப் பீரங்கிகள் மற்றும் டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கின்றன.

அச்சுறுத்தலின் தன்மை, தூரம் மற்றும் அளவைப் பொறுத்து ஏவுகணைகள், தானியங்கி பீரங்கிகள் அல்லது டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த இந்த உத்தி அனுமதிக்கிறது. இது பாதுகாப்பு வளங்களை மேலும் திறம்பட பயன்படுத்த உதவுகிறது.

சீன ஏவுகணைகளும் துருக்கிப் பீரங்கிகளும்

துருக்கியில் உருவாக்கப்பட்ட பீரங்கி தொழில்நுட்பத்தையும் சீன ஏவுகணை அமைப்புகளையும் இணைத்து, பாகிஸ்தான் விமானப்படை ஒரு “ஒருங்கிணைந்த தள பாதுகாப்பு அமைப்பை” உருவாக்க விரும்புகிறது.

பட மூலாதாரம், DGPR_PAF

ஃபாரூக் சௌத்ரியின் கூற்றுப்படி, துருக்கியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி தொழில்நுட்பத்தையும் சீன ஏவுகணை அமைப்புகளையும் இணைத்து "ஒருங்கிணைந்த தள பாதுகாப்பு அமைப்பு" ஒன்றை உருவாக்க பாகிஸ்தான் விமானப்படை விரும்புகிறது.

இந்த அணுகுமுறையின் மூலம், டிரோன்களிலிருந்து தொடங்கி தாழ்வான உயரத்தில் பறக்கும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர குண்டுகள் வரை பல்வேறு வான்வழி ஆயுதங்களை எதிர்கொள்ளும் திறனைப் பெற விமானப்படை முயல்கிறது.

இது சீனா மற்றும் துருக்கியுடன் பாகிஸ்தான் வளர்த்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கும் சான்றாக உள்ளது.

எல்லா வகையான வான்வழி அச்சுறுத்தல்களுக்கும் இது போதுமா?

இந்த அமைப்புகள் முதன்மையாக குறுகிய தூரம் மற்றும் தாழ்வான உயரத்தில் வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, பாகிஸ்தானுக்கான முழுமையான வான் பாதுகாப்பு தீர்வாக இவற்றைக் கருத முடியாது.

ஃபாரூக் சௌத்ரியின் கருத்துப்படி, இந்தியாவின் பிரம்மோஸ் போன்ற அதிவேக குரூஸ் ஏவுகணைகளிலிருந்து இவை பாதுகாப்பளிக்காது. எனவே, அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் விமானப்படை வேறு பாதுகாப்புத் திறன்களை நம்ப வேண்டியிருக்கும்.

குறுகிய தூர ஏவுகணைகள், தானியங்கி பீரங்கிகள் மற்றும் டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைந்த பாதுகாப்பு கட்டமைப்பில் சேர்த்திருப்பது, டிரோன்கள் வான் பாதுகாப்பு முன்னுரிமைகளை எவ்வளவு மாற்றியுள்ளன என்பதை காட்டுகிறது.

இன்றைய சூழலில் சவால் என்பது அதிவேக போர் விமானங்கள் அல்லது குரூஸ் ஏவுகணைகளைத் தடுப்பது மட்டுமல்ல. பெரிய எண்ணிக்கையில் பயன்படுத்தப்படக்கூடிய சிறிய மற்றும் ஒப்பீட்டளவில் மலிவான டிரோன்களை எதிர்கொள்வதும் ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு