இந்து மதக் குழுவின் வருகைக்கு பிறகு ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டான் சேல்ஸ் மற்றும்
- எழுதியவர், மிமி ஸ்வாபி, உலக விவகாரங்கள் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இந்து மதக் குழுவினர் வருகைக்காக பெண் பணியாளர்கள் சிலர், பணியிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈஃபிள் கோபுரம் திங்கள்கிழமை மூடப்பட்டது.
போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்புடன் தொடர்புடைய சுமார் 100 பேர் கொண்ட குழு, சனிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தைப் பார்வையிட்டது.
அவர்கள் நினைவுச்சின்னத்துக்கு வந்தபோது, பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஊழியர் சங்கப் பிரதிநிதி டயான் டவோயின் தெரிவித்துள்ளார்.
"இந்தக் குழுவினர் வருகையின்போது, ஆண் ஊழியர்களை அந்த இடங்களில் பணியமர்த்துவதற்காக, பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்," என்று அவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிர்வாகம் பின்னர் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் டவோயின் கூறினார்.
"நடந்த சம்பவத்தாலும், சில பெண் ஊழியர்கள் நடத்தப்பட்ட விதத்தாலும் அவர்கள் அனைவரும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது," என்று டவோயின் கூறினார்.
"வார இறுதியில் பதற்றம் அதிகரித்தது. எனவே, ஊழியர்கள் ஒன்றுகூடினர். முதலில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், இனிமேல் நிறுவனத்தில் பெண்கள் ஒருபோதும் இதுபோன்று நடத்தப்படாததை உறுதி செய்யவும் அவர்கள் முடிவு செய்தனர்," என்றும் அவர் கூறினார்.
பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் எஸ்இடிஇ நிறுவனமும், பெண்களுடனான "தொடர்புகளைத் தவிர்க்கும் வகையில்" இந்த வருகையை ஏற்பாடு செய்யுமாறு அந்தக் குழு கேட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தியது என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இதுபோன்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது," என்று அந்த நிறுவனம் ஏஎஃப்பியிடம் தெரிவித்தது.

பட மூலாதாரம், Reuters
அத்தகைய நிபந்தனைகள் "எஸ்இடிஇ நிறுவனத்தின் மதிப்புகளுக்கும், ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான சமத்துவக் கொள்கைகளுக்கும்" முரணானவை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
எஸ்இடிஇ நிறுவனத்தின் தலைவர் ஏரியல் வெய்ல்,"இது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறை அல்ல. ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான சமத்துவம் மற்றும் கொள்கைகளில் ஈஃபிள் கோபுரம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்," என்றார்.
இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் சங்கமான யூனியன் கான்ஃபெடரேஷன் ஜெனரல் டு டிரவாயில் அமைப்பிடம் பதில் கேட்டு பிபிசி தொடர்புகொண்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
தலைவர்கள் கூறியது என்ன?
போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பிஏபிஎஸ்) அமைப்பு, பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் பிரான்சில் தனது முதல் பெரிய கோயிலை ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்தது.
பிஏபிஎஸ் பாரிஸ் கோவில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தங்களது பயணம் "மற்றவர்களுக்கு இடையூறு அல்லது அசௌகரியம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், வழக்கமான திறப்பு நேரத்தின் தொடக்கத்தில் ஈஃபிள் கோபுர நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது" என்று தெரிவித்தது.
"இதனால் ஏற்பட்ட வலி அல்லது அசௌகரியத்துக்கு" மன்னிப்புக் கேட்ட அந்த அமைப்பு, "பரஸ்பர மரியாதை மற்றும் சேவை ஆகிய உலகளாவிய மதிப்புகளில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்றும் கூறியது.
பிஏபிஎஸ் அமைப்பு தனது இணையதளத்தில், இந்து மத விழுமியங்கள் மூலம் "சமூகத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மிக மற்றும் தன்னார்வலர்களால் இயக்கப்படும் அமைப்பு" என்று தன்னை விவரித்துள்ளது.
லண்டன், லாஸ் ஏஞ்சலிஸ், சிட்னி உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் பிஏபிஎஸ் அமைப்புக்கு கோவில்கள் உள்ளன.
பாரிஸ் மேயர் இமானுவல் கிரெகுவார், இந்த வருகை தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
"ஈஃபிள் கோபுர ஊழியர்கள் வெளிப்படுத்தியுள்ள கோபத்தை நான் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். அவர்களின் அதிருப்தி நியாயமானது என்பதை அவர்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்," என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"நமது வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னங்களின் அடிவாரத்திலும் சரி, இந்த நகரின் வேறு எந்தப் பகுதியிலும் சரி, பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவம் ஒருபோதும் தடைபடக்கூடாது. அது அனைவருக்கும், எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்."
பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரித் தலைவரான மரீன் லெ பென் "பிரான்சில், பெண்களின் இருப்பை 'கட்டுப்படுத்துவதை' நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்," என்றார்.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் பிரான்ஸ் பிரதமரும், மைய-வலதுசாரி தலைவருமான கேப்ரியல் அட்டால், "பிரான்சில் எந்தக் கலாசாரமோ, எந்த நம்பிக்கையோ, எந்த வழிபாட்டு முறையோ, எதுவோ அல்லது யாரோ பெண்களுக்கு அவர்களது இடத்தை நிர்ணயிக்க முடியாது," என்றார்.
பிரான்ஸ் நாடாளுமன்ற தலைவர் யாயெல் பிரான்-பிவே "வெளிநாட்டிலிருந்து வரும் பார்வையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் பெண்கள் விலகி நிற்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































