'மெக்கா ஒப்பந்தத்தில்' இரான் இணைய வேண்டும் என ரஷ்யா விரும்புவது ஏன்? அது சாத்தியமா?

பட மூலாதாரம், AFP via Getty Images
- எழுதியவர், ஓமர் மஹ்மூத்
- பதவி, பிபிசி நியூஸ் உருது
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
எதிர்காலத்தில் இரானும் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இணையக்கூடும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருப்பது, இந்தப் புதிய பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் வரம்பு மற்றும் எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
செப்டம்பர் 7ஆம் தேதி திங்கள்கிழமை மாஸ்கோ அரசு சர்வதேச உறவுகள் நிறுவனத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், "சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தானின் உதவியுடன் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்பாடு செய்வதற்கான நேரம் இது" என்று தெரிவித்தார்.
மெக்கா ஒப்பந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதில் கையெழுத்திட்டுள்ள மூன்று நாடுகளும் "கூட்டு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கூட்டணிக்கான ஒரு கருத்தைக் கொண்டுள்ளன" என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கு "மெக்கா பாதுகாப்புக் கூட்டணி" என்று பெயரிடப்பட்டது.
"மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு எதிராக நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்" என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த ஒப்பந்தம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல என்பதை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டணியில் பிராந்தியத்தின் மற்ற நாடுகளும் இணையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Anadolu via Getty Images
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும் இதே விஷயத்தைக் குறிப்பிட்டார்.
"மற்ற நாடுகளும் இந்தக் கூட்டணியில் இணைவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன என்று அவர்கள் (பாகிஸ்தான், சௌதி அரேபியா, துருக்கி) கூறுகின்றனர். வளைகுடா நாடுகளுக்கு மட்டுமல்ல, எகிப்துக்கும் இந்த வாய்ப்பு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "ஒரு கட்டத்தில், இரானும் இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக மாறும் வகையிலான நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியும்" என்று அவர் கூறினார்.
இது நடந்தால், அதாவது இரானும் மெக்கா பாதுகாப்புக் கூட்டணியின் ஒரு பகுதியாக மாறினால், "ரஷ்யா ஏற்கெனவே முன்வைத்துள்ள கருத்தை நோக்கிய மிகச் சிறந்த நடைமுறை நடவடிக்கையாக அது இருக்கும்" என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஊடக செய்திகளின் படி, இதே உரையாடலின்போது செர்ஜி லாவ்ரோவ், ரஷ்யா இதுபோன்ற ஒரு முன்மொழிவை 20 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்ததாகவும் கூறினார்.
"அரபு நாடுகள்" உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் இரானும், பிராந்தியத்தின் பகிரப்பட்ட பாதுகாப்புக்கான செயல் திட்டத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் வருகை
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த உரையாடலை நடத்திய மறுநாள், சௌதி வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான், மாஸ்கோவில் அவரைச் சந்தித்தார்.
சௌதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சௌதி பிரஸ் ஏஜென்சியின் படி தகவலின்படி, இந்தச் சந்திப்பில் "பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பதற்றத்தைக் குறைத்து, நிலைமையை அமைதிப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது."
இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்தியில், மெக்கா பாதுகாப்புக் கூட்டணியில் இரானின் பங்கேற்பு குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தனது சௌதி அரேபிய கூட்டணியுடன் விவாதித்தாரா என்பது குறிப்பிடப்படவில்லை.
சௌதி வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தப் பயணம், ஏமனின் ஹூதிகள், சௌதி அரேபியாவின் பல தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் குறிவைத்துள்ள நிலையில் அமைந்துள்ளது.
சௌதி வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, ஹூதிகள் "பொதுமக்கள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த" கட்டமைப்புகளைத் தாக்கினர். இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களுள் 73 பேர் காயமடைந்தனர்.
ஏமனின் ஹூதிகளுக்கு இரானின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இரானின் ஆதரவுடன் செயல்படும் ஹூதிகள் , சௌதி அரேபியாவில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பாதுகாப்புக் கூட்டணியில் இரான் பங்கேற்பதற்கான சாத்தியம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசி வருகிறார்.
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இரான் பங்கேற்பது நடைமுறையில் சாத்தியமா, இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா எவ்வாறு பார்க்கிறது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பின் இந்த முழு செயல்முறையில் மாஸ்கோவின் நலன்கள் என்னவாக இருக்கக்கூடும் என்பது குறித்து பிபிசி நியூஸ் உருது ஆய்வு செய்கிறது.
மெக்கா பாதுகாப்பு கூட்டணியில் இரான் இணைவது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானது?

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச விவகார நிபுணர்கள் மற்றும் முன்னாள் தூதர்கள் இது குறித்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
தற்போதைய பிராந்திய சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தக் கூட்டணியில் இரான் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், நீண்ட காலத்தில் இந்த ஒப்பந்தத்தின் பயன் இரானின் பங்கேற்பைப் பொறுத்தே இருக்கலாம் என்று மற்றவர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் தூதர் அப்துல் பாசித்தின் கருத்துப்படி, தற்போது மெக்கா ஒப்பந்தத்தில் இரான் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகின்றன. ஏனெனில், பாதுகாப்புக் கூட்டணிகளின் அடிப்படைத் தேவைகளில் ராணுவ ஒத்துழைப்பு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவை அடங்கும்.
பிபிசி நியூஸ் உருதுவிடம் பேசிய அவர், இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாட்டுக்குத் தேவையான அளவிலான நம்பிக்கை இரான் மற்றும் சௌதி அரேபியா இடையே இன்னும் உருவாகவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், "இரானின் ஆதரவு பெறும் ஆயுதக் குழுக்கள் இருக்கும் வரை" இரானை இந்தக் கூட்டணியில் இணைத்துக்கொள்ள சௌதி அரேபியா விரும்பாது என்றும் அவர் கூறினார். ஏமன், லெபனான் மற்றும் இராக்கில் செயல்படும் இரானின் ஆதரவு பெற்ற அரசு சாரா ஆயுதக் குழுக்களை அவர் குறிப்பிடுகிறார்.
அப்துல் பாசித்தின் கருத்துப்படி, மெக்கா ஒப்பந்தத்தை தெஹ்ரான் வரவேற்றிருந்தாலும், இரானுக்குள் பல்வேறு அதிகார மையங்கள் உள்ளன.
இந்தக் கட்டமைப்பில் இணைய இரான் தயாராக உள்ளது என்று கூறுவது இப்போதைக்கு அவசரமாகத் தெரிவிக்கப்படும் கருத்தாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
குவைத்-இ-அஸாம் பல்கலைக்கழகத்தின் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தின் இணைப் பேராசிரியரான முனைவர் குர்ரம் இக்பாலும், உடனடியாக இரான் இதில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதுகிறார். எனினும், அவர் இதை வேறுவிதமாக விளக்குகிறார்.
அவரது கருத்துப்படி, இஸ்ரேலின் அதிகரித்து வரும் பிராந்திய பங்கு குறித்து இரான், பாகிஸ்தான், துருக்கி மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சில பொதுவான கவலைகள் உள்ளன. ஆனால், இந்தச் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் அவை வேறுபடுகின்றன.
பிபிசி நியூஸ் உருதுவிடம் பேசிய முனைவர் குர்ரம், இரானுக்குள் உள்ள சில தீவிரப்போக்கு கொண்ட குழுக்கள் மெக்கா ஒப்பந்தத்தை சன்னி பிரிவினருக்கு மட்டுமே உரிய கூட்டணியாகக் கருதுவதாகவும் கூறினார். இதனால், இரான் உடனடியாக இதில் பங்கேற்பது கடினமாகிறது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஷம்ஷாத் அகமது இதை ஏற்கவில்லை.
அவரது கருத்துப்படி, மெக்கா ஒப்பந்தத்தின் நீண்டகால வெற்றி, இரான் உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் வரம்பை விரிவுபடுத்த முடியுமா என்பதைப் பொறுத்தே அமையும்.
பிபிசி நியூஸ் உருதுவிடம் பேசிய அவர், இது மத அடிப்படையிலான கூட்டணி அல்ல, மாறாக பிராந்திய பாதுகாப்புக்கான ஒரு கருத்தாக்கம் என்று தெரிவித்தார்.
எகிப்து, ஜோர்டான், இராக், வளைகுடா நாடுகள் மற்றும் பிற நாடுகளும் எதிர்காலத்தில் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
"இரான் இதில் இணையாத வரை, மெக்கா ஒப்பந்தம் ஒரு காகிதமாக மட்டுமே இருக்கும்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 22ஆம் தேதி இரானின் அரசு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இரான் தேசிய உச்ச பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய், இரானை இந்த ஒப்பந்தத்தின் "இணை நிறுவன நாடாக" கருதினால் மட்டுமே மெக்கா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரான் மாற முடியும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தத்தின் அடிப்படை ஆவணங்களைத் தயாரிப்பதில் இரானுக்கு ஒரு பங்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதுபோன்ற ஒப்பந்தங்களில் இரானும் எகிப்தும் இல்லாமல் இருக்க முடியாது. எனினும், அவர்களின் பங்கேற்பு இணை நிறுவன நாடுகளாக, அதாவது கையெழுத்திடப்படும் ஆவணங்களைத் தயாரிப்பதில் அவர்களின் கருத்துகளும் யோசனைகளும் இடம்பெறும் தரப்புகளாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மெக்கா பாதுகாப்பு கூட்டணியில் ரஷ்யா ஆர்வமாக இருப்பது ஏன் ?

பட மூலாதாரம், AFP via Getty Images
பிபிசி-யிடம் பேசிய அவர், மத்திய கிழக்கில் அமெரிக்காவை குறைவாகச் சார்ந்திருக்கும் பிராந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊக்குவிப்பதே ரஷ்யாவின் அடிப்படை நோக்கம் என்று தெரிவித்தார்.
அவரது கருத்துப்படி, பிராந்தியத்தின் பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு அப்பிராந்திய நாடுகளே தீர்வுகளைக் காண வேண்டும் என்ற கருத்தை ரஷ்யா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது.
"பாதுகாப்பை வழங்கும் ஒரே நாடாக அமெரிக்காவின் பங்கு எந்த அளவுக்கு பலவீனமடைகிறதோ, அந்த அளவுக்கு ரஷ்யாவும் சீனாவும் தங்களது அரசியல் மற்றும் தூதரக செல்வாக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்."
இதற்கிடையில், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்படும் ஏற்பாட்டை ரஷ்யாவும் சீனாவும் சாதகமாகப் பார்க்கும் என்றும், ஐரோப்பிய நாடுகளும் இதற்கு ஆதரவளிக்கக்கூடும் என்றும் ஷம்ஷாத் அகமது நம்புகிறார்.
அவரது கருத்துப்படி, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய அனைத்துக்கும் இந்தப் பிராந்தியத்தில் நலன்கள் உள்ளன. எனவே, பிராந்தியத்தில் நிலையான பாதுகாப்புக் கட்டமைப்பு இருப்பது அவர்களின் நலன்களுக்கும் சாதகமாக அமையக்கூடும்.
இந்தக் கட்டமைப்பின் வரம்பு எதிர்காலத்தில் விரிவடையக்கூடும் என ஷம்ஷாத் அகமது கூறுகிறார். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்தியாவும் இதில் ஆர்வம் காட்டக்கூடும்.
பிபிசி உருதுவிடம் பேசிய அவர், "நரேந்திர மோதி பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, இந்தியாவும் மெக்கா ஒப்பந்தத்தில் இணையலாம்" என்று தெரிவித்தார்.
செர்ஜி லாவ்ரோவின் கூற்று, மெக்கா ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு அடிப்படையில் எந்த எதிர்ப்பும் இல்லை என்பதைக் காட்டுவதாக அப்துல் பாசித் கூறுகிறார்.
அவரது கருத்துப்படி, இந்தக் கூட்டணியை பிராந்தியத்துக்கான புதிய பாதுகாப்பு அமைப்பாக ரஷ்யா பார்க்கிறது.
மெக்கா பாதுகாப்புக் கூட்டணி ரஷ்யாவைப் பொறுத்தவரை பிராந்திய பாதுகாப்புக்கான ஒரு உத்தியாகவும், அதன் நலன்களுக்கு சாதகமானதாகவும் பார்க்கப்படும் நிலையில், இதில் இரானின் பங்கேற்பு தொடர்ந்து உறுதியற்றதாகவே உள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























