'ரகசியமாக தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் உணவு, உன்னிப்பாக கண்காணிக்கும் மெய்க்காப்பாளர்கள்'; புதினின் பாதுகாப்பு வளையத்துக்குள் யாரும் நுழைய முடியாதா?

பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தர உள்ளார்.
செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியா வருகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்த புதின், இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
அதிபர் புதினுக்கும் பிரதமருக்கும் இடையே மற்றொரு இருதரப்பு சந்திப்பு இந்தப் பயணத்தின்போது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வழக்கம்போல, இரு நாடுகளும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் என்று டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
மேலும், "பல விவகாரங்களைப் பொதுவெளியில் விவாதிக்க முடியாது. ஏனெனில், நமது ஒத்துழைப்பு முன்னேறுவதைத் தடுக்க முயற்சிக்கும் சில நாடுகள் உள்ளன. எனவே, இந்த விவகாரங்கள் ரகசியமாக, ஆனால் மிகவும் ஆக்கப்பூர்வமான முறையில் விவாதிக்கப்படுகின்றன" என்று அவர் கூறினார்.
எனினும், இவை அனைத்துக்கும் மத்தியில், அதிபர் புதினின் பாதுகாப்பு எப்போதும் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது.
புதினின் ஒவ்வொரு அடியையும் பின்தொடரும் நூற்றுக்கணக்கான மெய்க்காப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
விளாடிமிர் புதின் 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர்களுள் நீண்ட காலம் பதவி வகித்தவர் புதின்.
கிட்டத்தட்ட 73 வயதாகும் அவர், தற்போது தனது ஐந்தாவது முறையாக அதிபர் பதவியில் உள்ளார். அவரது ஆட்சியை எதிர்க்கும் சக்தி தற்போது எதுவும் இல்லை. அவர் விரும்பினால், 2036ஆம் ஆண்டு வரை கூட ஆட்சியில் நீடிப்பதைத் தடுக்க முடியாது.
புதினின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, நூற்றுக்கணக்கான மெய்க்காப்பாளர்கள் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் அவருடன் இருக்கின்றனர்.
பிபிசி செய்தி அறிக்கையின்படி, புதினுக்கான உணவு ரகசியமாகத் தயாரிக்கப்படுகிறது. அவர் உண்ணும் அனைத்தும் அவரது நெருங்கிய ஆலோசகர்களால் முதலில் பரிசோதிக்கப்படுகிறது.
புதினைச் சுற்றியுள்ள ஆபத்துகள் குறித்து முன்னாள் கேஜிபி (KGB - சோவியத் ஒன்றியத்தின் உளவுத்துறை அதிகாரிகள்) அதிகாரிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
புதினைப் பாதுகாப்பது யார்?

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவில் பல்வேறு பாதுகாப்புப் படைகள் உள்ளன. அவற்றில், அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு அமைப்பு செயல்படுகிறது. இது ரஷ்ய அதிபரின் பாதுகாப்புப் பணி அல்லது எஸ்பிபி (SBP) என அழைக்கப்படுகிறது.
இது, ரஷ்யாவின் உளவு அமைப்பான கேஜிபியிலிருந்து உருவாக்கப்பட்ட ரஷ்யாவின் கூட்டாட்சிப் பாதுகாப்புச் சேவைக்கு (FSO) கீழ் செயல்படுகிறது. கருப்பு நிற உடைகள் அணிந்து, காதுகளில் இயர்போன்களைப் பொருத்தியிருக்கும் எஸ்பிபி பாதுகாவலர்கள், நிழல் போல 24 மணி நேரமும் புதினைப் பின்தொடர்கின்றனர்.
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஊடகமான ரஷ்யா பியாண்ட் கூறுகின்றபடி , "இந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் வெளிநாடுகளில் புதினுடன் செல்லும்போது, தங்களை நான்கு குழுக்களாகப் பிரித்துக் கொள்கின்றனர்."
"அவருக்கு மிக நெருக்கமான முதல் வட்டத்தில், அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருப்பார்கள்."
"இரண்டாவது வட்டத்தில், பொதுமக்களின் கவனத்துக்குத் தென்படாத பாதுகாவலர்கள் இருப்பார்கள்."
"மூன்றாவது வட்டம், கூட்டத்தின் சுற்றுப்புறத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும். சந்தேகத்துக்குரிய நபர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைவதை அவர்கள் தடுப்பார்கள்."
"நான்காவது மற்றும் இறுதி வட்டத்தில், சுற்றியுள்ள கட்டடங்களின் மேற்கூரைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் துப்பாக்கி சுடும் வீரர்கள் இருப்பார்கள்."
மார்க் ஜெலிட்டோ, ரஷ்ய பாதுகாப்பு நிபுணரும், அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்யும் ஆலோசனை நிறுவனமான மாயக் இன்டெலிஜென்ஸின் இயக்குநரும் ஆவார்.
பிபிசி முண்டோ சேவையிடம் அவர் கூறுகையில், "புதினுக்கு ஹெலிகாப்டர்கள் பிடிக்காது. அவர் வழக்கமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பல பெரிய கருப்பு நிற கார்கள் உள்ளிட்டவற்றுடன் பெரிய வாகன அணிவகுப்பில் பயணம் செய்கிறார். இதற்காக, சில நேரங்களில் வான்வெளியில் எந்தவொரு ட்ரோனும் பறக்க தடை விதிக்கப்படுகிறது. போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது" என்று கூறினார்.
அதிபரின் 'தனிப்பட்ட ராணுவம்'

பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபரின் பாதுகாப்புப் பணியான எஸ்பிபி -க்கு, ரஷ்ய தேசிய பாதுகாப்புப் படையான ரோஸ்க்வார்டியா ஆதரவளிக்கிறது. சிலர் இதனை அதிபரின் "தனிப்பட்ட ராணுவம்" என்று குறிப்பிடுகின்றனர்.
இது ரஷ்ய ஆயுதப் படைகளில் இருந்து தனித்துவமானது. எனினும், ரஷ்யாவின் எல்லைகளைப் பாதுகாப்பது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் பொது சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது ஆகியவையே இதன் அதிகாரப்பூர்வப் பணிகளாகும்.
நடைமுறையில், புதினை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே இதன் மிக முக்கியமான பணியாக உள்ளது.
"ரஷ்ய தேசிய பாதுகாப்புப் படை என்பது பெருமளவில் புதினின் தனிப்பட்ட பாதுகாப்புப் படை என்பது அனைவருக்கும் தெரியும்" என்று பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரஷ்யா ஆய்வாளர் ஸ்டீஃபன் ஹால், பிபிசி முண்டோவிடம் கூறினார்.
"மேலும், தனது மற்ற பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பு வளையத்துக்குள் அதிபர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்."
தற்போது தேசிய பாதுகாப்புப் படைக்கு, புதினின் முன்னாள் பாதுகாவலரான விக்டர் ஜோலோடோவ் தலைமை வகிக்கிறார். இவர் அதிபரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார்.
சமீப ஆண்டுகளில், இந்தப் பாதுகாப்புப் படையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
"இது மிகப்பெரிய எண்ணிக்கை" என்று கூறும் ஸ்டீஃபன் ஹால் "அமெரிக்க அதிபரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பாதுகாவலர்களின் எண்ணிக்கை கூட இதற்கு அருகில் வராது" என்கிறார்.
புதின் எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்?

பட மூலாதாரம், Getty Images
புதினைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, அவை எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது கடினம். ஆனால், ரஷ்ய அதிபர் மாளிகை மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் இது குறித்து சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதினின் பாதுகாப்பு வளையம் மிகவும் கடுமையாகக் கண்காணிக்கும் விஷயம் அவரது உணவு.
விஷம் கலக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, புதினுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு உணவுப் பொருளையும் பரிசோதிப்பதற்காக அவருக்கென தனிப்பட்ட உணவு பரிசோதனையாளர் ஒருவர் இருப்பதாக மார்க் கேலியோட்டி தெரிவித்துள்ளார்.
"இது ஒரு நவீன அதிபரைவிட, இடைக்கால மன்னரைப் போன்ற நடைமுறையின் ஒரு பகுதியாகும்" என்று அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
மேலும், புதின் ரஷ்யாவுக்கு வெளியே பயணம் செய்யும்போது, அவர் பயன்படுத்தும் அனைத்தையும் அவரது குழுவினர் பரிசோதிக்கின்றனர்.
"புதின் உண்ணப்போகும் அனைத்து உணவுகளையும், குடிக்கப் போகும் அனைத்து பானங்களையும் அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்" என்று கேலியோட்டி விளக்குகிறார்.
மேலும், "உதாரணமாக, அதிகாரப்பூர்வமாக ஷாம்பெயின் பானத்தை அருந்தும் நிகழ்வு இருந்தால், புதின் மற்ற பாட்டில்களில் இருந்து ஷாம்பெயின் எடுத்துக் கொள்ளாமல், அவரது குழுவினர் கொண்டு வரும் பாட்டிலில் இருந்துதான் எடுத்துக் கொள்கிறார்" என அவர் விவரிக்கிறார்.
ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு கிடையாது

பட மூலாதாரம், Getty Images
புதினின் பாதுகாப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படும் மற்றொரு நடவடிக்கை, ரஷ்ய அதிபர் மாளிகைக்குள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதாகும்.
ரஷ்ய அதிபரே, தான் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு, ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ்-க்கு (TASS) அளித்த பேட்டியில் இதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், தான் யாரையேனும் தொடர்புகொள்ள விரும்பினால், அதற்காக அதிகாரப்பூர்வ தொலைபேசி இணைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது ஆலோசகர்களும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். புதினுக்கு "நேரமில்லை" என்பதால் அவர் மொபைல்ஃபோன் பயன்படுத்துவதில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பலமுறை தெரிவித்துள்ளார்.
ஆனால், உண்மையில் புதின் இதைச் செய்வதில்லை என்பதற்குக் காரணம், இணையத்தின் மீது அவருக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை என்பது தான்.
கடந்த காலங்களில், இணையம் ஒரு "சிஐஏ திட்டம்" (CIA - அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனம்) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூகுள் சர்ச்-ஐ பயன்படுத்த வேண்டாம் என்றும் ரஷ்யர்களை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கர்கள் அனைத்து தகவல்களையும் கண்காணிப்பதாக அவர் நம்புகிறார்.
"புதின் இணையத்தை அரிதாகவே பயன்படுத்துகிறார். மேலும், அவருக்கு போன் பிடிக்காது என்பது அனைவருக்கும் தெரியும். அதில் தவறில்லை. அவர் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பவர். புதின் முற்றிலும் சரியாகத்தான் இருக்கிறார். ஸ்மார்ட்ஃபோன்கள் அதிக பாதுகாப்பானவை அல்ல" என்று கேலியோட்டி கூறுகிறார்.
புதினின் ஆலோசகர்கள் அவருக்கு வழங்கும் காகித ஆவணங்கள் மூலம் அவர் தகவல்களைப் பெறுகிறார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"புதின் தனது நாளை மூன்று பாதுகாப்பு அறிக்கைகளுடன் தொடங்குகிறார். ஒன்று உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்தது, மற்றொன்று ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது குறித்தது, மூன்றாவது உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் என்ன நடக்கிறது என்பது குறித்தது" என்று ஸ்டீஃபன் ஹால் குறிப்பிடுகிறார்.
"அவர்களைப் பொறுத்தவரை, இதுதான் மிக முக்கியமான தகவல். மேலும், இது அவர்களின் அன்றைய செயல்திட்டத்தைத் தீர்மானிக்கிறது."
"நான் தூதர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது" என்று கூறும் அவர், "தங்களிடம் உள்ள தகவல் சரியில்லை என்று அவருடைய உளவுத்துறை நம்பினால், புதின் தனது உளவாளிகள் சொல்வதுதான் சரி என்றும், தூதர்கள் சொல்வது தவறு என்றும் கருதுகிறார் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























