தமிழக மக்களின் வீட்டு சமையலில் மறைந்திருக்கும் '88% உப்பு' ஆபத்து - குறைக்க என்ன மாற்று வழி?

உங்கள் உணவில் எவ்வளவு உப்பு இருக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் உப்பு உட்கொள்தல் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.

உப்பின் அளவை குறைக்க திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அரசின் உணவுத் திட்டங்களில் உப்பின் அளவு கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டபேரவையில் பேசிய அவர்,"தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் போன்ற தொற்றா நோய்கள் மிக முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னையாக உள்ளன. மருத்துவச் சான்றளிக்கப்பட்ட இறப்புகளில் 50 சதவீதம் இதயம் மற்றும் ரத்தக் குழாய் நோய்களால் நிகழ்கிறது. 1.8 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தநோயுடன் வாழ்கின்றனர். இந்த நோய்களுக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது" என்றார்.

உங்கள் உணவில் எவ்வளவு உப்பு இருக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

''தமிழகத்தில் அதிக உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த மாநில உத்தி ஒன்றை உருவாக்கி செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்களின் தற்போதைய உப்பு உட்கொள்ளல் அளவைக் கண்டறிய, சிறுநீர் மாதிரி அடிப்படையிலான மாநில அளவிலான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்'' என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.

நமது தட்டில் உள்ள உப்பின் அளவை குறைக்க மாநில அரசு களமிறங்க வேண்டுமா என்று நாம் யோசிக்கலாம். ஆனால், அளவாக உப்பு எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து, உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க உணவு துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் என பல முகமைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

உலக சுகாதார நிறுவனம், ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறது. இந்தியாவில் உள்ள மக்கள் பரிந்துரைக்கப்பட்டதைவிட, அதிகளவில் உப்பை உட்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

"ஆய்வுகளின்படி, தமிழக மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7 முதல் 8 கிராம் வரை உப்பு உட்கொள்கின்றனர். இதில் 88 சதவீதம், வீட்டுச் சமையலின்போது சேர்க்கப்படும் உப்பிலிருந்தே வருகிறது," என்று அமைச்சர் அருண் ராஜ் தனது உரையில் கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள், இந்தியாவில் அதிகளவில் உப்பை எடுத்துக்கொள்வது ஒரு 'மறைமுகமாக பெருவாரியாக பரவும் தொற்றுநோயாக' அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.

இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் ஒருநாளைக்கு சராசரியாக 9.2 கிராம் உப்பையும் கிராமப்புற பகுதிகளில் வாழ்பவர்கள் 5.6 கிராம் உப்பையும் உட்கொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உங்கள் உணவில் எவ்வளவு உப்பு இருக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

ஆனால் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, நம் உடலில் சேரும் உப்பில் 88% வீட்டில் சமைத்த உணவிலிருந்தே கிடைக்கிறது.

"இந்திய உணவு முறையில் உப்பு அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓட்டல்களிலிருந்து பெறப்படும் ஒரு வெஜ் மீல்ஸ்-ல் சராசரியாக 7 -8 கிராம் உப்பு இருக்கும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு, முதியவர்களுக்கு, இருதய நோயாளிகளுக்கு, சிறுநீரக நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது" என்கிறார் பிபிசியிடம் பேசிய சிறுநீரகவியல் மூத்த மருத்துவர் பலராமன்.

உணவில் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இருக்கும் அளவு உப்பின் அளவை குறைத்துக் கொள்வது குறித்து இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

உப்பு குறைவதால் நோய் பாதிப்பு குறைப்பு

உணவில் உப்பின் அளவை குறைப்பதால் அதன் ஆபத்துகளும் குறையும் என்கிறார் மருத்துவர் பலராமன்.

"கட்டுக்கு அடங்காத ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக உப்பு உட்கொள்தலை நிறுத்த அறிவுறுத்துவோம். அதை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும், நோயின் வீரியம் குறையும். அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தின் தேவை குறையும்" என்கிறார் அவர்.

இது குறித்து ஆய்வுகளை மேற்கோள் காட்டி பேசியிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், "ஒரு நாளைக்கு வெறும் 1 கிராம் உப்பு குறைந்தாலும், ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்து, இதய நோய் இறப்புகளில் 7 சதவீதமும், பக்கவாத இறப்புகளில் 10 சதவீதமும் குறையும்." என்று அமைச்சர் அருண் ராஜ் கூறியிருந்தார்.

உங்கள் உணவில் எவ்வளவு உப்பு இருக்கலாம்?

பட மூலாதாரம், Getty Images

சோடியம் குறைந்த மாற்று உப்பு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வேதியியல் ரீதியாக, உப்பு என்பது சோடியம் குளோரைடு. இது சோடியம் மற்றும் குளோரின் ஆகிய மின்சுமையூட்டப்பட்ட அணுக்களால் (அயனிகள்) ஆனது.

அமெரிக்க மருத்துவ சங்கத்தின்படி, சோடியம் குளோரைடு எனும் மேஜை உப்பு, 40% சோடியம் மற்றும் 60% குளோரைடு ஆகும். ஒரு டீஸ்பூன் உப்பில் சுமார் 2,400 மில்லிகிராம் சோடியம் உள்ளது.

சோடியம் அளவை குறைத்து, பொடாசியம் அளவை அதிகமாக கொண்ட மாற்று உப்புகள் கிடைக்கின்றன.

"சோடியம் குறைந்த மாற்று உப்பு பயன்படுத்திய சுமார் 21 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பக்கவாதம் 14 சதவீதமும், மொத்த இறப்புகள் 12 சதவீதமும் குறைந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் அருண்ராஜ் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

எனினும் மாற்று உப்புகளை பயன்படுத்தும் முன் மருத்துவர்களின் ஆலோசனையை கண்டிப்பாக பெற வேண்டும் என்று மருத்துவர் பலராமன் வலியுறுத்துகிறார்.

"சோடியம் குறைவான உப்புகளில், பொடாசியம் அதிகமாக இருக்கும். அது சிலருக்கு உகந்ததாக இருக்காது, உதாரணமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறுகளை ஒரு சேர கொண்டவர்களுக்கு. எனவே ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்து மருத்துவ ஆலோசனைப் பெற்று மாற்று உப்புகளை பயன்படுத்த வேண்டும். பொதுவாக மேஜை உப்பை விட கல் உப்பில் சோடியம் அளவு குறைவாக இருக்கும்" என்கிறார்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக உப்புள்ள உணவுகளால் நமது சுவை மொட்டுகள் அந்தச் சுவைக்கு பழகிவிடுகின்றன.

"தீவிர சிறுநீரக நோயாளிகளிடம் மூன்று மாதங்கள் உப்பைத் தவிர்க்கச் சொல்வோம். சில வாரங்களிலேயே வீட்டில் இதனால் சண்டைகள் ஏற்பட்டதாகக் கூறுவார்கள். உப்பை நிறுத்துவது, ஒரு போதையிலிருந்து விடுபடுவது போன்றது. ஆனால் மூன்று மாதங்கள் உப்பின்றி இருந்தால், நாக்கு அந்தச் சுவையின்மைக்கும் பழகிவிடும்," என்கிறார் மருத்துவர் பலராமன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு