ஜோதிடர் முதல் ஆசிரியை வரை - தவெகவின் 13 பெண் எம்.எல்.ஏக்களின் பின்னணி

பட மூலாதாரம், Kanimozhi Santhosh Tvk/Instagram
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம்கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் (விஜய் இரு தொகுதிகள்) வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்களுள் 13 பெண்களும் அடங்குவர்.
ஜோதிடர், ஆசிரியர், சுயதொழில் செய்பவர்கள் என பலதரப்பட்ட பெண்களும் அதில் அடங்குவர். அவர்களுள் சில பெண்கள் முன்னாள், இந்நாள் அமைச்சர்களையும் தோற்கடித்துள்ளனர்.
யார் அந்த 13 பெண் எம்எல்ஏக்கள்?
எம். ஆர். பல்லவி

பட மூலாதாரம், M. R. pallavi/Instagram
சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் தவெகவின் எம்.ஆர். பல்லவி 22,333 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ரவிச்சந்திரன் இரண்டாம் இடத்தையும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட பொற்கொடி ஆம்ஸ்டிராங் (தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
36 வயதான பல்லவி, 12ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
தொழில் செய்துவருவதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ஆண்டு வருமானம் ரூ. 4.7 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.30 லட்சத்து 31,000 என்றும் தன் கணவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தாஹிரா

பட மூலாதாரம், Thahira/Instagram
ராணிப்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கிய தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரான அமைச்சர் ஆர்.காந்தியை தோற்கடித்துள்ளார். 2016, 2021 தேர்தல்களில் இத்தொகுதியில் ஆர். காந்தி தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தார்.
இத்தொகுதியில் 32,060 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார் பாஜக வேட்பாளர் வி.எம். கார்த்திகேயன்.
தாஹிரா தவெகவில் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ளார். தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன்னிடம் ரூ.5,000 மற்றும் வங்கியில் ரூ. 20,000 என, மொத்தம் ரூ.25,000 இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு வரை இவர் படித்துள்ளார்.

பட மூலாதாரம், pallavaramkamatchitvk/Instagram
காமாட்சி
பல்லாவரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட காமாட்சி 54,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். திமுக கூட்டணியில் களமிறங்கிய தேமுதிக வேட்பாளர் முருகேசன் 78,918 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தையும் அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் 48,921 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
பின் தங்கிய மாணவர்களின் கல்விக்காக பல உதவிகளை அவர் செய்துள்ளதாக அவருடைய சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிந்து
குடியாத்தம் தொகுதியில் தவெக வேட்பாளர் சிந்து 10,097 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் பிரதாப் (திமுக கூட்டணி) 72,761 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் 64,122 பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
சிந்து 'இசை மற்றும் நடன அகாடமியை' நடத்திவருகிறார். 37 வயதான இவர், எம்.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார்.
கனிமொழி சந்தோஷ்

பட மூலாதாரம், Kanimozhi Santhosh Tvk/Instagram
கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், 1,46,466 வாக்குகள் பெற்று 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் அருண்குமாரை இவர் தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் சூர்யபிரகாஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கனிமொழி, வழக்கறிஞராகவும் பதிவு செய்துள்ளார். பிற தொழில்களிலும் இவர் ஈடுபட்டுவருகிறார். 37 வயதான இவர் கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்.
சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், ஒரு காணொளியில், "புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்தால் ஒருவர் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு எவ்வளவு உள்ளது என்பதைக் கூட ஜோதிடம் மூலம் அறியலாம்." என பேசியிருந்தது சர்ச்சையானது.
கமலி

பட மூலாதாரம், Kamali S/Instagram
அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட கமலி, பாஜகவின் எல்.முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். கமலி, 84,209 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கோகிலாமணி மூன்றாம் இடம்பிடித்தார். எல்.முருகன் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராவார். மேலும், மாநிலங்களவை எம்.பியான அவர், மத்திய இணையமைச்சராகவும் உள்ளார்.
27 வயதான கமலி, எம்.ஏ (ஆங்கிலம்), பி.எட் படித்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
பிபிசி தமிழிடம் முன்னர் பேசிய அவர், ''அவிநாசி தொகுதியில் மட்டுமே இதுவரை 51 ஆயிரம் பேர் கட்சி உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் 2 அல்லது 3 வாக்குகளைச் சேகரித்து என்னை வெற்றி பெற வைப்பார்கள்" என்று கூறியிருந்தார்.
அவினாசி தொகுதியில் அதிமுக அதிக முறை வெற்றிபெற்றுள்ள நிலையில், அதன் கூட்டணியில் இடம்பிடித்த பாஜக வேட்பாளரை கமலி தோற்கடித்துள்ளார்.
சத்யபாமா

பட மூலாதாரம், Sathyabama/Instagram
திருப்பூர் (வடக்கு) தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 69,992 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆனந்தன் 61,409 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதிமுக எம்.பியாக இருந்தவர் சத்யபாமா.
கடந்தாண்டு நவம்பர் மாதம் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோது சத்யபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் அக்கட்சியில் இணைந்தனர். 54 வயதான இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்.
தமிழ்செல்வி

பட மூலாதாரம், Tamil Selvi/Instagram
பவானிசாகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட தமிழ்செல்வி 4,569 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பன்னாரி 67,822 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (திமுக கூட்டணி) வேட்பாளர் பி.எல். சுந்தரம் 63,107 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
அதிமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ள இத்தொகுதியில் அக்கட்சி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி தமிழ்செல்வி வெற்றி பெற்றுள்ளார். சத்யமங்கலம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்விக்கு 57 வயதாகிறது.
தமிழ்செல்வி, நெல்லையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த கவினின் பெரியம்மா ஆவார். மேலும், இவருடைய தந்தை அந்தியூர் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.
விஜயலட்சுமி

பட மூலாதாரம், Viji Lakshmi/Instagram
குமாரபாளையம் தொகுதியில் 7,696 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணியை வீழ்த்தியுள்ளார் விஜயலட்சுமி. இத்தொகுதியில் 39,993 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் எஸ்.பாலு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். 2011, 2016, 2021 என மூன்று தேர்தல்களிலும் தங்கமணி வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார். 12ம் வகுப்பு வரை படித்துள்ள விஜயலட்சுமி, சுய தொழில் செய்துவருவதாக தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Sathya
சத்யா
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யா 3,503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் திவ்யா இரண்டாம் இடத்தையும் திமுக வேட்பாளர் ராஜா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே தவெக வென்றுள்ளது. அதாவது, கிருஷ்ணராயபும் (தனி) தொகுதியில் மட்டும் சத்யா வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தன் மொத்த சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். மொத்தக் கடன் ரூ. 3 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். பள்ளி முதல்வராக இருப்பதாக அவர் தன் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Kulanthai Rani Nachiyar/Instagram
குழந்தை ராணி
சிவகங்கை தொகுதியில் தவெக வேட்பாளர் குழந்தை ராணி 15,081 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 58,656 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் இரண்டாம் இடத்தையும் 57,300 வாக்குகள் பெற்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட (முக்குலத்தோர் புலிப்படை கட்சி) கருணாஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த 2021 தேர்தலில் கருணாஸ் தன் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்தவர்.
குழந்தை ராணி தன் தேர்தல் பிரமாண பத்திரத்தில் சுயதொழில் மூலம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெகதீஸ்வரி
ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஜெகதீஸ்வரி, 10,605 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை தோற்கடித்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட பிரிசில்லா பாண்டியன் 36,318 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். ஜெகதீஸ்வரி தன் சொத்து மதிப்பு ரூ.18 லட்சத்து 17,000 என தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மொத்த கடன் ரூ. 13,35,916 என குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தனா

சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளர் கீர்த்தனா 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 57,039 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் இரண்டாம் இடத்தையும் 51,078 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 29 வயதான கீர்த்தனா, தன் தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பு ரூ.22 லட்சத்து 57,710 என குறிப்பிட்டுள்ளார். எம்.எஸ்சி படித்துள்ள அவர், தனிநபர் ஆலோசகராக பணியாற்றிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தவெகவில் 13 பெண் எம்எல்ஏக்கள் தவிர, அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிபட்டி), ஜெயசுதா (ஆரணி), உஷாராணி (ஏற்காடு), சத்யபாமா (தாராபுரம்), லீமாரோஸ் (லால்குடி) ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் குளச்சல் தொகுதியில் தாரகை கத்பட் ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். பாமக சார்பில் தருமபுரியில் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக கீழ்வேளூர் தொகுதியில் லதாவும் தேமுதிக சார்பில் பிரமேலதாவும் (விருதாச்சலம்) வெற்றிபெற்றுள்ளனர்.
மொத்தமாக, இந்த புதிய சட்டப்பேரவையில் 23 பெண்கள் எம்எல்ஏக்களாகியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































