டாப் 4 அணிகள் தோல்வியால் புள்ளி பட்டியலில் மாற்றம் - பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு அதிகம்?

ஐபிஎல், சிஎஸ்கே

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நேற்று (மே 3) ஐபிஎல் 2026 தொடரில் 2 போட்டிகள் நடந்தன.

ஆமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுக்க, அதை கடைசி ஓவரில் சேஸ் செய்தது டைட்டன்ஸ்.

அதற்கு முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, 10 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது கேகேஆர்.

இந்த இரு போட்டிகளில் ஒன்று பரபரப்பாக கடைசி வரை செல்ல, மற்றொரு போட்டியில் முடிவு எளிதாகவே எட்டப்பட்டது. போட்டி முடிந்த விதத்தில் வித்தியாசம் இருந்தாலும், இந்த இரு போட்டிகளிலும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கவே செய்தன.

முதலாவது ஒற்றுமை: இந்த இரு போட்டிகளிலுமே, வெற்றியைத் தீர்மானித்ததில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் முக்கிய அங்கம் வகித்தார்கள்.

சன்ரைசர்ஸுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது வென்றார் வருண் சக்கரவர்த்தி. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் (57 ரன்கள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (ஆட்டமிழக்காமல் 40 ரன்கள்) இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து தங்கள் அணியின் வெற்றியை உறுதியை செய்தார்கள். இந்த இருவரும் தான் அந்த அணியின் டாப் ஸ்கோரர்கள். சாய் சுதர்ஷன் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க, பரபரப்பான கடைசி கட்டத்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார் வாஷிங்டன்.

இரண்டாவது ஒற்றுமை: நைட் ரைடர்ஸ், டைட்டன்ஸ் - இந்த இரு அணிகளுமே தற்போது தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன. தற்போதைய நிலையில், தங்களின் கடைசி 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கும் இரு அணிகள் இவை மட்டும்தான்.

மூன்றாவது மற்றும் முக்கியமான ஒற்றுமை: டாப் 4 இடங்களில் இருக்கும் அணிகளை, புள்ளிப் பட்டியலில் அவர்களுக்குக் கீழே இருக்கும் இரண்டு அணிகள் தோற்கடித்திருக்கின்றன.

இந்த விஷயம் தான் இந்த சீசனின் போக்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்த ஐபிஎல் சீசனில் தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத வருண் சக்கரவர்த்தி, கடைசி 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த ஐபிஎல் சீசனில் தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத வருண் சக்கரவர்த்தி, கடைசி 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்

டாப் 4 அணிகளின் தொடர் தோல்வி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஏப்ரல் 30 முதலே, தொடர்ச்சியாக டாப் 4 இடங்களில் இருக்கும் அணிகள் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் முக்கியமாக, வெற்றி பெறும் அணிகள் அந்த 2 புள்ளிகளை பெரிதளவு கஷ்டப்படாமல் பெற்றிருக்கின்றன. அந்த டாப் 4 அணிகள் அதுவரை சந்தித்திடாத சில முடிவுகளையும் அவர்களுக்குப் பரிசளிக்கின்றன.

ஏப்ரல் 30 ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், 2வது இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ். இந்த சீசனில் முதல் முறையாக ஆர்சிபி ஆல் அவுட் ஆனது இந்தப் போட்டியில் தான்.

அதற்கடுத்த நாள், நான்காவது இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ். 226 என்ற இலக்கை, 5 பந்துகள் மீதம் வைத்து கஷ்டப்படாமல் 2 புள்ளிகளைப் பெற்றது டெல்லி. சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஆகியோரின் பேட்டிங்காலும், ஆர்ச்சரின் பந்துவீச்சாலும் இரு இன்னிங்ஸ்களின் பவர்பிளேவிலும் ஒவ்வொரு போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ராயல்ஸை, அந்த இரு பவர்பிளேக்களிலுமே வீழ்த்தி அதிர்ச்சியளித்தது கேபிட்டல்ஸ்.

இந்நிலையில், நேற்று (மே 3) நடந்த முதல் போட்டிகளில் 3வது இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது கேகேஆர். இந்த சீசனில் நைட் ரைடர்ஸ் ஓர் அணியை ஆல் அவுட் ஆக்கியதும், சன்ரைசர்ஸ் ஆல் அவுட் ஆனதும் இதுதான் முதல் முறை. டாப் ஆர்டர் சோபிக்காத போட்டிகளிலும் ஓரளவு நிலைத்து நின்று ஆடிய சன்ரைசர்ஸ் மிடில் ஆர்டரை நிலைகுலையச் செய்தது நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு. அதோடு, தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றிருந்த சன்ரைசர்ஸின் வெற்றிப் பயணத்துக்கும் முட்டுக்கட்டை போட்டது.

அடுத்ததாக, முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கை பதம் பார்த்து இலக்கை சேஸ் செய்தது குஜராத் டைட்டன்ஸ். இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்து அந்த அணி 200 ரன்களைக் கடக்காதது இதுதான் முதல் முறை.

ஒருசில தினங்கள் முன்புவரை 'இந்த 4 அணிகளும் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?' என்றும் 'இந்த அணிகளைத் தடுக்க முடியுமா?' என்றும் பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில், அந்த 4 அணிகளுமே 4 நாள் இடைவெளியில் தோல்விகளைச் சந்தித்திருக்கின்றன. இது அவர்களுக்கும் மற்ற அணிகளுக்கும் இடையே புள்ளிப் பட்டியலில் இருந்த இடைவெளியை வெகுவாகக் குறைத்திருக்கிறது.

குஜராத் ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்ய, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, குஜராத் ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்ய, தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்

டாப் 4 அணிகளோடு இணைந்திருக்கும் டைட்டன்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான வெற்றிக்குப் பிறகு மொத்தம் 4 அணிகள் 12 புள்ளிகள் பெற்றிருக்கின்றன.

முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளைப் போல் டைட்டன்ஸும் 10 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் இருக்கிறது. 2வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி 9 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. - 0.147 என்ற நெகடிவ் நெட் ரன்ரேட் கொண்டிருப்பதால், குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் 9 போட்டிகளில் 13 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் சீசன்களில், 16 புள்ளிகள் பெற்ற அணிகள் அனைத்துமே இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. 16 புள்ளிகள் பெறுவது அதிகாரபூர்வமாக பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துவிடும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், இதுவரை அணிகளுக்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கிறது.

பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் அந்த 16 என்ற மேஜிக் எண்ணுக்கு நெருக்கமாக இருந்த நிலையில், தற்போது குஜராத் டைட்டன்ஸும் அதற்கு அருகே வந்திருக்கிறது. அவர்கள் மீதமிருக்கும் 4 போட்டிகளில் இரண்டில் வென்றாலே 16 என்ற இலக்கை எட்ட முடியும். ஏற்கெனவே தொடர் வெற்றிகள் பெற்றுக்கொண்டிருக்கும், இது இன்னும் கூடுதல் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்.

அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் மே 9-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதற்கு முன்பாக டாப் 4 இடங்களில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மே 6-ம் தேதி மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி முதலிடத்தில் இருக்கும். தோல்வியடையும் அணிக்கு அது பின்னடைவாக அமையும். அந்தப் போட்டிக்குப் பிறகு, மே 9 அன்று ராயல்ஸை வீழ்த்தினால் குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேற முடியும்.

இந்த டாப் 4 அணிகளின் தோல்விகள், இந்த ஐபிஎல் சீசனை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது. பல்வேறு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளை இது உயிர்ப்போடு வைத்திருக்கும். பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு என எந்த அணியுமே அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்தாலே பெறும் நெறுக்கடிக்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்படும்.

கேகேஆர், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் போன்ற அணிகள் முந்தைய போட்டிகளில் எளிதான வெற்றிகளைப் பெற்றிருப்பதால், அதுவும் அவர்களின் சீசனில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரலாம்.

இந்த சீசனில் தாங்கள் விளையாடிய முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ், அடுத்த 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்த சீசனில் தாங்கள் விளையாடிய முதல் 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பதிவு செய்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ், அடுத்த 5 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறது

எழுச்சி காணும் மற்ற அணிகள்

டாப் 4 அணிகள் தோல்விகள் பெற்றிருக்கும் நிலையில், மற்ற அணிகள் எழுச்சி கண்டிருக்கின்றன. கேகேஆர், சிஎஸ்கே, டெல்லி கேபிட்டல்ஸ் போன்ற அணிகள் தங்களின் காம்பினேஷன்களை சரியாகக் கட்டமைக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும், அந்த அணிகளின் ஒருசில முக்கிய வீரர்கள் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த கொல்கத்தாவின் முக்கிய வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர், அந்த் அணியின் சமீபத்திய ஹாட்ரிக் வெற்றிகளில் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். பெரும் விமர்சனங்களை சந்தித்த அவர்கள் இருவரும் தான் இந்த 3 போட்டிகளிலும் ஆட்ட நாயகர்கள் (வருண் - 2, ரிங்கு சிங் - 1) ஆகியிருக்கிறார்கள். கேமரூன் கிரீன் பந்துவீசத் தொடங்கியிருக்கிறார். விரைவில் மதீஷா பதிரானாவும் அந்த அணியில் இணையக்கூடும். இதுவும் அவர்களின் பந்துவீச்சையும், நம்பிக்கையையும் பலப்படுத்தும்.

கேபிட்டல்ஸ் அணிக்குப் பிரச்னையாக இருந்த அவர்களின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கடந்த போட்டியில் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அணிக்குத் திரும்பிய மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் கைப்பற்றி தாக்கம் ஏற்படுத்தினார். காயமடைந்திருக்கும் லுங்கி எங்கிடி அணிக்குத் திரும்பும் போது, பலமான அவர்களின் பந்துவீச்சு மேலும் பலமடையும்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பெற்ற பெரிய வெற்றி, அவர்களின் பிளே ஆஃப் கனவை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. பந்துவீச்சாளர்கள் அனைவருமே சோபித்துக் கொண்டிருக்கும் நிலையில், இளம் வீரர்கள் பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா இருவருமே தங்களின் திறமையை நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து 2 அரைசதங்கள் அடித்திருக்கிறார். சிஎஸ்கே ஒரு அணியாக முழுமையான செயல்பாட்டைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு, ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளின் மிடில் ஆர்டர் மீது கேள்விகள் எழுந்துவரும் இந்த நிலையில், இந்த அணிகளின் எழுச்சி புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு