'மிடில் ஓவர் யுத்தம்': டெல்லி கேபிட்டல்சுக்கு எதிராக சிஎஸ்கே அணிக்கு காத்திருக்கும் புதிய சவால்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஐபிஎல் 2026 தொடரின் முக்கியமான போட்டியில் இன்று (மே 5) டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த இரண்டு அணிகளுமே இதுவரை 9 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்றிருக்கின்றன. ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 6வது இடத்திலும், கேபிட்டல்ஸ் 7வது இடத்திலும் இருக்கின்றன.
புள்ளிப் பட்டியலில் இவர்களுக்கு மேலே இருக்கும் அணிகள் 12 அல்லது 13 புள்ளிகள் பெற்றிருப்பதால், பிளே ஆஃப் போட்டியில் நீடிக்க இரு அணிகளுக்குமே இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம்.
இந்த இரு அணிகளுமே தங்களின் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டே இந்தப் போட்டிக்குள் நுழைகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ரன்களில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. ஆனால், இந்தப் போட்டி நடக்கும் டெல்லி அருண் ஜேட்லி மைதானம் சூப்பர் கிங்ஸுக்கு வேறு வகையான சவால்களை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இந்தப் போட்டியைத் தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள் என்னவாக இருக்கலாம்? அலசுவோம்.
பலமடையும் சென்னை பேட்டிங் vs பலமான டெல்லி பௌலிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் மெல்ல பலமடைந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 போட்டிகளுக்கு முன்புவரை அது பெரும்பாலும் சாம்சனை நம்பியே இருந்தது. சாம்சன் பெரிய ஸ்கோர்கள் அடித்த போட்டிகளில் மட்டுமே வெற்றியும் பெற்றது. குறிப்பாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பெரிய ஸ்கோர்கள் அடிக்கத் தவறியதால், அது அணிக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது வந்தது. ஆனால், கடந்த 2 போட்டிகளிலுமே அரைசதம் அடித்த மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
ஆயுஷ் மாத்ரே இடத்தில் களமிறக்கப்பட்ட உர்வில் பட்டேலும் மும்பைக்கு எதிரான போட்டியில் தன் அதிரடியை வெளிப்படுத்தினார். 14.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கார்த்திக் ஷர்மா ஐபிஎல் அரங்கில் தன் முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். இப்படியாக மெல்ல ஒவ்வொரு வீரர்களாக சோபிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும், டெவால் பிரெவிஸ் மற்றும் ஷிவம் துபே ஆகியோரிடமிருந்து சீரான ஆட்டம் வரவேண்டும் என்பது அணியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், பலமான பந்துவீச்சைக் கொண்ட டெல்லி கேபிட்டல்ஸ் அணி சூப்பர் கிங்ஸின் பேட்டர்களுக்கு சவால் கொடுக்கலாம். முந்தைய போட்டிகளில் அவர்களின் பந்துவீச்சு தடுமாறினாலும், மிட்செல் ஸ்டார்க் வந்ததும் கடந்த போட்டியில் அது சிறப்பாகத் தெரிந்தது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி தான் இந்த சீசனில் ஸ்டார்க் ஆடிய முதல் ஆட்டம். அதில் அவர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஸ்டார்க், ஜேமிசன், நடராஜன், குல்தீப், அக்ஷர் என 5 சர்வதேச பௌலர்கள் இருக்கிறார்கள். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் ஆடாத லுங்கி எங்கிடி, இந்தப் போட்டியில் ஆடுவதற்கு 100% தயாராக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை அவர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டால், அது அந்தப் பந்துவீச்சை இன்னும் பன்மடங்கு பலப்படுத்தும்.

பட மூலாதாரம், ANI
ஸ்பின் vs ஸ்பின் ஹிட்டர்கள் யுத்தம்
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்யும்போது மிடில் ஓவர்களில் நடக்க வாய்ப்புள்ள இந்த யுத்தம் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகிய இரு ஸ்பின்னர்களும் தங்களின் பெரும்பகுதி ஓவர்களை அங்கு வீசுவார்கள். சூப்பர் கிங்ஸ் மிடில் ஆர்டரில் பிரெவிஸ், துபே, கார்த்திக் ஷர்மா என சிறப்பாக ஸ்பின்னை எதிர்கொள்ளும் வீரர்கள் இருக்கிறார்கள். டெல்லி ஸ்பின்னர்களுக்கு எதிராக இடது கை பேட்டர் பிரஷாந்த் வீர் கூட சூப்பர் கிங்ஸால் முன்கூட்டிக் களமிறக்கப்படலாம்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வாய்ப்புண்டு. 'மேட்ச் அப்'களுக்கு ஏற்றவாறு அக்ஷர் பட்டேல் தன் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். இந்த சீசன் இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் அவர் குல்தீப்புக்கே 2 ஓவர்கள் தான் கொடுத்தார். கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் சென்னையில் மோதியபோது, துபே களமிறங்கிவிட்டார் என்பதற்காக 7வது ஓவரில் மீண்டும் ஸ்டார்க்குக்கு பந்தைக் கொடுத்தார் அக்ஷர். அந்தப் போட்டியில் அவர் 1 ஓவர்தான் பந்துவீசினார். இந்தப் போட்டியையும் டெல்லி அப்படி அணுகுமெனில், ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை அவர்கள் களமிறக்க நினைக்கலாம்.
இல்லையெனில், அக்ஷர் பட்டேல் தன் பெரும்பாலான ஓவர்களைப் பவர்பிளேவில் பந்துவீசிவிட்டு, ஜேமிசன் அல்லது எங்கிடி ஆகியோரின் ஓவர்களை மிடில் ஓவர்களுக்கு சேமித்து வைக்கலாம்.
சூப்பர் கிங்ஸ் அணியுமே இந்த மேட்ச் அப்களை வைத்து சில முடிவுகளை எடுக்கிறது. பிரெவிஸ், துபே போன்றவர்களை பவர்பிளேவில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அவர்கள் களமிறக்க விரும்புவதில்லை. அதனால் தான் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் நான்காவது ஓவர் முடிவிலேயே சர்ஃபராஸ் கானை அவர்கள் களமிறக்கினார்கள். கேபிட்டல்ஸ் எந்தத் தருணத்தில் எந்த வகையான பௌலர்களைக் களமிறக்குகிறது என்பது சூப்பர் கிங்ஸின் பேட்டிங் ஆர்டர் மற்றும் இம்பேக்ட் வீரர் திட்டத்தை தீர்மானிக்கும். சிஎஸ்கே இரண்டாவது பேட்டிங் செய்தால், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சற்றுத் தடுமாறும் கார்த்திக் ஷர்மாவுக்குப் பதில் சர்ஃபராஸ் இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்படலாம். இல்லையெனில் ஓவர்டன் கூட சற்று முன்கூட்டியே களமிறக்கப்படலாம்.
இப்படியாக இரண்டு அணிகளும் களத்தில் பல மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்பு இந்தப் போட்டியில் நிறையவே இருக்கிறது. ஒரு அணியின் உத்திக்கு மற்றொரு அணி எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதான இந்த யுத்தம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையலாம். இது போட்டியிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

பட மூலாதாரம், ANI
சிஎஸ்கே பந்துவீச்சு vs டெல்லி மைதானம்
சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு கடந்த சில போட்டிகளாக நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. அன்ஷுல் கம்போஜ், முகுல் சவுத்ரி பவர்பிளேவில் நன்றாகப் பந்துவீசுகிறார்கள். நூர் அஹமது, ஜேமி ஓவர்டன் மிடில் ஓவர்களில் எதிரணிகளுக்கு சவால் தருகிறார்கள். டெத் ஓவர்களிலும் தன் விக்கெட் வேட்டையைத் தொடர்கிறார் கம்போஜ். இப்படி அனைத்து பகுதிகளிலுமே சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது சிஎஸ்கே.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி கடைசி 5 போட்டிகளில் சூப்பர் கிங்ஸ் பௌலர்களின் செயல்பாடு:
- பவர்பிளே - 8 விக்கெட்டுகள் - 8.4 எகானமி
- மிடில் ஓவர்கள் - 15 விக்கெட்டுகள் - 8.2 எகானமி
- டெத் ஓவர்கள் - 15 விக்கெட்டுகள் - 7.7 எகானமி
இப்படி சிறப்பாகப் பந்துவீசியிருக்கும் சூப்பர் கிங்ஸ் பௌலர்களுக்கு இந்தப் போட்டி நடக்கும் டெல்லி அருண் ஜேட்லி மைதானம் புதிய சவாலை அளிக்கக்கூடும். இது, சிறிய பவுண்டரி எல்லைகள் கொண்ட மைதானங்களுள் ஒன்று. பெரும்பாலான ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்ததாகவே இருக்கும். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தியின்படி இந்தப் போட்டி நடக்கப்போகும் நான்காம் எண் ஆடுகளத்தில் இந்த சீசன் நடக்கும் முதல் போட்டி இது. இதே ஆடுகளத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி 209 ரன்கள் எடுத்தது. அதேபோல் 200+ ஸ்கோரை இந்தப் போட்டியிலும் எதிர்பார்க்கலாம். அதனால், இது சிஎஸ்கே பௌலர்களுக்கு ஒரு சவாலாக அமையலாம்.
சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த போட்டியில் ஆடிய ராமகிருஷ்ணா கோஷ் தற்போது காயமடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவரது இடத்தை யாரை வைத்து சிஎஸ்கே நிரப்பும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த போட்டியில் 3 வெளிநாட்டு வீரர்களே விளையாடியதால் அகீல் ஹொசைன் சேர்க்கப்படலாம். அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர் தேவை என்றால் குர்ஜப்னீத் சிங் மீண்டும் அணியில் இடம்பிடிக்கலாம்.
முழுமையாக காயத்திலிருந்து மீளாத தோனி டெல்லிக்கு பயணிக்கவில்லை என்று இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ முன்னோட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால், பேட்டிங்கில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு குறைவுதான் என்று கருதப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































