அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையை தாண்டி சென்று விபத்து - என்ன நடந்தது?

விபத்துக்குள்ளான விமானம்

பட மூலாதாரம், EPA

    • எழுதியவர், மேக்ஸ் மட்சா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமேசான் ஏர் சரக்கு விமானம் ஒன்று மயாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் கடுமையாக காயமடைந்தனர்.

போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் உள்ள லுயிஸ் முனோஸ் மரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 767-300 சரக்கு விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு மியாமியில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நடந்தது. தரையில் இருந்த பல வாகனங்களின் மீதும் விமானம் மோதியது.

இந்தச் சம்பவம் குறித்து "உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் பணியாற்றி, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முயன்று வருகிறோம்" என்று அமேசான் தெரிவித்துள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து புகை எழுந்துக் கொண்டிருந்ததால் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். இதையடுத்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் அனைத்து விமானங்களின் இயக்கத்தையும் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது. இந்த விபத்து, ஆண்டின் மிகப் பரபரப்பான பயண காலங்களில் ஒன்றான லேபர் டே விடுமுறை வார இறுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான சரக்கு விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விபத்துக்குள்ளான சரக்கு விமானம்

"குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்" என்று மயாமி-டேட் கவுன்ட்டி மேயர் டேனியெல்லா லெவின் காவா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

விபத்து நடந்த சில வினாடிகளுக்குள் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் அவர் கூறினார்.

"இப்போது எங்கள் கவனம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மீதும், காயமடைந்தவர்கள் மீதும், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகள் மீதும் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

காயமடைந்த ஐவரில் மூவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மயாமி தீயணைப்பு துறைத் தலைவர் ரயீத் ஜடல்லா தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் சிலர் தரையில் இருந்த வாகனங்களுக்குள் அல்லது அவற்றின் கீழ் சிக்கிக் கொண்டிருந்தனர். அவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் வெளியே கொண்டு வந்ததாக ஜடல்லா கூறினார்.

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையை தாண்டி சென்று விபத்து - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters

இன்னும் மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதால் விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும், இந்த விபத்தை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சார்ட்டர் விமான நிறுவனமான 21 ஏர் இயக்கிய அமேசான் சரக்கு விமானம், "மியாமி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியபோது, ஓடுபாதையின் முடிவைக் கடந்து சென்று, விமான நிலையத்தின் வடமேற்குப் பகுதியில் செயலிழந்த நிலையில் நின்றது" என்று விமான நிலைய நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மீட்புக் குழு அங்கு சென்றடைந்த போது "இந்த விபத்தின் விளைவாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த விமானத்தையும், அதிலிருந்து பெரும் தீப்பிழம்புகளும் புகையும் எழுந்ததை" கண்டதாக மயாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம்

பட மூலாதாரம், Reuters

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர். தீ அணைக்கப்பட்டிருந்தாலும், சம்பவ இடத்தில் இன்னும் எரிபொருள் கசிவு தொடர்வதாக ஜடல்லா தெரிவித்தார்.

அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அமேசான் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"இன்று மயாமி சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக அறிந்ததில் நாங்கள் மிகுந்த துயரமடைந்துள்ளோம்," என்று அமேசானின் சர்வதேச நிறுவன ஊடக உறவுகள் இயக்குநர் கெல்லி நான்டெல் கூறினார்.

"இந்த பேரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அன்புக்குரியவர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

"21 ஏர் நிறுவனம் இயக்கிய இந்த விமானம் தரையிறங்க முயன்றுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் விவரங்களை அறிய உள்ளூர் அதிகாரிகளுடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் நாங்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். எந்த விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைப்போம்."

இந்த சம்பவம் தொடர்பாக பிபிசி, 21 ஏர் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாலும், இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இந்த விபத்து, அமெரிக்காவில் ஆண்டின் மிகப் பரபரப்பான பயண வார இறுதிகளில் ஒன்றின்போது நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், திங்கட்கிழமையிலான லேபர் டே விடுமுறைக்கு முந்தைய வாரத்தில் 1 கோடியே 70 லட்சம் பயணிகள் அமெரிக்க விமான நிலையங்களை பயன்படுத்துவார்கள் என்று கணித்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 23 லட்சம் பேர் விமானப் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் போக்குவரது பாதுகாப்பு நிர்வாகம் கணித்திருந்தது.

விமானத்தின் முகப்பு பகுதி

பட மூலாதாரம், Reuters

மயாமி சர்வதேச விமான நிலையம், மயாமி நகர மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

"1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மயாமி சர்வதேச விமானநிலையம், சர்வதேச சரக்கு போக்குவரத்தில் அமெரிக்காவின் மிகப் பரபரப்பான விமான நிலையமாகவும், சர்வதேச பயணிகள் எண்ணிக்கையில் இரண்டாவது மிகப் பரபரப்பான விமான நிலையமாகவும் உள்ளது. மேலும், அமெரிக்காவின் எந்த விமான நிலையத்தையும் விட லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கு அதிக விமான சேவைகளை வழங்குகிறது" என்று அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபுளோரிடாவிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளிலும் சுமார் 60% பேர் இந்த விமான நிலையம் வழியாகவே வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு