காணொளி: இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு - மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா?

காணொளிக் குறிப்பு, இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு - மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா?
காணொளி: இரான், அமெரிக்கா பரஸ்பர தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு - மீண்டும் பதற்றம் அதிகரிக்கிறதா?
பிரசுரிக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் இரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவத்தில் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரானும் இதற்குப் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தற்போதைய சூழல் எப்படி உள்ளது?

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) சமீபத்தில் ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களைத் தாக்க முயன்றதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக சென்ட்காம் கூறுகிறது.

தெற்கு இரானில் உள்ள சிரிக் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதறல்கள் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வீட்டைத் தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக இரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்குப் பதிலடியாக இரான், இராக் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் தாக்கியதாக அந்நாட்டு அரசு ஊடகங்களும் ஜோர்டான் ஆயுதப் படைகளும் தெரிவித்தன. குவைத் மற்றும் பஹ்ரைனிலும் தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகின.

அமெரிக்கா இந்தத் தாக்குதல்களுக்கு வருத்தப்பட வேண்டிய நிலை வரும் என்று ஐஆர்ஜிசி எச்சரித்தது.

புதன்கிழமை அதிகாலை, சிரிக் தாக்குதலுக்குப் பதிலடியாக, இரான் ஜோர்டானின் அகபாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை நோக்கி ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக இரானின் அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் தெரிவித்தது.

ஜோர்டான் ஆயுதப் படைகளின் கூற்றுப்படி, 13 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. அவற்றில் 10 அழிக்கப்பட்டன; மீதமுள்ள மூன்று தொலைதூரப் பகுதிகளில் விழுந்தன. இந்தத் தாக்குதலில் உயிரிழப்போ காயங்களோ ஏற்படவில்லை.

அகபா மற்றும் மஃப்ராக் மாகாணங்களில் ஏவுகணைச் சிதறல்கள் விழக்கூடும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையில், புதன்கிழமை அதிகாலையில் இரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக குவைத் ராணுவத்தின் வான் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை மேற்கொண்டதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் இரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பல வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் இரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் அமெரிக்கத் தாக்குதல்கள் அறிவிக்கப்பட்டபோது, அதிபர் டிரம்ப் இரான் பதிலடி கொடுத்தால், அந்நாட்டின் மீது மீண்டும் "மிகவும் கடுமையான மற்றும் அதிக அளவிலான தாக்குதல்" நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

அமெரிக்க கிழக்கு நேரப்படி மதியம் 12:00 மணிக்கு அமெரிக்கப் படைகள் ஐஆர்ஜிசி இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை அதிகாலைக்குள் அந்தத் தாக்குதல்கள் நிறைவடைந்தன.

இரானிய அரசு ஊடகங்கள், சிரிக் தாக்குதலில் உயிரிழந்த நான்கு பேரில் நான்கு வயது குழந்தையும் அடங்கும் என்று தெரிவித்தன. மேலும், சபஹார் மற்றும் கொனாரக் பகுதிகள் மற்றும் ஜிராஃப்ட் விமான நிலையம் ஆகிய இடங்களிலும் ஏவுகணைகள் அல்லது பிற தாக்குதல் பொருட்கள் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின. கேஷ்ம் தீவு மற்றும் பந்தர் அப்பாஸ் பகுதிகளிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வந்தன.

சென்ட்காம் சார்பில் பேசிய அமெரிக்க கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ், சிரிக் தாக்குதல் தொடர்பாக இரானிய அரசு ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களை அமெரிக்க ராணுவம் அறிந்திருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் "ஐஆர்ஜிசி போலல்லாமல், அமெரிக்க ராணுவம் ஒருபோதும் பொதுமக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தாது." எனவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு