தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? ஆட்சியர் அளித்த விளக்கம்

காணொளிக் குறிப்பு, தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? ஆட்சியர் அளித்த விளக்கம்
தூணில் தீபம் ஏற்றாதது ஏன்? ஆட்சியர் அளித்த விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூனில் தீபம் ஏற்றப்பட்டாததற்கு மதுரை ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் என்ன?

திருப்பரங்குன்றத்தில் நவம்பர் 24ஆம் தேதி அங்குள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே மகாதீபம் ஏற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நவம்பர் 25ஆம் தேதி அன்று காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தூணில் தீபம் ஏற்றுவதற்காகச் செல்ல வேண்டிய நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றம் நவம்பர் 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது முதல் நவம்பர் 24ஆம் தேதி மாலை வரை, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு உட்பட்டு அந்த உத்தரவைச் செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இதற்காக மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், மூன்றாவது கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் ஒவ்வோர் அம்சமும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூணுக்குச் செல்லும் குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் எண்ணிக்கை, அவர்கள் செல்ல வேண்டிய நேரம், பயன்படுத்த வேண்டிய வழி, அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை, பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகள் கோவில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், காவல் ஆணையர் ஆகியோருடன் நடத்தப்பட்டதாகவும், கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 23ஆம் தேதி இரவு கோவில் செயல் அலுவலரிடம் இருந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 24ஆம் தேதி காவல் ஆணையருடன் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசித்ததுடன், சம்பவ இடத்தையும் நேரில் ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது பார்வையாளர்கள், செயல் நடுவர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஆகியோர் பணியில் ஈடுபடுவதற்குத் தயாராக இருந்ததை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம், கோவில் நிர்வாகம் பெயர்களை வழங்காததால் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். மறுபுறம், நீதிமன்ற உத்தரவு இருந்தபோதும் தீபம் ஏற்றப்படாதது வேண்டுமென்றே செய்யப்பட்ட மீறல் என்று மனுதாரர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை, கோவில் நிர்வாகத்தின் முடிவு, மனுதாரர் தரப்பின் வாதங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் எவ்வாறு பரிசீலிக்கிறது என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு