பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாளில் சீன அதிபர் முன்வைத்த 5 விஷயங்கள் என்ன?
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என டெல்லியில் 2 நாட்களாக நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாடு முடிவடைந்தது. பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம் ஒருமித்த கருத்துடன் முதல் நாளே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
2026 பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. இந்த மாநாட்டுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உட்பட பல உலக தலைவர்கள் வருகை தந்தனர். மத்திய கிழக்கு போர், அமெரிக்க டாலருக்கு மாற்று நாணயம் உருவாக்குதல் போன்ற விவகாரங்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடம் ஒருமித்த கருத்து இல்லாத சூழலில் நடந்த இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
முதல் நாளை போலவே இன்றும் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றார்.
இரண்டாவது நாளிலும் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் பேசிய இந்திய பிரதமர் மோதி, இன்று உலகில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது சாதாரண மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மற்றும் பரவலான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்.
பெருந்தொற்றுகள், பருவநிலை சார்ந்த பேரிடர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி தடங்கல்கள் ஆகியவை இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில் எந்தவொரு நெருக்கடியும் குறிப்பிட்ட பிராந்தியத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதை உணர்த்தியுள்ளன. எனவே, பிரிக்ஸ் கூட்டமைப்பிற்குள் மீள்திறனை மேம்படுத்த சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்றும் பிரதமர் மோதி கூறினார்.
தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் எதிர்த்துப் போராடவும் பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்துவதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோதி கூறினார்.
கூடுதலாக, பேரிடர் மேலாண்மைக்காக முன்கூட்டிய எச்சரிக்கை தரவு ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் சீனா அதிபர் பேசியது குறித்த விவரங்களை சீன வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்துள்ளது. அதன்படி, விதிகள் இல்லாத உலகம் என்பது போக்குவரத்து சிக்னல் இல்லாத சந்திப்பைப் போன்றது. அங்கு குழப்பமும் ஒழுங்கின்மையும் ஏற்படுவது உறுதி. சர்வதேச விதிகள் அனைத்து நாடுகளாலும் இணைந்து உருவாக்கப்பட வேண்டும். வலிமையானவர் சொல்வதே சரி என்ற தர்க்கம் செல்லுபடியாகாது, அது நீண்ட காலத்திற்கு முன்பே கைவிடப்பட்டிருக்க வேண்டும். குளோபல் சவுத் நாடுகள் சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சியை கூட்டாகப் பாதுகாக்க வேண்டும். இறையாண்மை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது உள்ளிட்ட சர்வதேச உறவுகளின் அடிப்படை நெறிமுறைகளை பேண வேண்டும். சர்வதேசச் சட்டமும் சர்வதேச விதிகளும் இரட்டை நிலைப்பாடுகள் இன்றி அனைவருக்கும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஷி ஜின்பிங் கூறி உள்ளார்.
பெரிய விஷயங்களை சாதிப்பதற்கும், பெரிய முன்னேற்றத்தை அடையவும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் அடித்தளம் வலுப்படுத்தப்பட வேண்டும் என கூறிய ஷி ஜின்பிங், அதற்காக ஐந்து முன்னெடுப்புகளை முன்வைக்க விரும்புவதாக கூறினார்.
- முதலாவது ஓபன் சோர்ஸ் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஏஐ இனிஷியேட்டிவ் (AI initiative). பிரிக்ஸ் ஏஐ ஓபன் சோர்ஸ் (BRICS AI open source) சமூகத்தை நிறுவுவதில் சீனா முன்னோடியாகத் திகழும் என ஷி ஜின்பிங் கூறினார்.
- இரண்டாவதாக, வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்கும் முயற்சி. பிரிக்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டல கூட்டாண்மையை நிறுவ சீனா முன்மொழிவதாக ஷி ஜின்பிங்கூறினார்.
- மூன்றாவதாக, டிஜிட்டல் தொழில் ஒத்துழைப்பு முயற்சி. பிரிக்ஸ் டிஜிட்டல் சூழலமைப்பு கிளவுட் தளத்தை நிறுவ சீனா உந்துதல் அளிக்கும் என ஷி ஜின்பிங் கூறினார்.
- நான்காவது அறிவார்ந்த உற்பத்தி ஒத்துழைப்பு முயற்சி. ஸ்மார்ட் ஆலைகளை கட்டமைப்பதிலும், தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குவதிலும் சக பிரிக்ஸ் நாடுகளுக்கு உதவவும், உற்பத்தித் துறை மாற்றத்தையும், மேம்படுத்தலையும் கூட்டாக ஊக்குவிக்கவும் சீனா தயாராக உள்ளது என்றும் ஷி ஜின்பிங் கூறினார்.
- ஐந்தாவது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறமையாளர் மேம்பாட்டு முயற்சி. உயர் தகுதி வாய்ந்த திறமையாளர்களை வளர்ப்பதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புதுமைக்கான பிரிக்ஸ் இளைஞர் பரிமாற்ற திட்டத்தை சீனா தொடங்கும் என்றும் ஷி ஜின்பிங் கூறி உள்ளார்.
பின்னர் இறுதியில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோதி, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புது டெல்லி பிரகடனம் எதிர்கால ஒத்துழைப்புக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் என நம்புகிறோம். இதன் மூலம் எட்டப்பட்ட முடிவுகள் அனைத்தையும், களத்தில் உண்மையான மற்றும் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயல் திட்டங்களாக மாற்ற வேண்டும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, பிரிக்ஸ் பிரகடனம் ஒருமனதாக வெளியிடப்படாது என பலர் நினைத்த சூழலில், அந்த பிரகடனத்தை வெளியிட முடிந்ததாக கூறினார்.
பிரிக்ஸ் மாநாடு நிறைவடைந்த நிலையில், உலகத்தலைவர்கள் டெல்லியில் இருந்து புறப்படத் தொடங்கி உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



