சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா கருதுகிறதா?
சீனாவுக்கு வழங்கியது போன்ற பொருளாதாரச் சலுகைகளை அமெரிக்கா இனி இந்தியாவுக்கு வழங்காது என அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் கிறிஸ்டோபர் லாண்டோவ் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். சீனாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாகவே அது பெரும் வல்லரசாக உருவெடுத்தது என்றும் அவர் கூறினார்.
பிறகு ஜூன் மாதம், அமெரிக்கா ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்ட் (Indo-Pacific Command) தனது பெயரை 'அமெரிக்க பசிபிக் கமாண்ட்' என மாற்றிக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் மீது கடுமையான வரிகளையும் டிரம்ப் விதித்துள்ளார். அதேபோல, சீனாவை எதிர்கொள்ள இந்தியா அவசியமானது என்ற முந்தைய அரசாங்கங்களின் வாதங்களையும் அவர் நிராகரித்துள்ளார்.
இதனால், சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என அமெரிக்கா நினைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்திருக்கிறார். டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க அவர் வருகை தந்திருக்கிறார். இந்தப் பயணத்தை இந்தியாவின் மாறிவரும் வியூகத்தின் வெளிப்பாடாகப் பல நிபுணர்கள் பார்க்கின்றனர்.
2019 ஆம் ஆண்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் தமிழ்நாட்டில் சந்தித்தனர். அதற்கு அடுத்த ஆண்டு எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பதற்றத்தை அதிகரித்தன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே மோதியும் அவரும் சந்தித்துப் பேசியதும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் மறுசீரமைப்பு தொடங்கியது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கைகள் மீது இந்தியா அதிருப்தியில் இருப்பதாகவும், இத்தகையதொரு சூழலில் மற்றொரு வல்லரசான சீனாவின் அதிருப்தியை இந்தியாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
எல்லைப் பதற்றங்கள் முடிவுக்கு வரும் வரை சீனாவுடனான உறவுகளில் நிலவும் அவநம்பிக்கை குறையாது என்றே இந்தியா முன்பு வாதிட்டு வந்தது. ஆனால், அந்த நிபந்தனையில் இந்தியா இப்போது உறுதியாக இல்லை என்றே தெரிகிறது.
இது குறித்து அனந்தா சென்டர் சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி கூறுகையில், "அமெரிக்காவுடனான உறவில் இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவமே, சீனாவுடன் மோதுவதற்கு இந்தியா அவசியமானது என்பதுதான். இந்தியாவை வலுப்படுத்துவதன் மூலம் சீனாவின் வளர்ந்துவரும் அதிகாரத்தைச் சமன்செய்ய முடியும் என்று முந்தைய அமெரிக்க அரசாங்கங்கள் நம்பின. ஆனால், சீனாவுடன் தனியாகவே பேசி சமாளித்துக்கொள்ள முடியும் என்று டிரம்ப் கருதுவதால், அவருக்கு இந்தியா முக்கியமானதாகத் தெரியவில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "அமெரிக்கா - சீனா இடையேயான போட்டியில் இந்தியா எந்தவொரு லாபத்தையும் பெற்றுள்ளது என்று நான் நம்பவில்லை. அமெரிக்காவிடமிருந்து இந்தியா எதைப் பெற்றிருந்தாலும், அதை விலை கொடுத்து வாங்கியதே தவிர இலவசமாகப் பெறவில்லை. சீனாவுடன் இயற்கையாகவே இணக்கமான ஒரு சமநிலையைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த யதார்த்தத்தைத் டிரம்ப் மறுப்பது வேறு விஷயம், ஆனால் சீனாவுடன் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் எப்போதும் குறையாது" என்றார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலர் கிறிஸ்டோபர் லாண்டோவின் கருத்து, அமெரிக்கா இந்தியாவை வெறும் வியூகக் கூட்டாளியாக மட்டும் பார்க்கவில்லை என்பதை காட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது. மாறாக, இந்தியாவை ஒரு பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் போட்டியாளராகவும் அது பார்க்கத் தொடங்கியுள்ளது என்றும், இந்தியாவின் வளர்ச்சியை முழுமையாக அனுமதிப்பதற்குப் பதிலாக அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கருதுவதாகவும் பார்க்கப்படுகிறது.
பிரபல வியூக விவகார நிபுணர் பிரம்மா செலானி ஜப்பான் டைம்ஸ் இதழில் எழுதிய கட்டுரையில், ஆசியாவில் சீனாவைச் சமன் செய்ய வலிமையான இந்தியா அவசியமாகக் கருதப்பட்டதால், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க கொள்கையானது இந்தியாவின் பொருளாதார, ராணுவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், பரிவர்த்தனை மற்றும் வணிக அடிப்படையிலான அணுகுமுறையால் இதில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக பிரம்மா செலானி கூறுகிறார். சீனாவைச் சமன் செய்யும் பணியில் இந்தியா தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது, ஆனால் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது உலகளாவிய சந்தைகளில் இந்தியா மிக சக்திவாய்ந்த நாடாக மாறுவதற்கோ உதவ அது தயாராக இல்லை என்றே தெரிகிறது என அவர் கூறூகிறார்.
அமெரிக்காவின் பரந்த வியூகத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருவதாக பிரம்மா செலானி நம்புகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா வியூக ரீதியாகப் பயனுள்ள நாடாக தோன்றினாலும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் அது வரம்புக்கு உட்பட்ட ஒரு கூட்டாளியாகவே பார்க்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



